Saturday, December 7, 2024

செல்லக் குரல்...


யாரைப் பாட வைக்கலாம் இந்தப் பாடலுக்கு என்று யோசிக்கும் நேரத்தை ஜீரோவாக்கித் தந்தார், 60,70களில் அனேக பாடல்களுக்கு!
உருவானவுடனே தோன்றி விடும் இசையமைப்பாளருக்கு இது இவருக்கான பாட்டு என்று. அப்படி ஏராளம் பாடல்களை சுவீகாரம் எடுத்துக் கொண்டார் ஒரு பாடகி.
எல்லாருக்கும் பிடித்த அந்தக் குரல் எல்.ஆர். ஈஸ்வரியுடையது.
இன்று பிறந்த நாள்!
ஒரு ஹம்மிங்கிலேயே ஜம்மென்று மனசுக்குள் உட்கார்ந்துவிடுவார். 'பட்டத்து ராணி'யாக ஓங்கி ஒலிக்கும் குரல் அவருடையது. 'சிவந்த மண்'ணில் கேட்டுச் சிவந்த நம் காதுகள்!
“தட்டுத்தடுமாறி நெஞ்சம்…” (சாரதா) பாடல். ‘ஆஹா..’ என்று சீர்காழி அழகாக ஹம் செய்துகொண்டு போவார். ஆனால் ‘அஹஹ்ஹா அஹஹ்ஹ…’ என்று அட்டகாசமாக தொடரும் இவரின் குரல் பாடலை அப்படியே கபளீகரம் செய்து கொள்ளும்.
“வந்தாலென்ன…” என்று ஆரம்பித்து தொடர்ந்து ‘ஓஹோஹஹ ஹோஹோ..’ என்று ஓர் எடுப்பு. அப்புறம் 'ஓஹோ'விலேயே மெல்ல இறங்கி 'ஓஹோ'விலேயே சிணுங்கி... எப்போதும் கேட்டாலும் சிலிர்க்கும் பாடல் அது. ‘நீ’ படத்தில் நீங்கள் கேட்டது.
ஒரு குரல் என்பது என்ன? அதன் தன்மை என்பது என்ன? ஒரு குழைவு என்பதென்ன? சுலபமிமில்லாத திரையுலகில் அது தானும் வந்து காதுகளைக் குளிர வைத்த தென்ன? என்பதெல்லாம் சொல்லும் “நீ என்பதென்ன? நான் என்பதென்ன?..”
அவ்வப்போதுதான் நாயகிக்குப் பாடுவார். ஆனால் அந்த பாடல்கள் தனி சோபையுடன்… “வெண்ணிலா முகம்… குங்குமம் பெறும்…” “சந்திப்போமா... இன்று சந்திப்போமா…” “காதோடு தான் நான் பாடுவேன்..” “நாம் ஒருவரை ஒருவர் சந்திப்போமென..”
ஒரு லட்சம் ரிகார்ட் விற்று ரிகார்ட் படைத்த 'எலந்தப் பயத்'தை மறக்க முடியுமா? என்ன ஒரு வீச்சு! முதலில் தனிப்பாடல் தந்து அறிமுகம் செய்துவைத்தவரும் அதே கே வி மகாதேவன் தான். ஆம், "அவரேதான் இவரு... இவரேதான் அவரு..." ('நல்ல இடத்து சம்பந்தம்')
அம்மாவுடன் கோரஸ் பாட முதன் முதலில் ரிகார்டிங் ஸ்டூடியோ நுழைந்தவரின் அடுத்தடுத்த பாடல்களைக் கேட்டு கோரஸாக 'எல்லாரும்' ஆஹா சொல்ல ‘எல்.ஆரு'ம் தமிழ் பின்னணிப் பாடல் உலகின் தவிர்க்க முடியாத தாரகை ஆனார்.
அந்த ரிக்கார்ட் இருக்கா என்ற கேள்விக்குப் பின்னரே கல்யாண வீட்டு ஸ்பீக்கர் கட்டப்படும். பின்னே? ‘வாராய் என் தோழி..’ இல்லாமலா?
ஹம்மிங் அரசி என்றதும் உடனே நினைவுக்கு வருவது “கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா?” மற்றொரு மாணிக்கமும் உண்டு. ‘ஆரிராரி ராரி ஆரீராரோ…’ என்ற இவர் ஹம்மிங் தான் அந்தப் பாட்டுக்கே ஆதாரம்: ஆம், ‘பணம் படைத்தவனி'ல் “மாணிக்கத் தொட்டில் இங்கிருக்க…” எந்த ஹம்மிங்குமே ‘கம்மி'ங் தான் அதற்கு!
“ஜிஞ்சின்னாக்கடி … ஜிஞ்சின்னாக்கடி..” பாடலை அவர் 'குமரிப்பெண்ணி'ல் ஆர்ப்பாட்டமாகப் பாடும்போதும் சரி அந்தப் பாடலை நினைவு படுத்தி "முத்துக் குளிக்க வாரீகளா..."வில் கனிவாகப் பாடும்போதும் சரி ஒருபோல் ரசிப்போம்.
ஒரே படத்தில் ('அஞ்சல் பெட்டி 520') காபரேயும் பாடி (“ஆதி மனிதன்…”) கதா நாயகிக்கும் (“பத்துப் பதினாறு..”) பாடுவார் என்றால் அதேபோல காமெடி நடிகைக்கும் பாடி (“அல்லிப் பந்தல் கால்களெடுத்து…”) கதாநாயகிக்கும் பாடி கலக்குவார் (“நீ என்பதென்ன..”) ‘வெண்ணிற ஆடை’யில்.
“புத்தி சிகாமணி பெற்ற பிள்ளை..”.(எத்தனை குழைவு!) பாடியவர்தான் “மலரென்ற முகமின்று சிரிக்கட்டும்..” (எத்தனை விரைவு!) பாடினார். என்றால் நம்ப முடிகிறதா?
இங்கே நமக்கொரு ஆஷா பாஸ்லே கிடைத்திருப்பதை கொண்டாடாமல் இருக்க முடியாது, இங்கே “நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்…” என்று இவர் பாடுவதையும் அங்கே ரீமேக் ‘ராம் அவுர் ஷ்யாமி’ல் வரும் ‘Balam Tere Pyar ki…” பாடலில் ஆஷா பாடுவதையும் கேட்கும்போது.
இவரின் ஒய்யார வரிசையில் ஒரே ஒரு பாடலை மட்டுமேதான் கேட்க வேண்டும் என்றால் எதைச் சொல்வீர்கள் என்று கேட்டால் நாம் திணறிப் போகாமல் இருப்பதற்கும் ஒரு பாட்டுப் பாடி இருக்கிறார் விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் ‘கலைக்கோவில்’ படத்தில்:
“வர வேண்டும்.. ஒரு பொழுது..
வராமலிருந்தால்.. சுவை தெரியாது.”
இடையிசையில் தொடங்கும் ட்ரம்பெட்டும் சரணத்தில் தொடரும் இவரும் எங்கே பிரிகிறார்கள் எங்கே இணைகிறார்கள் என்றே தெரியாது. சொல்லத் திகட்டாத இனிமையில் நீந்திச் செல்லும் செல்லக் குரல்…

Thursday, December 5, 2024

விஞ்ஞான வேடிக்கைகள் ...

கடிகாரம் செய்வது எப்படி என்கிற புத்தகத்துக்கு ஆர்டர் செய்திருந்தான் அந்த வாட்ச் மெக்கானிக் இளைஞன். பார்சலில் தவறுதலாக வந்ததோ

விஞ்ஞான வேடிக்கைகள் என்ற மேஜிக் புத்தகம். திருப்பி அனுப்பாமல் ஆர்வத்தில் அதைப் படித்தான். அதையே நன்றாகக் கற்று, மேஜிக் நிபுணர் ஆகி பின்னாளில் Father of Modern Magic என்ற புகழ் பெற்றார்.
Jean Eugene Robert Houdin...
இன்று பிறந்த நாள்!
வக்கீல் ஆஃபீஸில் குமாஸ்தாவாக இருந்தவர் சட்டம் படிப்பதைப் பற்றி சட்டை செய்யாமல் எப்பவும் ஏதாவது மிஷின்களை நோண்டிக் கொண்டு இருந்ததை பார்த்து வீட்டுக்கு அனுப்பப்பட்டார், வாட்ச் மேக்கர் வேலைக்கு தான் லாயக்கு என்று.
வாட்ச் மெக்கானிக் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது நடந்த மற்றொரு சம்பவம்… ஒரு முறை தப்பான உணவால் ஃபுட் பாய்சன் ஆகிவிட, வீட்டுக்கு விரைகையில் வழியில் விழுந்து கிடந்தார். எடுத்துச் சென்று காப்பாற்றினார் Torrini என்ற ஒரு மேஜிக் நிபுணர். இவர் குணம் ஆகி விட்டார். ஆனால் அவருக்கு ஆக்சிடென்ட். எனவே அவர் நடத்தவிருந்த மாஜிக் ஷோவுக்கு இவர் உதவி செய்ய வேண்டியதாயிற்று. மேடையேறினார் ராபர்ட்.
மின்சாரத்தை முதல் முதலில் மேஜிக்கில் உபயோகித்தவர் இவர்தான். பலசாலியான ஒரு பார்வையாளரை அழைப்பார். பாக்ஸ் ஒன்றைத் தூக்கச் சொல்லுவார். எளிதாக அவர் தூக்கியதும் இதோ போய்விட்டது உன் பலம் என்று கையை ஆட்டுகிறார். இப்ப அவரால் தூக்க முடியவில்லை. (எலெக்ட்ரோ மேக்னெடிஸம்!)
இன்னொரு முறை முயலும்போது அலறுகிறார். லேசாய் ஒரு ஷாக். (மின்சாரம்!)
'அந்தரத்தில் மிதக்கும் பையன்'தான் மந்திரத்தில் இவருக்கு பெயர் வாங்கித் தந்த முதல் முக்கிய அம்சம். ஒரு பையனை பிரம்பால் லேசாய் வருட அவன் குறுக்காக மிதக்க ஆரம்பிப்பான்.
அன்றாட உபயோகப் பொருட்களை வைத்துக் கொண்டு அருமையான மேஜிக்குகளை அற்புதமாகச் செய்து காட்டிய மறு கணமே அதன் ட்ரிக்குகளையும் அரங்கத்தினருக்கு அழகாக விளக்குவார்.
வாட்ச் மேக்கர் இல்லையா? எப்படி ஓடுகிறதென்றே 'கண்டுபிடிக்க முடியாத' கடிகாரம் ஒன்றைக் 'கண்டுபிடித்தார்'.

Tuesday, December 3, 2024

கடல் இவரது உடல் மொழி...

‘பெண்ணாயிருப்பது பெரும் சிரமமான காரியம், ஏனெனில் அதன் முக்கிய வேலை ஆண்களை கையாளுவது என்பதால்.’
சொன்னவர் Joseph Conrad.
எத்தனையோ எழுத்தாளர்களின் ஆதர்ச எழுத்தாளரான ஹெமிங்வேயின் ஆதர்ச எழுத்தாளர்களில் ஒருவர் இவர். இன்று பிறந்தநாள்!
கடல் தான் இவரது உடல் மொழி. எழுதிய கதைகளில் கடல் கதைகளே பிரதானம். 20 வருட வணிகக் கப்பல் பயண அனுபவம் இவர் எழுத்துக்கு நிறையவே 'திரை' அமைத்தது.
புனைவிலும் சரி, உள்ளடக்கத்திலும் சரி படித்தவர்கள் மறக்க முடியாத நாவல் ‘Lord Jim.’ கோழைத்தனத்தால் தன் கப்பலைக் கைவிட்ட ஜிம்மின் கதை. தன்னை நிலை நிறுத்த அவனது துடிப்பும் முயற்சிகளும் விரிந்து பரவும் நாவலில்! பிரபல Peter O'Toole நடித்தார் Lord Jimஆக, பிரபல Richard Brooks டைரக்‌ஷனில்.
ஆல்பிரட் ஹிட்ச்காக் 1936இல் படமாக்கிய இவரது நாவல் தான் ‘Sabotage.’ 1924இல் மறைந்த இவரது 'Heart of Darkness' நாவல் இந்த 2021ல் படம் ஆகிக்கொண்டிருக்கிறது.
சஸ்பென்ஸாக விட்டு மறைந்தார் சஸ்பென்ஸ் என்ற தன் கடைசி நாவலை.
ஆங்கிலத்தில் இத்தனை கதைகளைப் படைத்தவருக்கு இருபது வயதுவரை ஆங்கிலம் தெரியாதாம்.
‘சக மனிதர்களின் குறைபாடுகளின்பால் அக்கறையோ அனுதாபமோ இல்லாதவரை ஒரு எழுத்தாளர் என்று கொள்ள முடியாது,’ என்பவரின் இதர வார்த்தைகள்:
‘மற்றவரை ஒத்துக் கொள்ள வைக்க முயல்கிறவர் சரியான வாதத்தை விட சரியான வார்த்தையையே நம்ப வேண்டும். உணர்வின் சக்தியைவிட ஒலியின் சக்தி அதிகம்.’
‘அடுத்தவர்களின் பலவீனத்திலிருந்து தற்செயலாக எழுவதே பலம் என்பது.’
‘நாம் கனவு காண்பது போல, நாம் வாழ்வதும் தனியாகவே.’
'கேடு விளைவிக்கும் அபூர்வ சக்திகள் எங்கோ இருப்பதாக நம்பவேண்டாம், சகல வகை கெடுதலையும் செய்யும் சக்தியை மனிதர்களே நிறைய வைத்திருக்கிறார்கள்.'
‘எதிர் கொள்வது, எது வந்தாலும் எதிர் கொள்வது: அதுவொன்றே முன்னேறிச் செல்ல ஒரே வழி . எதிர் கொள்ளுங்கள்!’
‘கடல் என்றுமே ஒரு நண்பராக இருந்ததில்லை. மிஞ்சி மிஞ்சி போனால் மனிதனின் அலைபாயும் மனதுக்கு ஒரு துணையாக.’
‘மனிதரின் கற்பனையில்தான் சத்தியம் ஒவ்வொன்றும் சக்தி வாய்ந்த, மறுக்க முடியாத உருவம் பெறுகிறது. கற்பனைதான் வாழ்க்கைக்கும் சரி, கலைக்கும் சரி மாபெரும் அதிபதி.’
‘ஒவ்வொரு புல்லின் இதழுக்கும் மண்ணில் ஓர் இடமுண்டு. தன் பலத்தை அதிலிருந்துதான் எடுத்துக் கொள்கிறது. அதுபோலவே மனிதனும் தன் வாழ்க்கையையும் நம்பிக்கையையும் தான் வேரூன்றியிருக்கும் மண்ணிலிருந்து எடுத்துக் கொள்கிறான்.’