அன்புடன் ஒரு நிமிடம் - 91
கண்ணைக் கசக்கிக் கொண்டு மீண்டும் பார்த்தார் ராகவ். கிஷோர்தானே அது? சந்தேகமில்லாமல் அவனேதான்.
யாழினியுடன் கை கோர்த்துக் கொண்டு அந்த நாலுமாடி ஜவுளிக் கடையிலிருந்து படிகளில் இறங்கிக் கொண்டிருந்தான். இருவர் கைகளிலும் பைகள்.
ஒரு வேளை அவளை அழைத்துக் கொண்டுவரப் போயிருப்பான் என்று தனக்குத்தானே ஒரு பதிலையும் சொல்லிக் கொண்டார். ஆனால் மறுகணம் அதுவும் பொய்யாயிற்று. ரோட்டில் இறங்கியவர்கள் நேராக எதிரிலிருந்த பாத்திரக் கடைக்குள் நுழைந்தார்கள்.
கிஷோரா இப்படி மாறிவிட்டான்?
ஆச்சரியம் தாங்கவில்லை அவருக்கு.
சில நாள் முன்பு கூட அவன் எதற்கோ சொல்லிக் கொண்டிருந்தான். ”அதை வாங்கணும் வாங்க, இதை வாங்கணும் கூட வாங்கன்னு ஒரே நச்சரிப்பு. ஷாப்பிங் என்றாலே எனக்கு அலர்ஜி. முடியாது நீ போய்க்கோன்னு ஒவ்வொரு தடவையும் கழன்றுகொண்டு வர்றதுக்குள்ளே... அம்மாடி!”
”சரி, வற்புறுத்தறாள் இல்லையா, கொஞ்சம் கூட போயிட்டு வர்றது.”
”போங்க மாமா. என்னால முடியாது. கடை கடையா அலையறதும் ஒவ்வொண்ணா அலசிப் பார்த்து விசாரிச்சு வாங்கறதும்...ஊஹூம், நம்மால ஆகாது. அதில விருப்பமும் சரி அந்தப் பொறுமையும் சரி என்கிட்டே கிடையாது...”
”ஷாப்பிங்லே எத்தனை சுவாரசியம் இருக்கு தெரியுமா?”
”அப்படித்தான் அவளும் சொல்லுவா. நம்மகிட்ட நடக்குமா? நகரமாட்டேனே!” என்றான் ஏதோ பெருமையாக.
அத்தனை சொன்னவன் இப்போது மாறியிருப்பானா? ஒரு வேளை அவளிடம் ஏதோ காரியம் சாதிக்க இந்த ஒரு தடவை?
அப்படியில்லை என்று அடுத்த வாரம் யாழினியுடன் போனில் பேசும்போது தெரிந்தது.
’இப்பல்லாம் அவரே என்னை கடைகளுக்கு அழைச்சுட்டுப் போறார்,’னு அவள் பேச்சினூடே குறிப்பிட்டதைக் கவனித்தார்.
மறு நாள் அவனை சந்தித்ததுமே...
”என்னப்பா, ஆளே மாறிட்டியே...ஷாப்பிங் இப்ப பிடிச்சுப் போயிட்டதாக்கும்?”
”அதெல்லாம் ஒண்ணுமில்லே மாமா, சொன்ன மாதிரி எனக்கு கட்டோடு பிடிக்காத விஷயம்தான் அது. சரி, நமக்குப் பிடிக்காட்டியும் யாழினிக்காக ஏன் அதை செய்யக்கூடாதுன்னு யோசிச்சேன். செய்யறேன்.”
மகிழ்வாய் சொன்னார். ”கிஷோர், நீ எங்கேயோ போயிட்டே.”
”யெஸ், இப்ப அதை செய்ய முடியுது. பிடிக்காத விஷயத்தை என்றாலும் அவளுக்காக.... ஒரே ஆச்சரியம் அவளுக்கு! அவளுக்காக செய்யறேன்னு சொன்னால் சந்தோஷப்படுவாள்."
"இரு, உனக்கு அது கட்டோடு பிடிக்காதுன்னு அவளுக்கு நல்லாவே தெரியும்தானே?”
”நல்லாவே. அதனால நான் அவளுக்காக கஷ்டப்பட்டு இதை செய்யறேன்னு சொன்னால் சந்தோஷப்படுவாள்.”
”அதை சொல்லாதே. இன்னும் சந்தோஷப்படுவாள்,” என்றார் அவர்.
அவன் ஒரு வினாடி விழித்தான். ”நீங்க சொல்றது முற்றிலும் சரி,” என்றான்.
(’அமுதம்’ அக்டோபர் 2014 இதழில் வெளியானது)