Saturday, September 28, 2013

மூன்றில் ஒன்று....

 
 
அன்புடன் ஒரு நிமிடம் - 45

 
 
பொதுவாக பிறந்த வீட்டுக்குச் சென்று வந்தால் முகம் மலர முதல் நாள் கழியும் மனைவிக்கு என்றறிவார் வாசு. ஆகவே வழக்கத்துக்கு விரோதமாய் வாடிய முகம் ஜனனி காட்டியதில் அதிர்ந்தார். கவலையுடன் விசாரித்தார் காரணத்தை.
 
பின்னே என்னங்க, மூணு அட்டெம்ப்டும் தோல்வின்னா? அசந்து போயிட்டேன்.
 
வீட்டில என்ன நடந்தது? கொஞ்சம் விலாவாரியா...
 
என்ன விஷயமா போனேன்னுதான் உங்களுக்குத் தெரியுமே?”
 
தெரியும். அவள் தங்கை எழிலிக்கு புகுந்த வீட்டில நேருகிற பிரசினைகள் எதனாலென்றும் எப்படி அதை சரிப்படுத்துவதென்றும் இவர்கள் பேசியதை விளக்கத்தான் போனாள். போன வாரம் நடந்த அந்த சம்பவம்... அதை உதாரணமாகச் சொல்லலாம் என்று.
 
அடுத்தவார மெல்லிசைக் கச்சேரிக்கு எழிலி தன் கணவனிடம் ரெண்டு டிக்கட் மட்டும் எடுத்துட்டு வரச் சொன்னது பிரசினையாகி விட்டது. கூட்டுக் குடும்பம். மாமனார், மாமியார், கொழுந்தன், நாத்தனார் சேர்த்து ஆறு பேர். குடும்ப பட்ஜெட் போடறது அவள்தான். டிக்கட் விலைக்கும் நம்ம பட்ஜெட்டுக்கும் ரெண்டு பேர்தான் போகமுடியும், யார் யார்னு அப்புறம் யோசித்து முடிவு பண்ணிக்கலாம்னு சொல்லிவிட்டாள். அது பெரிய பிரசினையாகி விட்டது.
 
சாதாரணமாய் பலரும் உணர்வால் அணுகும் இந்த மாதிரி விஷயங்களை இப்படி அவள் அறிவு பூர்வமாக அணுகி சமயோசிதமாக முடிவெடுப்பதால்தான் அந்தக் குடும்பத்தில் அவளுக்கு பெரும்பாலான பிரசினைகள் ஏற்படுகிறது, பொறுப்பைக் கொடுத்தவர்கள் தீர்மானிக்கும் சுதந்திரத்தையும் கொடுக்கவேணும் அல்லவா? என்பதுதான் இவர்கள் ஜனனியின் வீட்டாருக்கு உணர்த்த நினைத்த கருத்து.
 
சொன்னியா?”
 
மூணு தடவை! மூணு விதமா சொல்லிப் பார்த்தேன். பலன் பூஜ்யம்.
 
மூணு தடவையா? ஏன்?”
 
முதல்ல அப்பாவிடம் சொன்னேன். அந்த சம்பவத்தை நடந்ததை நடந்தபடி அப்படியே விவரமா சொன்னேன். அவரே புரிந்து கொள்வார் எங்கே தவறென்று என்று. எல்லாத்தையும் கூர்ந்து கேட்டுவிட்டு யோசனையில் ஆழ்ந்தார். என்ன சொன்னார் தெரியுமா? எழிலி பேரில்தான் தப்பு, இந்த மாதிரி எல்லாரும் பிரியப்படக்கூடிய விஷயத்துக்கு பட்ஜெட் பார்க்கக்கூடாது,  அப்படீன்னு!
 
ஆக நடந்ததை நடந்தபடி ஒண்ணு விடாமல் அப்படியே விவரித்ததில், எடுத்துக் கொள்ளவேண்டிய கருத்தை அவர் எடுத்துக் கொள்ளவில்லை அப்படித்தானே?”
 
அதான் என் முதல் வருத்தம். அடுத்தது அண்ணன்கிட்டே! சாயங்காலம் அவனிடம் பேசும்போது அந்த சம்பவத்தில் அவள் எப்படி அதை உணர்வு பூர்வமாக அணுகிக் குழப்பவில்லை என்பதில் அழுத்தம் கொடுத்து சம்பவத்தை மறுபடி விளக்கினேன். கேட்டுட்டு அவனும், நோ, நோ, இதுலே எல்லாம் அவங்க அவங்க ஆர்வத்தை முதலில் கேட்டுவிட்டுத்தான் அவள் தீர்மானிக்கணும்னு  சொன்னான்.
 
அப்ப அதே சம்பவத்தை உன் பார்வையில் சொன்னபிறகும் அதே முடிவுக்குத் தான் அண்ணன் வந்தான்?”
 
ஆமா. அதனாலதான் மூணாவதா அக்காவிடம் மறுநாள் காலை பேசும்போது எழிலியோட விவரமான செயல்பாட்டை நல்லாவே பில்ட் அப் கொடுத்து அந்த சம்பவத்தை விவரித்துப் பார்த்தேன். அவளிடமும் அதே  ரீயாக் ஷன்! தங்கை பேரில்தான் தவறுன்னு.
 
அதாவது உன் பாயிண்டுக்கு ஏற்ற மாதிரி மிகைப் படுத்தி சொன்னபின்னும் அதே  முடிவுக்குத்தான் அக்கா வந்தாங்க?!
 
தலையை ஆட்டினாள். எப்படிங்க? எப்படிங்க?”
 
எல்லாம் நான் எதிர்பார்த்ததுதான்! என்றார். அதான் மனுஷங்க இயல்பு! நாம என்ன விதத்தில் சொன்னாலும் தாங்கள் எந்தக் கோணத்தில் பார்க்கிறார்களோ அந்தக் பார்வையில்தான் பலர் ஒரு விஷயத்தை தீர்மானிக்கிறாங்க. ஆக நீ இதில் வருத்தப்பட ஏதுமில்லை. நீ முதலில் செய்தது சரியான விஷயம்தான். நடந்ததை நடந்தபடி சொன்னது! அதையே எப்பவும் செய். அவங்க என்ன பாயிண்டை எடுத்துக் கொள்கிறாங்களோ அதை எடுத்துக் கொள்ளட்டும். அப்படி எடுத்துக் கொள்ளுவது எப்படி தவறுன்னும், நீ எப்படி எடுத்துக்கிட்டே, அதுக்கான காரணம் என்னன்னும் சொல்றதோட உன் பொறுப்பு தீர்ந்தது. பல வேளைகளில் அவ்வளவுதான் நீ செய்யவும் முடியும்! என்றார், "சரிதானே?” 
 
விசனம் விலகியது அவள் முகத்தில்.
 
('அமுதம்' ஜூன் 2013 இதழில் வெளியானது)
<<>>
 (படம்: நன்றி : கூகிள்)
 

Monday, September 23, 2013

நல்லதா நாலு .வார்த்தை.. 17

 
 
வாழ்க்கையின் அந்தி

 வருகிறது அதன்  

விளக்கேந்தி!

-Joseph Joubert

(‘Life’s dusk brings its lamp with it.’)

<<>> 

எல்லா விஷயங்களுமே

சிரமமானவை

எளிதாகும் முன்பு வரை.

- Thomas Fuller
(‘All things are difficult before they are easy.’)

<<>> 

'எத்தனை அற்புத
வாழ்க்கை நான்
வாழ்வது!
இத்தனை தாமதமாய்
புரிந்துகொண்டதே நான்

வருந்துவது!

-Colette hat a wonderful life I've had!
I only wish I'd realized it sooner.')


வருந்துவது!'

- Colette

('What a wonderful life I've had!
I only wish I'd realized it sooner
(What a wonderful life I‘ve had!

I only wish I’d realized it sooner!)

<<>> 

'துயரின் 
உயர் இசை,
நம்பிக்கை!'
- Anonymous
('Hope is grief 's best music.')

 <<>>

'ஆண்டவனும் புத்தகங்களின்
அருகாமையும் கொண்டவன்
நண்பர்கள் அற்றவன்
ஆகமாட்டான்.'

-Elizabeth Browning
('No man can be called friendless who has
God and the companionship of good books.')

<<>> 



'ஒரு நாள் கேட்பாய்
உன் வாழ்வா என் வாழ்வா
எது முக்கியமென்று.
நான் சொல்வேன்
எனதென்று.
எனை விட்டுச் செல்வாய்
என் வாழ்வே நீயென்றுணராமல்!'
-Kahlil Gibran
('One day you will ask me which is more important?

My life or yours? I will say mine and you will walk

away not knowing that you are my life.')

<<>> 

'அனைத்து விடையும்
அறிந்தவரிடம்
கேட்கப்பட்டதில்லை
அனைத்துக் கேள்வியும்.' .
<>
-Confucius
('He who knows all the answers has not
been asked all the questions.')

<<>> 
(படம்- நன்றி:கூகிள்)

 

 

Thursday, September 19, 2013

இன்னும்...



காலொடிந்த காக்கைக்கு

எப்படி நேர்ந்தது அந்த விபத்து?


அடை மழை பெய்யும்போது

அணில்கள் எங்கே உறையும்?


நடுநிசியிலும் குரைக்கும் நாய்கள்

எப்போதுதான் உறங்கும்?


எல்லார் வீட்டிலும்

விரட்டப்படும் பூனைக்கு

யார் தான் சோறிடுகிறார்கள்?


ஏழெட்டு எறும்புகள் ஏலேசா பாடி

தூக்கிச் செல்லும் பருக்கை

கூட்டைச் சென்று அடைகிறதா?


சின்ன வயதில் தோன்றிய கேள்விகள்...

இன்னும் விடை கிடைக்கவில்லை.


என்ன, இப்போது இந்த மாதிரி

அசட்டுக் கேள்விகள் தோன்றுவதில்லை!

<<<>>>
(02-12-2009 'விகடனி'ல் வெளியான எனது கவிதை.)
 
(படம்- நன்றி:கூகிள்)
 

Monday, September 16, 2013

உருப்படியாக ஒரு விஷயம்....



 அன்புடன் ஒரு நிமிடம் - 44

ந்த உலகம் எங்கே உருப்பட போகுது?” அலுத்துக் கொண்டான் நரேஷ். விழித்தார் சாத்வீகன். இதை ஏன் இங்க வந்து, இப்ப சொல்றான்?

அவர்கள் நின்றிருந்தது பீச்சில்.

இத பாருங்க, இப்படிக் குப்பை கூளங்களை அள்ளி இறைச்சிருக்காங்க கடற்கரை நெடுக! எத்தனை சுத்தமா இருக்க வேண்டிய இடம்! எத்தனை சுத்தமா இயற்கை வழங்கிய இடம்! இப்படிப் பாழடிக்கிறாங்களே! இந்த உலகம் உருப்படுமா?”

சாத்வீகன் ஒன்றும் சொல்லவில்லை.

ஒரு வாரம் தன்னோடு தங்கவேண்டும் என்று அவரை ஒரு சின்ன டூர் செய்ய அழைத்திருந்தான் பேரன் நரேஷ்.  அவரும் பல நாட் நௌவுக்குப் பிறகு சம்மதித்து வந்திருந்தார்.

இந்த ஏழு நாளும் ரிலாக்ஸ்டா என்னோடு நேரத்தை செலவிடப் போறீங்க!  என்று அறிவித்தவன்... தினம் ஒரு இடம் என்று அழைத்துப் போகத் தொடங்கியவன்...  

வெள்ளை மணற் பரப்பில் காணாமல் போயிருந்த வெள்ளையை குறித்து கவலை மேலோங்க அவன் அலுத்துக் கொள்ள... அவர் கண்ணை ஓட்டினார். ஆங்காங்கே விசிறடிக்கப் பட்டிருந்த பாலிதீன் பைகள்... காலியான கடலைப் பொட்டலங்கள்...

எதுவும் பதிலிறுக்கவில்லை அவர்.

அடுத்த நாள். மகா பெரிய மால் ஒன்றில் நின்றிருந்தார்கள்.

ஊகூம்! தேறவே தேறாது உலகம்!

என்னடா ஆச்சு!

பாருங்க நீங்களே!

பார்வை ஓடிற்று. என்னதான் கோடிகளைக் கொட்டி அதன் சொந்தக்காரர்கள்  சுத்தத்துக்கு மெனக்கெட்டிருந்தாலும், ஐந்தடிக்கு ஒரு இங்கே போடவும் வைத்திருந்தாலும், ஆங்காங்கே கசக்கி எறியப்பட்ட பிஸ்கட் கவர்களும் நசுக்கித் தேய்க்கப்பட்ட பேப்பர் கப்களுமாக அந்த இடத்தை அசுத்தப் படுத்தியிருந்தன.

அங்கும் மௌனமே அவர் பதிலாய் இருந்தது.

மூன்றாம் நாள் புத்தகக் கண்காட்சிக்குப் போனபோதும் சிதறிக் கிடந்த சில குப்பைகள் உலகத்தை அவன் வாயில் உருப்படாமல் போக வைக்கத் தவறவில்லை. ஆனாலும் அவரிடமிருந்து அதற்கு மறுப்பேதும் வரவில்லை.

நாலாம் நாள் அவர்கள் விஜயம் செய்த ஜூவிலும் சுற்று முற்றும் கண்ணை ஒட்டியவன் அங்கே தென்பட்ட குப்பை கூளங்களை சுட்டிக் காட்டி உலகம் உருப்படாமல் போவதற்கான சாத்தியக் கூறுகளை அடுக்கியபோது அவர் தலையை ஆட்டினாரே தவிர ஒரு வார்த்தை பேச வேண்டுமே?

ஐந்தாம் நாள். இன்றைக்கு அருவியில் குளிக்கப் போகிறோம்...என்றான்.

போய் காலை வைக்க வில்லை. இங்கே பாருங்க! என்றான். குனிந்து நிமிர்ந்தவன் கையில் ஒரு பழைய பிளாஸ்டிக் பையும் கந்தல் துணியுமாக... .

அவற்றை கொண்டுபோய் சற்றுத் தள்ளி மரத்தில் கட்டி வைத்திருந்த குப்பைக் கூடை ஒன்றில் போட்டபடியே, இந்த உலகம் உருப்படும்னு நினைக்கிறீங்க நீங்க?”

அவர் வாய் திறந்தார் இம்முறை. கண்டிப்பா உருப்பட்டு விடும்பா!

அவன் புருவங்கள் உயர்ந்தன. ஏன் தாத்தா மூணு நாளா சொல்லாத வார்த்தைகளை இப்ப சொல்றீங்களே? எதை வெச்சு உங்களுக்கு இப்படி ஒரு திடீர் நம்பிக்கை?”

இந்த மூணு  நாள் நீயும் எல்லாரையும் போல அதை குற்றம் மட்டுமே சொன்னாய். அப்ப எனக்கும் அந்த கேள்வி வந்தது, இந்த உலகம் உருப்படுமா?  ஆனா இப்ப நீ உன் கையால் சில குப்பைகளை எடுத்துக் கூடையில் போட்டதைப் பார்த்தபோது எனக்கு நம்பிக்கை வந்திட்டது. இந்த உலகம் உருப்பட்டுவிடும்பா!  எந்த சந்தேகமும் வேண்டாம். இப்படி ஒவ்வொருத்தரும் குற்றம் சொல்லிக் கொண்டிருக்கிறதுக்குப் பதிலா தன்னால முடிஞ்சதை செய்திட்டா போதும், கண்டிப்பா உருப்பட்டுவிடும்!

('அமுதம்' மே  2013 இதழில் வெளியானது)
<<<>>>
 
(படம்:நன்றி-கூகிள்) 
 <<>> 

Tuesday, September 10, 2013

நல்லதா நாலு வார்த்தை... 16



 
படைத்தவனை உதவ அழை.

ஆனால்

பாறைகளிலிருந்து விலகி

படகோட்டு.

-  Proverb

(‘Call on God, but row away from the rocks.’)

<> 

உன்வழி அவர்

செய்ய முடிவதே

உனக்கு கடவுள்

செய்ய முடிவது.

- Eric Butterworth

(‘God can only do for you what  He

can do through you.’)
<> 
 
'நல்லா சொல்லிவிடலாம் 

மூன்றே வார்த்தைகளில் 

வாழ்க்கை பற்றி நான் 

எல்லாம் அறிந்து கொண்டதை:-

'நில்லாதோடுகிறதது!'

- RobertFrost 

('In three words I can sum up everything

 I've learned about life: 'It goes on.') 

<> 
 
'ஆசைப்படும் விஷயங்களை 

அடையச் செல்வதைவிட 

மனிதர்கள், தாம் 

அஞ்சும் விஷயங்களை விட்டு 

அப்பால் செல்வது அதிகதூரம்.' 

- Dan Brown

('Men go to far greater lengths to avoid what

they fear than to obtain what they desire.')

<> 

 'பார்ப்பதில் பாதியையும் 

கேட்பதில் எதையும் 

நம்ப வேண்டாம்.'

-Edgar Allan Poe

('Believe only half of what you see

and nothing that you hear.')

<> 

'அநேகரைப்போல்

உனை உணரும்போது 

அதுவே

நினை நின்றெண்ணும்

வேளை.' 

-Mark Twain

('Whenever you find yourself on the side

of the majority, it is time to pause and reflect.')

<> 

 'வண்ண மலர் அனைத்தையும்

கொய்துவிட்டாலும் 

வசந்தம் வருவதைத்

தடுக்க முடியாது

-Paplo Neruda

('You can cut all the flowers but

you can not keep spring from coming.')

<>