Friday, March 21, 2014

எதிர்பார்த்தது….


 
அன்புடன் ஒரு நிமிடம் - 56
 
சாத்வீகனுக்கு அவரைப் பார்க்க அனுதாபம் பொங்கிற்று. கேசவன் ரொம்ப வேண்டிய நண்பர். மகன் மேல் வருத்தமாக வந்தார்.

"... இப்பதான் பிளஸ் டூ பரீட்சை எழுதியிருக்கான். எப்ப பார்த்தாலும் சினிமா கனவு. பெரிய டைரக்டராகப் போறேன்னு சொல்லிட்டிருக்கான். படிப்பில துளி ஆர்வமில்லை. இந்தப் போக்கில் விட்டால் மேற்கொண்டு படிச்சு நல்ல வர்றது சந்தேகம்தான். எப்படி இவனை... எந்தத் தொழிலுக்குப் போறதாயிருந்தாலும் ஆதாரமா நல்ல அளவில படிப்பு வேணுமில்லையா? என்ன பண்றதுண்ணே..." 

இவர் அதை விட்டு விட்டு, "அப்படியா?  டைரக்டரா வரணும்கிறானா? அதில ஆர்வமிருக்கா? என்னென்ன பண்ணியிருக்கான் இதுவரை?" என்று விசாரிக்க ஆரம்பித்தார்.

"அப்படி ஏதாவது திறமை இருந்தால் பரவாயில்லையே? ஒரு சிறுகதை, நாலுவரிக் கவிதை கூட எழுதினதில்லே.  சும்மா நிறைய சினிமா பார்த்துட்டு அப்படி எடுத்திருக்காங்க, இப்படி எடுத்திருக்காங்கன்னு சொல்லிட்டிருப்பான். அவ்வளவுதான்!"

"சரி, அடுத்த வாரமே அவனை அழைச்சிட்டு வாங்க. நாம ஒரு பிரபல டைரக்டரைப் பார்க்கப் போறோம்?"

"ஐயோஎதுக்கு?" தவறான ஆளிடம் வந்து விட்டோமோ? முகத்தில் குழப்ப ரேகைகள் ... இவர் பதில் சொன்னார் காதோடு.

வீட்டுக்கு வந்ததும் கேசவன்... 

"டேய்  சம்பத், இத்தனை ஆர்வமிருக்கிற உன்னைப் பார்த்திட்டு நான் சும்மா இருந்தா எப்படி? சாத்வீகன் தாத்தாவுக்கு டைரக்டர் பரந்தாமனைத் தெரியுமாம். பெரிய டைரக்டர். இப்பவே உன்னை அவர்ட்ட உதவியாளாரா சேர்த்திடலாம்னு இருக்கோம். தொழில் படிச்சிட்டியானால் அப்படியே தொடரலாம் நீ. ரெண்டு மாசம் இப்ப லீவுதானேபாருபிடிச்சிட்டா படிப்பைக்கூட நிறுத்திடலாம்."

அவன் நம்பவியலாமல் பார்த்தான்.

டுத்த நாள். ஏற்கெனவே போனில் எல்லாம் பேசியிருந்தார் போலும். "இவன்தான் நான் சொன்ன பையன்!" என்று பரந்தாமனிடம் அறிமுகப் படுத்தினார்.

கேள்வி ஏதும் கேட்டுக் கொண்டிருக்கவில்லை அவர். "நாளைக்கே   வந்துருப்பா லொகேஷனுக்குகாலை அஞ்சரை மணிக்கு.   அட்ரசை வாங்கிட்டுப் போ. புதரையெல்லாம் அப்புறப் படுத்தி அழகு படுத்தியாகணும் ஏழரை மணிக்குள்ளே..."

குழப்ப ரேகைகளை மிஞ்சிக்கொண்டு சந்தோஷம் பொங்கிற்று.

ண்ணி இரண்டே வாரம்.

அப்பாவையும் அழைத்துக் கொண்டு சாத்வீகனிடம் வந்து நின்றான் சம்பத்.

"…எனக்குப் பிடிக்கலே தாத்தா."என்றான்," நான் நினைச்ச மாதிரி இல்லே."

"ண்டா,  பெரிய டைரக்டர் ஆச்சே? சான்ஸ் கிடைக்கிறதே..."

"அவர் சரிதான். ஆனா வேலைதான்... தினம் உசிர் போகுது. இன்ன வேலைன்னு இல்லாம எல்லாம் செய்ய வேண்டியிருக்கு. ட்ராலி தள்றதிலேயிருந்து தெருவைக் கூட்டி சுத்தம் செய்யறது வரை... கிளாப் அடிக்கிறதிலேயிருந்து அவுட் டோரில் ஃபீல்டுக்குள்ளே ஆடு மாடு நுழைஞ்சிடாம விரட்டறது வரை... வசனம் பிரதி எடுக்கிறதிலேயிருந்து ரெண்டு கிலோமீட்டர் மலைப்பாதையில சைக்கிள் மிதிச்சு டிபன் வாங்கிட்டு வர்றது வரை... நான் எதிர்பார்த்ததே வேற..."

"இப்ப என்ன நினைக்கிறே?"

"நல்ல படிச்சு மார்க் வாங்கி பெரிய கம்பெனியில வேலை பார்த்து சம்பாதிச்சு காசு நிறைய சேர்ந்ததும் நானே ஒரு படம் தயாரிக்கலாம்னு...நீங்க அவர்ட்ட சொல்லிருங்க."  கிளம்பினார்கள்.

"தாங்க்ஸ் பரந்தாமன்,"என்றார் சாத்வீகன் போனில், ‘உங்க தொழிலின் கடினப் பக்கத்தை கொஞ்சம் முதலில் அவனுக்குக் காட்டுங்கள்,’ என்று கேட்டுக் கொண்டிருந்த டைரக்டரிடம்
<><><>
(’அமுதம்’ அக்டோபர் 2013 இதழில் வெளியானது)

(படம்- நன்றி: கூகிள்)

 

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ஆசை இருந்தால் மட்டும் போதுமா...? தகுதியை வளர்த்துக் கொண்டால், எதிர்பாராததையும் சமாளிக்கலாம் என்பதை உணர்த்தும் கதை அருமை...

வெங்கட் நாகராஜ் said...

அருமை...... எதையுமே நேரில் பார்க்கும்வரை அதில் இருக்கும் சூட்சுமங்கள் தெரிவதில்லை என்பதை சொன்ன பதிவு.

ராமலக்ஷ்மி said...

ஆர்வம் உண்மையானதாக இருந்தால் எந்த சிரமத்தையும் பெரிதாக எடுத்துக் கொள்ளாது. ஆசைக்கு ஏற்ற தகுதி தனக்கு இருக்கிறதா இல்லையா என்பதை சம்பத்துக்கு உணர்த்தி விட்டார் சாத்வீகன்.நல்ல கதை.

cheena (சீனா) said...

அன்பின் ஜனா - அருமையான் கதை - அளவிற்கு மிஞ்சி ஆசைப் படக் கூடாதென்பதை விளக்கும் அருமையான கதை - நன்று நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!