Monday, February 6, 2017

அதன் காரணம்... (நிமிடக் கதை)

அன்புடன் ஒரு நிமிடம் - 113

”ரெண்டு காபி,” என்று வெயிட்டரிடம் சொல்லிவிட்டு தியாகு, ”சொல்லு,” என்றான் வினோதிடம்.
’என்ன கேக்கிறே நீ... திடீர்னு வா காபி சாப்பிடலாம்னு அழைச்சுட்டு வந்தே, சொல்லுங்கிறே... என்ன சொல்றது?”
”காரணத்தை,” என்றான் தியாகு, ”கொஞ்ச நாளா டல்லா இருக்கிறியே..  என்ன பிரசினை? வீட்டிலதான் ஏதோ ஒண்ணுன்னு தெரியுது.”
அடப்பாவி ஊகிச்சுட்டானே...”ஆமாடா,” என்றான். ஒரு பெரு மூச்சு. ”வர வர யமுனா என்கிட்ட நடந்துக்கறது வித்தியாசமா இருக்கு.”
“இப்படி பொதுவா சொன்னா எப்படி..  என்ன வித்தியாசம், என்ன பண்ணினா?”
”இப்பல்லாம் அடிக்கடி என் மேல் கோபப்படறா...” 
"அப்படியா?" ஆச்சரியம் இவனுக்கு. “நிஜமாவா? அவ முகம் கடுத்தே பார்க்கமுடியாதே.. ஒரு வார்த்தை கோபமா கத்தினதா கேள்விப்பட்டதில்லையே?”
”ஆமா. கல்யாணமாகி இத்தனை வருஷமா அப்படித்தானே இருந்தாள்? அதான் இப்ப எனக்கும் தாங்கலே.” 
”அப்ப சண்டை எல்லாம் வருதா...”
”அதெல்லாம் டெவெலப் ஆக நான் விடறதில்லே. ஆனா இப்படி பொழுது விடிஞ்சா பொழுது போனா கோபப்படறது என்னால சகிக்க முடியலே.”
”நம்பவே...”
”உன்கிட்ட சொல்றதுக்கென்ன, சிலசமயம் என்னை அதட்டக்கூட...”
புன்முறுவல் பூத்தான்
”சிரிக்கிறே நீ? ரசிக்கிறியாக்கும்?”
’பின்னே?  நீ ட்ரீட் தர்றணுமாக்கும்...”
”என்னடா புரிஞ்சுக்காம உளர்றே...”
”நீதான் புரிஞ்சுக்கலே,” என்றான், ”இத்தனை வருஷத்துக்கு அப்புறம் யமுனா அப்படி நடந்துக்கறான்னா காரணம் அவள் இப்ப உன்னை  உன்னை பூரணமா நம்பறான்னு... உன் மேல முழு உரிமை கொண்டாட ஆரம்பிச்சுட்டான்னுதானே அர்த்தம்?  இதுவரை அவகிட்டே உன்னைப் பத்தி இருந்த தயக்கம்  எல்லாம் அடியோட விலகிட்டுது, அவள் என்ன சொன்னாலும் அதை நீ பெரிசா எடுத்துக்கொண்டு அவள் மேல் கோபப்பட்டு ஏதும் செஞ்சிட மாட்டேங்கிற நிச்சயத்துக்கு வந்துட்டா. அந்த அஷூரன்ஸை கொடுத்ததும் நீதானே... இப்ப கூட சொன்னியே, அதை சண்டையாக வளர நான் விடறதில்லேன்னு?” 
”ஓஹோ?”
”உரிமையோடு பழகுவதன் வெளிப்பாடுதான் இந்தக் கோபம், அதட்டல் எல்லாம். நீ சீரியஸா எடுத்துக்க மாட்டேன்னு இப்ப நம்ப ஆரம்பிச்சு அப்படி செய்யறவளை சீரியஸா எடுத்துக்கொண்டு குழப்பிக்காதே. கொண்டாடு இதை.” 
('அமுதம்’ மே 2015 இதழில் வெளியானது)

3 comments:

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!