பாடலாசிரியரை முதலில் எழுத சொல்லிவிடுவார், அவர் தன் முழுத் திறமையையும் காட்ட வசதியாக. அப்புறம் பத்து நிமிடம் போல தனியே அமர்வார். சிட்டென்று மெட்டொன்று மொட்டவிழும். சிறந்த சொல் வடிவம் பெற்ற பாடல் தகுந்த இசை வடிவம் பெற்று விடும். வரிகளின் உணர்வு இசையில் நூறு சதம் வெளிப்பட, பாடல் சுலபமாக இதயம் தொடும்! பல சமயங்களில் அது கொடிகட்டி பறக்கும்!
அப்புறம் கேட்கணுமா, இவருக்கு பாடல் எழுதுவது என்றாலே பாடலாசிரியர்களுக்கு குஷிதான். இந்திப் படவுலகில் ரவி இந்த மாதிரி. இங்கே இவர்.
ஒவ்வொரு வார்த்தையையும் அதற்கான உணர்வுடன் இசையாய்க் கொடுப்பதில் வல்லவர். சாரதாவில் வரும், “மெல்ல மெல்ல அருகில் வந்து..” பாடலும் சரி, ‘தாயைக் காத்த தனயனி’ன் “கட்டித் தங்கம் வெட்டி எடுத்து…” பாடலும் சரி ஒவ்வொரு வரியும் அதற்கான உணர்வைத் தரும் இசையில் உட்கார்ந்து இருக்கும்.
1963-இல் வெளியான தமிழ் படங்களில் பாதிக்குமேல் படங்களுக்கு இவர்தான் இசையமைத்திருந்தார். ரிகார்ட்! மற்றொரு ரிகார்ட், தமிழில் முதன் முதலில் ஒரு லட்சம் ரிகார்ட் வெளியானது இவரின் 'பணமா பாசமா' படப் பாடலுக்குத்தான்.
“ஒரு நாள் போதுமா?” இவர் இசையை ரசிக்க? இசை “மன்னவன் வந்தானடி!” என்று பாட? இவர் இசையழகைக் “காணாத கண்ணும் கண்ணல்ல…”
மூன்று கடலிலும் மூழ்கி முத்தெடுத்தவர்..நாட்டுப்புறப் பாடல் வேணுமா? இதோ: “மணப்பாறை மாடு கட்டி..” க்ளாஸிக் இசை? இதோ: “சின்னஞ்சிறிய வண்ணப்பறவை…” வெஸ்டர்ன்? இதோ: “உன்னை அறிந்தால்…”
சிறுவயதில் நாகர்கோவிலிருந்து பூதப்பாண்டி வரை ஏழுமைல் நடந்து சென்று இசை பயின்றவராயிற்றே!
“என்ன சொல்லி பாடுவேன்... எந்த வார்த்தை கூறுவேன்...?” என்று அவர் இசையில் ஒரு பாடல் இனிதாகத் தவழ்ந்து வரும், அதுபோல எந்தப் பாட்டை சொல்லி அவர் திறமையை சொல்ல?
"எண்ணிரண்டு பதினாறு வயது..." ”ஆயிரம் நிலவே வா…” "இரவுக்கு ஆயிரம் கண்கள்..” “தூங்காத கண்ணென்று ஒன்று..” என்று அவர் இசை “மழை பொழிந்து கொண்டே இருக்கும்…” ('குடும்பத்தலைவன்')
'கல்யாணி'க்கு ஒரு மகா பாடல் தந்தார் மகாதேவன்: “மன்னவன் வந்தானடி..” என்றால் 'ஆரபி'க்கு ஒரு “ஏரிக்கரையின் மேலே..”
இசையன்னைக்கு அவர் அணிவித்த ’சங்கராபரணம்!’ அதன் பெரும்பாலான பாடல்கள் அதற்கு முன்பு கச்சேரிகளில், இசைத்தட்டுகளில் கேட்ட கர்நாடக இசை பாடல்கள். ஆனால் அதே பாடல்களை 'சங்கராபரணத்தி'ல் கேட்டபோது... புதிய பாடல் போல ஜனரஞ்சகப்படுத்தி இன்னும் சுவையூட்டியிருந்தார்.
எங்கிருந்தோ அந்த ‘டவுன் பஸ்' பாடல் ஒலிக்கிறது… “சிட்டுக் குருவி.. சிட்டுக் குருவி.. சேதி தெரியுமா?”
திரை இசைத் திலகம் கே வி மகாதேவன் அவர்களின் பிறந்த நாள் இன்று...