Wednesday, August 30, 2023

அந்தப் பெண் ..

 


“ஆளுக்கு ஒரு பேய் கதை எழுத வேண்டும். உன்னால் முடியுமா?” பிரபல கவிஞர் பைரன் கேட்கிறார் அந்த சின்னப் பெண்ணை. காதலனுடன் ஓடி வந்திருந்த அந்த அந்தப் பதினெட்டு வயது பெண்ணை. 1816 -இன் மழை நாளொன்றில் சுவிட்சர்லாந்தில். யோசித்து யோசித்து பார்க்கிறாள். மறுநாள் இரவு கனவொன்று. இன்ஸ்பயர் ஆகி எழுந்து எழுத ஆரம்பிக்கிறாள். உலகின் முதல் சயின்ஸ் ஃபிக் ஷன் எனப்படும் Frankenstein கதை பிறக்கிறது. எழுதியவர் பெண்ணென்றால் நம்பவில்லை. 'கணவர்தான் எழுதியிருப்பார்!' என்றார்கள்.

அந்தப் பெண் .. Mary Shelley... (1797-1851) இன்று பிறந்த நாள்!
சாதாரண கதையா அது? ரொம்ப ரகசியமாக ஒரு ஆராய்ச்சியில் ஈடுபடும் விஞ்ஞானிதான் ஃப்ராங்கென்ஸ்டீன். சடலத்துக்கு உயிர்கொடுக்கும் மாய ஒளிக்கற்றையைக் கண்டுபிடித்தவர் அற்புதமான ஒரு மனிதனை உருவாக்க எண்ணுகிறார். என்ன, எடுத்துக்கொண்ட உடலுக்கு மூளைப் பகுதி சேதமுற்றிருக்கிறது. வேறொரு நல் மூளையைக் கொண்டுவந்து விட்டாலும் மாறிப்போய் விடுகிறது. எழுந்து கொண்டது மனிதனல்ல, மான்ஸ்டர். தப்பாய்ப் போனவனை தடுப்பதற்குள் தப்பி விடுகிறான். அதிர வைக்கிறது அவரையும் அவனது கொடூரங்கள். எப்படி ஒழிக்கிறார்கள் என்பது கதை. கடவுளின் படைப்பை எதிர்க்கும் மனிதச் செயலின் விளைவு நாசம்தான் என்பது மெசேஜ்.
பிரபல Boris Karloff தான் முதல் ஃப்ராங்கென்ஸ்டீன் மான்ஸ்டர். அசத்தி (அச்சுறுத்தி) விட்டார் மனிதர்!
எதைவிட எது பெட்டர் என்று விவாதிக்கிற அளவுக்கு ஏகப்பட்ட ஃப்ராங்கென்ஸ்டீன் திரைப்படங்கள் வந்துவிட்டன. அமுதசுரபி மாதிரி ஒரு அடிப்படை லைன் கொடுத்துவிட்டாரா, அடியொற்றி வந்த புதினங்களும் அனேகம். தமிழில் கூட இந்த பாணியில் நான் வணங்கும் தெய்வம் என்று வந்ததாய் ஒரு ஞாபகம்.
மேரி ஷெல்லியின் வாழ்க்கையோ? பிறந்ததுமே மரித்து விட்ட தாய்.. கடன் சுமையில் அப்பா.. சித்தி கொடுமை..என்று சுத்திச் சுத்தி சோகம். காதலித்தவரும் வேறொருத்தியின் கணவர். பிறந்த குழந்தைகளில் பிழைத்தது ஒன்றே. 24 வயதில் நீரில் மூழ்கி கணவர் மரணம்... ஆனால் எழுத்தாளராக மட்டும் வாழ்வில் வெற்றி. எழுதிய ‘கடைசி மனிதன்’ நாவலும் பின் நாட்களில் பிரபலமாகிப் போனது.
Elle Fanning நடித்து 2017 இல் படமாக வந்த இவரின் கதைக்கு (‘Mary Shelley’) அமோக விமரிசனம்!

Friday, August 25, 2023

யார்க்கும் கிட்டாத குரல்...


அவர் பாடலைக் கேட்டதுமே சொல்லிவிடலாம்: கிட்டாதப்பா இந்த மாதிரி ஒரு குரல்!

S G கிட்டப்பா… இன்று பிறந்தநாள்! (1906 - 1933)
‘காமி சத்யபாமா… கதவைத் திறவாய்!’ ஒரு பிரபல பாடல். ‘திறவாய்… திறவாய்..’ என்று அவர் வாய் திறந்து பாடும்போது வாய் மூடாமல் கேட்டுக் கொண்டிருப்போம்.
ஏற்றம் இறக்கம் எதிலும் சற்றும் மடங்காமல், அற்றம் எதிலும் அடங்காமல்… கம்பீர கந்தர்வ குரல்!
பத்தாது பத்தாது என்று கேட்கும் பாடல்களைப் பாடி மகிழ்வித்தவர் பத்தாவது மகனாக செங்கோட்டையில் பிறந்து ஐந்து வயதிலேயே மேடையேறியவர்.. பள்ளியில் படிக்காத இளமை, ஆனால் ஒரு முறை கேட்டாலே அப்படியே ஒப்புவித்துவிடும் வல்லமை!
இங்கே இவர் நாடக மேடையில் அட்டகாசமாகப் பாடி, பாடகர் நட்சத்திரமாக பவனி வருகையில், அங்கே இலங்கையில் அவர், கே.பி.சுந்தராம்பாள், நாடகங்களில் பாடிக் கலக்கிக் கொண்டிருக்க, ‘அவர் பாட்டுக்கு உம் பாட்டு நிற்காது,’ என மற்றவர்கள் சிலர் இருவரையும் உசுப்பி மோத விட்டதில் இருவருமே சேர்ந்து பாடி வென்று காட்டினர். பிறந்த நட்பு காதலாகியது அறிந்த வரலாறு.
பிற மாநில வித்வான்கள் வந்திருந்து கேட்டு அதிசயித்து அந்த மேடையிலேயே அவரைப் பாராட்டி மாலை அணிவித்து மகிழ்ந்தனர். நாடக மேடையோடு நின்று விட்டது இந்த பாடக மேதையின் பாட்டு.
27 வயதுக்குள் இசையுலகை அலங்கரித்துவிட்டு இறைவனடி எய்தியது நமக்கு இழப்புத்தான்.

Thursday, August 24, 2023

பலே ஐயா!

 


அது யாரய்யா அசட்டு அப்பாவியா என்றால் அதுதான் டி. எஸ். பாலையா!

வேறு யாரய்யா முகத்தில் டன் டன்னாக அசடு வழிய விடுவதில் வல்லவர்?
அந்தக் காதலிக்க நேரமில்லை விஸ்வநாதனாக வேறு யாரையாவது நம்மால் நினைக்க முடியுமா பாலையாவைத் தவிர? வெறும் ரீயாக்‌ஷனை வைத்துக்கொண்டே ஐந்து நிமிடம் அந்தக் காட்சியை ஹாஸ்யத்தின் உச்சத்துக்குக் கொண்டுபோய் விடுவாரே நாகேஷ் கதை சொல்லும்போது!
பாலையா அந்த கேரக்டருக்கு கொடுத்த பாலிஷ் நமக்கு ஒரு பிளஸண்ட் சர்ப்ரைஸ்! ஹீரோக்கள் அவரை ஏமாற்றுவதான கதையை, அவர் ஏமாறுவதான கதையாக மாற்றும் அளவுக்கு அட்டகாசமாக அவர் நடிப்பு!
எம்ஜிஆர் அறிமுகமான சதிலீலாவதி படத்தில் அறிமுகமான இவர், வில்லனுக்கும் காமெடியனுக்கும் இடையிலான ஒரு வகை காரக்டரை திரைக்கு சுவாரசியமாக அறிமுகப்படுத்தினார்.
'இன்னிக்கு வெள்ளிக் கிழமை, வாளைத் தொடமாட்டேன்'னு மதுரை வீரனிடம் காட்டும் பொய் மிடுக்கும் சரி, பிள்ளைகளின் பாமா விஜய ஸ்டார் மோகத்தைக் கண்டிக்கும் மெய் மிடுக்கும் சரி என்னவொரு ரேஞ்ச் அஃப் ஆக்டிங்!
கொலைப் பழியை ஏவிஎம் ராஜன் மீது சுமத்தி ஜெயிலுக்கு அனுப்பிவிட்டு, தன் மனைவி மகளைப் பறிகொடுத்தபின் மனம் திருந்தும் கேரக்டர், கே எஸ் கோபாலகிருஷ்ணனின் ‘என்னதான் முடிவு?’ படத்தில். பழிவாங்கத் துடிக்கும் ராஜன் முன்னால், ‘உன் கையால் சாகத்தான் காத்திருந்தேன்,’ என்று அமைதியாக வந்து நிற்கும் க்ளைமாக்ஸில் மன்னிப்பை ஆடியன்ஸிடமிருந்தும் வாங்கிவிடுவார்.
சந்தர்ப்ப சூழ்நிலையால் தன் குழந்தையை வேலைக்காரி குழந்தையாகவும் அவள் குழந்தையைத் தன் குழந்தையாகவும் பார்க்க வேண்டிய சூழ்நிலை அம்மா எம் வி ராஜம்மாவுக்கு. அவரது பிடிவாதம் பிடித்த கணவராக அமர்க்களப் படுத்தியிருப்பார். எல். வி. பிரசாத்தின் ‘தாயில்லாப் பிள்ளை’யில்.
ஜெயகாந்தன் கதையில் நடித்தது ‘யாருக்காக அழுதான்?’ படத்தில். குடிகாரனின் பணத்தை எடுத்து வைத்துக்கொண்டு அப்பாவி நாகேஷ் மீது பழியைப் போட்டுவிட்டு உள்ளுக்குள் வதைபடும் அந்த கேரக்டருக்கு 100 சதம் உயிர் கொடுத்திருப்பார்.
பார்த்துக்கொண்டு சும்மா இருக்கவும் முடியாமல், நடந்ததை சொல்லவும் முடியாமல் பரிதவிக்கும் கேரக்டர் என்றால் இவருக்கு பீட்சா சாப்பிடுற மாதிரி. இவருக்காகவே எழுதப்பட்டதோ என்று சில சமயம் தோன்றும். ‘ஊட்டி வரை உறவு.’
துளி பிசிறு இல்லாமல் கான்ட்ராஸ்ட் காட்டுவதில் மன்னர். சபையில் காட்டிய கர்வத்துக்கு சற்றும் குறையாமல், ‘சற்று முன்பு ஒரு தேவகானம் கேட்டதே?’ என்று பிரமிப்பை உதிர்த்தபடி தன் செருக்குச் சட்டையைக் கழற்றிப் போடும் அந்த நயம்! (திருவிளையாடல்)

Aug. 23 பிறந்தநாள்!

Tuesday, August 15, 2023

பிரம்மாண்டத்துக்கு எதுகை...

 



மறுபடி எடுக்க முடியாத மாபெரும் காட்சி அது. ஆயிரக்கணக்கான துணை நடிகர்களுடன் யுத்தக்காட்சி. ஒரே நேரத்தில் நாலு காமிராவால் படமாக்க ஏற்பாடு செய்திருந்தார் தயாரிப்பாள டைரக்டர்.

'ஆக் ஷன்!' சொன்னதும் படை வீரர்கள் மோதினார்கள். குதிரைகள் பாய்ந்தோடின. பீரங்கிகள் முழங்கின. குண்டுகள் வெடித்தன. மேடைகள் வீரர்களுடன் சரிந்தன. எல்லாம் பிரமாதமாக நடந்து முடிந்ததும் பார்த்தால்... என்ன துரதிருஷ்டம்! முதல் காமிராமேன் ஃபிலிம் அறுந்துவிட்டது என்றார். இரண்டாவதில் லென்சை தூசி அடைத்துவிட்டதாம். மேடை ஒன்று விழுந்து கேமரா முறிந்துவிட்டது என்றார் மூன்றாமவர்.. அப்படியே சோர்வாக உட்கார்ந்துவிட்டார் இவர். தூரத்தில் ஒரு குன்றின் மேல் வைத்திருந்த நாலாவது கேமரா! நினைவுக்கு வர, லாங் ஷாட்டாவது முழுமையாக கிடைத்ததே! என்றெண்ணி, மெகா ஃபோனில் கேட்டார். ‘எல்லாம் ஓகே தானே?’ ‘ஓ எஸ், நான் ரெடி!’ என்றார் அந்த கேமராமேன், ‘நீங்க ஆக் ஷன் சொல்ல வேண்டியதுதான் பாக்கி!’
பிரபல டைரக்டர் சிஸில் பி டிமிலி பற்றி சொல்லப்படும் நிகழ்ச்சி அது.
Cecil B DeMille... ஆகஸ்ட் 12. பிறந்த நாள்.
உடனே நினைவுக்கு வருவது 'Ten Commandments' & 'King of Kings'. ரெண்டையும் அவரே Silent Era -வில் முன்பு எடுத்திருக்கிறார் என்பது நியூஸ். ஹாலிவுட்டை உலக சினிமாவின் முக்கிய இடமாக மாற்றியவர் என்றிவரைக் கொண்டாடுகிறார்கள். அதன் முதல் 'முழு நீளத் திரைப் படத்'தை எடுத்தவர் என்ற பெருமை இவருக்கு உண்டு. ‘The Squaw Man’ என்ற இவரது மௌனப்படம்!
பிரம்மாண்டம் என்ற வார்த்தைக்கு எதுகை இவர். பிரமிக்க வைப்பது இவருக்கு பிஸ்கட் சாப்பிடுவது போல. பார்ட்னர் இருவருடன் இவர் தொடங்கிய படக் கம்பெனிதான் பின்னால் பாரமவுண்ட் ஆனது. நடிகர்களுக்காக செலவழிக்கும் பணத்தை தயாரிப்பில் செலவழிப்பது பெட்டர் என்று நினைப்பவர்.
‘மக்களின் அபிப்பிராயம் எப்போதும் சரியாக இருக்கும்.. மக்களுக்காகத்தான் படம் எடுக்கிறேன், விமர்சகர்களுக்காக அல்ல!’ சொல்லும் இவர் படங்களைப் பார்த்த ஆடியன்ஸைக் கணக்கிட்டால் மொத்தம் நாலு பில்லியனுக்கு மேல் வரும்!
சும்மா கதையை மட்டும் கேட்டிட்டுப் போக வரலை மக்கள் என்பது இவர் ஐடியா. படத்தின் மற்ற கலை அம்சங்களில் இவர் படு கவனம்! ஏன், இவர்தான் முதல்முதலாக 'ஆர்ட் டைரக்டர்' என்றொரு ஆளைப் போட்டவர்.
ஒரிஜினல் பி.டி.பார்னம் சர்க்கஸ் கம்பெனியை வைத்து இவரெடுத்தது ‘The Greatest Show on Earth’. சிறந்த படம், சிறந்த கதை என ரெண்டு ஆஸ்கார் அதற்கு.
‘பத்துக் கட்டளைகள்’… .அதற்காக 18 மைல் அகலத்தில் அவர் நிர்மாணித்த எகிப்திய நகரம்! 120 அடி உயர சுவர்கள்.. 35 அடி உயர சிலைகள்.. அஞ்சு டன் எடையில் ஏராளம் sphinx... 2,000 பேருக்கு மேலான கலைஞர்களும் மற்றவர்களும் தங்குவதற்கு 1000 டெண்ட்கள்! (தைக்கப்பட்ட உடைகளின் நீளத்தை அளந்தால் 15 மைலுக்கு மேலே.) முடிந்ததும் இடித்துப் புதைத்த நகரத்தைப் பற்றி இன்னமும் பேசும் லோக்கல் மக்கள்.
ஏகத்துக்குச் சிரத்தை வித்தையில். 75 வயதில் எடுத்த 'King of Kings' படப்பிடிப்பில் ரொம்ப உயரம் ஏறியபோது நேர்ந்த ஹார்ட் அட்டாக்… இரண்டே நாள் ஓய்வில் ஷூட்டிங் திரும்பிவிட்டார். அந்தப் படத்தில் தன் சம்பளம் அனைத்தையும் கொடுத்தது தர்மத்துக்கு. அமெரிக்கன் பிலிம் இன்ஸ்டியூட் தேர்ந்தெடுத்த தலைசிறந்த பத்துத் திரைக்காவியங்களில் ஒன்று அது.
டேக் எடுக்கும்போது யாராவது பேசினால் உடனே செட்டை விட்டு அகற்றி விடுவார். ஒருமுறை இவர் சீக்கிரமே ஆபீசுக்குத் திரும்பியபோது செகரட்டரி கேட்டாளாம், ‘என்ன, டேக்கின்போது பேசினீங்களா?’

><><

அது இவர் அன்பளிப்பு...

 


அது இல்லாமல் முடியாது என்று ஆகிவிட்டது நம்ம வாழ்க்கை. ஆனால் அந்த ‘டி.வி.’யை கண்டு பிடித்தவர், அதன் தந்தை என்று அழைக்கப்படுபவர், முதல் பேசும் சினிமா வெளிவருவதற்கு முந்தைய வருடமே அதைச் செய்து காட்டியவர்...

John Logie Baird. Aug. 13. பிறந்த நாள்! (1888 - 1946)
லண்டன் Royal Institution -இல் 1926 ஜனவரியில் நடந்தது அந்த டெமோ. நகரும் பொருட்களை திரைக்கு நகர்த்தி காட்டினார் ஜான். விநாடிக்கு 5 வேகத்தில் படங்கள் வந்து விழுந்தன திரையில். அப்ப அதற்கு அவர் சொன்ன பெயர் டெலிவைஸர்!
அடுத்த வருடமே லண்டனிலிருந்து கிளாஸ்கோவிற்கு அசைவுகளை ஓசையுடன் டெலிபோன் ஒயர்களின் வழியே டெலிகாஸ்ட் செய்தார். அடுத்த வருடம் லண்டனிலிருந்து நியூயார்க்குக்கு. அதே வருடம் கலர் டெலிவிஷனையும்!
ஒளியை மின்சாரமாக மாற்றும் தன்மை selenium -க்கு உண்டு என்பதைப்பற்றி படித்ததுதான் அந்த ஸ்காட்லாண்ட் இளைஞனை டெலிவிஷனைப் பற்றி சிந்திக்க வைத்தது.
பாவம், ஃபண்ட்ஸ் கிடைக்கவில்லை. பத்திரிகை ஆபீஸில் சென்று தன் ஐடியாவை சொன்னால் பைத்தியம் மாதிரி பார்த்தார்கள். தன் முதல் டி.வி. மாடலை செய்தபோது தையல் ஊசியிலிருந்து சைக்கிள் லைட் வரை கையில் கிடைத்த பொருளை எல்லாம் உபயோகிக்க வேண்டியதாயிற்று.
சுழலும் டிஸ்குகள் அசைவுகளை ஸ்கேன் செய்து மின் சிக்னல்களாக கம்பிகளில் அனுப்ப, வேறோரிடத்தில் அவை திரையில் பதிக்கப்படுகின்றன. முதலில் திரையில் அசைந்த பிம்பம் ஒரு பொம்மையின் தலை. பார்த்ததும் அவர் துள்ளிக் குதித்தார்.
டி.வி.க்கான அந்த ஒரிஜினல் ஐடியா Nipkow உடையது. ஆனால் அதை மேம்படுத்தி தெளிவான பிம்பம் கொண்டுவந்தது இவரது டெலிவைஸர் தான். தெளிவைஸர்!
முதலில் ஐந்து வருடத்திற்கு அவருடைய டெக்னிக்கை உபயோகித்தது BBC. இரண்டு மடங்கு லைன்களுடன் இவருடன் போட்டியிட்டது மார்க்கோனி டிவி. இவருடையது மெக்கானிக்கல் என்றால் அவருடையது எலக்ட்ரானிக்.
டி.வி. உலகத்தின் எந்த சாத்தியதையையும் ஜான் விட்டு வைக்கவில்லை. HD TV, 3D TV.... ஏன், வீடியோவையும் தொட்டார். Phonovision என்று பெயர் வைத்தார்.
டி.வி. வரலாற்றில் இவருடையது மெகா சீரியல்!

><><

அந்தப் புறா...


 “இந்தப் புறா ஆட வேண்டுமானால் இளவரசர் பாட வேண்டும்!” என்றபடி "வசந்த முல்லை போலே வந்து.." ரசிகர் மனம் கவர்ந்தவர்...

ராஜசுலோசனா.. இன்று பிறந்த நாள்! (1935 - 2013)
அண்ணனுக்காக பெண்பார்க்க வந்த சிவாஜி அவரை நாலு கேள்வி இலக்கிய நயமாகக் கேட்கப் போக, ஒரு சந்தர்ப்பத்தில் அவரை மணந்த ராஜசுலோசனா, திருமண இரவின் போது சிவாஜியிடம், “நான் உங்க வீட்டிலே முதல்முதலா பார்க்க ஆசைப்பட்ட இடம் எது தெரியுமா? உங்க லைப்ரரி!”ன்னு சொல்ல, “லைப்ரரியா, இந்த புஸ்தகம்லாம் வெச்சுப் படிப்பாங்களே அதுவா? அது அண்ணன் ரூமிலில்ல இருக்கும்? நான் படிக்காதவனாச்சே?”ன்னு சொல்லும்போது வெடிக்கும் ஏமாற்றத்தை முகத்தில் கொட்டுவதில் தொடங்கி அவரை எகத்தாளமாக பேசுவது, ஏளனப் படுத்துவது, இளக்காரமாக பார்ப்பது, ‘என் வாழ்க்கையையே நாசமாக்கிட்டீங்கன்னு ஆக்ரோஷமாக பழிப்பது... ‘நாளைலேர்ந்து நான் உன்கிட்டயே படிக்கிறேன்’னு சொல்லும் சிவாஜியிடம், ‘ஏது, அரிச்சுவடியில் இருந்தா?'ன்னு சொடுக்கும் சாட்டை, சிவாஜியுடன் சரிக்கு சரியாக மோதி அந்த வெறுப்பை நாமும் சரியாக உள்வாங்க வைத்திருப்பார் அந்தப்படத்தில்: ‘படித்தால் மட்டும் போதுமா?’ மறக்க முடியுமா? நடிப்பில் முத்திரை பதித்த படம்!
சிவாஜியுடன் போட்டிபோட்டுக்கொண்டு நடித்தது அந்தப் படம் என்றால் பத்மினியுடன் போட்டி போட்டுக் கொண்டு ஆடியது ‘திருமால் பெருமை’யில். “கரையேறி மீன் விளையாடும் காவிரி நாடு..”
அந்தப் படம் எத்தனை பாப்புலரோ அத்தனை பாப்புலர் அந்தப் பாடலும்! காதில் கிறக்கும் விக்கலை போலவே மனதில் நிற்கும் நடனம். ‘குலேபகாவலி’யில் “ஆசையும்.. ஹக்! என் நேசமும்.. ஹக்! ரத்த பாசத்தினால் ஏங்குவதை பாராயடா..”
நடனத்துக்கு முகபாவம் முக்கியம் என்பதை நன்குணர்ந்து ஆடியிருப்பார் இந்தப் பிரபல பாடலில்: “ஆசை அன்பெல்லாம் கொள்ளை கொண்ட நேசா... பேசும் ரோஜா என்னை பாரு ராஜா…” (‘ஆசை’). நின்றபடி பி.எஸ்.வீரப்பா கிதார் வாசிக்க அந்த பத்துக்குப் பத்து இடத்தில் அத்தனை நாட்டிய ஜாலங்களையும் புரிவார்.
தமிழ் தெலுங்கு கன்னடம் என்று சுமார் 300 படங்களில் நடித்த சுலோசனா நடனப்பள்ளி (‘புஷ்பாஞ்சலி நிருத்ய கலா கேந்திரம்') ஒன்றை ஆரம்பித்து வெள்ளி விழா கண்டவர்..

>><<>><<

Tuesday, August 8, 2023

இதயம் தொட்ட நடிப்பு...

 


1979 இல் வந்த படம்... அதன் பின் அதே மாதிரி கதை நிறைய வந்துவிட்டனதான். என்றாலும்...

வேலைப் பிரியமரான கிரேமர் பிரமோஷன் ஒன்றை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வரும்போது மனைவி ஜோனா அவனைப் பிரிந்து செல்ல தயாராக இருக்கிறாள். அப்பாவை வெறுக்கும் மகனை அவன் பொறுப்பிலேயே விட்டுவிட்டு! வீட்டையும் மகனையும் கவனிப்பதில்லையாம் அவன்!
அம்மாவும் ஆகி, திணறும் கணவன் வேறு வழியில்லாமல் சாதாரண வேலைக்கு இறங்குகிறான். கொஞ்சம் கொஞ்சமாய் மகனின் இதயத்தில் இடம் பிடிக்கிறான்.
இப்போது அவள் வருகிறாள் மகனைக் கேட்டு. வழக்கில் அவன் பக்க நியாயங்கள் வெளிப்பட்டாலும் முடிவு அவளுக்கு சாதகமாக. அப்பீலுக்கு போகலாம்தான், ஆனால் சின்ன பையன் தலையில் தேர்ந்தெடுக்கும் பெரிய சுமை விழுமே என்று விட்டுக் கொடுக்கிறான்.
பையனை அழைத்து போக மறுநாள் காலை வருகிறாள் ஜோனா. அவள் விட்டுப் பிரிந்த முதல் நாள் தயாரித்த அதே காலை டிபன். அப்பாவும் மகனுமாக தயாரிக்கிறார்கள். தன்னைவிட அவனிடமே பையன் ஹோம்லியாக இருப்பதைச் சொல்லி விட்டு வெளியேறுகிறாள் தனியே.
கிரேமராக நடித்தவருக்கு எப்படியோ, நமக்கு ‘Kramer Vs Kramer’ மறக்க முடியாத படம். அவருக்கும் அப்படித்தான் இருக்க வேண்டும். ஆஸ்கார் வாங்கித் தந்தது ஆயிற்றே?
Dustin Hoffman... இன்று பிறந்த நாள்.
‘என்னாலே தானே அம்மா பிரிந்து போனாள்?’ என்று கேட்கும் மகளிடம் பொறுமையாக, ‘உன் அம்மாவை அவளாக இருக்க விடாமல் என் விருப்பப்படி அவளை மாறச் செய்தேன். அவளைக் கவனிக்கவோ கேட்கவோ எனக்கு நேரமில்லை. முடிந்தவரை முயன்று பார்த்துவிட்டுத்தான் அகன்றாள். உனக்காகத்தான் இன்னும் சில நாள் இருந்தாள்..’ என்று அரவணைக்கும் காட்சியில் பையனின் & நம் இதயம் தொடுவார். ஆஸ்காரையும்!
ஆரம்பப் படங்களில் ஒன்றான ‘The Graduate’ படத்திலேயே எல்லோரையும் தன்னைக் கவனிக்க வைத்தவர். 1967 இன் நம்பர் ஒன் வசூல் படம் அது.
'Midnight Cowboy' படத்தின் ஹீரோ ரோலை அவர் கைப்பற்றிய விதமே அலாதி. காஸ்டிங் டைரக்டரை இவர் ஒரு தெருமுனையில் சந்திப்பதாக ஏற்பாடு. கந்தல் ஆடையும் கிழிந்த கோட்டும் பிய்ந்த ஷூவும் அணிந்து வர்றவர் போகிறவரிடம் காசு கேட்டுக்கொண்டிருந்த ஹாஃப்மேனை அடையாளம் கண்டுபிடிக்கவே கொஞ்ச நேரம் ஆயிற்று அவருக்கு. அந்த மாதிரியான ஒரு ரோல் அது.
இளைஞராக இருந்த போதும் சரி வயதானவரான போதும் சரி, பிரதான காரெக்டர்களில் பிரமாதமாகப் பண்ணியவர். ‘Kung Fu Panda’ வில் Shifu வின் வாய்ஸ் இவருதான்.
வாங்கிய மற்றொரு ஆஸ்கார் Tom Cruise உடன் நடித்த 'Rain Man'-க்காக.
கூட உட்கார்ந்து திரைக்கதை எழுதுவார் ஆனால் திரையில் பேர் போட்டுக்கொள்ள பிரியப் பட்டதில்லை.
தமாஷான ஒரு Quote? ‘வெற்றி அடைஞ்சதில ஒரு சந்தோஷம் என்னன்னா சாவதைப் பற்றிய பயம் போயிடுச்சு. ஸ்டார் ஆயிட்டீங்கன்னா, ஏற்கனவே நீங்க செத்துப் போயாச்சு. பாடம் பண்ணியாச்சு.’
><><><

Monday, August 7, 2023

மிக வசீகரமானவர்...

 ஸ்டீவ்! அவனைப் பழிவாங்க வேண்டும் ஸ்டெல்லாவுக்கு. அவனும் அவள் தகப்பன் பிரிட்ஜெரும் இன்னும் நாலு பேருமாக வெனிஸில் 35 மில்லியன் டாலர் தங்கக் கட்டிகளை கொள்ளையடித்த போது அவரை கொன்றுவிட்டு கட்டிகளுடன் ஓடிவிட்டான் ஸ்டீவ். அதைக் கேள்விப்படும் அவளுடன் அந்த நாலு பேரும் சேர்ந்து கொள்ள, தீட்டுகிறார்கள் திட்டம். வசதியாக அவன் வாழும் இடத்தைக் கண்டுபிடிக்கிறார்கள். டிவி மெக்கானிக் போல அவன் வீட்டினுள் நுழைகிறாள். வீட்டின் சேஃப்டி சிஸ்டத்தை அவள் சட்டைப் பையின் நுண் கேமரா அவர்களுக்கு எடுத்துக் கொடுக்கிறது. அழகான அவள் யார் என்று அறியாதவன், அவங்க எதிர்பார்த்தது போலவே, டேட்டுக்கு அழைத்து டேட் பிக்ஸ் பண்ணுகிறான்.

சந்திக்கிறாள்.  அவளைத் தன்னுடன் தங்க அழைக்கிறான் ஸ்டீவ். இன்னும் கொஞ்ச நாள் போகட்டும் என மறுக்கிறாள். ‘என் மீது நம்பிக்கை இல்லையா?’ என்கிறான். ‘நான் எந்த நபரையும் நம்புவேன். ஆனால் அவருக்குள் இருக்கும் சாத்தானைத்தான் நம்ப மாட்டேன்,’ என்கிறாள் புன்னகையுடன். அவன் முகம் மாறுகிறது. அவள் கையை மடக்கி கீழே கையை முறுக்குகிறான். ‘நீ யாருன்னு எனக்கு தெரிஞ்சு போச்சு. பிரிட்ஜெர் மகள் தானே நீ? அவன் தான் இந்த வார்த்தைகளை இதே மாதிரி அடிக்கடி சொல்வான்!’ சற்றும் எதிர்பார்க்கவில்லை அவள். அதற்குள் மற்ற நண்பர்கள் வந்து விட, ஸ்டீவைப் பார்த்து சொல்கிறாள்: ‘திருடனை விட மட்டமான ஒரே ஆள் யார் தெரியுமா? கோழை தான். நீ ஒரு கோழை!’

புகழ்பெற்ற ‘The Italian Job’ படத்தில் வரும் நயமான இந்த காட்சியில் ஸ்டெல்லாவாக வருபவர் Charlize Theron. எல்லா கட்டத்திலும் எழிலாகக் கொடுத்திருப்பார் தன் எக்ஸ்பிரஷன்களை.

Charlize Theron… இன்று பிறந்த நாள்.

முதல் பெரிய வாய்ப்பு Al Pacino வுடன் ‘The Devil's Advocate’ தவிர  Tom Hanks உடன் ‘That Thing You Do.’

‘Monster’ படத்தில் சீரியல் கில்லர் வேடத்தில் நடிப்பதற்காக 20 கிலோ எடையைக் கூட்டியபோது இந்த ரோலுக்காகவா உன் லுக்ஸைக் குறைச்சுக்கறேன்னு அனுதாபித்தார்கள். ஆனால் அந்த ரோலுக்கு ஆஸ்கார் அவார்ட் ரோலானது அவர் கைக்கு. சந்தோஷமாக தன் சொந்த இடமான தென் ஆப்பிரிக்காவில் கொண்டாடினார்.

எளிய வாழ்க்கையை விரும்பும் ஷர்லீஸ் டிரோன்
மிக வசீகரமானவர் லிஸ்டுகளில் மிக அதிகமாக இடம் பெற்றவர்.


Friday, August 4, 2023

நடித்தவரும் பாடியவரும் ...

 அண்ணனுக்கு பெண்களைக் கண்டாலே ஆகாது. தம்பிகளுக்கு கண்டிப்பான உத்தரவு: பெண்களோடு பேசக் கூடாது, பழகக் கூடாது. விதி விடுமா? அவர்களுடைய வொர்க் ஷாப்பில் அர்த்தராத்திரியில் கார் ரிப்பேராகி கதவைத் தட்டுகிறார் மதுபாலா. தம்பி மட்டும் தனியாக. மனசு கேட்கலை. காரை சரி பண்ணி கொடுத்து அனுப்புகிறான். அழகின் வீச்சில் காசு வாங்க மறந்து விடுகிறான். சொப்பனத்தில் அவள் வந்து காதல் பல்லவி பாட, அவனோ “பாஞ்சு ருபைய்ய்ய்யா... பாரஹ் அணா..” என்று தரவேண்டிய அஞ்சே முக்கால் ரூபாய் பாக்கியை படுகிறான் சரணமாக.

‘Chalti Ka Naam Gadi’ என்ற அந்த 1954 படம் முழுக்க முழுக்க குபீர் காமெடி. தம்பியாக நடித்தவரும் பாடியவரும் கிஷோர் குமார்.
Kishore Kumar... இன்று பிறந்த நாள்.
நடித்துக் கலக்கியது பல படங்கள் என்றால் பாடிக் கலக்கியது பல-ஸ்கொயர் படங்கள்! அந்த Delicately distinct voice! கடவுளின் கொடை என்று சொல்வார்கள் அதை. எப்படி வாய்க்கப் பெற்றது என்பதற்கு அவர் அண்ணன் பிரபல நடிகர் அசோக் குமார் சொன்னது... சின்ன வயசில் ஒரு விபத்தில் கிஷோரின் பாதத்தில் அடி பட்டபோது ஒரு மாதமாக அழுதுகொண்டே இருந்தாராம். அதன் பக்க நல் விளைவு இது என்று.
வீட்டில் சும்மா K.S.Saigal பாட்டை அவர் போலப் பாடிக் கொண்டிருந்தார். அசோக்குமாரை பார்க்க வந்த S.D.பர்மன் காதில் விழ, அது நம் காதுக்கு வந்தது. முதல் பாடல் பாடியது தேவ் ஆனந்துக்குத் தான். படம் ‘Ziddi’ (1948).
ஆரம்பத்தில் அவர் தன்னைத் தவிர தேவ் ஆனந்துக்கு மட்டுமே பாடுவது என்றிருந்தாராம். ‘அடுத்த வீட்டுப் பெண்’ இந்தியில் வந்தது.(‘Padosan’) அதில் நடித்தபோது ‘படத்தில்’ கதைப்படி அவர் சுனில் தத் என்ற நடிகருக்கு குரல் கொடுக்க வேண்டி வந்தது. அப்புறம்தான் ராஜேஷ் கன்னாவுக்கு ‘ஆராதனா’வில் பாடி அது சூபர் ஹிட் ஆகி... அனைத்து ஹீரோவுக்கும் அவர் குரல் ஓர் அணிகலன் ஆகியது ஹிஸ்டரி....
‘ஆராதனா’வில் பாடினாரோ இல்லையோ ஆராலும் அசைக்க முடியாத நம்பர் ஒன் இடத்தில் அடுத்த பதினேழு வருடம். 1970, 80-களின் ஹீரோஸ் வாய்ஸ் இவர்தான் என்றாயிற்று. மொத்த 2678 பாடல்களில், அதிகம் பாடியது ராஜேஷ் கன்னாவுக்கே (245). வெளிவராத அவர் பாடல் ஒன்று பதினைந்தரை லட்சத்துக்கு விற்றது என்றால் ஆச்சரியமில்லைதான்.
இத்தனைக்கும் முறைப்படி எந்த சங்கீதப் பயிற்சியும் எடுத்துக் கொள்ளாதவர். கற்றுக் கொண்டதெல்லாம் பர்மனிடம்தான். ஸைகால் மாதிரி பாடியவர், பின்னர் தனக்கொரு ஸ்டைலை ஏற்படுத்திக் கொண்டார். இன்று வரை அலுக்காமல் நாம் கேட்கும் அந்த கிஷோர் ஸ்டைல். தம்பியிடம் கற்றுக் கொண்ட yodelling தனி. ஆதர்ஷ நடிகர் Danny Kaye.
ஆரம்பத்தில் கிஷோருக்கே ஒன்றிரண்டு பாடல்களுக்கு ரஃபி குரல் கொடுத்திருக்கிறார் என்றால் ஆச்சரியம்.. '' 1959 படத்தில் சங்கர் ஜெய்கிஷன் இசையில் "Ajab Hai Daastan Teri..." பாடல் ஒன்று.
பாடிய பாடல்களில் சூபர் ஹிட் என்றால், ’என் சொப்பனத்தின் ராணி நீ எப்ப வருவே?’, அதாங்க, ”Mere Sapnon Ki Rani Kab Aayegi Tu..”, அதைத்தான் சொல்லுவாங்க. ஆனால் ’Mugaddar Ka Sikandar’-இல், லதா மங்கேஷ்கர் ”Salaam-E-Ishq Meri Jaan..” என்று சில வரி பாட, ‘மீதிப் பாடலை நான் பாடுகிறேன்..’ என்று ஆரம்பித்து, 15 வரி இடைவிடாமல் பாடுவார் பாருங்க கிஷோர், அதில் தெரியும் அந்தக் குரலுக்கேயான தனி இனிமையும் காந்தமும்!
அஷ்டாவதானி! நடிகர், பாடகர், டைரக்டர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர், கதாசிரியர், வசனகர்த்தா, பாடலாசிரியர்.
‘The Proud Rebel’ படத்தைத் தழுவி இவர் எடுத்த ‘Door Gagan ki Chaon Mein’ (அதில் Allan Ladd தன் மகனோடு நடித்த மாதிரி இதில் தன் மகன் Amit Kumar உடன்.) தோல்வி அடைந்தாலும், சில மாறுதல்களுடன் 'ராமு'வாக வந்தபோது வெற்றி கண்டது.
மிகச் சிறந்த இசை அமைப்பாளரும் கூட. சான்று வேண்டுமா? கேட்டுப்பாருங்கள். சுலக்‌ஷனாவுடன் இவர் பாடிய “Bekaraar Dil....” படத்தில் பாடுவது அண்ணன். Haunting melody.
தேவ் ஆனந்துக்கு மட்டுமல்ல, ‘நாங்க ரெண்டு பேர்; ஆனா ஒரே வாய்ஸ்!’ என்று அமிதாப் சொல்லும் அளவுக்கு அவருக்கும் பொருத்தமா பாடுவார். சரி, அவருக்கு மிகப் பிடித்த அவர் பாட்டு? ‘Mili’ யில் வரும் “Badi Sooni Sooni Hai..”
தனிமை விரும்பி. தவிர்த்துவிடுவார் பார்ட்டிகளை. காசு பாக்கி வைக்கிறவங்களை கண்டாலே பிடிக்காது. வீட்டின் முன்னால் ‘Beware of Kishore’ என்று ஒரு முறை எழுதி வைக்கிற அளவுக்கு தமாஷ் பிரியர். வீட்டு மரங்களுக்கு பெயரிட்டுப் பேசும் அளவுக்கு இயற்கை நேசர். கஞ்சூஸ், கறார் என்பார்கள் தெரியாமல். சத்யஜித்ரே படத்தில் பாடியபோது காசு வாங்காததோடு படத்துக்கும் உதவினார்.
எனக்குப் பிடித்த அவர் பாடல்களில் நாலைந்தை சொல்லலாமென்றால் செலெக்ட் செய்ய நாலைந்து நாள் வேண்டியிருக்கே...