அன்புடன் ஒரு நிமிடம் - 114
எக்மோரில் இறங்கினார்கள் இருவரும்.
”மைலாப்பூரில்தான் மாமா அந்த பரந்தாமன் இருக்காரு. நம்ம தூரத்து சொந்தக்காரரு. அவரை சந்திச்சு பையனைப் பத்தி விசாரிக்கறோம். பையனின் அப்பாவின் ஒண்ணுவிட்ட தம்பியோட சம்பந்தி அவர்.. ஸோ அவர் சொல்றதை வெச்சு ஒரு முடிவுக்கு வரலாம். அப்புறம் பையனை அவன் கம்பெனியில் போய்ப் பார்க்கறோம், அதானே நம்ம ப்ளான்?”
”எக்ஸாட்லி.” தலையாட்டினார் ராகவ். ”உன் மைத்துனிக்கு இந்த இடம் தகைஞ்சிடும்னு நம்புவோம்.”
ஆட்டோவில் ஏறினதும் கிஷோர் மைலாப்பூர் என்று சொல்ல இவர் சைதாப்பேட்டை என்றார். விழித்தான். சைதாப்பேட்டையில் ஒரு ஷோரூம் முன் நின்றது.
"சோமநாதன் இருக்காரா?” என்று முகப்பில் விசாரித்துவிட்டு உள்ளே போனார். ”இவரு யார் மாமா, சொல்லவே இல்லே... ஓ, இவருக்கும் பையனைத் தெரியுமா?”
”தெரியாது.”
அப்புறம் இவரை ஏன்.. குழம்பினான்
”வாப்பா ராகு,” என்று வரவேற்றார் சோமநாதன்.
நலம் கேட்டுவிட்டு.... ”உங்க கம்பெனியில கிளையண்டா இருக்காரே பரந்தாமன் தெரியுமில்ல உனக்கு அவரை?”
”ஓ, நல்லாவே தெரியும்.”
”அவரைப் பத்தி கொஞ்சம் சொல்ல முடியுமா... ஆள் எப்படி ... நாணயமானவரா?” ... துருவித் துருவி விசாரித்தார்.
விசாரிக்க வந்தது பையனைப் பத்தி.. இவர் அந்த பரந்தாமனைப் பற்றிக் கேட்டுக்கொண்டிருக்கிறாரே... கிஷோர் குழம்பினான்.
”ரொம்ப நல்ல மனுஷன். நான் ரொம்ப மதிக்கிற ஆட்களில் ஒருத்தர் அவரு.”
”எதை வெச்சு சொல்றே? அவரோடான உன் பிசினஸ் டீலிங்ஸை வெச்சுத்தானே...”
”அது மட்டுமில்லே. தனிப்பட்ட முறையிலேயும் எனக்கு அவரோட கொஞ்சம் பழக்கம் உண்டு. நிறைய சந்தர்ப்பங்களில் கவனிச்சிருக்கேன். அவர் பேச்சு, நடவடிக்கை, குணம் எல்லாம்...” சில உதாரண சம்பவங்களை சொன்னார்.
வெளியே வந்ததும் கிஷோர் பார்வைக்கு பதிலளித்தார் ராகவ்.
”உன் கேள்வி புரியுது. பரந்தாமனைப் பார்த்து பையனைப் பற்றி விசாரிக்கத்தான் வந்தோம். ஆனா நாம யார் கிட்ட விசாரிக்கறோமோ அவங்க எப்படிப்பட்டவங்க என்கிறதைப் பொறுத்துத்தான் அவங்க சொல்றதை நாம நம்பறதும் ஏத்துக்கறதும் இருக்கு. அதான் நான் பரந்தாமனைத் தெரிஞ்ச ஒருத்தரைக் கண்டு பிடிச்சேன். இவரு நமக்கு அவரைப் பத்தி சொல்லிட்டாரு. இனிமேல் நாம அவரை சந்திச்சு பேசலாம். உருப்படியான அபிப்பிராயம் கிடைக்கும்னு நம்பலாம்.”
சரிதானே? தோன்றியது இவனுக்கு.
><><><
(’அமுதம்’ ஜூன் 2015 இதழில் வெளியானது)
2 comments:
ஆகா
அருமை
Dear KPJ. Very nice. best wishes - puduvai Chandrahari
Post a Comment
உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!