Saturday, April 30, 2022

தப்பாத கணக்கு...



ஒன்றிலிருந்து நூறு வரை உள்ள எண்களின் கூட்டுத் தொகையை சொல்லுங்கன்னு கேட்டால் ஒன்றிலிருந்து பத்து நிமிடமாவது எடுத்துக்கொள்கிறீர்கள் இல்லையா? ஒரு நிமிடம் கூட எடுத்துக் கொள்ளவில்லை அந்தப் பையன். அசந்து விட்டார் ஆசிரியர். எப்படி? இறுதி பாராவில்.

கணிதத்தில் ஏற்பட்ட ஏகப்பட்ட முன்னேற்றங்களுக்கு காரணமான இந்த ஜெர்மானியர் ஆகப்பெரிய கணித மேதை என்று அழைக்கப்படுகிறார். ஆனாலும் பாவப்பட்ட அம்மாவுக்கு அவரைப் படிக்க வைக்க வசதியின்றி பிரன்ஸ்விக் பிரபுவை உதவி கேட்க வேண்டியதாக இருந்தது.
Carl Friedrich Gauss (1777 - 1855)..... இன்று பிறந்த நாள்! (எழுதப் படிக்கத் தெரியாத அம்மா சொன்ன குறிப்பை வைத்து ‘கணக்குகளை’ப் போட்டு அவரே கண்டுபிடித்தாராம் தன் பிறந்த நாளை என்பாங்க!)
மூன்று வயதில் அப்பா போட்ட தப்புக் கணக்கு ஒன்றைத் திருத்தியது அவர் காட்டிய பல ஆச்சரியங்களில் ஒன்று. ப்ரைம் நம்பர்கள் தோன்றும் முறையை கண்டுபிடித்தது 15 வயதில் என்றால் 19 வயதில் பதினேழு கட்ட ரெகுலர் polygon-ஐ வெறும் காம்பஸ், ஸ்கேல் வைத்துப் போட்டுக் காட்டினார்.
Fundammental Theory of Algebra வை நிருபித்த போது வயது 22. அடுத்த 2 வருடத்தில் கணித உலகை பல அடுத்த கட்டங்களுக்கு எடுத்துச் சென்ற ’Disquistiones Arithmmeticae’ புத்தகத்தை எழுதினார்.
Least square method-ஐ வரையறுத்ததோடு அதை வைத்து வரைந்து, விரைந்து கண்டுபிடித்தார் விண்வெளியில் சஞ்சரிக்கும் கிரகங்களின் சுற்றுப்பாதையை அளவிடுவதை. அறிவியலின் ராணி கணிதம் என்றவர் அந்தக் கணிதத்தின் ராணி என்ற நம்பர் தியரியில் புகுந்து விளையாடினார்.
மின்னல் மாதிரி ஒரே ஒரு முறை கண்ணில் பட்டுச் சென்ற Ceres உபகிரகம் அப்புறம் எப்போ அப்பியர் ஆகும்னு சொன்னாரோ அப்போ தப்பாமல் ஆனது அது! சுமார் 200 வருடத்திற்கு முன் Modular Arithmetic இல் அவர் எழுதியது இன்று கம்ப்யூட்டர் சயின்ஸில் உதவுகிறது..
அறிவியலின் அந்தப்புரங்களில் ஒன்றிலிருந்து ஒன்றாக சுற்றித் திரிந்தவர் மின்காந்தத் தோட்டத்தில் சாதித்ததை நாம் மறந்து விடவில்லை. மேக்னெட்டிக் இண்டக் ஷனை அளப்பதற்கான யூனிட்டுக்கு Gauss என்று இவர் பெயர் தான் இட்டிருக்கிறோம் இல்லையா?
தன் வழிமுறைகளை விலாவாரியாக எழுதி வைத்துவிட்டு போகாதது, தன் பசங்களை அறிவியல் பக்கம் வரவேண்டாம் என்று அறிவுறுத்தியதையெல்லாம் சொல்வார்கள், அதையெல்லாம் ஆராய்ந்து கொண்டிருக்க வேண்டாமே? மேதைகளின் பாதைகளில் வாதைகள் ஆயிரம் இருக்கலாம்…
Quotes?
‘அறிவது அல்ல, கற்றுக்கொள்வதே; அடைவது அல்ல, முயற்சிப்பதே; அங்கே இருப்பது அல்ல, அங்கே செல்வதே ஆகப் பெரும் சந்தோஷம் தருவது!’
‘ஒரு விஷயத்தைத் தெளிந்தறிந்து சோர்ந்தவுடன் அதிலிருந்து விலகுகிறேன், மறுபடியும் அறியாமையின் இருளுக்குள் செல்ல.’
‘ஒருபோதும் திருப்தி அடையாததே மனிதனின் இயல்பு. ஒன்றைக் கட்டி முடித்தான் என்றால் அதில் அமைதியாக உறைவதில்லை, அடுத்ததைக் கட்டத் தொடங்குகிறான்.’
‘மிகக்குறைந்த வார்த்தைகளில் எத்தனை அதிகம் சொல்ல முடியுமோ அத்தனை சொல்லும் வரை நான் திருப்தி அடைவதில்லை. சுருக்கமாக எழுதுவது, நீளமாக எழுதுவதைவிட அதிக நேரம் எடுத்துக் கொள்கிறது.’
விடை: அவன் செய்ததெல்லாம் 50 -ஐ 101 ஆல் பெருக்கியதுதான். அத்தனை எண்களையும் 1+100, 2+99, 3+98 இப்படி அடுக்கிக் கொண்டே வந்தால் மொத்தம் ஐம்பது 101 கள் தானே வரும்? அப்புறம் என்ன, ஐந்தே விநாடியில் பெருக்கி சொல்ல வேண்டியதுதானே, 5050 என்று?

2 comments:

Thulasidharan V Thillaiakathu said...

நல்ல சிறப்பான தகவல்கள். 1-100 கூட்டல் எப்படி என்பது வீட்டில் சொல்லி அறிந்ததுண்டு.

இங்கு கடைசியில் நீங்கள் சொன்னது பலருக்கும் அறிய உதவும்.

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

வியப்பான சிறப்பான பயனுள்ள விஷயங்களைச் சொல்லியிருக்கிறீர்கள். மிக்க நன்றி

துளசிதரன்

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!