Wednesday, August 24, 2016

அவள் - கவிதைகள்

301
ஒரு வார்த்தை உதிர்த்தாய்,
பூக்கள் அதில் தங்களைக் கோர்த்து
மாலையாகிக் கொண்டன.


302
எதற்கோ ஒரு சிரிப்பு..
எப்போதும் புன்னகை..
எப்படி முடிகிறது உன்னால்?

303
இந்த வழியே வந்திருக்கிறேன்
உன்னுடன்.
எந்த ஜென்மத்தில் 
என நினைவில்லை.


304
வந்து வந்து கொஞ்சுகிறாய்,
சீண்டுகிறாய், 
பக்கத்தில் இல்லாத நேரம் என்
நினைவில்.

305
எந்த ஓசையும் கேட்கவில்லை,
உன் கொலுசொலி கேட்கையில்.

306
நானில்லாத பொழுதிலும் 
உன்னைத் தழுவிக் கொண்டே...
என் நினைவுகள்.

307
ஆ, உன் கண்கள் 
சிரிக்கத் தொடங்கிவிட்டன,
நான் 
வெறுமையற்றுப் போகிறேன்.


308
ஒரு பார்வை பார்த்தாய் 
வெளிச்சங்கள் வெட்கிப்போய்
நிழலுக்குள் ஒளிந்து கொண்டன.

309
என் வாழ்க்கைக்கு
கனவுகளையும்
கனவுகளுக்கு 
வாழ்க்கையையும்
கொடுத்தாய்.

310
உன் நடை மெதுவாக ஆக
என் இதயம் வேகமாக...

<<<>>>

Saturday, August 20, 2016

நல்லதா நாலு வார்த்தை... - 71

'வாழ்க்கை பற்றிய அனைத்தையும் நம் 
குழந்தைகளுக்கு நாம் கற்பிக்க முயல்கையில் 
அவர்களோ 
வாழ்க்கை எதைப்பற்றியது என்பதனைத்தையும்
 
கற்பிக்கிறார்கள் நமக்கு.'
- Angela Schwindt
('While we try to teach our children all about life,
our children teach us what life is all about.')
<>

'மகிழ்வான வாழ்க்கைக்கு 
தேவை மிகக் குறைவே; 
எல்லாம் உங்களுக்குள்ளேயே, 
நீங்கள் சிந்திக்கும் விதத்திலேயே.'
- Marcus Aurelius
('Very little is needed to make a happy life;
it is all within yourself, in your way of thinking.')
<>
’சொல் என்னிடம்; மறந்து விடுகிறேன்.
சொல்லிக்கொடு எனக்கு; ஞாபகம் வைத்துக்கொள்கிறேன்.
ஈடுபட வை என்னை; கற்றுக் கொள்கிறேன்.'
- Benjamin Franklin
('Tell me and I forget. Teach me and I remember. 
Involve me and I learn.')
<>

'பறவைக்குக் கூடு; 
சிலந்திக்கு வலை; 
மனிதனுக்கு நட்பு.'
- William Blake
('The bird a nest, the spider a web, man friendship.')
<>

’கண்ணாடிகளை ஜன்னல்களாக்குவதே
கல்வியின் முழு நோக்கம்.’
- Sydney J. Harris
('The whole purpose of education is to turn mirrors into windows.')
<>

'உங்கள் தேவைகளுக்கு 
அளிக்கப்பட்ட பதிலே 
உங்கள் நண்பர்.'
- Khalil Gibran
('Your friend is your needs answered.)

<>

'மரியாதை என்பது 
நாம் கொடுக்க வேண்டியது;
அன்பு என்பது, 
நாம் கொடுப்பது.'
- Philip James Bailey
('Respect is what we owe; love, what we give.')
<>

'இருள் மிகச் சூழ்ந்த நம் 
கணங்களில்தான் நாம் 
கூர்ந்து நோக்கிட வேண்டும் 
வெளிச்சத்தைக் காண.’
- Aristotle Onassis
('It is during our darkest moments that
we must focus to see the light.')
<>

'நேரமே நாம் மிக விரும்புவது, 
ஆனால்
மிக மோசமாக உபயோகிப்பது.'
- William Penn
('Time is what we want most, but what we use worst.')
<>

'நினைவு எப்போதும் கீழ்ப்படிகிறது
மனதின் கட்டளைகளுக்கு.’
- Antoine Rivarol
('Memory always obeys the commands of the heart.')

<<<<>>>>

Thursday, August 18, 2016

அதுக்கும் மேலே...(நிமிடக்கதை)



அன்புடன் ஒரு நிமிடம் - 105

வந்தவர் கையைப் பிடித்துக் கொண்டார். “தாங்க்ஸ். பையன்கிட்ட நல்ல மாற்றம்... எல்லாம் உங்களாலதான். நல்லாவே அட்வைஸ் பண்ணியிருக்கீங்க!“ 

”அட்வைஸா? மூச் விடலே நான். போனேன், தங்கினேன், வந்தேன்!” என்றார் சாத்வீகன்.

”அப்படியா? அவனைப் பார்த்து நல்லது சொல்லத்தான் சென்னைக்குப் போனீங்கன்னு..”

போன மாதம் அவர் வந்து சாத்வீகனிடம் தன் மகனைப் பற்றிக் குறைப்பட்டுக் கொண்டது உண்மைதான்.   பி,இ. முடித்ததும் மூன்று மாதத்துக்குள் நல்ல ஒரு வேலை தேடப் போறேன், ஏதோ ஸாஃப்ட்வேர் படிக்கப் போறேன்னு சென்னைக்கு போனவன் அங்கே ஏதும் உருப்படியாக பண்ணாமல் ஊரைச் சுற்றிக் கொண்டிருக்கிறான் என்று  சொல்லி, நான் சொன்னா கேட்கமாட்டான், நீங்க ஒரு முறை அவனைப் பார்த்து கொஞ்சம் அட்வைஸ் பண்ணினாத் தேவலை என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

“நோ நோ. நீங்க வந்து சொன்னது ஞாபகம்தான். சென்னைக்கு போனேன்தான். அவனோடதான் தங்கினேன்.ஆனால் இந்தக் காலத்துப் பசங்களுக்கு பிடிக்காத ஒரே வார்த்தை அட்வைஸ் ஆச்சே? அப்படியிருக்க அவனிடம் என்னத்தை சொல்றது நான்? அவனைப்பற்றி வாயே திறக்கலே.”

“ஓஹோ?”

என்னதான் நடந்தது சென்னையில்?

காலை ஆறு மணிக்கு போய் இறங்கினார் அவன் அறையில்.  குளிச்சுட்டு வாங்க மாமா, டிபன் சாப்பிடலாம் என்றவனிடம் கொஞ்சம் இருப்பா என்றவர் ”என்னோட பிளானை தெளிவா ட்ராஃப்ட் பண்ணிக்கிறேன்,” என்று பையிலிருந்து பேனாவை எடுத்தார்.  அடுத்த முப்பது நிமிடம் மும்முரமாக அவர் இயங்கினார். 

”ரெண்டு பகல் ஒரு இரவு இருக்கு இங்கே எனக்கு. குளியல் சாப்பாடு தூக்கம் போக மொத்தம் 26 மணி நேரம் கிடைக்குது.” என்று சொல்லிக் கொண்டார். பார்க்க வேண்டிய நபர்கள், ஆஜராக வேண்டிய மீட்டிங் என்று வேலைகளை எழுதினார் வரிசையாக. அததுக்கு ஆகும் நேரத்தை குறித்தார்.  அப்புறம் அதில் தன் ப்ரியாரிட்டியை எண்ணிட்டார்.

அதை வைத்துக் கொண்டு காலை 8 மணிக்கு இங்கே, பத்து மணிக்கு அவர் என பொருத்தமாக அடுக்கினார். அதை எடிட் செய்து குறைக்க கூட்ட செய்ததில்  ஒரு வழியாக ஒரு டைட் கால அட்டவணை உருப்பெற்றது.
வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தவனிடம் சொன்னார். “எல்லா வேலைகளையும் சக்ஸஸ்ஃபுலா முடிக்கணும் இல்லையா எனக்கு இருக்கிற ரெண்டு நாளில்? அதான் இப்படி திட்டம் போட்டுக்குவேன்.  அதுபடி ஸ்டிரிக்டா இயங்கினா மட்டும்தான் விஷயம் ஒழுங்கா நடந்து முடியும். என்ன அப்படியே உட்கார்ந்திருக்கே? எழுந்திரு டிபன் சாப்பிடப் போகலாம்.”

அடுத்த இரு நாளும் அவர் நொடிக்கொரு தரம் அந்த டைம் டேபிளை எடுத்து பார்த்துக் கொள்வதும் புறப்பட்டு போவதும் வருவதுமாக இருந்ததை அவன் பார்த்தான். இந்த வயசில ரெண்டு நாள் விசிட்டுக்கே இப்படி திட்டமிட்டு உறுதியாக இயங்கும் அவருடன், படித்து வேலை தேட வந்திருக்கும்  தன்னை ஒப்பிட முடியாமல் இருக்க முடியவில்லை அவனால்.

எந்த அட்வைஸும் அவர் செய்யவில்லைதான். ஆனாலும் அவர் செய்தது அதுக்கும் மேலே என்பதை  அவன் மட்டுமே அறிவான்.  

(’அமுதம்’ மார்ச் 2015 இதழில் வெளியானது) 

Tuesday, August 16, 2016

அவள் - கவிதைகள்...

291
ஒரு பார்வையை வீசிவிட்டு
சும்மா போனால் எப்படி? 
ஒரு கை கொடு,
எழுந்து கொள்கிறேன்.


292
துருவத்தில் உருகும் பனியை உன்
புருவத்தின் கீழ் குளிர்ப் பார்வை
சமனப் படுத்துகிறது.

293
உன்னுடன் செல்வதற்கும் 
தனியே நான் செல்வதற்கும்
உணர முடியவில்லை வித்தியாசம்.

294
புன்னகை புரிந்தபடியே
பேசாதே.
புன்னகை மட்டுமே
புரிகிறது.


295
அத்தனை வார்த்தைகளையும் 
கேட்டுவிட்டு நீ கொட்டும் ஓரு உம்
அத்தனைக்கும் பதிலாய்...

296
நீ அகன்றுவிட்டாய் அங்கிருந்து.
மனதை நகர்த்த முடியாமல் 
நான்.

297
என்னை ஒரு செல்ஃபி
எடுத்தால்
தெரிகிறாய் அதில்
நீயும்.


298
இரண்டா இருபதா,
அடிக்கடி சந்தேகம்,
உன் கண்கள்.

299
முழுக்கண் பார்வையில் 
அரைக் கிறுக்கன் ஆனேன்.
என்றிரக்கமுற்று 
அரைக்கண் மூடிப் பார்த்தாய்
ஆனேன் முழுக் கிறுக்கு.


300
எப்படி நம்பாமலிருப்பது
ரிலேடிவிடி தியரியை
நீ 
இளமையாகிக் கொண்டே போகும்போது?

><><><

Sunday, August 14, 2016

நல்லதா நாலு வார்த்தை... 70


'இனிமேல் எப்படி ஆகவிருக்கிறாயோ, 
 இப்போதே அப்படி இருக்கத் தொடங்கு.'
- William James
('Begin to be now what you will be hereafter.')
<>

'யார் நான், 
ஏன் இங்கு இருக்கிறேன் 
என்பதறியாது 
சாத்தியமில்லை வாழ்வது.'
- Leo Tolstoy
('Without knowing what I am and
why I am here, life is impossible.')
<>

'அநேக நேரம் சிரிக்கிறவன்
அறிகிறான் சிறப்பாக.'
- John Cleese
('He who laughs most, learns best.')
<>

’மனிதர்கள் மாறுகிறார்கள்;
மறந்து விடுகிறார்கள் 
ஒருவருக்கொருவர் சொல்ல.’
- Lillian Hellman
(’People change and forget to tell each other.’)

<>

’நேற்று விழுந்திருந்தால்
இன்று எழுந்து நில்.'
- H. G. Wells
('If you fell down yesterday, stand up today.')
<>

'ஆனைகள் சண்டயிடுகையில்
அவதிக்குள்ளாவது புற்கள்.'
- African proverb
('When elephants fight it's the grass that suffers.')
<>

’நம்மால் என்ன முடியுமென்பதைப்
பாராத வரையில்
நாம் யாரென்றறியோம் நாம்.’
- Martha Grimes
(’We don't know who we are until we see what we can do.’)

<>

'நன்றாய் உன்னை அறிந்தபின்னும்
நன்கு உன்னை நேசிப்பவனே 
நண்பன்.'
- Elbert Hubbard
('The friend is the man who knows
all about you, and still likes you.')

><><><><

Friday, August 5, 2016

அதுவும் முக்கியமே...

அன்புடன் ஒரு நிமிடம் -104.
                                                                                                                                                                            
 வினோத் வீட்டில்... கோபமாக அவன். சோகமாக யமுனா. 
வியப்புடன் தியாகு, “என்ன பிரசினை?”
”நீங்களே சொல்லுங்க. அப்பா தன்னோடு வரணும்னு பையன் அடம் பிடிக்கிறான்.அவனுக்கு பீச் போகணுமாம். ஜாமிட்ரி பாக்ஸ் வாங்கணுமாம். லைப்ரரியில் புக் மாத்தணுமாம். அப்பா கூடவந்து செலக்ட் செய்து தரணுமாம். இவர் என்னன்னா அடுத்த வாரம் போகலாம்கிறார்.”
“ஆமா. சொன்னா கேட்க மாட்டேங்கிறாங்க.” என்றான் வினோத்.
”இதெல்லாம் ஒரு பிரசினையா... இப்ப நான் ஒண்ணு கேக்கறேன் பதில் சொல்லு.” என்றான் தியாகு.
இவன் வேறே... என்ன சொல்லப் போகிறான்?
"ஒரு சூழ்நிலையை கற்பனை பண்ணிக்க. இதே மாதிரி ஒரு பிற்பகல்.  அஞ்சு மணி நேரம் உன் கையில இருக்கு.  உன் பையன் உன்னோட வெளியே போகணும்னு ஆசையா சொல்லிட்டிருக்கிறான். அதே சமயம்  உனக்கு ஒரு போன் வருது.  அப்பாவுக்கு நெஞ்சு வலி, ஐ.சி.யூ.வில் அட்மிட் ஆகியிருக்கு, உடனே வான்னு. இப்ப நீ எதை செய்வே?"
"அப்பாவைப் பார்க்க ஓடுவேன்."
"ஏன் அப்படி?"
"என்ன கேள்விடா இது...அந்த விஷயம்தானே அந்த ரெண்டில முக்கியமானது?” 
“ரைட்இன்னொரு சூழ்நிலை.  பையன் உன்னோட வெளியே போகணும்னு சொல்ல... அப்ப தகவல் வருதுஉன் மனைவி போன ஸ்கூட்டர் ஒரு பைக்ல மோதி அந்த வண்டி சேதமாகி வொர்க் ஷாப்பில் நிற்கிறாஇப்ப எங்கே போவே?”
”யமுனாவைப் பார்க்கத்தான்.” 
’காரணம்?”
”முந்தி சொன்ன அதே காரணம்தான்.”
”அடுத்த சூழ்நிலையில் உன் மானேஜரிடமிருந்து போன்.  ப்ராஜெக்டில் ஒரு கோளாறு. காலையில கிளையண்டுக்கு தரணும். உடனே நீ வந்தால்தான் சரி பண்ண முடியும். அங்கே போவியா இல்லை, பையனுடன் கிளம்புவாயா?’ 
”அதெப்படி? ஆபீசுக்குத்தான் ஓடுவேன்.” 
”ரெண்டுமே முக்கியம் அல்லவா?’
’முக்கியம்தான். அதில அதுக்கு அடுத்தபடியா இது முக்கியம். அதனால அந்த விஷயம் வந்ததால் இது செய்யமுடியாது.”
”ரைட்,” என்ற தியாகு அமைதியாக சொன்னான், ”அப்படீன்னா இப்ப உன் முன்னாலிருக்கிற சூழ்நிலையில அந்த மாதிரியான எந்த நிலைமையும் இல்லை. அப்படி எந்த ‘அதைவிட முக்கிய வேலை’யும் இல்லாத வரையில் நீ இதைதானே செய்யணும்? பையனை அழைச்சிட்டு போகிறதுதானே உன் முதல் அண்ட் ஒரே வேலையா இருக்கணும்?”
லாஜிக் சரிதான் என்றான் நண்பனிடம். புறப்படுடா. என்றான் பையனிடம்.
<><><>
(’அமுதம்’ பெப்.2015  இதழில் வெளியானது)