அன்புடன் ஒரு நிமிடம் - 69
புதிதாகக் கட்டி முடித்திருந்த வீடு பொலிவோடு நின்றிருந்தது. இன்று கிரகப் பிரவேசம். வந்தவர்களை வரவேற்பதற்காக வாசலில் நின்று கொண்டிருந்தார் வாசு.
இரண்டு வருடமாக பார்த்துப் பார்த்துக் கட்டின வீடு. பெருமையும் திருப்தியும் மனதில் அலைமோதிற்று.
ஆயிற்று. இன்னும் கொஞ்ச நேரத்தில் விருந்தினர் ஒவ்வொருவராக வர ஆரம்பித்து விடுவார்கள்.
உள்ளே ஹோமத்துக்கு வேண்டிய விஷயங்களை கவனித்து விட்டு ஏதோ கேட்க அவர் அருகில் வந்த ஜனனி வாசல் ஓரமாக கவிழ்த்து வைத்திருந்த அந்த சிறிய போர்டைக் கவனித்தாள். எடுத்துப் பார்க்க, ”Leave your foot wears and lenses here.” (செருப்புக்களையும் பூதக் கண்ணாடிகளையும் விட்டுச் செல்லுமிடம்.) என்றிருந்தது.
பூதக் கண்ணாடி? அவளுக்குப் புரியவில்லை.
“என்னங்க இது?”
அவள் கை நீட்டிய திசையைப் பார்த்தார். மெல்லிய புன்னகை. “ஆமா, நான்தான் எழுதினேன், இங்கே வைக்கலாம்னு இருந்தேன்.”
“செருப்பு சரி. பூதக் கண்ணாடி? What do you mean by that?”
” நீ எதை நினைக்கிறாயோ அதைத்தான். ஆமா. வர்றவங்க எல்லாருமே ஊன்றிப் பார்த்து ஆளுக்கொரு குறையை சொல்லி தலைக்கு நாலு சஜஷனும் கொடுக்கிறாங்க. அந்த சிரமம் அவங்களுக்கு தேவையில்லேன்னு சொல்லத்தான் இந்த வாசகம்.”
”ஏன் அப்படி நினைக்கிறீங்க?”
”ஏன்னா ஏற்கெனவே நிறைய பிளான் எல்லாம் போட்டு அதிலே ஆயிரத்தெட்டு கேள்விகளும் பிரசினைகளும் வந்து அதையெல்லாம் அப்பப்ப யோசிச்சு அலசி சமாளிச்சு ஒவ்வொரு கட்டத்திலும் முடிவுகளை எடுத்து ஒரு பெரிய வேலையை செய்து முடிச்சிருக்கோம். நமக்குத் தெரிஞ்சோ தெரியாமலோ முடிஞ்சோ முடியாமலோ குறைகள் இருக்கத்தான் செய்யும். நம்மைப் பொறுத்தவரை எட்டு வருஷமா இருபதுக்கு இருபது போர்ஷன்ல வாடகைக்கு இருந்து பட்ட கஷ்டத்துக்கு என்ன குறை இருந்தாலும் இது சொர்க்கம். அப்படியே ஏதும் குறை இருந்தாலும் அதில் எதையும் இப்ப சரி செய்யற நிலைமையும் அவசியமும் இல்லாத போது அதை சொல்றதனால அர்த்தமில்லாத விவாதங்கள்தான் உண்டாகும். அதைத்தான் தவிர்க்க நினைக்கிறேன். ஆக, இந்த மெனக்கிடல் வேண்டாம்னு நினைக்கிறேன். அதில நான் நிச்சயமா இருக்கேன். அதான் இந்த Leave your lenses here போர்டு.”
புன்னகை இழையோடிற்று அவள் முகத்தில். “இருந்தாலும் இது கொஞ்சம் ஓவராப் படலியா?”
”பட்டது. அதான் நானே அதை வேண்டாம்னு எடுத்து கவிழ்த்து வெச்சிட்டேன்.”
(”அமுதம்’ மார்ச் 2014 இதழில் வெளியானது.)
><><><><
(படம் - நன்றி : கூகிள்)
7 comments:
எழுதிய பலகையை வாசு கவிழ்த்து வைத்து விட்டிருந்தாலும் வாசிப்பவரைக் கவனத்தில் கொள்ளச் செய்து விட்டீர்கள். நல்ல கதை.
கொஞ்சம் அதிகம்தான்
ஆனாலும் உண்மையல்லவா
தம 3
நல்ல கதை...
ரசிக்கும்படி உள்ளது. பாராட்டுகள்.
பலகை இருந்தாலும் இல்லாவிட்டாலும் சொல்பவர்கள் சொல்லிக்கொண்டேதான் இருப்பார்கள். அதைப்பற்றி நாம்தான் கவலைப்படக்கூடாது.
உங்கள் ஒருநிமிடக் கதைகள் எல்லாமே சூப்பர் தான்.
பாராட்டுக்கள்!
//அமுதம்’ மார்ச் 2014 இதழில் வெளியானது//
வாழ்த்துகள்.
Post a Comment
உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!