அன்புடன் ஒரு நிமிடம் -133
சென்னைக்கு வந்திருந்தனர் வினோதும் தியாகுவும். வரிசையாக வேலைகளை முடித்துவிட்டு மாலையில் ரூமுக்கு வந்தபோது மணி ஐந்து முப்பது.
உடனே குளியலறைக்குள் சென்று கதவை சாத்திக் கொண்டான் வினோத்.
”சீக்கிரம், சீக்கிரம்! ஐந்து நிமிஷம்தான் என்ன?” என்றான் தியாகு.
”என்னது, நான் குளிச்சிட்டு வர சரியா பதினஞ்சு நிமிஷம் ஆகும்! தெரிஞ்சதா?”
”டேய், அதெல்லாம் எப்படி முடியும்? இப்பவே கிளம்பினாத்தான் ஒன்பது மணிக்குள் ஷாப்பிங்கை முடிச்சிட்டு சாப்பிட்டு படுத்து அதிகாலை நாலு மணிக்கு ட்ரையினைப் பிடிக்க முடியும். மறந்துட்டியா?”
”நோ வே,” என்றபடி பாத்ரூமுக்குள் நுழைந்தவன் பதினைந்து என்றால் சரியாக பதினைந்தாவது நிமிடம்தான் குளித்துமுடித்து வெளியே வந்தான்.
”என்னடா இப்படி பண்ணிட்டே?” என்றான் ஆட்டோவில் ஏறியதும் தியாகு
”காரணம் இருக்கு. நீயே யோசிச்சுப்பார். காலையிலேர்ந்து அலையறோம். ஆட்டோ பஸ்னு வேர்க்க விறுவிறுக்க...கம்பெனி மீட்டிங் அது இதுன்னு தொடர்ந்தாப்பல பல வேலைகள். உடலுக்கு எத்தனை அலுப்பு! களைப்பு! இங்கே மட்டுமில்லே, ஊரிலேர்ந்தாலும் தினமும் இப்படி அடுத்தடுத்து வேலைகள் கொடுத்துட்டே இருப்பதில் உடம்பு எத்தனை சூடாகும்? களைப்பாகும்? அந்த அலுப்பையும் களைப்பையும் சூட்டையும் தணிக்க பதினஞ்சு நிமிஷம் ஒதுக்கி குளிர்ந்த நீரில் குளிப்பது வைடல் ஃபார் அவர் ஹெல்த்! எதை செய்யாவிட்டாலும் இதை மட்டும் நான் ஒரு நாளும் செய்யத் தவறினதே இல்லை. தவறவே மாட்டேன்.”
”அட, நான் இதை இப்படி நினைச்சுப்பார்த்ததில்லை. இனி நானும் இதை கடைப்பிடிக்கணுமே!”
ஷாப்பிங் முடிந்து வந்ததும் தியாகு ஐபாட் எடுத்தான், காதில் இயர் போனைச் செருகிக் கொண்டான். ”இருபது நிமிஷம் டிஸ்டர்ப் பண்னாதே,” என்றபடி சாய்ந்து கொண்டான் அந்த ஒடுங்கிய பால்கனி செயரில், ”எனக்கு மியூசிக் கேட்கணும்.”
பிற்பாடு சாப்பிட செல்லும்போது சொன்னான், ”ஒரு நாளில் நம் உடம்பு எத்தனை சூடாகுது, களைப்பாகுதுன்னு சொன்னாயல்லவா? அதே போல தினசரி நாம் கொள்ளும் கோபதாப உணர்வுகளாலும் டென்ஷன்களாலும் நம்ம மனசு எத்தனை சூடாகுது, களைப்பாகுதுன்னு எண்ணிப் பார்த்தேன். தினமும் அந்தக் களைப்பைப் போக்கி அதை கூல் படுத்திட தவறக்கூடாது இல்லையா ? அதற்குத்தான் இந்தக் கட்டாய இருபது நிமிஷம் ஒதுக்கினேன். இந்த இருபது நிமிஷம் நல்ல மியூசிக்கைக் கேட்பது அல்லது சிறந்த ஓர் ஆன்மிக புத்தகத்தைப் படிப்பது என்று வைத்துக்கொண்டால் மனசுக்கு புத்துணர்ச்சி உண்டாகிவிடும். அதான்.”
”நானும் இதைக் கடை பிடிக்கணுமே!” என்றான் வினோத்.
><><
><><
2 comments:
குளிர்ந்த நீரில் நீண்ட குளியல்! காதுக்கு இனிமையான இசை... நல்லது தான்.
தொடரட்டும் பகிர்வுகள்.
அருமை... உண்மை...
Post a Comment
உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!