Sunday, May 30, 2021

ஏழு கதவுகள்...


செல் போன்கள் டவரின்  ஸிக்னலை பிடிப்பது போல, நம் உடலின் செல்களும் ஹார்மோன்களை சிக்னல் பிடித்து செல்லுக்குள் இருக்கும் G Protein க்கு அனுப்பும் மாலிக்யூல்களை வைத்திருக்கின்றன. GPCR என்று பேர் (G Protein Coupled Receptor) 

அது எப்படி வேலை செய்கிறது என்று ஆராய்ந்து சக விஞ்ஞானியுடன் நோபல் பரிசு பெற்றவர் அவர்.

Brian Kobilka.. இன்று பிறந்த நாள். வாழும் விஞ்ஞானியை வாழ்த்துவோம்!

வந்திருக்கும் தயாரிப்பாளரை அளவெடுத்து நடிகருக்கு ஐடியா கொடுக்கும் மேனேஜர் போல இந்த GPCRகள். சூழலை அறிந்து செல் தன்னை அடாப்ட் செய்ய வைப்பவை. 

நாம் உபயோகிப்பதில் பாதி மருந்துகளை இந்த வழியில்தான் பிரயோகித்து செல்களை குறிப்பிட்டபடி செயல்பட வைக்கிறார்கள்.

ரெஸப்டர்களை முதலில் ஆராய்ந்ததில் அவை தம்முள் ஏழு கதவுகளை வைத்திருப்பது தெரிந்தது.

அடுத்து இவர் கையில் எடுத்துக் கொண்டது அட்ரினலினை  உணர்ந்தறியும் ரெஸப்டரை. (அதாங்க, உணர்வைப் பொறுத்து இதயத்துடிப்பை எகிற வைக்கிறதே அது). அந்த ஹார்மோன் ஒரு ரெஸப்டரைத் தூண்டி சிக்னல் அனுப்புவதை இவர் கையும் கடத்தலுமாக HD லெவலுக்கு படம் பிடித்தார். உபயோகித்தது X Ray Crystallography-யை.

கண்டு பிடித்தது அதன் அமைப்பை. அதை உருவாக்கும் DNA செயினை முழுசாக அளவெடுத்தார். தொடர்ந்து பல ரெஸப்டரின் ஜாதகம் கிடைத்தது.

எங்கே உதவுகிறது இது? பக்க விளைவு இல்லாத மருந்துகள்! குறிப்பிட்ட ரெஸப்டரைக் கண்டு பிடித்து அதை மட்டும் தொடர்பு கொள்ளும் மருந்துகளை உருவாக்க எத்தனை உதவி!

‘Science’ பத்திரிகையில் ‘Breakthrough of the Year Award’ போட்டியில் ரெண்டாவது இடம் பெற்றது இவர் கண்டுபிடிப்பு.

><><


Monday, May 17, 2021

பாட்டொன்று கேட்டேன்...


 “ஓ.. தேவதாஸ்..” என்று 17 வயது சாவித்திரி பாடிக்கொண்டே வரும்போது கூடவே நம் மனதில் நுழைந்த 15 வயது குரல் இவருடையது. அதற்கு முன்பே 7 வயதிலேயே ‘தியாகய்யா’ தெலுங்குப் படத்தில் பாட ஆரம்பித்திருந்தார்.

ஜமுனா ராணி. இன்று பிறந்தநாள்!
இந்த வயலின் குரலுக்கு சொந்தக்காரரின் அம்மா ஓர் வயலினிஸ்ட். தந்தை ஆபீஸர் தனியார் நிறுவனத்தில். கிட்டத்தட்ட 6000 பாடல்கள். 1950, 60 களில் அனைத்து இசையமைப்பாளர்கள் பாடல்களிலும்..
முத்திரை பதித்த முதல் பெரிய ஹிட் ‘குலேபகாவலி’யில். கெஞ்சலும் கொஞ்சலுமாக அந்தப் பாட்டு! “ஆசையும்… (விக்கல்) என் நேசமும்..” அந்த அட்டகாசமான பாடலை இந்திப் பதிப்பிலும் அதே அழகுடன் பாடியிருந்தார். (“Aaj Tu In Nainan…”) இப்போது கேட்டாலும் குரலின் வசீகரம் தனியே தெரியும்.
அதே ராஜ சுலோச்சனா “ஆசை அன்பெல்லாம் கொள்ளை கொண்ட நேசா.. பேசும் ரோஜா என்னைப் பாரு ராஜா!” என்று ‘ஆசை’ படத்தில் ஆடிக்கொண்டே வருவதும் இவர் பாட்டு தான்.
நீங்கள் "பாட்டொன்று கேட்டு பரவசமானால்..." அது அனேகமாக ‘பாசமலரி’ல் இவர் பாடியதாக இருக்கும். ‘அன்பு எங்கே’யில் “பூவில் வண்டு போதை கொண்டு தாவு”வது இவர் குரலினிமையாலும் இருக்கலாம். ‘மாலையிட்ட மங்கை’யில் பாடிய “செந்தமிழ் தேன்மொழியாள்..” நீண்ட காலத்துக்கு அந்தத் தேன்மொழியை நினவில் வைத்திருந்தோம்.
மூன்று பாடகிகள் பாடும் “யாரடி நீ மோகினி” பாடலில் இவர் குரல் தன் தனித்தன்மையால் கவரும். “தேன் வேணுமா? நான் வேணுமா?”
‘கவலை இல்லாத மனிதனி'ல் இவரது “காட்டில் மரம் உறங்கும்..” கானத்தில் மனம் கிறங்கும். ‘ராணி சம்யுக்தா’ வில் உருக்கமாகப் பாடினார் ஒரு பாடல்: “சித்திரத்தில் பெண்ணெழுதி..” கேட்டால் மறக்க முடியாதது.
லிஸ்டில் டாப் சாங் “மாமா.. மாமா.. மாமா..”தான்.(‘குமுதம்') “சிட்டுப் போல பெண்ணிருந்தா வட்டமிட்டு சுத்தி சுத்தி..” சூபர் ஹிட்!
சந்திரபாபுவுடன் இவர் டூயட்கள் தனி களை கட்டும். “குங்குமப் பூவே…”யானாலும் சரி, "தடுக்காதே.."யானாலும் சரி! ‘பாண்டித் தேவன்’ படத்தில் ச.பாபுவுடன் "நீயாடினால்..." பாடலில் அந்த பட்டுக் கோட்டை கல்யாண சுந்தரத்தின் வரிகளை இவர் பாடும் அழகு இருக்கிறதே..
“சீமான்கள் கொண்டாடும் மேடை..
செண்டாலே காற்றெங்கும் வாடை...
சிரிப்பெல்லாம் வெவ்வேறு ஜாடை..."
நாயகன் நாயகி டூயட்டுகளில் ஞாபகம் அகல மறுப்பவை.. மனதை உருக்கும் ‘மன்னாதி மன்னன்’ பாட்டு! “நீயோ நானோ யார் நிலவே?” ‘செல்வம்’: “எனக்காகவா.. நான் உனக்காகவா?” ‘கொடுத்து வைத்தவள்’: “பாலாற்றில் சேலாடுது..”
‘அத்திக்காய்..’ பாடலில் “ஏலக்காய் வாசனைபோல் எங்கள் உள்ளம் வாழக்காய்..” என்று இவர் எண்ட்ரி ஆவது நினைவிருக்கா? அதோடு “ஆதிமனிதன் காதலுக்குப் பின்..”
நீண்ட இடைவெளிக்குப் பின் “நான் சிரித்தால் தீபாவளி..” என்று மறுபடியும் அவர் பாட்டொன்று கேட்ட பரவசத்தைத் தந்தார்.

><><><

Friday, May 14, 2021

அந்த அரை ஏக்கர்...



அந்த அரை ஏக்கர்... -கே.பி.ஜனார்த்தனன்.
('விகடன்' பவழ விழா - பரிசு பெற்ற குட்டிக் கதை)
அந்தச் சின்ன ஸ்டேஷனில் ஒரு நிமிடம் தான் நின்றது ரயில். அவசரம் அவசரமாக சூட்கேஸைத் தூக்கிக்கொண்டு இறங்குவதற்குள் கௌரி தவித்துப் போனாள். ஆனாலும் அவள் வருத்தப்படவில்லை. 'அந்த நிலத்தை எப்படியாவது பார்த்து விடணும்..'
தேடிப்போன மூலிகை காலிலேயே தட்டுப்பட்ட மாதிரி எதிர்பாராமல் கையில் வந்து விழுந்த பொக்கிஷமல்லவா அது?
மகன் ஆனந்துக்கு பெண் பார்த்து முடிவு செய்த போது...
"ஒரு நிமிஷம்," என்றார் பெண்ணின் அம்மா. "பேசினபடி கல்யாணத்தை ஐப்பசியிலேயே நடத்த முடியுமான்னு தெரியலே.. கொஞ்சம் தாமதம் ஆகலாம்.." என்றார்.
"ஏன்?"
"ஊரிலே இருக்கிற அரை ஏக்கர் தென்னந்தோப்பை வித்துத்தான் கல்யாணம் செய்து தரணும். அதான்.."
"ஊருன்னா?"
"செம்பழவூர்..!"
"அப்படியா?"
"ஆமாம். அங்கே வாய்க்கால் பாலம் மெயின் ரோட்டைத் தொடற இடத்திலேதான் எங்க தென்னந்தோப்பு இருக்கு.."
சட்டென்று ஒரு முடிவுக்கு வந்தாள் கௌரி
"அப்போ ஒண்ணு செய்யுங்க.. நிலத்தை மகன் பேருக்கு எழுதிக் கொடுத்துடுங்க. நாங்களே கல்யாண செலவு முழுக்கப் பார்த்துக்கறோம்.." என்றாள்.
சம்மதித்தார்கள். சந்தோஷமாக வீடு திரும்பினாள் கௌரி.
உடனே போய் அந்த நிலத்தைப் பார்க்க மனம் துடித்தது. கணவரை அழைத்தாள். அவர் தயங்கவே, "பரவாயில்லை.. எங்க அம்மாவைப் பெத்த தாத்தா அங்கேதான் இருக்கார்.." என்று தனியாகக் கிளம்பி விட்டாள்.
விஷயத்தைக் கேட்டதும் தாத்தாவின் கண்கள் விரிந்தன.
"வா, பேசிட்டே போகலாம்..." என்று நடந்தார்.
"நீ... நீயாம்மா வரதட்சணை வாங்குறே? பழசு எல்லாம் மறந்து போச்சா? அந்தக் காலத்திலே நீ பண்ணின ஆர்ப்பாட்டமும் கேட்ட கேள்விகளும்... இப்ப நடந்தது மாதிரி இருக்கு. உன்னைக் கட்டிக்க வரதட்சணை கேட்டாங்கன்னு என்ன குதி குதிச்சே? 'எனக்கு என்ன குறை? படிப்பில்லையா? அழகில்லையா? குணம் இல்லையா? வரதட்சணை கொடுத்துத்தான் கல்யாணம் பண்ணி வெக்கணும்னா, எனக்குக் கல்யாணமே வேண்டாம்'னே..."
"சரி, பழசெல்லாம் இப்ப எதுக்கு தாத்தா? அதை விடுங்க... வாய்க்கால் பாலம் வந்தாச்சு. அந்த நிலம் எங்கே இருக்கு? காட்டுங்க சீக்கிரம்..."
"அதோ, அந்த ஒற்றைப் பனையிலேருந்து இந்த ரோடு வரை கிடக்குதே.. அதான்.."
ஆசை பொங்கப் பார்த்தாள் கௌரி. பிறகு தாத்தாவை நிமிர்ந்து ஆழ்ந்து நோக்கினாள். நீண்ட பெருமூச்சு ஒன்றை இழுத்து வெளியே விட்டாள்.
"இந்த நிலத்தைத்தானே அந்த காலத்துல என்னைக் கல்யாணம் பண்ணிக் கொடுக்கறதுக்காக எங்கப்பா எனக்குத் தெரியாம ராவோடு ராவா வித்தார்! செம்பழவூர் வாய்க்கால் பாலம் ஒட்டின நிலம்னு அவங்க சொன்னதுமே நீங்க அம்மாவுக்கு மஞ்சக்காணியாக் கொடுத்த நிலம்தான் இதுன்னு எனக்குப் புரிஞ்சிடுச்சு. இழந்த நம்ம பரம்பரைச் சொத்தை மீட்கணும்கிற துடிப்புலதான் இதை வற்புறுத்தி அவங்ககிட்டேர்ந்து வாங்கினேன். கவலைப்படாதீங்க தாத்தா... ஊருக்குப் போனதும் அவங்களுக்குச் சிரமமில்லாம கல்யாணத்தை நாமளே நடத்தறதோட, இந்த நிலத்துக்கான கிரயத் தொகையையும் கொடுத்துடுவோம்!"
பேத்தியின் தலையை வாஞ்சையுடன் வருடிக் கொடுத்தார் தாத்தா.
><><