Wednesday, October 23, 2024

எனக்கு நானே...


இரண்டு குரூப் ஆக பிரிந்து நேராக நம்மை பார்த்து வரிசையாக நின்று கொண்டு எக்ஸர்சைஸ் செய்வது போல… அதுதான் இப்போ க்ரூப் டான்ஸாக நிறைய படங்களில் பார்க்கிறோம் . ஆனால் சுமார் 60 வருடங்களுக்கு முன் வந்த இந்தப் பாடலை பாருங்கள்… என்ன ஒரு ரியல் ஆட்டம்!

“நல்லவன்… எனக்கு நானே நல்லவன்…
சொல்லிலும் செயலிலும் நல்லவன்..”
படம்? ‘படித்தால் மட்டும் போதுமா?’ (link கீழே)
பீம்சிங்கின் படமாச்சே! எப்படியும் இடம் பெற்றுவிடும் ஒரு கோஷ்டிப் பாடல். நடன ஆசிரியரையும் ஒளிப்பதிவாளரையும் வெகு அழகாகப் பயன்படுத்தி…சுமார் 7 நிமிடத்திற்கு அலுப்பே தெரியாத பாடல்! காதைக் கிழிக்காத டிரம்மும் வயலினையும் ஃப்ளூட்டையும் வைத்துக் கொண்டே உச்சத்துக்கு உணர்வைப் பொங்கச் செய்யும் இசை…
போட்டிருக்கிறாங்க பாருங்க விஸ்வநாதன் ராமமூர்த்தி, எழுந்து ஆட வைக்கிற மாதிரி வெஸ்டர்ன் பின்னணியில் ஒரு அபாரமான ஒரு நாட்டு பாடல்…
வரிக்கு வரி கண்ணதாசனின் சொல் நயம்.. பொருள் நயம்.. முத்தாக பி பி ஸ்ரீனிவாஸ் ஆரம்பிக்க, கெத்தாக தொடர்கிறார் டி எம் எஸ்…
“உள்ளம் சொன்னதை மறைத்தவன் இல்லை..
ஊருக்கு தீமை செய்தவன் இல்லை..” என்ற வரிகளுடன் எண்டர் ஆகும் சிவாஜி அதிலிருந்து அந்த ஆட்டத்தை அசாத்திய உயரத்துக்கு கொண்டு போகிறார். கூடவே பாலாஜி காட்டும் உடல் மொழியும் அபிநயங்களும் அள்ளுகின்றன என்றால் ஊடே எம் ஆர் ராதாவும் அவர் பாணியில் அசத்துகிறார்.
பொதுவாக உருக்கம் வந்து உறுத்தினாலேயே ஷெனாயை கையிலெடுப்பாங்க. ஆனால் இங்கே அதை வைத்து உற்சாகத்தைப் பொங்கச் செய்யவும் முடியும் என்று விஸ்.ராம். விளாசியிருக்கிறார்கள். அதுவும் அந்த வயலினுக்கும் ஃப்ளூட்டுக்கும் இடையே புகுந்து கொண்டு இடையிசையில் விறுவிறுவென்று ஒலிப்பதாகட்டும், கடைசியில் பாட்டின் அடிநாதமாக தகதகவென்று ஜொலிப்பதாகட்டும் அட்டகாசம்!
படாடோபமான செட்டுகளைக் காணோம்.. ஆர்ப்பாட்டமான லைட்டிங்? நோ. காஸ்ட்லி காஸ்டியூம் இல்லை கிராபிக்ஸ்? மருந்துக்கும்! 40க்கு 40 இருக்குமா? சின்ன ஒரு இடத்தில்
நடனமாடுபவர்கள் அர்ப்பணிப்புடன் ஆடுவது பார்க்க எவ்வளவு க்ளாஸிக்காக இருக்கிறது…
அர்த்தமே இல்லாத, தமிழே இல்லாத, வார்த்தைகள் என்றே சொல்ல முடியாத ஓசைகளை கேட்டு விழிக்க வேண்டியது இல்லை.. ஒரே நிமிடத்தில் உணர்வோடு கலந்துவிடும் பொருள் பொதிந்த பாடல்..
“பள்ளம் மேடு கண்டால் பார்த்துச் செல்லும் பிள்ளை!
நான் பாசம் என்ற நூலில் சேர்த்துக் கட்டிய முல்லை!”

https://www.youtube.com/watch?v=-Bk08LHMcok
 

No comments:

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!