அன்புடன் ஒரு நிமிடம்... 116
உற்சாகம் ஒரு துளிகூட இன்றி காணப்பட்டான் வைபவ். வாசுவின் பக்கத்து வீட்டுப் பையன். எஞ்சினீயர். மனைவி, இரு குழந்தைகள். அடிக்கடி வீட்டுக்கு வருவான் இவரைப் பார்க்க. இவரிடம் ரொம்ப ஒட்டுதல்.
என்னப்பா என்று கேட்டபோது எல்லாரையும் போல, வேலை ஜாஸ்தி, டென்ஷன் என்றே எதிர்பார்த்த பதில்.. ஆனால் கொஞ்ச நேரம் அவனுடன் பேசியதுமே தெரிந்துவிட்டது அப்படியொன்றும் வேலைப்பளு இருக்கவில்லை என்று. வீட்டில் ஒன்றும் பிரசினை இல்லை. வேறு எதனால் இவன் இப்படி? எதனாலோ ஒரு வெறுமை...எப்படி இவனை சரிப் படுத்துவது?
“ஒரு வாக் போலாமா?” என்றவர் சொன்னதும் அவன் எழுந்தபோது செல் ஒலித்தது. எடுத்துப் பார்த்துவிட்டு அணைத்து விட்டான்.
”யார் அது? பேசியிருக்கலாமே?”
”ஃப்ரண்ட். அப்புறம் பேசலாம்னு...” காட்டினான் பெயரை’
பார்க்கலாமா என்று அதை வாங்கினார்.
கான்டக்ட் லிஸ்டை உயிர்ப்பித்தார். ”இது யார் அரவிந்த்?’
”என் பெரியண்ணா. என் மேல ரொம்பப் பிரியம்.”
”கடைசியா எப்ப அவருக்கு போன் பண்ணினே.. இரு பார்க்கிறேன் இதில...ஓ, நாலு மாசம் முந்தி.” இன்னும் புரட்டி, ”அஸ்வின்?”
”ஃப்ரண்ட். பத்து வருஷமா... சென்னையில இருக்கான். எப்ப போனாலும் இவனோடதான் தங்கறது...”
”ரெண்டு மாசம் முந்தி ரெண்டு நிமிஷம் பேசியிருக்கே.” புரட்டி... ”ராமாமிர்தம். இது உன் கல்லூரி ஆசிரியராச்சே? எனக்கு இவர்தான் வழிகாட்டின்னு..”
“அவரேதான். அவங்க பையன் கொஞ்ச நாள் முந்தி ஆக்ஸிடெண்ட்ல...”
“ஒரு மாசமா அவர்கிட்ட எதும் பேசலே போல. அப்புறம் வத்சலா கார்த்திக். அது யாரு?”
“ரயிலில் சந்திச்ச எழுத்தாளர். ரொம்ப ஃப்ரண்டாயிட்டாங்க.”
”இவங்களோடும் சமீபத்தில பேசினமாதிரி தெரியலியே?”
தொடர்ந்து அழுத்திப் பார்த்த முக்கியமான நெருங்கிய பல பேர்களோடெல்லாம் அவன் பேசி நாளாயிற்றென தெரிந்தது.
”என்னப்பா இது, அத்தனை பிரியமானவங்க.. அப்பப்ப அவங்களை அழைத்து ரெண்டு நிமிஷம் பேசறதில்லையா?”
”அது... எனக்கு... நேரம் கிடைக்கணுமில்லையா?”
”ரெண்டு நிமிஷம்கிறது ஒரு நேரமா என்ன... அதில்லை காரணம்!”
”சரி, அவங்களும் கூப்பிட்டு பேசணும் இல்லையா?”
”நாம மதிக்கிறவங்க, நேசிக்கிறவங்களோட பேசறதுக்கு பதிலுக்கு பதில் பார்க்கணுமாக்கும். நோ! இந்தா!” நீட்டினார் மொபைலை.
”பேசு இப்ப இதில ரெண்டு பேரோட. ஜஸ்ட் அஞ்சு நிமிஷம்... நாளைக்கு ரெண்டு பேர். தினம் இப்படி ஒரு வாரம் பண்றே. ப்ளீஸ்.... நான் சொன்னதுக்காக இதை செய்யறே. அடுத்த வாரம் உன்னை பார்க்கிறேன். சரியா?”
இவன் போனை உசுப்பியவாறே வெளியேறினான். .
அடுத்த வாரம் வந்தபோது அவனது கண்களில் அப்படியொரு உற்சாகம். மனதில் அகன்றிருந்த வெறுமை பேச்சில் தெரிந்தது.
><><><
(”அமுதம்’ ஜூன் 2015 இதழில் வெளியானது)