அன்புடன் ஒரு நிமிடம் - 55
வாசு அப்படி செய்தது எல்லாருக்குமே ஆச்சரியமாக இருந்தது. அரசுவுக்கு அழுகையே வந்துவிடும் போல..
கொஞ்ச நேரத்துக்கு முன்...
"நான் ஒரு அழகான ஓவியம் வரையப் போறேன்," என்றான் அரசு.
"பேஷ்!" கைதட்டினார் தாத்தா. " நாங்க எல்லாரும் பார்த்து மதிப்பெண் கொடுக்கிறோம், சரியா?"
"சரி," என்றான் கண்ணில் ஆர்வத்தோடு. .
"என்ன படம் வரையப் போகிறே?"
"நீங்களே சொல்லுங்க."
"கடற்கரை ஓரம்! அந்தக் காட்சியை வரையணும். சரியா ஒரு மணி நேரம்."
டிராயிங் பேட், பிரஷ்கள், வாட்டர் கலர் பாக்ஸ், பென்சில், தண்ணீர் எல்லாம் எடுத்து ஹாலில் பரப்பினான். நடுவில் அமர்ந்தான்.
பென்சிலால் கோடு போட்டுக் கொண்டு அதை அழித்து வரைந்து சரியாக்கி... சுற்றிலும் வர்ணகளைப் பரப்பிக் கொண்டு வர்ணம் தீட்ட ஆரம்பித்தான்.
வரைந்து முடித்ததும் முதலில் தாத்தாவிடம் நீட்டினான்.
சின்னப் பையன் வரைந்தது என்று சொல்ல முடியவில்லை. அத்தனை அழகாகவும் தத்ரூபமாகவும்...
பத்துக்குப் பத்து உடனே போட்டுக் கொடுத்துவிட்டார். ஜனனி லேசில் எதையும் பார்த்து அசந்து பாராட்டுகிறவள் அல்ல. ஆனால் அவள் புருவங்களே உயர்ந்தன. அவளும் பத்துக்குப் பத்து போட்டு விட்டாள்.
சித்தப்பா சந்தீப் அந்த நேரம் அண்ணனைப் பார்க்க வர, அம்மா விஷயத்தை சொல்ல, அவனும் வாங்கிப் பார்த்தான். "அட, அருமையா வரைஞ்சிருக்கானே !" அவன் பி. ஆர்க். படிக்கறவன் என்பதால் அவனுடைய பாராட்டு அறையில் விசேஷ கவனம் பெற்றது. அவனிடமிருந்தும் பத்து.
இன்னும் ஒரே ஒருத்தர் பாக்கி. வாசு வெளியே சென்றிருந்தார்.
காலிங் பெல் அடித்தது. அவர்தான். ஹாலில் அமர்ந்தவரிடம் நீட்டினான் தன ஓவியத்தை. "அப்பவே முடிச்சிட்டேன். உங்க மார்க்குக்காகக் காத்திருக்கேன்."
கவனமாக பார்த்தார். "முதல்ல அடிப்படைப் படம் சரியா வரையப்பட்டிருக்கு. பலே. அடுத்தது ப்ரபோர்ஷன் கரெக்டா கொடுத்திருக்கே. பேஷ். அப்புறம் வர்ணங்கள் சரியாக தேர்ந்தெடுத்து கொடுத்திருக்கே. குட். கடைசியா மொத்த பிரசன்டேஷன். தேவையான ஆழத்தோடு முழுமையா வந்திருக்கு."
சரி இவரும் அந்தப் பத்தை கொடுத்துவிடுவார் என்று நினைத்தால் பத்துக்கு ஒன்பதே கொடுத்தார்.
அவன் முகம் வாடிவிட்டது. எல்லார் முகத்திலும் கேள்விக்குறி.
கோபமாக உள்ளே சென்றுவிட்டான்.
'என்ன இப்படி பண்ணிட்டீங்க... அம்சத்துக்கு அம்சம் உங்க அளவு பாராட்டாத நாங்களே ஃபுல் மார்க் கொடுத்துட்டோம். நீங்க அப்படி அதை புகழ்ந்து தள்ளிவிட்டு இப்படி..."
அவர் அமைதியாகச் சொன்னார். "அந்த ஒரு மார்க் நான் என் குறைத்துக் கொடுத்தேன் தெரியுமா? இங்கே பார்! பிரஷ்லேர்ந்து பென்சில் வரை எல்லாத்தையும் அப்படியே இறைய விட்டிருக்கான் பார். வரைஞ்சு முடிச்சதும் தன பொருட்களை எடுத்து அதனதன் இடத்தில் திரும்ப வைக்கணும் இல்லையா? அதுவும் முக்கியம்கிறதாலதான் அந்த மார்க்கைக் குறைத்தேன்."
உள்ளிருந்து கேட்டுக் கொண்டிருந்த அரசு கம்பீரமாக நடந்து வந்து தன பொருட்களை அடுக்க ஆரம்பித்ததிலேயே தெரிந்தது அப்பாவின் அக்கறையை அவன் சரியாகப் புரிந்து கொண்டுவிட்டான் என்பது.
(’அமுதம்’ அக்டோபர்
2013 இதழில் வெளியானது.)
(படம்- நன்றி: கூகிள்)
6 comments:
சுத்தத்தின் அருமையை அரசு பொறுப்புடன் புரிந்து கொண்டிருப்பது அருமை... அமுதம் இதழில் வந்தமைக்கு வாழ்த்துக்கள்...
அக்கறையுடன் அமுதமாக அறிவுரைகள் ...!
கொடுக்கப்பட்ட மதிப்பெண்ணை விடக் குறைக்கப்பட்ட மதிப்பெண்ணுக்கே மதிப்பு அதிகம் என்பதை அரசும் தன் செயலால் உணர்த்தி விட்டான்.
அருமை.
என்றைக்குமே அப்பாவுக்கு பிள்ளைகள் ஒழுங்காக இருக்க வேண்டும் என்ற கவலைதான்! என்பதை படம் பிடித்த கதை!
எந்த ஒரு செயலும் முழுமை பெறும்போதுதான் முழு மதிப்பெண் பெறும் தகுதியும் பெறுகிறது என்பதை மிகவும் நாசுக்காக குழந்தை மனத்தில் மட்டுமல்ல, பெரியவர்களாகிய எங்கள் மனத்திலும் புகட்டிய கதை. பாராட்டுகள் ஜனா சார்.
மிக அருமை..
Post a Comment
உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!