கொஞ்ச நேரம் தாமதம் ஆனாலும் டாக்டர் கோபித்துக் கொள்வார். பங்சுவாலிட்டி ரொம்ப முக்கியம் அவருக்கு.
தவிப்பாக இருந்தது மனதில். வீட்டில் தம்பி ரவி தனியே இருப்பான். “அக்கா, அக்கா இந்த நாலு கணக்கை போட்டு முடிக்கிற வரையாவது கூட இரேன்,” என்று கெஞ்சினான். டாக்டரின் கோபப் பார்வை கண்ணில் வந்து நிற்க உதறிவிட்டு ஓடிவந்தாள்.
கணக்கு என்றாலே அவனுக்கு சிம்ம சொப்பனம். ஆனால் புத்திசாலி. பக்கத்தில் இருந்து கொஞ்சம் தட்டிக் கொடுத்து உற்சாகப் படுத்தினால் போதும், மளமளவென்று போட்டு விடுவான் எல்லா கணக்கையும். கணக்குதான் என்றில்லை, ஆங்கிலம், தமிழ், விஞ்ஞானம் எதுவானாலும் சற்றே அவள் ஊக்குவித்தால் சாதித்து விடுவான். தாய் இல்லாத பையனுக்கு அக்காதான் எல்லாம். குடிகார அப்பாவை தலைவராக கொண்ட ஏழைக் குடும்பத்தின் பிரதிநிதியாக வேலைக்கு வந்தவள் ஆயிற்றே அவள்?
ஆனால் இரவு 9 மணி வரை கிளினிக்கில் இருக்க வேண்டும் அவள். அது மட்டுமா? இங்கே இன்னொரு பிரசினை இருந்தது.
“ஹாய் ராஜி!” என்ற குரல் நாராசமாய் ஒலித்தது காதில். வந்துவிட்டது அந்த பிரசினை.
ஒரு ஸ்டூலைத் தூக்கி அவள் எதிரில் போட்டு அமர்ந்து கொண்டான் மதன். டாக்டரின் மைத்துனன் அவன். “என்ன இன்னிக்கு ரஷ் ஏதும் இல்லை, ஃப்ரீயா தான் இருக்கே போல?”
ராஜி வாசலை எட்டிப் பார்த்தாள். ஏதாவது பேஷண்ட் வந்தாலாவது இவன்கிட்டேயிருந்து தப்பிக்கலாம்.
“ஒரு ஜோக் சொல்லட்டுமா? கேட்டவுடனே சிரிப்பு வந்திரும்…” என்று தொடங்கினான்.
இவன் தான் அந்த இன்னொரு பிரசினை. டாக்டரின் மைத்துனன் என்ற உரிமையில் தினமும் அங்கே ஆஜராகி விடுவான். பி.பி.எம். முடித்துவிட்டு வேலை கிடைக்காமல் சுற்றிக் கொண்டிருப்பவன். பெரும்பாலும் பெண்கள் பின்னால்.
வந்து உட்கார்ந்தான் என்றால் அவளை அசத்துவதற்காக அதையும் இதையும் பேசி... அதுவும் கூட்டம் இல்லை என்றால் அந்த தனிமையை உபயோகித்து ரொம்ப தாராளமாக பேச ஆரம்பித்து விடுவான். டாக்டர் மனைவியின் செல்லத் தம்பியாச்சே, இவனைப் பற்றிப் புகார் செய்தால் இருக்கிற வேலையும் போய்விடுமே என்கிற கவலை அவளுக்கு.
அந்த நேரம் இரண்டு நோயாளிகள் வந்து விட, அவனிடமிருந்து தற்காலிகமாக விடுதலை கிடைத்தது. அப்போதுதான் அந்த யோசனை மனதில்… டாக்டரின் அறையில் நுழைந்தாள். தான் கேட்க வந்ததை மெல்லக் கேட்டு விட்டாள்.
“அதற்கென்ன, ஓகே!” பச்சைக்கொடி காட்டிவிட்டார் அவர்.
^^ ^^ ^^
மறுநாள் மாலை. கிளினிக்கில்…
“ஏழாவது கணக்கை போட்டுட்டியா? சூப்பர்! இப்ப எட்டாவதைப் பார்த்து ஸ்டெப் எழுது,” என்று தம்பிக்கு சொல்லிக் கொண்டு அடுத்த டோக்கனை எடுத்து வைத்தாள் ராஜி. பக்கத்தில் ஒரு ஸ்டூலில் உட்கார்ந்து பாடத்தை எழுதிக் கொண்டிருந்தான் ரவி.
“ஹாய்!” என்று உள்ளே நுழைந்த மதன் இந்த திடீர் சூழ்நிலை மாற்றத்தால் தாக்குண்டு அதிர்ந்து நின்றான்.
தன் தம்பியையும் தன்னுடன் அழைத்து வந்து ஒரு ஓரத்தில் உட்கார்த்தி வைத்துக் கொள்ள பெர்மிஷன் கேட்டு வாங்கி ஒரே ஐடியாவில் இரண்டு பிரசினைக்கு தீர்வு கண்டுபிடித்துவிட்ட தன் சாதுரியத்தை தனக்குள் வியந்து கொண்டாள் ராஜி.
1 comment:
ஒரு கல்லில் இரண்டு மாங்காய்…. நல்ல தீர்வு. படித்தேன்… ரசித்தேன்…
Post a Comment
உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!