Monday, October 14, 2024

போகுமிடம் வெகுதூரமில்லை... (விமரிசனம்)

எப்பவாவது ஒரு தடவை தான் இந்த மாதிரி ஒரு படம் பார்க்கிற வாய்ப்பு வரும். கவிதை மாதிரி ஒரு கதையுடன்…

சரியான ‘one line’! அதற்கு அழுத்தமாகக் கொடுத்திருக்கும் bold underlines! ((((((((((((1)))))))))))))

ஏழெட்டு நிமிடத்திற்குள் கதையின் முதல்முடிச்சு தொடங்கி விடுகிறது.. அப்புறம் திருப்பங்கள் இல்லை, வரிசையாக மேலும் மேலும் முடிச்சுகள்.. எல்லாம் முடிச்சுகளையும் கடைசியில் ஒரே ஒரு திருப்பம் அவிழ்த்து விடுகிறது. என்னதான் முடிவு என்று யோசிக்கும் பொழுது ஓ, என்ன ஒரு முடிவு!

Half way opening காட்சிகளை ஆங்காங்கே கொடுத்து விறுவிறுப்பை ஏற்றி இருக்கிறார் டைரக்டர் (மைக்கேல் கே ராஜா) இண்டர்வல் ப்ளாக் ஏஒன் என்றால் ‘பாடியை யாரோ எடுத்துப் போயிட்டதை உபயோகிச்சு உங்ககிட்டே கேம் ஆடிட்டாங்கய்யா எங்க ஆளுங்க..’ என்று விமலிடம் சொல்லும் அந்த இடம் ஏ2.

பஞ்ச் டயலாக் ஏதுமில்லை. எல்லாமே படு இயல்பு. மோதுகிற இரு தரப்பினரின் பாஸ்களும் பட்டு பட்டென்று முழங்காமல் யோசித்துப் பேசுவது யதார்த்தம்..

விமல் நிலைமை தெரிந்து உதவி விட்டு, இதற்கு மேல் உன் பாடு என்று போனை வைக்கும் அந்த சண்முகம் அண்ணாச்சி… மகள் திருமணத்திற்கு பிரசினை இல்லாமல் துக்க வீட்டு சடங்குகளை சீக்கிரம் முடிக்க அதட்டும் அதே சமயம் அதிக பிரசங்கித்தனமாக பேசினவனை கண்டிக்கும் ஜமீன் வீட்டுக்காரர்… கிட்டத்தட்ட எல்லா கேரக்டர்களுமே முழுமையாக கொடுக்கப்பட்டு அதற்கான attitude காட்டி நடந்து கொள்கிறார்கள்.

கருணாஸ் தவிர வேறு யாரும் அந்த ரோலில் இத்தனை கச்சிதமாக பொருந்தி இருக்க முடியுமா? 'நந்தா'வில் எப்படி பச்சக் என்று அந்தப் பாத்திரத்தில் ஒட்டிக்கொண்டாரோ அதேபோல இப்பொழுது இந்த பாத்திரம் பச்சக்கென்று அவர் மீது ஒட்டிக்கொள்கிறது.

கடுமையான பொல்யூஷனுக்கு இடையில் கொஞ்சம் நல்ல காற்றை சுவாசித்து வந்த மாதிரி இருக்கிறது இந்த படம் பார்த்த அனுபவம்.

அகதா கிறிஸ்டி தன் நாவலில் ஆங்காங்கே அழகாக ஹின்ட் தெளித்திருப்பார், ஆனால் நம்மால் குற்றவாளியை ஊகிக்க முடியாது. கடைசியில் இவர்தான் என்று காட்டும் பொழுது அந்த ஹின்ட்ஸ் ஞாபகம் வரும் பளிச்சென்று. அதேபோல் இதிலும் அழகாகத் தெளித்திருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் அனாவசிய ஆரவாரத்தை பின்னணியில் செருகவில்லை. முக்கியமான இடங்களில் மனம் தொடும் melancholy notes கொடுக்கவும் தவறவில்லை. உதாரணமாக, ‘300 ரூபாயை வெச்சுக்கிட்டு எந்த வால்வோல (volvo) போவ? அதான் இதுல போயிட்டிருக்கேன்’னு கருணாஸ் சொல்லும்போது…

எண்ணிச் சிலவே குறைகள். 1. முன்பு ப்ரொஜக் ஷன் போட்டு டிரைவிங் சீன் எடுக்கும்போது காரை கொஞ்சம் ஆட்டி, ஓடும் நிழலை பானெட்டில் படர்த்தி என்று நிஜத்துக்கு மெனக்கெடுவார்கள். இப்போ ப்ளூ மாஸ்க் எல்லாம் வந்த பிறகு ப்ரொஜக் ஷன் பல்லை இளிக்காது. ஆனால் சாதாரண வேனுக்கு சுத்தமாக ஷேக் இல்லாதது அநியாயத்துக்கு உறுத்துகிறது. அத்தனை அவசரமான விஷயத்துக்கு வேகத்தை கொஞ்சம் கூட அதிகரிக்காமல் இருப்பது என்னதான் கடைசியில் அது தேவையாக இருந்தாலும் கதையின் அவசரத்துடன் ஒட்டவில்லை.

2. எத்தனை அழகான நாலு வழி ரோடு! படத்தின் பெரும் பகுதியும் அதிலே தான்.. ஆனால் முன் பக்க ஷாட் மட்டுமே அதிகமாக வைத்திருப்பது... side views எத்தனை வைக்கலாம்! அதன் absence தெரிகிறது. 3. பேப்பரில் கதையின் நியூஸை வெள்ளை பேப்பரில் ஒட்டி காட்டுவது! இன்றைக்கும் அப்படியேதான் இருக்கிறது!

4. தன்னுடைய கூத்துக் கலை தனக்கு சோறு போட முடியாத நிலையைச் சொல்லி வருந்தும்போது பொங்கும் நம் அனுதாபம் அவர் தண்ணி அடிக்கும் போது குறைந்து விடுகிறதில்லையா?

வேகமாக தொடங்கி பிற்பாதியில் தடுமாறி மெதுவாக முடியும் பல படங்களுக்கு இடையில் இது நேர் மாறாக! படிப்படியாக விறுவிறுப்பை கடைசிவரை அதிகரிக்கச் செய்வதே சிறந்த திரைக்கதை. அமைப்பதுதான் கடினம். அதை மிக மிக புத்திசாலித்தனமாக செய்திருக்கிறார்கள்.
நல்ல படமே வருவதில்லை என்று யாராவது அலுத்துக் கொண்டால் அவர்கள் இந்த படத்தை பார்க்கவில்லை என்று அர்த்தம்.

போகுமிடம் வெகு தூரம் இல்லை என்று தெரிகிறது: தரம் நோக்கி பட உலகம்!
><><><