Friday, April 29, 2022

அழகில் அழகு...






‘Camp Nowhere’ 1994 இல் வந்த படம். ரெண்டு வாரத்துக்குத்தான் ஏதோ ஒரு சின்ன வேடத்தில் நடிக்க அந்தப் பெண்ணைக் கூப்பிட்டு இருந்தாங்க. முக்கியமான நடிகை ஒருவர் திடீரென்று ஒதுங்கிக் கொண்டார். என்ன செய்வது? யோசித்த டைரக்டர் இவரை அந்த ரோலுக்கு ப்ரமோட் செய்தார். அசத்திவிட்டார் அந்தப் பாத்திரத்தில். சின்ன, பெரிய திரை இரண்டிலும் ஸ்டார் ஆகிவிட்டார்.

Jessica Alba… அழகிய நடிகைகளில் மிக அழகிய நடிகைகளில் ஒருவர். April 28. பிறந்த நாள்.
‘Fantastic Four’ (2005) இன் விண் பெண் உடனே நினைவுக்கு வருவார். நான்கு பேர் சென்ற அந்த விண்வெளிக்கலம் காஸ்மிக் கதிர் வீச்சுக் கற்றை மேகம் ஒன்றில் மோதி விட அது அவர்கள் உருவை அடியோடு மாற்றிவிட.. உருவில்லாமலே போன மிஸ் எக்ஸாக வருவார் இவர் அதில். செமத்தியான வேடம். செம ஹிட் படம். அங்கேதான் சந்தித்தார் அசிஸ்டன்ட் டைரக்டராக இருந்த தன் வருங்கால கணவரை. பார்ட் 2 விலும் விண் பவனி வந்தார்.
ஐந்து வயதில் ஆக்ஸிடென்டில் கண் இழந்து விட்ட பெண் வயலினிஸ்ட் அவள். ஆப்ரேஷன் செய்து மாற்று கார்னியாவை ஏற்றுக்கொண்டால்... இப்ப கொஞ்சம் அதிகமாகவே தெரிகிறது! அச்சுறுத்தும் காட்சிகள். செத்துப் போனவர் கூட கண்ணுக்கு தெரிகிறார். என்ன விசித்திரம்! தேடிக்கொண்டு புறப்படுகிறாள் கண் அளித்தவரையும், காரணத்தையும்.. ‘The Eye’ அவருடைய கண்ணான படங்களில் ஒன்று.
சூப்பர் ஹியூமன்பீயிங் ஆக ஜீன் மாற்றப்பட்டவராக வரும் ‘Dark Angel’ -இல் இன்னொரு வித்தியாசமான ஜெஸிகாவைப் பார்க்கலாம். சொல்லணுமா ‘ஸன் ஸிற்றி' பற்றி? ('Sin City' 2005)
ஐந்து வயதிலேயே ஆர்வம் நடிப்பில். சின்ன வயசில் ஹாலிவுட்டை சுற்றிப் பார்க்க வந்தபோது ஏன் நானும் இங்கே வசிக்கக் கூடாது என்ற நினைப்பு ஓடியதாம் மனதில்..
‘பாத்திரத்துக்கு ஏற்ற தோற்றத்தை வழங்கினால் போதாது, ஏற்ற நடிப்பை வழங்க முடிய வேண்டும், இல்லாவிட்டால் நான் காணாமல் போய்விடுவேன்,’ என்கிறார்.
‘கல்யாணம் செய்து குடும்பம் நடத்துவதன் பியூட்டி என்னவென்றால் உங்களுடைய எல்லா விஷயத்தையும் இன்னொருவருடன் பகிர்ந்து கொள்கிறீர்கள், அவர் வாழ்க்கையின் ஒரு பங்காக இருப்பதற்கு உறுதி தருகிறீர்கள்..’ என்று வாழ்வின் அந்த அழகிய தருணத்தை கொண்டாடுகிறார்.
'மிக அழகானவர்கள்' பட்டியல்களில் மிக அதிகமாக இடம்பெறும் இவர் சொல்லுவது, ‘எல்லோருமே அழகுதான்,, மனசுக்குள் அழகானவராக இருப்பதுதான் முக்கியம்.’

1 comment:

வெங்கட் நாகராஜ் said...

தகவல்கள் அனைத்தும் சிறப்பு.

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!