Wednesday, December 27, 2023

ஒரே படத்தில் ஸ்டார் ...


கண்டிப்பான காலேஜ் புரபசர் அவர். வகுப்பைக் கட் அடித்துக் கொண்டு கேபரே பார்க்கச் சென்றுவிடும் தன் மாணவர்களைக் கையும் களவுமாகப் பிடித்துக் கண்டிக்க நாட்டம் கொண்டு அந்த ஆட்டம் நடக்கும் ஹோட்டலுக்கு சென்றதில், ஆடும் அந்த அழகியிடம் மனதைப் பறிகொடுத்து விடுகிறார். அவர் வாழ்க்கையே மாறிவிடுகிறது. வேலையை விட்டுவிட்டு அவளுடனேயே சுற்றுகிறார்…

இந்த 1930 படத்தில் (‘The Blue Angel’) அழகியாக நடித்து ஒரே படத்தில் ஸ்டார் ஆனவரே Marlene Dietrich! ஆவதற்குமுன் அவரும் கேபரே பாடகராக இருந்தவரே.
Marlene Dietrich.. இன்று பிறந்த நாள்!
அவர் காலத்தில் மிக அதிக தொகை வாங்கிய ஸ்டார்! ஆனால் கவர்ச்சிக் கன்னியான இவரைக் கவர்ந்த விஷயங்கள் வீட்டு வேலைகள் செய்வதும் சமூக சேவையும்.
நடித்த பிரபல படங்களில் ஒன்று பில்லி வைல்டர் சொல்லி அடித்த படம்: அகதா கிறிஸ்டியின் ‘Witness for the Prosecution.’
வழியில் கண்டெடுத்த குழந்தையை வளர்க்க வேண்டும் அந்த நடிகைக்கு. முறைப்படி அடாப்ட் செய்ய அவளுக்கு கல்யாணம் ஆகியிருக்க வேண்டுமே? தன் டாக்டருடன் பேரம் பேசுகிறாள். அவர் ஆராய்ச்சிக்கு பணம் தர இவளும் கல்யாணம் செய்து கொள்ள அவரும் ஒத்துக்கொள்கிறார்கள். மீதம் உள்ள விஷயங்கள் ஒத்துப்போக வேண்டும் அல்லவா? சுவாரசியமான இந்தக்கதையில் பின்னியிருந்தார் 'The Lady is Willing' படத்தில்.
ஆளுக்கொரு ஃபோபியா இருக்கும்… இவருடையது Bacilophobia. கிருமிகளைக் கண்டு கிலேசம்!
கொட்டேஷன்கள் அவருக்கு கட்டி வெல்லம். காரணம் "நமக்குத் தோன்றும் சில எண்ணங்கள், நம்மைவிட விவேகமானவர்களாக கருதப்படுபவர்களிடமிருந்து நேர்த்தியான வார்த்தைகளில் உத்தரவாதத்துடன் வெளிப்படுவதைப் பார்க்கும்போது நமக்கு ஒரு மகிழ்ச்சி தோன்றுகிறது," என்கிறார்.
இப்படி அவர் சொல்வதாலோ என்னவோ அவருடைய கொட்டேஷன்கள் சொல்லிக் கொள்கிற மாதிரி இருக்கும்.
‘உங்கள் மகள், வாழ்க்கை முழுக்க உங்களுக்கு ஒரு குழந்தைதான்.’
‘மாலை மருள்வதைக் காண்பதை மருத்துவர்கள் பரிந்துரைக்க வேண்டும்.’
‘கனிவின்றி ஆண் சுவாரசியம் இல்லை.’
‘அழகிய பெண்ணிடம் தான் கொள்ளும் நாட்டத்தை விட, தன்னை விரும்பும் பெண்ணிடம் அதிக நாட்டம் கொள்கிறான் ஒரு சராசரி ஆண்.’
‘காதலனின் வார்த்தைகள்: நீ எவ்வளவு அழகாக இருக்கிறாய், என்னை இப்போது நீ நேசிப்பதால்.’
'ரகசியத்தின் சுமையை ஒருநண்பரிடம் ஏற்றுமுன் நன்றாக யோசியுங்கள்.'
'மாற்றியே தீருவேன் அவனை என்று இறங்கி விடுகிறார்கள் பெரும்பாலும் பெண்கள். மாற்றியபின் அவனை அவர்களுக்குப் பிடிப்பதில்லை.'
‘காதலிக்கிற சந்தோஷத்துக்காக காதலியுங்கள்; கழற்றித் தருகிறார்களே இதயத்தை என்பதற்காக அல்ல.’
‘கவனமான பராமரிப்பு ஒரு பெண்ணின் இருபது வருடங்களை குறைத்துவிடும்; ஆனால் ஒரு மாடிப்படியை நீங்கள் ஏமாற்ற முடியாது.’

Monday, December 25, 2023

கனிந்த ஹீரோ...


அவரைப் போட்டால்தான் ஆயிற்று இந்தப் படத்தில் என்று அடம் பிடித்தார் அந்தப் பிரபல நடிகை. அவர்? நாடகத்தில் அதே வேடத்தில் இவருடன் நடித்தவர். வேறு வழியின்றி வார்னர் பிரதர்ஸ், போட்டிருந்த நடிகரை நீக்கிவிட்டு அவரைப் போட.. பிய்த்துக் கொண்டு ஓடிற்று படம். ஸ்டார் ஆனார்.

Humphrey Boghart.... இன்று பிறந்த நாள்!
'வெளியே கடின உள்ளே கனிந்த ஹீரோ' என்று இன்று சக்கைப்போடு போடுகிற இமேஜைக் கொண்டுவந்தார். நேவியில் இருந்தபோது பட்ட முகக்காயம் rough look- க்கு உதவிற்று.
முதல் முதல்ல படத் தயாரிப்பாளரான நடிகர். அமெரிக்கன் ஃபிலிம் இன்ஸ்டிட்யூட் 1999 இல் இவரை நம்பர் ஒன் ஹீரோவாகவும் 2007 -இல் இவரது Casablanca படத்தை 3-வது தலை சிறந்த படமாகவும் பட்டியலிட்டது. கேதரின் ஹெபர்னுடன் நடித்த The African Queen ஆஸ்காரை வாங்கித் தந்தது.
அவார்டுகளைப்பற்றிய இவர் கமெண்ட் ஒன்று அலாதியானது. ‘சிறந்த நடிகரை செலக்ட் செய்யணும்னா சரியான ஒரே மெத்தட் எல்லாரையுமே ஹேம்லெட் ஆக நடிக்க வைத்து அதில் யார் சிறப்பா நடிக்கிறாங்கன்னு பார்த்து செலக்ட் பண்றதுதான்!’
மணந்த 4 பேருமே நடிகைகள்தாம். மனைவி மேயோ மெதோட் இவர் மேல் சந்தேகத்தில் ஃபாலோ செய்ய ஒரு டிடெக்டிவை ஏற்பாடு செய்ததை அறிந்திருந்தார் போல. ஒரு தடவை அந்த ஏஜென்ஸிக்கு போன் செய்தார். "கொஞ்சம் உங்க டிடெக்டிவைக் கூப்பிட்டு இப்ப நான் இருக்கிறது எந்த இடம்னு கேட்டு சொல்ல முடியுமா?"

><><><

யுத்த களத்தின் தேவதை...

 


அமெரிக்கன் ரெட் கிராஸ்! 1881-இல் ஆரம்பித்த பெண்மணி Clara Barton -க்கு இன்று பிறந்த நாள்!

ஆறுபேர் சேர்ந்து என்னை வளர்த்தார்கள் என்பார் அவர். பெற்றோர் தவிர அண்ணன் அக்கா நாலு பேரும்…
அடிபட்ட அண்ணனை ஆறுமாதம் கிட்டே அமர்ந்து ஒரு நர்ஸ் போல கவனித்தார். அந்தப் பணியையே தொடர ஆர்வம் பிறந்தது. அக்கம்பக்கம் நோயுற்ற அனைவருக்கும் உதவ ஆரம்பித்தார்.
சிவில் வார் வந்தது. வீரர்களுக்குத் தேவையான மருந்து, உணவு என்று களமிறங்கினார், போர்க்களத்துக்கே சென்றார் அனுமதியுடன். காணாமல் போன வீரர்களைத் தேடத் தொடங்கினார். கிட்டத்தட்ட 20000 பேர்!
மனதுக்கும் மருந்தளித்தார். ஆறுதல் வார்த்தைகள்... கடிதம் எழுதித் தருதல்... 'யுத்த களத்தின் தேவதை' என்றழைத்தனர் வீரர்கள்.
தன் 56 வது வயதில் அமெரிக்கன் ரெட் கிராஸ் ஆரம்பித்தார்...
சொன்னது:
‘யாரும் உள்ளே போக விரும்பாத கதவு எனக்காகவே எப்போதும் திறந்தாடிக் கொண்டிருக்கிறது.’
‘ஆபத்தை நான் எதிர்கொள்ள வேண்டி வரலாம். ஆனால் பயமில்லை. போர் வீரர்கள் நின்று சண்டையிட முடிகையில் நான் நின்று அவர்களுக்கு உணவளிக்கவும் கவனிக்கவும் முடியும்.’

><><><

Thursday, December 21, 2023

ரெண்டு ஆஸ்கார்...


அப்பா ஹாலிவுட்டில் மிகப் பிரபல நடிகர், ஆனால் அவர் வாங்குவதற்கு முன் ரெண்டு முறை ஆஸ்காரை வாங்கி விட்டார் மகள்!

Jane Fonda! பிரபல நடிகர் Henry Fonda வின் மகள். இன்று பிறந்த நாள்!
Tall Story என்ற படத்தில் முதல் முதலாக நடித்தார் அப்புறம் அவர் வெற்றிக்கதை ஒரு tall story!
1971 & 78 இல் ஆஸ்கார். ஹென்றிக்கு 1982 இல் தான் கிடைத்தது.
அப்பாவும் மகளும் அப்பாவும் மகளுமாக நடித்த ‘On Golden Pond’ தப்பாமல் பாராட்டை அள்ளிற்று.
பதினேழு மில்லியன் பிரதி விற்றது இவரது ஏரோபிக்ஸ் விடியோ 'Workout'. உடற் பயிற்சிப் பிரியர்.
நன்கொடைப் பிரியரும்கூட. ஹார்வர்ட் யூனிவர்சிடிக்கு அதுவரை யாரும் தராத 12.5 மில்லியன் டாலரை அள்ளித் தந்தவர்.
சொன்னது:
'சரியான வழி என்று நான் அறிந்த பாதையில் நடக்கத் தொடங்கும்போது என்னை முழுமையாக எடுத்துச் செல்கிறேன்.'
‘குறிக்கோளுடன் வாழ்வது முக்கியம் என நினைக்கிறேன் இல்லாவிடில் நாம் விதியின் வசத்துக்கு ஆளாக நேருமில்லையா?’

>><<

Monday, December 18, 2023

இவரிடம் பயின்ற ஏழு மாணவர்கள்...


Atom தான் ஆகச் சிறிய பொருள் அவனியில் என்றிருந்தபோது அதை உடைத்து உள்ளிருக்கும் Electron-ஐ நமக்குக் காட்டிய விஞ்ஞானி...
J J Thomson.. இன்று பிறந்த நாள்! (1856 - 1940)
அதாவது Element எதுவாயிருந்தாலும் அதன் மூலப் பொருள் ஒரேவிதத் துகளையே கொண்டிருக்கிறது என்ற உலுக்கும் உண்மை! எத்தனை பெரிய 'சிறிய' விஷயம்!
கையோடு பிளம் அப்பம் மாதிரி ஒரு மாடலை செய்துகாட்டி எல்லாரும் வாய் பிளக்க வைத்தார். கண்டுபிடித்த தூள், அறிவியலில் தூள் கிளப்பிற்று.
அணுவின் ஆயிரம் மடங்குக்கு மேல் சிறிய அந்த எலக்ட்ரானுக்கு அவரிட்ட பெயர் Corpuscles.
மட்டுமா? ஹைடிரஜனுக்கு ஒரே ஒரு எலக்ட்ரான்தான் என்பதையும் கண்டார்.
தொடர்ந்து ஆராய்ந்ததில் கிடைத்தது நோபல் பரிசு, ‘Electrical Conductivity of Gases’ ஆராய்ச்சிக்காக! கெமிஸ்ட்ரியின் அதி முக்கிய கருவியான மாஸ் ஸ்பெக்ட்ரோமீட்டரை அறிமுகித்தவரும் இவரே.
எஞ்சினீயராக வேண்டியவர் அப்பா இறந்துவிட, அந்தளவு பணமில்லாததால் காலேஜில் கணிதம் படிக்கச் சேர்க்கப்பட்டதில் நமக்கொரு நோபல் விஞ்ஞானி கிடைத்தார்.
21வருடத்துக்குப் பிறகு அதே இயற்பியலில் நோபல் பெற்றவர் வேறு யாருமல்ல, Thomson’s son தான். (George Paget Thomson)
தவிர, இவரிடம் பயின்ற ஏழு மாணவர்கள் (பிரபல ரூதர்ஃபோர்ட் அதிலொருவர்) நோபல் பரிசு வாங்கினர் என்றால் இவர் எத்தனை சிறப்பானதொரு ஆசிரியரும் கூட!
எல்லாவற்றையும் படித்துவிட்டு இறங்காதீர்கள், அது உங்கள் கருத்தை மாற்றிவிடும். உங்களுக்குத் தோன்றிய ஐடியா சரியா என்று ஆராய்ச்சி செய்துவிட்டு அப்புறம் அதைப்பற்றி மற்றவர்கள் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்று பாருங்கள் என்பார்..
Quote?
‘மின்னுவதெல்லாம் பொன்னல்லதான், ஆனாலும் குறைந்தபட்சம் சுதந்திரமாய்ச் சுற்றும் எலெக்ட்ரான்ஸ் அதனுள் உண்டு!'

Sunday, December 17, 2023

ரசிகையர் ஏராளம்..


Most handsome Actor ஒருவருக்கு இன்று பிறந்த நாள்.

Brad Pitt.

உடனே நினைவுக்கு வரும் Se7en! அப்புறம் Fight Club, Ocean’s 11, Troy, 12 Monkeys. நிறைய Etc.
38 டாலரில் ஆரம்பித்த சம்பளம் 30 மில்லியன் டாலர் வரை உயர்ந்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் இவர் பாப்புலாரிடியை.
மறக்க முடியாத பெஞ்சமின்! 'The Curious Case of Benjamin Button' -இல் தலைகீழாக வயதாகும் கேரக்டர்! இவன் குறைந்து வர, சினேகித்த பெண் வளர்ந்து வர தங்கள் 40-களில் சந்திக்கிறார்கள். என்ன ஒரு அழகிய முடிச்சு!
ரசிகையர் ஏராளம்.. நள்ளிரவில் இவர் வீடு புகுந்து இவர் டிரஸ்சைப் போட்டுக்கொண்டு உலவிய ‘ரசிகை’, 3 வருடம் இவரைவிட்டு 300 அடி தாண்டியே உலவவேண்டும் என்று உத்தரவிடப்பட்டாராம்.
2012 இல் பிரபல நடிகை Angelina Jolie யுடன் கல்யாணம். கல்யாணச் செலவு ரொம்ப அதிகமில்லை ஜஸ்ட் ஒன் மில்லியன் டாலர். நாலரை வருடம் நீடித்தது.

Friday, December 15, 2023

ஒன் டேக் சார்லி...


உயிரில்லை என்று டாக்டர் அந்தக் குழந்தையை கிச்சன் மேடையில் வைத்துவிட்டு தாயைக் கவனிக்க, பாட்டி வந்து தனக்குத் தெரிந்த ஏதோ வைத்தியம் செய்ய, பிழைத்துக் கொண்ட குழந்தைதான்...

Frank Sinatra! டிச.12. பிறந்த நாள்…
1950 -களில் ஹாலிவுட்டின் ஐந்து மிகப் பணக்கார ஸ்டார்களில் ஒருவராக இருந்ததும் இவரே. வீழ்ச்சியின்போது தற்கொலை செய்ய முயன்றவரும் இவரே.
‘From Here to Eternity’ இல் அபாரமாக நடித்து வாங்கிய Best Supporting Actor தவிர பால் நியூமன் போல ஒரு Honarary Oscar -ம்.
'ரெண்டாம் உலகப் போரில் பிடிபட்ட அமெரிக்க பைலட் அவர். தன் மேல் நம்பிக்கையில்லாத மற்ற 600 போர்க் கைதிகளுடன் ரயிலொன்றில் தப்பிச் செல்லும் த்ரில்லிங் மூவீ அது. முடிவில் அவர் ட்ராக்கில் ஓடி ஓடி வர ரயிலில் ஏற முடியாமல் உயிரிழக்கும் காட்சி அற்புதமாக! உயிர் பிழைப்பதாக இருந்த நாவலின் முடிவை மாற்றியவரும் அவரே.
1960 இல் வந்த Ocean’s Eleven இல் Oceanஆக இவர்தான். ஹிட் படங்களில் சில…’Some Came Running’, ‘4 For Texas’, ‘Come Blow Your Horn’…
'One Take Charlie' என்று அன்புடன் அழைக்கப்பட்டார். ஏன்? ஒத்திகை அதிகமின்றி நேரே டேக் போய்விடுவதால்.
படம்: ‘Guys and Dolls.’ ஒருத்தரை ஒருத்தர் பிடிக்காமலேயே மார்லன் பிராண்டோவும் இவரும் சேர்ந்து நடித்தார்கள். இவர் கேக் சாப்பிட்டபடி பேசும் காட்சி. வேண்டுமென்றே வரியை மறந்து இவரை 9 முறை கேக் சாப்பிட வைத்துவிட்டாராம் பிராண்டோ.
மிகப் பிரபல பாடகரும் கூட. “New York, New York…” “My Way…” இரண்டும் இவரது ஹிட்ஸ்.
இந்த நட்சத்திரத்தின் பேரை சிறு கோள் ஒன்றுக்கு வைத்தார் கண்டுபிடித்தவர். ‘7934 Sinatra' என்று.
செத்துப்போனபின் அடித்துக் கொள்ளக் கூடாது என்பதற்காகவே உயிலில் ‘இதை எதிர்த்து வழக்கிடுபவர் உரிமை இழக்கிறார் என்றொரு ஷரத்தைச் சேர்த்தாராம்.
><><><

உனக்குள் நானே...


அட்டகாசமான அந்த பாடல்வரிகளை அவ்வளவு சுலபத்தில் மறந்து விட முடியாது.. (எழுதியவரை ஊகியுங்கள் பார்க்கலாம்!)

“உனக்குள் நானே உருகும் இரவில்
உள்ளத்தை நான் சொல்லவா..
மருகும் மனதின் ரகசிய அறையில்
ஒத்திகை பார்த்திடவா..”
...என்று தொடங்கும் ஜோதிகா பாடும் அந்தப் பாடல் ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’ படத்தில்.
பின்னியெடுக்கும் ஹாரிஸின் இசையில் மின்னித் தெறிக்கும் அதன் வரிகள்!
இதோ சில..
“கண்ணில் உன்னை வைத்து
பெண் தைத்துக் கொண்டாளே..”
“சொல்லா சொல்லும் என்னை வாட்டும்
ரணமும் தேன் அல்லவா..”
“தீபோல் தேன்போல் சலனமே தான்
மதி என் நிம்மதி சிதையவேதான்
நிழலை விட்டுச் சென்றாயே!
நினைவை வெட்டிச் சென்றாயே!”
“ஏனோ நம் பொய் வார்த்தையேதான்?
ஏனதில் உன் என் மௌனமேதான்?”
"பொன் மான் இவளா..
உன் வான வில்லா.."
எழுதியவருக்கு இன்று பிறந்த நாள்!
ரோகிணி!

>><<>><<

ஆதவன் அரசி…


சும்மா அல்ல அவரை சூரிய ராணி (Sun Queen) என்று கொண்டாடுவது. சூரிய ஒளியை நம் வாழ்க்கையிலும் பிரதிபலிக்கச் செய்தவர்.

வீட்டுக்குள் நுழைஞ்சா குளிருக்கு கதகதப்பூட்டறதுக்கு சூரிய சக்தியால் இயங்கற ஹீட்டிங் சிஸ்டமும் இந்தப் பக்கம் சூரிய ஒளியால் இயங்கும் ஒரு அடுப்பும், அந்தப் பக்கம் சூரிய ஒளியைக் கொண்டு கடல் தண்ணியை நல்ல தண்ணியா மாற்றித் தர்ற வடிகட்டியும் ஏற்பாடு பண்ணி கொடுத்தவராச்சே…
Maria Telkes… ஆதவன் அரசி… டிச. 12. பொறந்தநாள்!
மூணாவதா சொன்ன ஸோலார் ஸ்டில் (Solar Still) முக்கியமானது, நடுக்கடலில் மாட்டித் தவிக்கிறவங்களுக்கு. ரெண்டாம் உலக யுத்தத்தில் ரொம்பவே பயன்பட்டது போர் வீரர்களுக்கு.
ஒரு காலத்தில் சூரிய ஒளியைத்தான் நாம நம்ப வேண்டியிருக்கும்னு அப்பவே யூகித்த மதியூகி. ஸ்கூலில் படிக்கும்போதே ஆரம்பித்து விட்டார் தன் ஆதவன் ஆராய்ச்சியை. இறுதியில் சுமார் இருபது பேடண்டுகள் இவர் கையில்...
அருவியா பொழியற சூரிய சக்தியை உருவி எடுக்கிறதோடு கருவியை நிறுத்த முடியாதில்லையா? அதை ஸ்டோர் பண்ணற மெகா பிரச்சனைக்கும் சோடியம் சல்ஃபேட் உபயோகிச்சு ஒரு மாதிரியா கிரிஸ்டலைசேஷன் செய்து ஒளி வீசினாங்க.
விளைஞ்ச பயிரை வேகமாக காய வைக்கிறதுக்கு வெயிலவன் ஒளியில் வழியை கொடுத்ததையும் சேர்த்துக்கணும் லிஸ்டில்.
பாருங்க உலகத்தில் உள்ள மொத்த சக்தியும் நாலைஞ்சு விதமா வியாபிச்சிருக்கு, நமக்குத் தெரியும். புதுசா ஒரு joule அளவுகூட நாம உண்டுபண்ண முடியாது. ஒண்ணிலே இருந்து ஒண்ணுக்கு மாத்தறதுதான் நாம செய்ய முடியற, செய்யவேண்டிய வேலை. அதுல புது சாதனை பண்ணினவங்களை புரிஞ்சிக்கிட்டு, கொண்டாடாம எப்படி?
கூகுளும் தன் பங்குக்கு டூடில் வெளியிட்டு கொண்டாடி இருக்காங்க இன்னிக்கு..
>><<>><<

விஞ்ஞானம் மீது காதல்...


‘இப்ப எனக்குப் புரிகிறது,’ என்றான் உலகின் கடைசி மனிதன்.’

பிரபல Scince Fiction எழுத்தாளர் Arthur C Clarke -இன் ஒரு வரி இது.
கப்பல் பாரம் சரியா இருக்க, அடைத்துவந்த குப்பை நியூஸ் பேப்பர்களில் வந்த விஞ்ஞானக் கதைகளைப் படித்தவர், பின்னாளில் பிரபல Scince Fiction எழுத்தாளரானார்.
Arthur C Clarke.. இன்று பிறந்த நாள்!
அரும்பியது விஞ்ஞானம் மீது காதல் எனினும் விரும்பியதைப் படிக்க வசதி இல்லாத வறுமை. ஆடிட் க்ளார்க் ஆக வேலை பார்த்தபடி எழுத ஆரம்பித்து…
ஸாட்டிலைட் வைத்து உலகம் பூரா டெலிகாஸ்ட் செய்து சௌகரியமாக உட்கார்ந்து டி.வி. பார்க்கிறோமே, அதைக் கண்டு பிடிப்பதற்கு 20 வருஷம் முன்பே இவர் எழுதிவிட்டார் அதைப் பற்றி, ‘Extra Terrestrial Relays’ என்ற தன் கட்டுரையில்!
விண்வெளிப் பயணங்களின் சாத்தியதை பற்றி 1950களிலேயே எழுதிவிட்டார். ஏன், விண்கல விஞ்ஞானிகளே ஆலோசனை கேட்க இவரிடம் வருவதுண்டு.
‘2001 A Space Odyssey’! எல்லாரும் பார்த்து ரசித்தோமே அந்த பிரம்மாண்ட ஹாலிவுட் படம்! அது 1951-இல் இவர் எழுதிய ‘The Sentinel’ என்ற சிறுகதை. 'இந்தப்படம் உங்களுக்குப் புரிந்தால் எங்களுக்குத் தோல்வி,' என்று விளம்பரப் படுத்தினார்கள். 'நிறைய கேள்விகளை எழுப்பவேண்டும் அது!'
'ஜோசியத்தில் எனக்கு நம்பிக்கையில்லை, நான் தனுசு. நாங்க சந்தேகப் பிராணிகளாச்சே?' என்பார். எப்படி ஜோக்?
கொஞ்சம் இவரது Quotes...
‘மொத்தத்தில் இரண்டு சாத்தியதை தான் உண்டு: பிரபஞ்சத்தில் நாம் தனியாக இருக்கிறோம் அல்லது இல்லை. இரண்டுமே ஒரே அளவு பயங்கரமானது; திகில் ஊட்டுவது.’
‘எந்தப் புரட்சிகரமான முன்னேற்றமும்நான்கு படிகளில் அமைவது. 1. அது மடத்தனம், என் நேரத்தை வீணாக்காதே. 2. சுவாரசியமா இருக்கிறது, ஆனால் ரொம்ப முக்கியமில்லை. 3. அது ஒரு நல்ல ஐடியா என்று நான் எப்போதுமே சொல்லி வந்திருக்கிறேன். 4. நான் தான் அதை முதலில் சொன்னேன்!’
‘இந்த ஒரு காலக்ஸியில் மட்டுமே 87000 மில்லியன் சூரியன்கள் இருக்கின்றன. எல்லாவற்றையும் மனிதன் எதிர்கொள்வது இயலாத காரியம். கோள்கள் ஒருநாள் அவன் வசமாகலாம். ஆனால் நட்சத்திரங்கள் மனிதனுக்கானவை அல்ல.’
‘இன்டர்நெட்டில் இருந்து தகவல் பெறுவது என்பது நயாக்ரா நீர் வீழ்ச்சியிலிருந்து ஒரு டம்ளர் தண்ணீர் பெறுவது.’
‘தகவல் அறிவு ஆகாது. அறிவு விவேகம் ஆகாது. விவேகம் தொலைநோக்கு ஆகாது. ஒன்றிலிருந்து ஒன்று... எல்லாமே வேண்டும் நமக்கு.’
‘இருப்பவர்களுக்கும் இறந்து போனவர்களுக்குமான விகிதத்தை வைத்துப்பார்த்தால் ஒவ்வொருவருக்குப் பின்னாலும் முப்பது ஆவிகள் நிற்க வேண்டும்!’
‘இப்போது நான் ஒரு அறிவியல் விற்பன்னர். அதாவது எதைப்பற்றியும் எனக்கு முழுமையாக தெரியாது.’
‘அடுத்து என்ன செய்வது என்பதே நிஜத்தில் வாழ்வின் ஒரே பிரசினை.’
‘உங்களால் என்ன முடியும் என்று கண்டுபிடிக்க ஒரே வழி அதையும் தாண்டி முயற்சிப்பது தான்.’
>><<>><<

Tuesday, December 12, 2023

ஒரே படம்...


என்றைக்குமே டாப் இடம் இவருடையது. (இங்கே சிவாஜி எம்.ஜி.ஆர் ஜெமினி மாதிரி அங்கே ராஜ் கபூர், திலிப் குமார், தேவ் ஆனந்த்)

Dilp Kumar.... டிச. 11.. பிறந்த நாள்!
'கூண்டுக்கிளி' மாதிரி இவரும் ராஜ் கபூரும் இணைந்து நடித்தது
ஒரே படம்: 'அந்தாஜ்'
இவர் கதை எழுதி தயாரித்த கங்கா ஜமுனா ('இரு துருவம்') ஒரு blockbuster!
‘Lawrence of Arabia’ படத்தில் உமர் ஷெரிஃப் வேடத்தில் நடிக்க பிரபல டைரக்டர் டேவிட் லீன் கேட்டபோது மறுத்துவிட்டார்.
1960 களின் ஆகப் பெரும் வசூல் படமான 'மொகலே ஆஸம்' படத்தில் இவரும் பிரித்விராஜ் கபூரும் (ராஜ் கபூரின் தந்தை) சலீமும் அக்பருமாக...
ரொம்ப வருஷம் பேச்சிலர். 42 வயதில் சைரா பானுவை மணந்துகொண்டார்.
ஆலய மணி இந்தியும் இவர்தான். எங்க வீட்டுப் பிள்ளையும் இவர்தான். தவிர, இரும்புத் திரை (Paigham), முரடன் முத்து (Gopi)...
மகனை கடத்திவிட்டு பணம் கேட்கும் வில்லனிடம் முடியாது என்று மறுக்கும் போலீஸ் அதிகாரி அப்பாவை வெறுத்து கேங்ஸ்டர் ஆகும் மகன்! அமிதாப்பும் இவரும் கலக்கிய 'ஷக்தி' இவருக்கு ஒரு தங்கப் பதக்கம்!

Thursday, November 23, 2023

காதில் தென்றல் போல்...

ந்தப் படத்தில் அவர் ஒரே ஒரு பாடல்தான் எழுதினார்.. ஆனால் அந்தப் பாடல் இருக்கையில் அமுதமும் தேனும் அவசியமில்லை என்று தோன்றும். ஆம், அதே பாடல்தான்! "அமுதும் தேனும் எதற்கு?" (தை பிறந்தால் வழி பிறக்கும்)


சுரதா... அழியாத பாடலை தந்தவருக்கு இன்று பிறந்தநாள்!

பாரதிதாசன் மேலிருந்த பற்றினால் அவர் இயற்பெயரை ஒட்டி சுப்புரத்தின தாசன்... சுருக்கமாக சுரதா...

சில படங்களுக்கு வசனம் எழுதியதில் ஒன்று 'ஜெனோவா.'

காதில் வந்து தென்றல் போல் ஒலிக்கும் "கண்ணில் வந்து மின்னல் போல்..." பாடலும் இவருடையதுதான். (நாடோடி மன்னன்)

"ஆடி அடங்கும் வாழ்க்கையடா... ஆறடி நிலமே சொந்தமடா..." என்ற பாடலை விட வேறொன்று வேண்டுமா இவரது இசைத்தமிழ் சொல்ல?

"வகுப்பார் அதுபோல் வாழ்வதில்லை

வந்தவர் யாருமே நிலைத்ததில்லை

தொகுப்பார் சிலரதை சுவைத்ததில்லை

தொடங்குவார் சிலரதை முடிப்பதில்லை!"

என்று முடியும் அந்த பாடல்!

>><<>><<

Wednesday, November 22, 2023

சந்தோஷம் என்பது...


‘எப்படி நீ இருக்கிறாயோ அதற்காக வெறுக்கப்படுவது,
எப்படி நீ இல்லையோ அதற்காக விரும்பப்படுவதைவிட
எவ்வளவோ மேல்.’
… சொன்னவர் Andre Gide.
பிரஞ்சு எழுத்தாளர். 1947 இன் இலக்கிய நோபலைப் பெற்றவர்.
இன்று பிறந்த நாள்!
சுவை, இன்னும் சொன்னவை...
‘உண்மையைத் தேடுபவர்களை நம்பு. உண்மையைக் கண்டு பிடித்து விட்டேன் என்று சொல்பவர்களை சந்தேகி.’
‘கரையிலிருந்து கண்ணை எடுக்கும் தைரியமுள்ளவனால்தான் புதுப்புது கடல்களைக் கண்டு பிடிக்க முடியும்.’
‘கலை என்பது கலைஞனுக்கும் கடவுளுக்குமான கூட்டு உருவாக்கம். கலைஞன் எத்தனை குறைவாக செய்கிறானோ அத்தனைக்கு நல்லது.’
‘சந்தோஷத்தைக் கதையாகச் சொல்ல என்ன இருக்கிறது? எது அந்த சந்தோஷத்தை உண்டாக்கியது, எது அதை அழித்தது என்பதைத்தான் சொல்ல முடியும்.’
‘நம்மைச் சிரமப் படுத்தி நம் முயற்சியை அதிகம் கோரிய காரியம்தான் நமக்கு மிக முக்கியமான விஷயங்களை கற்றுத் தர முடியும்.’

சந்தோஷம் என்பது அபூர்வமானது, மிகச் சிரமமானது, மிகவும் அழகானது என்பதை அறியுங்கள். இந்த முக்கியமான கண்டுபிடிப்பை நீங்கள் நடத்தியதும் சந்தோஷத்தை ஒரு தார்மீகக் கடமையாக தழுவிக் கொள்ள வேண்டும்.’
‘எல்லாம் முன்பே சொல்லப்பட்டு விட்டது; ஆனால் யாருமே கேட்கவில்லை என்பதால் மறுபடி மறுபடி முன்னுக்குப் போய் தொடங்க வேண்டியிருக்கிறது.’
‘மனிதர்களிடையே நாம் வாழ்வது வரை மனிதத்துவம் பேணுவோம்.’
‘ஆகவே’ என்பது கவிஞர்கள் மறக்க வேண்டிய வார்த்தை.’
'உங்களுக்குள் உயிர்த்திருக்கும்
அந்த ஒன்றுக்கு உண்மையாய் இருங்கள்.'

கூடை கூடையாக...


தியோடர் ஒரு எதிர்கால பிரஜை. தன் தனிமையை போக்க ஒரு ஏ. ஐ. (Artificial Intelligence) பொருத்திய ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை வாங்குகிறான். பழகப் பழக சொக்கும் குரலில் பேசும் சமந்தாவை, அதுதான் அந்த ஓ.எஸ்ஸின் பெயர், நேசிக்கவே தொடங்கி விடுகிறான். ‘Her’ படத்தில் சமந்தாவின் குரலாக படம் முழுவதும் பேசி மட்டும் அசத்தியவர்…
Scarlet Johansson... இன்று பிறந்தநாள்!
கிறங்க வைக்கும் அழகுடன் உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக ஹாலிவுட்டில் வலம் வரும் ஸ்டார்லெட், ஸ்கார்லெட்.
ஹாலிவுட்டின் highest grossing படங்களில் ஒன்றாகிய 'Avengers - Endgame' இல் நடித்தவர்.
ஏழு வயதில் நடிக்க வந்த இவர் ஒரு அட்டகாசமான பாடகி. டிஸ்னியின் 'ஜங்கிள் புக்'கின் “Trust in me..” -இலிருந்து “Set it free..” வரை நிறைய ஹிட்ஸ்! தன் ஃபேவரிட் Frank Sinatra மாதிரி பாடவேண்டும் என்று ஆசை...
பிரபல நடிகையான பின்னும் பிராட்வே நாடகம் ஒன்றில் நடித்தார் ஆசை ஆசையாக. தன் இமேஜ் காணாமல் போய்விடுகிற அளவுக்கு பாத்திரத்தில் ஆழ்ந்து நடித்ததாக பாராட்டு கூடை கூடையாக!
கடந்த காலத்தின் எதிரிகளை வஞ்சம் தீர்க்கும் ‘Black Widow’-வின் நடாஷாவை மறந்திருக்க மாட்டீர்கள்.
பிரபல Christopher Nolan இயக்கிய ‘The Prestige’ படத்தில் இரு பெரும் மேஜிக் நிபுணர்களின் சினேகத்தினூடே அவதியுறுபவராக சிறிய பாத்திரம்தானெனினும் மனதில் பதிந்த மேஜிக் நடிப்பு.
>><<>><<

Saturday, November 18, 2023

இரண்டு கையாலும் ...


200 நாட்கள்! (1881) மிகக் குறுகிய காலமே அந்தப் பதவியில் இருந்தார்.. சுட்டுக் கொல்லப்பட்ட நான்கு அமெரிக்க ஜனாதிபதிகளில் ஒருவர். தனக்குப் பதவி தரவில்லை என்ற ஆத்திரம் கொலையாளிக்கு. 'கடவுளே! என்ன இது!'தான் இவரது கடைசி வாக்கியம்.

James A Garfield.. இன்று பிறந்தநாள்!
குண்டு பாய்ந்த இடத்தைக் கண்டுபிடிக்க முயன்றபோது உதவிக்கு வந்தார் டெலிபோன் புகழ் அலெக்ஸாண்டர் கிரஹாம்பெல், தான் கண்டுபிடித்திருந்த மெடல் டிடெக்டரைக் கொண்டு. அது பலன் தரவில்லை.
இரண்டு கையாலும் எழுதுவார். இரண்டு மொழிகளில் ஒரே நேரத்தில் கூட அவரால் முடியும்!
'முதலில் நான் என்னை ஒரு மனிதனாக்க வேண்டும்,
அதில் வெற்றி பெற்றால் மற்ற
அனைத்திலும் நான் வெற்றியடைவேன்.'
இந்த மணி வாசகத்துக்குச் சொந்தக்காரர்...
இன்னும் சொன்னவை… ‘கடின வேலை செய்யும் ஆற்றல் ஓர் திறமை. அல்லது திறமைக்கு ஒரு சாத்தியமான மாற்று!’
‘எத்தனையோ தொல்லைகள் நேர்ந்து இருக்கின்றன எனக்கு. ஆனால் மிக மோசமான தொல்லை என்பது ஏற்படவேயில்லை.’
‘ஐடியாக்கள்தாம் உலகை ஆள்கின்றன.’
'விஷயங்கள் தானாக மலராது, யாராவது வந்து அதை மலர்த்தும் வரை.'
'நீங்கள் உட்கார்ந்திருக்கும் இடத்துக்கு நீங்கள் மிகப் பெரியவராக இல்லாவிடில் நீங்கள் அதற்கு மிகச் சிறியவர்.'
'உண்மை உங்களை விடுவிக்கும் ஆனால் அதற்குள் அது உங்களை ஒரு வழி பண்ணிவிடும்.'

Wednesday, November 15, 2023

வெகு X வெகு தூரத்தில்....


வெகு X வெகு தூரத்தில் உள்ள நட்சத்திரங்களைப் பார்த்துவிட வேண்டும் என்ற ஆசை அவருக்கு. ஆண்டு 1780. அவர் விருப்பத்தின் தூரத்திற்கு அடர்த்தியான லென்ஸ் மார்க்கெட்டில் இல்லை. தனக்கு வேண்டிய டெலெஸ்கோப்பை தானே தயாரிக்க ஆரம்பித்தார். சரியாக வரவில்லை.

காய்ச்சி ஊற்றிய உலோகங்களுடன் கட்டிப் புரண்டார். உடைந்து விடும் கண்ணாடிகளுடன் ஊசலாடினார். சோர்வுறாமல் முயன்றதில் உயர்ந்த வெற்றி! ஏன், அப்சர்வேட்டரிகளில் உள்ளதைவிட அப்ஸார்பிங் டெலஸ்கோப் தயாரிக்க முடிந்தது அவரால். 6450 மடங்கு பெரிதாக்கி காட்டும் அது!
வைத்துக் கொண்டு வானை அலசியதில் கண்ணில்/ணாடியில் பட்ட நட்சத்திரம் ஒன்று வித்தியாசமாக கண் சிமிட்டியது. அறிவால் நெருங்கியதில் அது ஒரு பிளானட் என்று தெரிந்தது. யுரேனஸ் கண்டுபிடிக்கப்பட்டது இப்படித்தான்! கிடைத்தது அந்தக்காலத்தின் அட்டகாசமான அவார்ட்: Copley Medal.
அவர்? William Herschel… நவம்பர் 15. பிறந்த நாள்!


அப்புறம்? அதாகப்பட்டது இவர் கண்ணில் அகப்பட்டது சனியின் இரு சந்திரன்கள். இவர் டெலெஸ்கோப்புக்குள் கண்ணை நுழைத்தால் இருட்டுக்கும், வெளிவந்தால் அறையின் அரை ஒளிக்கும் கண் பழக வேண்டும். மாற்றி மாற்றி செய்யும்போது எத்தனை கஷ்டம்? கை கொடுத்தார் சகோதரி கரோலின். இவர் சொல்ல அவர் எழுதிக் கொள்வார்.
அப்பாவைப் போல இசைக் கலைஞராகத்தான் வாழ்வைத் தொடங்கினார். ​​சிலிர்க்கவைக்கும் சிம்பொனிகளின் கம்போஸர். ஆனால் காதில் இசையிருந்தாலும் கண் வானிலிருந்தது.
சூரியனை ஃபில்டர் போட்டு கண்ணுற்ற போது கண்டுபிடித்ததுதான் Infrared Radiation! பின்னாளில் அது மெடிகல் உலகில் எத்தனை உபயோகமாக இருக்கிறது என்பதை அறிவோம்.
சொன்னது: ‘எனக்கு முன்னால் பார்த்த எந்த மனிதனை விடவும் இன்னும் அதிக தூரம் நான் விண்ணில் உற்று நோக்கியிருக்கிறேன். நான் கவனித்து பார்த்த சில நட்சத்திரங்களின் ஒளி பூமியை வந்தடைய 20 லட்சம் வருடங்கள் ஆகும் என்று சொல்ல முடியும்.’

நன்றியுடனும் சந்தோஷத்துடனும்...


‘என் தாத்தா ஜெரோனிமோ கதைகள் சொல்வார்... மரணம் தன்னை நெருங்குவதாக உணர்ந்ததும் அவர் முற்றத்தில் உள்ள மரங்களையெல்லாம் ஒவ்வொன்றாக கட்டித்தழுவி குட்பை சொன்னார். ஏனென்றால் அவற்றையெல்லாம் தான் இனிமேல் பார்க்க முடியாது என்று அவருக்குத் தெரிந்ததால்! வாழ்க்கையை முழுவதுமாக அனுபவிக்க வேண்டுமா? எதுவுமே எப்போதும் நீடிப்பதில்லை என்பதையும் எதையும் சும்மா வந்ததாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். இப்படிச் செய்வதன் மூலம் நமக்கு கிடைத்திருக்கிற எல்லாவற்றுக்கும் நன்றியுடனும் சந்தோஷத்துடனும் நாம் இருக்க முடிகிறது.’

இப்படிச் சொன்னவர் யார் தெரியுமா? Jose Saramago.
நோபல் பரிசு பெற்ற முதல் போர்ச்சுக்கல் எழுத்தாளர். 25 மொழிகளில் வெளியாகியுள்ள நாவல், கவிதை, சிறுகதைகள்… இன்று பிறந்த நாள்!
இன்னும் சொன்ன இனியவை:
‘மற்றவர்களுடன் வாழ்வது கஷ்டம் இல்லை; மற்றவர்களைப் புரிந்து கொள்வது தான்...’
‘மனிதர்கள் சிறகு இல்லாமல் பிறந்த தேவதைகள். சிறகில்லாமல் பிறந்து அவற்றை வளரச் செய்வதுபோல் இனியது வேறில்லை.’
‘வெட்டப்படும் போது மரம் அழுகிறது; தாக்கப்படும் போதும் நாய் ஓலமிடுகிறது; ஆனால் மனிதனோ புண்படுத்தப்படும்போது பக்குவமடைகிறான்.’
‘இதயத்திலிருந்து வரும் வார்த்தைகள் பேசப்படுவதில்லை; தொண்டையில் அடைபட்டுக் கொள்கின்றன; கண்களில் தான் அவற்றைப் படிக்க முடியும்.’
‘வார்த்தைகள் மனிதர்களுக்கு கொடுக்கப்பட்டிருப்பது எண்ணங்களை மறைப்பதற்காக அல்ல.’
‘சரியாகச் சொல்வதானால் நாம் முடிவுகளை எடுப்பதில்லை; முடிவுகள் நம்மை எடுக்கின்றன.’
‘ஒரு கையால் கொடுப்பதை மற்றொரு கையால் எடுத்துக் கொள்கிறது; அதுதான் வாழ்க்கை.’
‘உங்கள் புத்தகங்களை நீங்கள் தான் எழுத வேண்டும்; வேறு யாரும் அவற்றை உங்களுக்காக எழுத முடியாது; உங்கள் வாழ்க்கையை வேறு யாரும் வாழ்ந்ததில்லை.’
‘உங்களை விட்டு நீங்கள் வெளியில் வராத வரை நீங்கள் யார் என்று உங்களால் கண்டுகொள்ள முடியாது. உங்களுக்கு தெரியாதா என்ன?’
‘எந்த மனிதரும் தான் வாழ்க்கையில் அடைய நினைக்கிற அத்தனையையும் அடைய முடியாது. கனவுகளில் மட்டுமே அது சாத்தியம். ஆகவே எல்லாருக்கும் குட் நைட்!’