Saturday, January 20, 2024

ஒரே படத்தில் உலக அளவில் ஸ்டார்...


மூன்று முறை மரணம் நெருங்கிற்று அந்தச் சிறுவனை. ஒரு முறை கார் மோதியது. மற்றொரு முறை குதிரையிலிருந்து தவறி விழுந்தான். ஒரு பூகம்பத்தின்போது, தொங்கிக் கொண்டிருந்த மூன்றாம் மாடியறையிலிருந்து மீட்கப்பட்டான்.

இப்படி உயிர் பிழைத்த அந்தச் சிறுவன்தான் பின்னாளில் உலகெங்கும் உள்ள இளைஞர்களுக்கு உடல் கட்டமைப்பில் நாட்டம் வரக் காரணமாயிருந்த க்ரேட் ஹீரோ.
ஸ்டீவ் ரீவ்ஸ் நடித்த என்று பெரிதாக போஸ்டரில் போட்டு விளம்பரம் வரும், 1950 களில்! ஆஜானுபாகுவான என்றால் இப்படீன்னு காட்டுகிற நடிகர். புஜபல பராக்கிரமத்தால் ஜெயிக்கிற வாள்சண்டைப் படங்கள்.
Steve Reeves… இன்று பிறந்த நாள்!
மார்பு 52''க்கு அகன்று உடம்பு 6' 1” க்கு உயர்ந்தவர். அள்ளிய கோப்பைகளிலும் படிப்படியாக உயர்ந்தார். 1946-இல் Mr. Pacific Coast, 1947-இல் Mr. America, 1948-இல் Mr. World, 1950-இல் Mr. Universe!
மிலிடரியில் இருந்தபோது செய்த ட்ரக் லோடிங் வேலையும் ஜிம் பயிற்சியும் மிகவும் உதவியிருந்தது கட்டான உடலமைப்புக்கு. 400பவுண்ட் எடையை ஜஸ்ட் நுனி விரல்களால் இடுப்பு வரை உயர்த்துவார் அனாயாசமாக. வாரம் 3 முறை பயிற்சி செய்து வாழ்நாள் முழுக்க உடலைக் கச்சிதமாக வைத்திருந்தவர்.
ஹீரோவாகலாம் என்று ஹாலிவுட்டில் அடியெடுத்து வைத்தவரை முதலில் யாரும் கண்டுகொள்ளவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக சிறிய வேடங்கள்.
15 பவுண்ட் எடை குறைக்கச் சொன்னார் சிசில் பி டிமிலி. அந்தப் பிரசினையில் இழந்த படம் 'ஸாம்சன் அன் டிலைலா' ரொம்ப நாளாச்சு, அடுத்த சரியான ரோல் கிடைக்க.
அதான் 'ஹெர்குலிஸ்'! அந்த ஒரே படத்தில் உலக அளவில் ஸ்டார்! அடுத்து ‘Hercules Unchained.’ 25 நாடுகளில் வசூல் மன்னர். ஐரோப்பாவிலேயே அதிக சம்பள ஹீரோவானார். இவரது படமொன்று இரண்டு வருடமாக ஒரு தியேட்டரில் 24 மணி நேரமும் திரையிடப்பட்டு ஓடியதாம்.
கச்சிதமான உடலமைப்புக்கு காலாகாலத்துக்கு ரோல் மாடலாக இருந்தவர். கணக்கில்லா ரசிகர்கள். எங்கே சென்றாலும் ஆரவாரம். ஜம்மென்று ஜிம்முக்குப் போக ஆரம்பித்தனர் வாலிபர்கள். இன்றைக்கும் இருக்கிறது ரசிகர் மன்றம்.
வரிசையாக வந்தன... ‘Goliath and the Barbarians’, ‘The Thief of Baghdad’, ‘The Last Days of Pompeii’...
குதிரையில் துரத்தும் காட்சிகளுக்கு டூப் வேண்டாம், பிரமாதமாக ஓட்டுவார். Sylvester Stallone, Arnold Schwarzenegger-க்கு ரோல் மாடல் இவர்தான்.
‘The Last Days of Pompeii’ ஷூட்டிங்கில்.. ஓட்டிய ரதம் தடம் புரண்டு மரத்தில் மோத, தோள் பட்டை இடம் பெயர்ந்தது.
ஹெர்குலிஸ் படத்தில் செயினை உடைத்துக்கொண்டு எதிரிகளை துவம்சம் செய்யும் காட்சி. செயின் இரும்பு இல்லை, மரம்தான். என்றாலும் அடித்தால் காயம் பலமா இருக்குமே? அடிப்பது மாதிரி இழுத்தார். டைரக்டர் சொல்கிறார், பலமா அடிய்யா என்று.
காயம் படுமே சார்? - இவர்.
பட்டால்தான்யா அவங்களுக்கு சம்பளம்! என்று கத்தினாராம் அவர்.

>><<

1 comment:

வெங்கட் நாகராஜ் said...

தகவல்கள் சிறப்பு.

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!