மாமாவின் குதிரை வண்டிக் கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார் அவர். வண்டியின் எதிர்காலம் சக்கரத்திலும் சக்கரத்தின் எதிர்காலம் ரப்பரிலும் இருக்கிறது என்றும் கண்டுகொண்டார் அவர். உடனே ஒரு பேடண்ட் வாங்கிக் கொண்டார் ரப்பர் டயருக்கு. நடத்த ஆரம்பித்த தன் குதிரை வண்டிக் கம்பெனியை 20000 டாலருக்கு விற்று டயர் கம்பெனி தொடங்கினார். ‘உருள’ ஆரம்பித்தது எதிர்காலம். உயரத்தில் கொண்டு சேர்த்தே ஓய்ந்தது.
ஓடிவந்து பார்த்த ஹென்றி ஃபோர்ட் ஒரு ஜயண்ட் சைஸ் ஆர்டர் கொடுக்க சுழன்றது அதிர்ஷ்டச் ‘சக்கரம்’.
ரிம்மோடு சேர்த்து கழற்றும் டயரை இவர் கண்டு பிடித்தாரோ, ஸ்பேர் டயர் பிறந்ததோ.. ட்ரிம்மாக வளர்ந்தது Firestone Tyre கம்பெனி.
Harvey Firestone.. இன்று பிறந்தநாள்!
1937 இல் அமெரிக்காவின் தலை சிறந்த பிசினஸ்மேன். ஒரு கட்டத்தில் அமெரிக்காவில் உபயோகிக்கப்பட்ட டயர்களில் நாலில் ஒன்று இவரின் Firestone Tyre கம்பெனி தயாரிப்பு. போடும் காசுக்கு ஓடும் மைலேஜை அதிகரிப்பதே தாரக மந்திரம்.
மூலதனம் அல்ல முக்கியம் வியாபாரத்துக்கு. அனுபவமும் அத்தனை முக்கியமல்ல. ஐடியாக்கள் தான் முக்கியம் என்கிறார். ‘அவையே உங்கள் பிரதான சொத்து. வாழ்க்கையிலும் சரி வியாபாரத்திலும் சரி அவற்றை வைத்துக்கொண்டு அளவற்ற காரியங்களை நீங்கள் ஆற்ற முடியும்.’
உதாரணம் அவரே. ரப்பர் விலை உயர்ந்தபோது தளராமல் அவர் கண்ட தீர்வு: சொந்த ரப்பர் ப்ளாண்டேஷன்.
எந்தத் தொழிற்சாலைக்கு உள்ளேயும் ஒரு முறை முழுவதுமாக நுழைந்து வெளியே வந்து விட்டால் போதும் அந்த தொழிற்சாலை லாபம் சம்பாதிக்கிறதா இல்லையா என்று தன்னால் சொல்லிவிட முடியும் என்பார், ‘அது நடக்கிற விதத்தையும் தொழிலாளர்களின் முகத்தையும் பார்த்து சொல்லிவிடுவேன்!’
அடிப்படை நாணயம் தான் வியாபாரத்தின் அடிக்கல் என்று நம்புகிறார். மற்றவர்களை முன்னேற்றும் போதுதான் நம் வெற்றி நிரந்தரமாக ஆகிறது என்று நினைப்பவர் சொல்வது ‘என்னுடைய வெற்றியின் ரகசியம் இரண்டே வார்த்தைகள்: மனிதர்களை அறிந்துகொள்.’
கஷ்டங்களைச் சமாளிக்க மிகச்சிறந்த வழி நேருக்கு நேர் மோதுவதுதான் என்பதிவர் திரிபு. ‘நீங்கள் ஈடுபட்டிருக்கும் காரியம் முழுக்க முழுக்கச் சரியானதுதான் என்று உங்களுக்குத் தெரியுமானால் அதை நீங்கள் உரிய காலத்தில் செய்து முடிப்பது உறுதி.’
'வருங்காலத்தை வடிவமைப்பதில் உள்ள ஒரே ஆபத்து, திட்டங்களை வளைக்க முடியாததாக போடுவதுதான்!' என்பதொரு அட்வைஸ்.
’உங்களின் மிகச் சிறந்ததை நீங்கள் வெளிக்கொணரும்போது மற்றவர்களின் மிகச் சிறந்ததையும் வெளிக்கொணருகிறீர்கள்!’ என்பது இவர் புரிந்து கொண்ட விஷயம். ‘கையில் பணம் சேர்ந்ததும் ஏன் மனிதன் தன் தேவைக்கு மீறிய பெரிய வீட்டை கட்டுகிறான்?’ என்பது புரியாத விஷயம்.
மின்சாரத்தைப் ‘பற்ற வைத்த’ எடிசனும் காரைச் ‘சுற்ற வைத்த’ ஃபோர்டும் உற்ற நண்பர்கள் இவருக்கு.
64 வது வயதில் டயரிலிருந்து ரிடயரானார்.