அன்புடன் ஒரு நிமிடம் - 98
”எனக்கும் பேசத் தெரியும் மாமா. இதுக்கு பதிலடி கொடுக்காமல் நான் விடவே மாட்டேன், ” என்றவரைப் பார்த்து சிரித்தார் சாத்வீகன். "நீ இன்னும் விஷயத்தையே சொல்லலை. அதுக்கு முந்தி எதுக்கு பஞ்ச் எல்லாம்?”
சொன்னார் கல்யாணராமன்.
அவரிடம் இருந்த ஓர் ஐந்து செண்ட் நிலம். கையிலிருந்த ரெண்டு லட்சம் ரூபாயில் தன் கனவு வீட்டைக் கட்டத் துவங்கினார். பாங்கில் லோன் கிடைத்தது. ஆனால் காண்ட்ராக்டர் சொதப்பியதால் நஷ்டப்பட்டு விட்டார். அந்த நபரிடம் வேலை தெரிந்த சரியான ஆட்கள் இல்லை. தேவையான சாமான்களோ வசதியோ இல்லை. அனுபவமும் இல்லை. அதனால் பிரசினைகள் எழுந்து வேலை பாதியில் முடங்கி... திணறிப் போனார். நிறையவே பணம் இழப்பு. ஒரு வழியாக கட்டி முடிப்பதற்குள்...
சொல்ல வந்தது அதுவல்ல. அவரின் சித்தப்பா மகன் ஜகதீசன் இவரைப் பற்றி உறவினர் ஒருவரிடம் பேசும்போது, ”என்கிட்டே ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் நான் பார்த்து முடித்துக் கொடுத்திருப்பேன். என் மைத்துனரே ஒரு நல்ல காண்ட்ராக்டர். அவரை வைத்து அழகாக கட்டிக் கொடுத்திருப்பேன்,” என்று சொல்லியிருக்கிறார். அந்த உறவினர் எல்லாரிடமும் அதை சொல்வார் எனத் தெரிந்தே.
தாங்க முடியாத கோபம் இவருக்கு. ஏனென்றால் அவரிடம் ஒன்றுக்கு இரு முறை போய், தான் வீடு கட்ட வேண்டும் என்றும் அதற்காக சரியான காண்ட்ராக்டர் தேடி அலைந்து கொண்டிருப்பதாகவும் சொல்லியிருக்கிறார். அப்போது தன் மைத்துனர் பற்றியோ தான் உதவி செய்வது பற்றியோ மூச்சு விடவில்லை. அந்த சந்திப்புகளை அப்படியே மறைத்துவிட்டு இவரைக் குற்றம் சொல்ல வேண்டுமானால்...
“என்ன வேணா சொல்லலாம்னு நினைச்சிட்டு இருக்கிறார் அந்த ஆளு. அவரு மச்சினனுக்கு அந்த வேலையை எடுத்துக் கொடுக்க இஷ்டமில்லை போல அவருக்கு. அதனால பழியைத் தூக்கி என் மேல போடறாரு. என்னை இளிச்சவாயன்னு நினைச்சுட்டு... நீங்களே சொல்லுங்க மாமா. இவர் வேஷத்தைக் கலைச்சு பாடம் படிச்சுக் கொடுக்க என்னால முடியுமா முடியாதா?”
சாத்வீகன் புன்னகைத்தார். ”கண்டிப்பா முடியும். ஆனா நான் சொல்றேன், நீ அப்படியே இருந்து விடு. அவரு இதில ஜெயிச்சதாவே இருக்கட்டும். காலம் போகப் போக உன் வருத்தம் குறையும். அவருக்கு உறுத்தல் ஆரம்பித்துவிடும். இப்ப பாரு, நீ கொஞ்ச நாளில் இதை மறந்துடுவே. ஆனா அவரு ரொம்ப நாளைக்கு இதை மறக்க முடியாது. உன்னைப் பார்க்கிறப்ப எல்லாம் அவரு மனசில் ஒரு கஷ்டம் தோன்றும். உனக்குப் பதில் உன் மௌனம் செய்யும் வேலை அது. நிச்சயமா ஒரு நாள் அவரு உன்னை சரிப்படுத்த முயலுவார். அப்ப நீ ஜெண்டிலாக சொல்லும் ஒரு, ’பரவாயில்லே!’ இருக்கே, அது அவருக்கு படிச்சுக் கொடுக்கும் பாடம். அர்த்தமுள்ள பாடம்.”
“அப்படீங்கறீங்க?” கல்யாணராமன் மோவாயைத் தடவினார். “ நல்ல விஷயமாத் தான் தெரியுது...” எழுந்தார். ”ஒரு வேளை அந்த மாதிரி ஒரு உறுத்தலோ வருத்தமோ அவருக்குத் தோணாமப் போயிட்டா... அதுக்கும் சாத்தியதை இருக்கில்ல?’
தோள்களைக் குலுக்கினார் இவர். ”கொஞ்சம் இருக்கிறதுதான். அப்படிப்பட்ட ஒருவரா அவரு இருந்தால் அவரோட பழக்கமோ சினேகமோ உனக்குத் தேவையா என்ன? உன் மனசில அவருக்கு இடம் கிடைக்காமலேயே போயிடும். அவ்வளவுதானே? அவருக்குத் தான் நஷ்டம் அது. ஒரு சான்ஸ் கொடுத்துப் பார்த்தோம்கிற திருப்தியோட நீ நிம்மதியா இருக்கலாம்."
('அமுதம்’ டிச. 2014 இதழில் வெளியானது)