Saturday, April 30, 2022

தப்பாத கணக்கு...



ஒன்றிலிருந்து நூறு வரை உள்ள எண்களின் கூட்டுத் தொகையை சொல்லுங்கன்னு கேட்டால் ஒன்றிலிருந்து பத்து நிமிடமாவது எடுத்துக்கொள்கிறீர்கள் இல்லையா? ஒரு நிமிடம் கூட எடுத்துக் கொள்ளவில்லை அந்தப் பையன். அசந்து விட்டார் ஆசிரியர். எப்படி? இறுதி பாராவில்.

கணிதத்தில் ஏற்பட்ட ஏகப்பட்ட முன்னேற்றங்களுக்கு காரணமான இந்த ஜெர்மானியர் ஆகப்பெரிய கணித மேதை என்று அழைக்கப்படுகிறார். ஆனாலும் பாவப்பட்ட அம்மாவுக்கு அவரைப் படிக்க வைக்க வசதியின்றி பிரன்ஸ்விக் பிரபுவை உதவி கேட்க வேண்டியதாக இருந்தது.
Carl Friedrich Gauss (1777 - 1855)..... இன்று பிறந்த நாள்! (எழுதப் படிக்கத் தெரியாத அம்மா சொன்ன குறிப்பை வைத்து ‘கணக்குகளை’ப் போட்டு அவரே கண்டுபிடித்தாராம் தன் பிறந்த நாளை என்பாங்க!)
மூன்று வயதில் அப்பா போட்ட தப்புக் கணக்கு ஒன்றைத் திருத்தியது அவர் காட்டிய பல ஆச்சரியங்களில் ஒன்று. ப்ரைம் நம்பர்கள் தோன்றும் முறையை கண்டுபிடித்தது 15 வயதில் என்றால் 19 வயதில் பதினேழு கட்ட ரெகுலர் polygon-ஐ வெறும் காம்பஸ், ஸ்கேல் வைத்துப் போட்டுக் காட்டினார்.
Fundammental Theory of Algebra வை நிருபித்த போது வயது 22. அடுத்த 2 வருடத்தில் கணித உலகை பல அடுத்த கட்டங்களுக்கு எடுத்துச் சென்ற ’Disquistiones Arithmmeticae’ புத்தகத்தை எழுதினார்.
Least square method-ஐ வரையறுத்ததோடு அதை வைத்து வரைந்து, விரைந்து கண்டுபிடித்தார் விண்வெளியில் சஞ்சரிக்கும் கிரகங்களின் சுற்றுப்பாதையை அளவிடுவதை. அறிவியலின் ராணி கணிதம் என்றவர் அந்தக் கணிதத்தின் ராணி என்ற நம்பர் தியரியில் புகுந்து விளையாடினார்.
மின்னல் மாதிரி ஒரே ஒரு முறை கண்ணில் பட்டுச் சென்ற Ceres உபகிரகம் அப்புறம் எப்போ அப்பியர் ஆகும்னு சொன்னாரோ அப்போ தப்பாமல் ஆனது அது! சுமார் 200 வருடத்திற்கு முன் Modular Arithmetic இல் அவர் எழுதியது இன்று கம்ப்யூட்டர் சயின்ஸில் உதவுகிறது..
அறிவியலின் அந்தப்புரங்களில் ஒன்றிலிருந்து ஒன்றாக சுற்றித் திரிந்தவர் மின்காந்தத் தோட்டத்தில் சாதித்ததை நாம் மறந்து விடவில்லை. மேக்னெட்டிக் இண்டக் ஷனை அளப்பதற்கான யூனிட்டுக்கு Gauss என்று இவர் பெயர் தான் இட்டிருக்கிறோம் இல்லையா?
தன் வழிமுறைகளை விலாவாரியாக எழுதி வைத்துவிட்டு போகாதது, தன் பசங்களை அறிவியல் பக்கம் வரவேண்டாம் என்று அறிவுறுத்தியதையெல்லாம் சொல்வார்கள், அதையெல்லாம் ஆராய்ந்து கொண்டிருக்க வேண்டாமே? மேதைகளின் பாதைகளில் வாதைகள் ஆயிரம் இருக்கலாம்…
Quotes?
‘அறிவது அல்ல, கற்றுக்கொள்வதே; அடைவது அல்ல, முயற்சிப்பதே; அங்கே இருப்பது அல்ல, அங்கே செல்வதே ஆகப் பெரும் சந்தோஷம் தருவது!’
‘ஒரு விஷயத்தைத் தெளிந்தறிந்து சோர்ந்தவுடன் அதிலிருந்து விலகுகிறேன், மறுபடியும் அறியாமையின் இருளுக்குள் செல்ல.’
‘ஒருபோதும் திருப்தி அடையாததே மனிதனின் இயல்பு. ஒன்றைக் கட்டி முடித்தான் என்றால் அதில் அமைதியாக உறைவதில்லை, அடுத்ததைக் கட்டத் தொடங்குகிறான்.’
‘மிகக்குறைந்த வார்த்தைகளில் எத்தனை அதிகம் சொல்ல முடியுமோ அத்தனை சொல்லும் வரை நான் திருப்தி அடைவதில்லை. சுருக்கமாக எழுதுவது, நீளமாக எழுதுவதைவிட அதிக நேரம் எடுத்துக் கொள்கிறது.’
விடை: அவன் செய்ததெல்லாம் 50 -ஐ 101 ஆல் பெருக்கியதுதான். அத்தனை எண்களையும் 1+100, 2+99, 3+98 இப்படி அடுக்கிக் கொண்டே வந்தால் மொத்தம் ஐம்பது 101 கள் தானே வரும்? அப்புறம் என்ன, ஐந்தே விநாடியில் பெருக்கி சொல்ல வேண்டியதுதானே, 5050 என்று?

Friday, April 29, 2022

அழகில் அழகு...






‘Camp Nowhere’ 1994 இல் வந்த படம். ரெண்டு வாரத்துக்குத்தான் ஏதோ ஒரு சின்ன வேடத்தில் நடிக்க அந்தப் பெண்ணைக் கூப்பிட்டு இருந்தாங்க. முக்கியமான நடிகை ஒருவர் திடீரென்று ஒதுங்கிக் கொண்டார். என்ன செய்வது? யோசித்த டைரக்டர் இவரை அந்த ரோலுக்கு ப்ரமோட் செய்தார். அசத்திவிட்டார் அந்தப் பாத்திரத்தில். சின்ன, பெரிய திரை இரண்டிலும் ஸ்டார் ஆகிவிட்டார்.

Jessica Alba… அழகிய நடிகைகளில் மிக அழகிய நடிகைகளில் ஒருவர். April 28. பிறந்த நாள்.
‘Fantastic Four’ (2005) இன் விண் பெண் உடனே நினைவுக்கு வருவார். நான்கு பேர் சென்ற அந்த விண்வெளிக்கலம் காஸ்மிக் கதிர் வீச்சுக் கற்றை மேகம் ஒன்றில் மோதி விட அது அவர்கள் உருவை அடியோடு மாற்றிவிட.. உருவில்லாமலே போன மிஸ் எக்ஸாக வருவார் இவர் அதில். செமத்தியான வேடம். செம ஹிட் படம். அங்கேதான் சந்தித்தார் அசிஸ்டன்ட் டைரக்டராக இருந்த தன் வருங்கால கணவரை. பார்ட் 2 விலும் விண் பவனி வந்தார்.
ஐந்து வயதில் ஆக்ஸிடென்டில் கண் இழந்து விட்ட பெண் வயலினிஸ்ட் அவள். ஆப்ரேஷன் செய்து மாற்று கார்னியாவை ஏற்றுக்கொண்டால்... இப்ப கொஞ்சம் அதிகமாகவே தெரிகிறது! அச்சுறுத்தும் காட்சிகள். செத்துப் போனவர் கூட கண்ணுக்கு தெரிகிறார். என்ன விசித்திரம்! தேடிக்கொண்டு புறப்படுகிறாள் கண் அளித்தவரையும், காரணத்தையும்.. ‘The Eye’ அவருடைய கண்ணான படங்களில் ஒன்று.
சூப்பர் ஹியூமன்பீயிங் ஆக ஜீன் மாற்றப்பட்டவராக வரும் ‘Dark Angel’ -இல் இன்னொரு வித்தியாசமான ஜெஸிகாவைப் பார்க்கலாம். சொல்லணுமா ‘ஸன் ஸிற்றி' பற்றி? ('Sin City' 2005)
ஐந்து வயதிலேயே ஆர்வம் நடிப்பில். சின்ன வயசில் ஹாலிவுட்டை சுற்றிப் பார்க்க வந்தபோது ஏன் நானும் இங்கே வசிக்கக் கூடாது என்ற நினைப்பு ஓடியதாம் மனதில்..
‘பாத்திரத்துக்கு ஏற்ற தோற்றத்தை வழங்கினால் போதாது, ஏற்ற நடிப்பை வழங்க முடிய வேண்டும், இல்லாவிட்டால் நான் காணாமல் போய்விடுவேன்,’ என்கிறார்.
‘கல்யாணம் செய்து குடும்பம் நடத்துவதன் பியூட்டி என்னவென்றால் உங்களுடைய எல்லா விஷயத்தையும் இன்னொருவருடன் பகிர்ந்து கொள்கிறீர்கள், அவர் வாழ்க்கையின் ஒரு பங்காக இருப்பதற்கு உறுதி தருகிறீர்கள்..’ என்று வாழ்வின் அந்த அழகிய தருணத்தை கொண்டாடுகிறார்.
'மிக அழகானவர்கள்' பட்டியல்களில் மிக அதிகமாக இடம்பெறும் இவர் சொல்லுவது, ‘எல்லோருமே அழகுதான்,, மனசுக்குள் அழகானவராக இருப்பதுதான் முக்கியம்.’

Monday, April 25, 2022

ஹாலிவுட்டின் ஒரு பானுமதி...



புகை என்றால் தன் காதலனுக்குப் பகை என்பதால், தான் சிகரெட் பிடிப்பதை எப்படியாவது நிறுத்த வழி கேட்டு அந்த சைக்கோதெரபிஸ்டிடம் வருகிறாள் டெய்சி. அவர் அவளை ஹிப்னாடைஸ் செய்ததில் அவளுடைய முன் பிறவிகள் ஒவ்வொன்றுக்கும் உள்ளே போய் வருகிறாள். அதில் ஒன்றில் அவள் பிரபல நாட்டியக்காரி மெலிண்டாவாக இருந்திருக்கிறாள் என்று தெரிகிறது. மெலிண்டாவின் தீவிர அபிமானியான டாக்டர் மிரண்டார், இதாண்டா நான் தேடின பெண்ணென்று! உடனே டெய்சியை காதலிக்கிறார். அவளும் அவரை.

ஆனால் பாருங்கள் அவர் காதலிப்பது தன்னை அல்ல, தன்னுள் இருக்கும் மெலிண்டாவைன்னு தெரிய வந்ததும் - எந்தப் பெண்ணாவது சம்மதிப்பாளா? - உதறி விடுகிறாள். அவரோ விடாப்பிடியாக கெஞ்சுகிறார். மறுபடி தன்னுள்ளே சஞ்சரித்து வந்தவள் அவருக்கு அந்த சந்தோஷச் செய்தியை கொடுக்கிறாள்: “கவலைப்படாதீங்க, என் அடுத்த பிறவி லாரா உங்களைத் தான் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறாள் அம்பது வருஷத்துக்குப் பிறகு!”


‘On a Clear Day You can See Forever’ (1970) படத்தில் டெய்சியாக வந்து கலக்கியவர்…
Barbara Streisand. இன்று பிறந்த நாள்..

ஹாலிவுட்டின் ஒரு பானுமதி. ஆம், பாடகியும் நடிகையும்!.. ஏன் டைரக்டரும் திரைக்கதாசிரியரும் கவிஞரும் தயாரிப்பாளரும் கூட. சென்ற நூற்றாண்டின் மிக அதிக ரெக்கார்டு விற்பனையான பாடகி!
நைட் கிளப் பாடகியாக துளிர்த்து, பிராட்வே நாடகங்களில் மிளிர்ந்து, டிவி சிரீஸில் ஒளிர்ந்து, திரைக்கு வந்தார் மனம் குளிர்ந்து. ஒமர் ஷரிஃபுடன் நடித்த முதல் படத்திலேயே சிறந்த நடிகைக்கான ஆஸ்கார்! பென்ஹர் புகழ் வில்லியம் வைலர் டைரக்ட் செய்த படமாச்சே? ஒரே படத்தில் நட்சத்திரமானார். அதே பிறந்தநாள் கொண்ட ஷர்லி மக்லீனுக்குப் போவதாயிருந்த ரோல் அது.
இவரின் ‘The Way We Were’ படப் பாடலை கேட்டால் மிகச் சிறிய விமானமொன்றிலேறி மிக உயரத்தில் வளைய வருவது the way you will feel! லிங்க் கீழே.
இவர் இயக்கிய ‘Yenti’ படத்தைப் பார்த்துவிட்டு புகழ்ந்து தள்ளிவிட்டார் ஸ்டீவன் ஸ்பீல்பர்க். வேறென்ன வேண்டும் திறமையை சொல்ல?
ஆஸ்கார், கிராமி, எம்மி, டோனி, கோல்டன் க்ளோப் என்று நடிப்பு, பாட்டு, நாடக மேடைக்கான அத்தனை டாப் அவார்டுகளையும் அள்ளிக் கொண்ட ஒரே நடிகை.
இவ்வளவும் சாதித்தவர் சொன்னது: நான் உருப்படுவேன்னு எங்க அம்மா நெனைக்கவே இல்லை.

Tuesday, April 12, 2022

புரியாத புதிர் இல்லை..

 


ஒரு புதிர்...

ஆடு மேய்த்துக் கொண்டிருந்த அவர் தாத்தா, தானே கணிதமும் வானியலும் பயின்று தன்னை ஆசிரியராக்கிக் கொண்டார் என்றால் பேரன் என்ன கற்றுக் கொண்டிருப்பார்?
ஆமா, புதிர்களை உருவாக்குவதே அவர் ப்ரொஃபெஷனாயிற்று.
அவர் புரியாத, புதிர் ஒன்று இல்லை.
அவர் Henry Dudeney.. இன்று பிறந்த நாள். (1857)
புதிரெழுத ஆரம்பித்த வயது 9. புனை பெயரைப் (Sphinx) போலவே சிங்கம்தான் அதில். ஏன், உலகின் முதல் 'நம்பர் க்ராஸ்வர்ட்' இவர் தயாரித்ததுதான். தவிர, செஸ்ஸில் லேசில் செக் சொல்லமுடியாத 'கிங்'!
அக்காலத்தில் பிரபலமானது Haberdasher’s Puzzle. ஒரு சமபக்க முக்கோணத்தை 4 துண்டுகளாக வெட்டி ஒரு சதுரமாக்க வேண்டும், எப்படி? செய்து காட்டி Royal Societyயில் அப்ளாஸ் வாங்கினார்.
ஏற்கெனவே பிரபலமாயிருந்த Sam Loyd உடன் பழகி அவருக்கு அனுப்பிய புதிர்களை அவர் ஏன் தன் பேரில் வெளியிட்டார் என்பது 'புரியாத புதிர்' இவருக்கு.
டிட்பிட்ஸிலிருந்து ஸ்ட்ரேண்ட் மேகசைன் (30 வருஷம்) வரை புதிர் சப்ளை செய்த இவர் ஆர்தர் கானன்டாயிலின் நண்பர்.
'வார்த்தை - எண் புதிர்' இவர் ஸ்பெஷாலிடி. எழுத்துக்களான எண்களைக் கண்டு பிடித்தால் கணக்கு சரியாயிருக்கணும். இதோ ஒன்று.
S E N D +
M O R E
__________
M O N E Y
முடிகிறதா (அல்லது விடையை கீழே பாருங்கள்!)
ஒரு நல்ல பஸிலை தீர்க்க புத்தி கூர்மை, கணிதம், லாஜிக் மூன்றும் தேவை என்கிறார். கணிதத்தின் வளர்ச்சியில் puzzle solving முக்கியமான பங்கு வகிப்பதாயிற்றே?
புத்திசாலித்தனமாக குழந்தைகள் வளர அவர்களுக்கு புதிர்களில் ஆர்வத்தை ஏற்படுத்தலாமே?

>><<
விடை: 9567+ 1085=10652

Saturday, April 9, 2022

ஜாக்கி சானின் ஃபேவரிட் ..


பாரிசிலிருந்து பிரஸல்சுக்கு ரயிலில் போகும் மில்லியன்களைச் சுருட்டத் திட்டமிடுகிறார் அதன் காவல் பொறுப்பில் இருக்கும் மேத்யூ. அதே பணத்தைக் குறிவைத்து நண்பனுடன் ரயில் ஊழியர் மாதிரி ஏறிக் கொள்ளும் ஆர்தர் அதைக் கொள்ளையடித்து வெளியே வீசினால், அது மிகச் சரியாக மேத்யூ அமர்த்திய ஆட்கள் நிற்கும் இடத்தில் விழுகிறது. அவர்கள் கையிலிருந்து அது வழி மறித்துக் கைப்பற்றுகிறது போலீஸ் ..என்று சொல்லிக்கொண்ட மற்றொரு கொள்ளைக் கூட்டம். ஃபிரேமுக்கு ஃபிரேம் சிரிப்பும், காட்சிக்குக் காட்சி திருப்பமும்! 1969 -இல் வந்த ‘The Brain’ படத்தில் ஆர்தராக வந்து அசத்திய Jean Paul Belmondo -வை மறந்திருக்க முடியாது. பிரெஞ்சுப் படங்களின் டாப் ஸ்டார். ஹாலிவுட்டிலும் பிரபலம்.
Jean Paul Belmondo... இன்று பிறந்த நாள்.
நம் ஃபேவரிட் ஆன ஜாக்கி சானின் ஃபேவரிட் ஆன இவர் சண்டைக் காட்சிக்கு டூப் போட்டதில்லை. ஆன்டி ஹீரோ பாத்திரங்களை அழகாகச் செதுக்கிய இவர் தந்தை ஒரு சிற்பி.

சோஃபியா லாரனுடன் நடித்த ‘Two Women’ ஒரு சூபர்ஹிட் என்றால் நம்ம ஊரிலும் நல்லா ஓடிய ‘That Man from Rio’ மற்றொன்று. Bond படங்களின் ஸ்பூஃப்! ஹாலிடே பாஸை வைத்துக்கொண்டு காதலியைப் பார்க்க வந்தால் அவளைக் கடத்திக் கொண்டு போயிருக்கிறது ஒரு கூட்டம். புதையல் ரகசியம் புதைந்து கிடக்கும் சிலையை மியூசியத்தில் திருடி வைத்துக் கொண்டு, மற்றொரு சிலைக்காக அதை வைத்திருந்த அவளை! நம்ம ஹீரோ எப்படியோ அவளை மீட்டு, தப்பிப் பிழைக்கிறது வரை சிரித்துக் கொண்டே இருக்கலாம்.