Wednesday, October 26, 2016

அவள் - கவிதைகள்


331


நீ பேசிக் கொண்டே..
நான் கேட்டுக்கொண்டே..
காலம் பார்த்துக்கொண்டே..

332
என்னுள் எங்கோ
ஒளிந்திருந்த இனிமையை
ஒளிரவிட்டாய் 
எளிதாய் வெளிக்கொணர்ந்து.

333
எத்தனை நேரம்
பேசுவதென்கிறாய்
பாடலல்லவோ 
கேட்டுக் கொண்டிருந்தேன்
நான்?

334
எத்தனை ஆயிரம்தான்
காம்பினேஷன்கள்
கொடுப்பாய் உன்
கடைக்கண்ணுக்கும்
புன்னகைக்குமாய்?

335
ஆச்சரியம்தான்,
வாழத் தொடங்கிய நாளும்
உன்னை சந்தித்த நாளும்
ஒன்றாக இருந்தது.

336
என் கற்பனையின் 
எல்லை,
அவள் அழகின் 
ஆரம்பம்.

337
நீ 
அருகே வர வர
என் உலகம் 
காலியாகிறது.


338.
நிலவுகூட சற்று நேரத்தில்
நிறுத்தி விடுகிறது தன்
தண் பொழிவை 
உன் அன்பைப் போலல்லாது.

339
நிகராய் ரசிக்கிற ஒன்றைக்
கண்டுபிடிக்கிற வரையில்
சொல்லப் போவதில்லை
உன்னைக் கவிதையென.

340
உன் அன்பை
ஒப்பிட முடியாது மழைக்கு,
பொழிய வேண்டிய நேரம்
பொழியாமல் இருந்துவிடுவதால்.



><><

Tuesday, October 18, 2016

நல்லதா நாலு வார்த்தை... 74


'படிக்கத் தகுந்தாற்போல்
ஏதேனும் எழுதுங்கள் அல்லது
எழுதத் தகுந்தாற்போல்
ஏதேனும் செய்யுங்கள்.'
- Benjamin Franklin
('Either write something worth reading
or do something worth writing.')
<>

'மௌனம் மாபெரும்
வலிமையின் பிறப்பிடம்.'
- Lao Tzu
('Silence is a source of great strength.')
<>

'என்ன உன் திறமையோ
அதை உபயோகி:
பாட நன்கறிந்த பறவைகள் மட்டுமே
பாடின எனில்
காடுகள் மிக அமைதியாக அல்லவோ 
காணப்படும்?'
-Henry Van Dyke
('Use what talents you possess: the woods would be very
silent if no birds sang there except those that sang best.')
<>

'கற்ற மனத்தின் அடையாளம்
ஏற்றுக் கொள்ளாத கருத்தையும்
வரவேற்று அமர வைப்பது.'
-Aristotle
('It is the mark of an educated mind to be
able to entertain a thought without accepting it.')
<>

’இன்று நீயே நீ.
அது உண்மையை விட உண்மை.
உன்னைவிட நீ-யாக
உலகில் யாருமில்லை’.
- Dr Suess
('Today you are you! That is truer than true.
There is no one alive who is you-er than you!')
<>

’அவர்களின் வரையறைகளை நாம்
அறிந்துகொண்டதும் சுவாரஸ்யம்
அற்றுப் போய்விடுகிறார்கள் மனிதர்கள்.’
-Emerson
(”Men cease to interest us when we find their limitations.’)
<>

'வண்ணங்கள் இயற்கையின்
புன்சிரிப்புக்கள்.’ 
-Leigh Hunt
('Colours are the smiles of nature.')
<>

'உங்களுடைய நட்சத்திரங்களும் மரங்களும் 
சூரியோதயமும் காற்றும் என்ன பயன்,
அவை நம் அன்றாட வாழ்வில்
இடம் பெறாவிடில்?'
- E. M. Forster
('What is the good of your stars and trees, your sunrise and the wind, if they do not enter into our daily lives?')
<>

'தன்னோடிசைவாய் வாழ்கிறவன்
தரணியோடிசைவாய் வாழ்கிறான்.'
-Marcus Aurelius
('He who lives in harmony with himself 
lives in harmony with the universe.')
<>

'செய்யத் தகுந்ததாயின் அக்காரியம்
சிரமமானதே.'
- Scott Adams
('If a job's worth doing, it's too hard.')

><><><><

Thursday, October 13, 2016

அந்த இருபது நிமிடம்...

அன்புடன் ஒரு நிமிடம் - 108

”ரயில் சரியா பத்து முப்பதுக்கு. அரைமணி முன்னதா ஸ்டேஷன் போயிடணும்,” அறிவித்தார் வாசு.
”அப்ப வீட்டிலேர்ந்து எத்தனை மணிக்கு புறப்படணும்?” - ஜனனி.
”ஸ்டேஷன் போய்ச்சேர எப்படியும் இந்த ட்ராஃபிக் நெரிசல்ல நாற்பது நிமிஷமாவது ஆகும். அதனால சரியா ஒன்பது இருபதுக்கு எல்லாரும் ரெடியாயிரணும். போனதடவை மாதிரி கடைசி நேரத்தில்  லேட் பண்ணி டென்ஷனைக் கிளப்பக்கூடாது.” 
”ஆமா, சரியா ஒன்பது இருபதுக்கு ரெடியாயிடணும்க.”
எல்லாரிடமும் அதை சொன்னதோடு மட்டுமில்லாமல் ஹாலிலிருந்த கிளாக் அருகில் 9.20 என்று பெரிதாக ஒரு ஸ்டிக்கர் பேப்பரில் எழுதி ஒட்டிவைத்தார்.
அடுத்த சனிக்கிழமை குடும்பத்தை அழைத்துக்கொண்டு ஒரு கோவா டூர் போவதாக ஏற்பாடு. மொத்தம் ஒரு வாரம். ரயில் டிக்கட், ஹோட்டல் அறை எல்லாம் முன்கூட்டியே ரிசர்வ் செய்திருந்தார். 
ஜனனியிடம், ”இத பாரு, எல்லாரோட மருந்து மாத்திரையெல்லாம் கரெக்டா எடுத்து வெச்சுக்க...” அப்பாவிடம், ”கொஞ்சம் குளிராய்த்தானிருக்கும் உங்க ஸ்வெட்டரை....” அம்மாவிடம், ”அங்கே என்னென்ன வாங்கணும் உன் ஃப்ரண்ட்ஸுக்குன்னு லிஸ்டை முதலிலேயே...” ஒவ்வொருவருக்கும் முடிந்த வரையில் ஞாபகமூட்டலை செய்தார்.
ஒன்பது இருபது ஒன்பது இருபது என்று ஒன்பது தடவையாவது சொல்லியிருப்பார்.

சனிக்கிழமை காலை.
மணி ஒன்பது இருபது. எல்லாருமே ரெடியாகிவிட்டதோடு லக்கேஜும் வராந்தாவில் தயாராக எடுத்து வைத்துவிட்டார்கள்.
வாசு வந்தார் கையில் அவர் பெட்டி பையுடன்.  “எல்லாரும் ரெடியா? பேஷ்!” 
”ஓகே, கிளம்பலாமா...” என்ற ஜனனி வெளியே எட்டிப்பார்த்துவிட்டு, ”என்னங்க, டாக்சி  இன்னும் வரலியே?” 
”வரும்,” என்றவர் நிதானமாக சொன்னார், “ட்ரெய்ன் பத்து முப்பதுன்னு சொன்னேனில்லையா? சரியா பார்க்கலே நான். இப்பதான் கவனிச்சேன். பத்து ஐம்பதுக்குத்தான்.” 
எல்லாருக்கும் ஆச்சரியம். “என்னப்பா நீங்க...” அலுத்துக் கொண்டான் பரசு.
”சரி சரி, இப்ப இருபது நிமிஷம் எக்ஸ்ட்ரா, அவ்வளவுதானே?” என்றார்,  ”உட்காருங்க.  இந்த இருபது நிமிஷத்தில ஏதாவது ஞாபகம் வருதான்னு பாருங்க. எடுக்க மறந்த விஷயம்...” 
உட்கார்ந்து யோசித்ததில் பரசுவுக்கு தன் எஸ்.எல்.ஆர் காமிரா ஞாபகம் வந்தது. ஓடிப்போய் பக்கத்து வீட்டு நண்பனிடமிருந்து திருப்பி வாங்கி கொண்டு வந்தான். அம்மாவுக்கு தன் செல்போன் ஞாபகம் தட்ட விரைந்தாள் உள்ளே.  ஜனனியும், அட, அப்படி செய்யலாமே, மறந்துவிட்டோமே என்று காபி, பால்பவுடர், ஃப்ளாஸ்கை வழியில் உதவும் என எடுத்து வந்தாள். மறந்துவிட்ட தைல பாட்டிலை எடுத்துவைத்தார் தாத்தா. ”நல்ல வேளை திடீர்னு கொஞ்சம் நிமிஷம் கிடைத்ததோ என்னால் இதை எடுக்க முடிந்ததோ..” என்று கிட்டத்தட்ட எல்லாருமே சொன்னார்கள். ”என்னதான் பார்த்துப் பார்த்து எடுத்து வெச்சாலும் கடைசி கிளம்பறப்ப ஏதாவது ஒண்ணு மறந்துதான் போகுது...”
முதலிலேயே சரியாகத்தான் பார்த்திருந்தேன் ரயில் நேரத்தை என்று வாசு அவர்களிடம் சொல்லவேயில்லை.

(’அமுதம்’ ஏப்ரல் 2015 இதழில் வெளியானது)