Friday, July 31, 2015

பேசித் தீர்த்திட...


அன்புடன் ஒரு நிமிடம் - 85.

கோபம், கோபம் அப்படியொரு கோபத்தில் இருந்தான் வினோத்.
பத்து மணிக்கு அந்த விசேஷம். மேலதிகாரி வீட்டு புது மனை புகு விழா. மணி ஒன்பதரை. இன்னும் யமுனா புறப்படவில்லை.
இப்ப கத்தினால் இன்னும் லேட் ஆகும். அவளை அவசரப் படுத்தி, கூடவே ஓடி, கேட்டதை எடுத்துக் கொடுத்து கிளம்ப வழி செய்தான். ’பஸ்ஸில் ஏறட்டும், அப்புறம் பார், வாங்கு வாங்குன்னு வாங்கறேன் உன்னை!’ கறுவிக் கொண்டான்.
”வா வா, ஓடி வா, சீக்கிரம்!”
பஸ் ஆடி ஆடி வந்தது. கூட்டம்.
அடித்துப் பிடித்து ஏறிக் கொண்டார்கள். எப்படியோ சீட்டும் கிடைத்தது இருவருக்கும்.
உட்கார்ந்த உடனே ஆரம்பித்தான்.
“கொஞ்சமாச்சும் அறிவிருக்கா உனக்கு? ரெண்டு வாரம் முந்தியே சொல்லியிருக்கேன்ல அவரு கையிலதான் என் ப்ரமோஷன் முதற்கொண்டு எல்லாம் இருக்குன்னு? அடியோட மறந்துட்டு இன்னிக்கான்னு கேட்கிறியே காலையில? சீரியல்ல வர்ற சீன் ஒண்ணையாச்சும் மறக்கிறியா?
”முந்தா நாளே போய் கடைகடையா ஏறி இறங்கி அலசி அலசி கிஃப்ட் வாங்கிக் கொண்டுவந்து வெச்சேனே, ரெண்டு கண்ணாலும் பார்த்துக்கிட்டுதானே இருந்தே? அது மூளையில ரெஜிஸ்டர் ஆகாதா? பக்கத்து வீட்டில நாலு பிச்சிப்பூ கூடுதலாப் பூத்தால் ஒரு வாரத்துக்கு பேசற அளவுக்கு ரெஜிஸ்டர் ஆகிறதில்ல?
”சரி நான் வந்து சொன்னப்புறமாவது அரை மணி நேரத்தில புறப்படத் தெரியுதா? டிரஸ்லேர்ந்து ஒண்ணொண்ணா தேடி நீ எடுக்குறதுக்குள்ள விடியுது! முக்கால் மணி நேரம் முன்னாடியே போய் நின்னு கூடமாட ஒத்தாசையா இருக்கணும் நாம, இப்ப ஒண்ணரை மணி லேட்டாப் போய் நிக்கப் போறோம்  திங்கிறதுக்குன்னே போன மாதிரி! போ போய் நல்ல திண்ணுட்டு வருவோம். அதுக்குத்தானே போறோம்? என்னிக்கு நீ திருந்தப் போறியோ அன்னிக்குத்தான் நாம உருப்படப் போறோம்!”

ஒரு வழியாக திட்டுவதை அவன் முடிக்கவும் அவர்கள் இறங்க வேண்டிய ஸ்டாப் வரவும் சரியாக இருந்தது.
கடைசி சீட்டிலிருந்த இவன் பின் வாசல் வழியாக இறங்கினான். முன் சீட்டிலிருந்த அவள் முன்பக்கமாக இறங்கினாள்.
அத்தனை உணர்வையும் வார்த்தைகளாக்கி கொட்டித் தீர்த்ததில் மனம் லேசாகியிருந்தது.
எட்டி சென்று அவள் கையைப் பிடித்துக் கொண்டு முன்னால் நடந்தான்.
”அட, இது நல்ல வழியா இருக்கே?” மனதில் சொல்லிக் கொண்டான் அதையும்.
('அமுதம் ஆகஸ்ட் 2014 இதழில் வெளியானது)
><>< 

Friday, July 24, 2015

நல்லதா நாலு வார்த்தை... 51


’நல்ல சிரிப்பென்பது
இல்லத்தில் கதிரொளி.’
- William Thackeray
('A good laugh is sunshine in the house.')
<>

’இப்போதும் அப்போதுமாய்
தோற்றுக் கொண்டிராவிடில் அது,
நீங்கள் மிகப் புதுமையாய் ஏதும்
செய்துகொண்டிருக்கவில்லை
என்பதன் அறிகுறி.’ 
- Woody Allen
('If you are not failing every now and again,
it's a sign you're not doing anything very innovative.')

<>

'செயல்பாடே புத்திகூர்மையின்
நிஜ அளவுகோல்.'
- Napoleon Hill
('Action is the real measure of intelligence.')
<>

'என் போலிச் செடிகள் மடிந்து போயின
நீரூற்றுவதாய் நான் 
நடிக்காததால்.'
- Mitch Hedberg
('My fake plants died because
I did not pretend to water them.')

<>

'சில சமயம் என் பேத்திகள்
சின்ன சின்ன கண்டுபிடிப்புகளை 
நிகழ்த்தும்போது 
ஏங்குகிறேன் நானுமோர்
சின்னக் குழந்தையாக இல்லையே என்று.’
Dr. Seuss
('Sometimes when I see my grand daughters
make small discoveries of their own,
I wish I were a child.')
<>

’கல்வியின் வேர்கள்
கசப்பானவை
ஆனால் 
கனி இனிப்பானது.’
- Aristotle
('The roots of education are bitter,
but the fruit is sweet.')
<>

’பனிக்காலத்தை 
மனித முகத்திலிருந்து 
புறந்தள்ளும்
பகலவனே சிரிப்பு.’
- Victor Hugo
('Laughter is the sun that
drives winter from the human face.')


<><><>

(படம் - நன்றி: இணையம்)













Sunday, July 19, 2015

அவள் - (கவிதைகள்)

155
இரு விழிகள்தாம்
ஒரு பார்வைதான்
இதயத்தின் ஆழம் வரை
ஊடுருவுகிறதே…

156
படைத்த கையைத்
துடைத்துவிட்டு
அழகு கேட்டது
அப்புறம் யார்?

157
இன்னும் எழுதவில்லை
உன்னிடம் நேரில் சொல்லத்தக்க 
ஓர் கவிதையை.

158
ஒரு பார்வைதான் வீசுகிறாய்
உருவியெடுத்து விடுகிறது
ஒரு வருட நினைவுகளை என்
கண்ணிலிருந்து.

159
விழிகளிலும் தெரிகிறது
உன் நாணம்.

160
இவ்விடம் அவள் மீது
கவிதை எழுதி தரப்படும்:
மனதில் தொங்காத பலகை.

161
எழுதும்போதே
கரைகின்றன வார்த்தைகள்
மனதில் உன்னை
நினைத்து.

><><><

Wednesday, July 15, 2015

உடனுக்குடன்...

அன்புடன் ஒரு நிமிடம் - 84
 இளங்குளிரை அள்ளித் தெளித்த திவலைகளும் அதில் தெரிந்த வானவில்லுமாக அருவியில் குளிக்க அட்டகாசமாகத்தான் இருந்தது.
”எத்தனை நாளாச்சு இப்படி குளிரக் குளிரக் குளித்து! இல்லையா மாமா?”
”உன் டென்ஷன் எல்லாம் இறங்கிடுச்சா கிஷோர்?”
”ரொம்பவே!”
”அதனாலதான் இங்கே அழைச்சிட்டு வந்தேன். எனக்கும் ஒரு சேஞ்ச்.”
கம்பெனியில் ஒரே குடைச்சல் என்று அவரிடம் வந்தான் நேற்று. யாரிடமும் வேலை ஆகவில்லை. என்று குறைப்பட்டுக் கொண்டான். ”டீம் லீடர்!.ஆனா என் வார்த்தைக்கு மதிப்பே இல்லை. சே!”
அவர் பாட்டுக்கு இங்கே அழைத்து வந்துவிட்டார்.
குளித்துவிட்டு அறைக்கு வந்ததும் அவர் தன் பனியன், கைலியைத் துவைக்க பாத்ரூமுக்குள் நுழைந்துவிட்டார்.
அவனுக்கும் தன் துணிகளைத் துவைத்து விடலாமே பேசிக்கொண்டே என்று தோன்றிற்று.
”அட, ரெண்டு பேரும் ஒரே டிசைன் கைலிதான் கொண்டாந்திருக்கோம்.”
”மறந்திட்டியாக்கும்? போன தீபாவளிக்கு ஒரே கடையிலதானே வாங்கினோம்?”
கிட்ட கிட்ட வைத்து அலசும்போதுதான் கவனித்தான். அவனுடையது ரொம்பவே பழசாகக் காட்சியளித்தது. ஒப்பிட்டால் கொஞ்சம் அழுக்காக. அவர் கைலியோ இப்போது பார்த்தாலும் புதிதாக… எப்படி? எப்படி?
இத்தனைக்கும் அவரை விட அவன் கைலி அணியும் நேரம் மிகக் குறைவு.
அனேகமாய் பேண்ட்ஸ்தான். அவரோ வீட்டிலிருக்கிற நேரமெல்லாம் கைலிதான்.
அவரிடமே கேட்டான். ”என்ன மாமா இது, புதுசா அப்படியே இருக்கே, உபயோகிக்கிறதே இல்லையா?”
”நீ எத்தனை நாளைக்கு ஒருமுறை அலசுவே இதை?” என்றார்.
”ரெண்டு அல்லது மூணு நாளைக்கு.”
”அதான் அந்த வித்தியாசம்.  நான் தினமும் இதைத் துவைக்கப் போட்டுடுவேனாக்கும். ஸோ இதில எட்டிப் பார்க்கிற அழுக்கு, இதில் தங்க அவகாசமே இருக்காது. அந்த சமயத்திலேயே துவைக்கிறதால இது எப்பவும் வெள்ளையா புதுசா இருக்கும். அவ்வளவுதான்! சிம்பிள்.”
”அட, இது தெரிஞ்சா நானும் உடனுக்குடன் வாஷ் பண்ணி எடுத்திருப்பேனே? இப்ப இந்த வித்தியாசமே தெரிஞ்சிருக்காதே?”
”ஆமா. இனி அதை செய்தாலும் இதை பழைய கலருக்கு கொண்டு வர முடியாது.  ஆரம்பத்திலிருந்தே பண்ணணுமாக்கும். சரி, இதிலேர்ந்து உனக்கு இன்னொரு விஷயமும்…?”

”ஆமா. புரியுது. நான் டீம் லீடர் ஆன முதல் நாளிலிருந்தே என் டீம் ஆட்களிடம் சரியான கண்ணோட்டத்தோடு நடந்து கொண்டிருந்தால், ஒவ்வொரு நிலையிலும்/ஸ்டேஜிலும் எக்ஸாட் ஆக என்ன ரிசல்ட் வேண்டும்கிறதை தெளிவா சொல்லியிருந்தால், அவர்கள் ஒத்துழைப்பு எனக்கு சரியாகக் கிடைத்திருக்கும்னு நினைக்கிறேன்.” என்றான். 
(’அமுதம்’ ஆகஸ்ட் 2014 இதழில் வெளியானது.)
><><><
(படம் - நன்றி: கூகிள்)

Saturday, July 11, 2015

நல்லதா நாலு வார்த்தை - 50


வெற்றியின் கணம்
மெத்தச் சிறியது
அதற்காகவென வாழ!
அன்றிப் பிறிதில்லை.
-Martina Navratilova
('The moment of victory is much too short
to live for that and nothing else.')
<>

'தோற்பது கஷ்டமானது,
ஆனால் அதைவிட மோசமானது
ஜெயிக்க முயலாமலேயிருப்பது.’
- Theodore Roosvelt
('It is hard to fail, but it is worse
never to have tried to succeed.')
<>

'மாபெரும் விஷயங்களை சாதிக்க 
கடின உழைப்பு மட்டுமன்றி
கனவு காணவும் வேண்டும், 
நன்றாகத் திட்டமிடல் மட்டுமன்றி 
நம்பிக்கையும் வேண்டும்.'
- Anatole France
('To accomplish great things, we must not only act,
but also dream, not only plan, but also believe.')
<>

'மற்ற வாழ்க்கைகளில் 
மாற்றம் ஏற்படுத்தாத வரையில் 
உற்ற வாழ்க்கை 
உயர்ந்ததல்ல.'
- Jackie Robinson
('A life is not important except
in the impact it has on other lives.')
<>

'இருக்குமிடத்தில் தொடங்கு, உன்னிடம்
உள்ளதை உபயோகி, உன்னால்
முடிந்ததை செய்.'
- Arthur Ashe
('Start where you are. Use what you have.
Do what you can.')
<>

பாலைத் தருகிறார் கடவுள்.
பாத்திரத்தைத் தருவதில்லை.'
- Proverb
('God gives the milk but not the pail.')
<>

'ஆரும் அருகில் இல்லாதபோதும்
நீ சிரித்திட்டால்
அது நிஜமாகவே என அர்த்தம்.'
- Andy Rooney
('If you smile when no one is around,
you really mean it.')

><><><

(படம் - நன்றி: இணையம்)

Wednesday, July 8, 2015

அவள் (கவிதைகள்)

148
இதயத்தில் நீ இருக்கும்
இடத்தைக் கண்டுபிடிக்க
ரொம்ப ஒன்றும் சிரமப்படவில்லை
எஞ்சியிருக்கும்
இதயத்தைக் கண்டுபிடிக்கத்தான்
திணறுகிறேன்.
 
149
குளிர்கிறது வெயில்
உன் நினைவுகளுடன்
நடக்கையில்.

150
கழற்றி வை அந்தக்
காமிராவை கண்ணிலிருந்து
படம் பிடித்தது போதும்
என் உள்ளத்தை.

151
முல்லைப் பூவே
பிடித்த பூவாக இருந்தது உன்
முகப்பூ பார்க்கிற வரையில்.

152
வாழ மறந்த கணங்களை
வாழ வைத்தவள்.

153
உன்னை ஒருமுறை பார்க்கவேண்டுமே
என்கிறது என்
டயரி.

154
தினமும் பார்ப்பதுண்டு
அன்றைய ராசிபலன்.
உன்னைச் சந்திக்கிற வரையில்.

><><><

Saturday, July 4, 2015

பின்னால் உதவும்…

அன்புடன் ஒரு நிமிடம் - 83.

ராகவ் அதை எதிர்பார்க்கவில்லை.
அத்தனை பாசமாக அன்னியோன்னியமான சகோதரர்களாச்சே கிஷோரும் மனோஜும்? திடீர்னு என்ன ஆச்சு? அதுவும் அவர் அந்தப்பக்கம் நகர்ந்த ஐந்து நிமிடத்துக்குள்?
கொஞ்ச முன்புதான் கிஷோரும் அவருமாக அவன் தம்பி வீட்டுக்கு வந்திருந்தார்கள்.
வாரம் ஒருமுறையாவது சந்திப்பது தான் என்றாலும் உற்சாகத்துக்கும் அரட்டைக்கும் கொஞ்சமும் குறைவிருக்காது.
அந்த அரட்டை இன்றைக்கு எங்கோ பிசகி..
ஏதோ ஒரு ஃபங்ஷன் பற்றி பேச்சு வந்ததில் இவன் ஏதோ சொல்ல அவன் ஏதோ சொல்ல…
“என்ன ஆச்சு நந்தினி?” இளையவன் மனைவியை இவர் வினவினார்.
“அது சித்தப்பா, நாங்க புது வீடு பால் காய்ச்சினப்போ உள்ளூரில இருக்கிற அவங்க மாமனாரை ஏன் வீட்டில போய் அழைக்கலேன்னு கேட்டாரு. இவரு அதுக்கு, நீ மட்டும் என்ன, உன் மச்சினி கல்யாணத்துக்கு இந்தப்பக்கம் யாருக்குமே பத்திரிகை வெக்கலேன்னு கத்தினாரு. சட்டுனு வார்த்தை தடிச்சு…”
“ஓ பெரிசாயிடுச்சு போலிருக்கே?”
“ஆமா. நீங்கதான் சொல்லி சமாதானப் படுத்தணும்.” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கையிலேயே கூச்சல் உச்ச ஸ்தாயிக்குப் போயிற்று.
இனி ஒண்ணும் செய்ய முடியாது போல இருக்கே?… நந்தினி கையைப் பிசைந்தாள்.
அந்த டேப் ரிகார்டரை எடு என்றார் ராகவ்.
புரியாமல் எடுத்து நீட்டினாள்.
வாங்கிக்கொண்டு அவசரமாக முன்பக்கம் வந்தார். சண்டை உச்சக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருந்தது.
இவர் முன்பாக வைத்து ரிகார்ட் பட்டனை அமிழ்த்தினார். பார்த்து அவர்கள் விழிக்க,
'Go on,' என்பது போல அவர்களைப் பார்த்து சைகை காட்டினார்.
“என்ன மாமா இது?” என்றான் கிஷோர் கத்துவதை ஒரு செகண்ட் நிறுத்தி.
“அதுவா? சும்மா ரிகார்ட் பண்னிக்கறேன். நீங்க கண்டின்யூ பண்ணுங்க.”
“அதான் ஏன்கிறேன்.”
“பின்னால பிரயோஜனப்படும்.”
“பின்னாலயா?”
“ஆமா. ஒரு இருபது முப்பது வருஷம் கழிச்சு நீங்க எல்லாருமா உங்க பசங்களோட பேரப்பிள்ளைகளோட உட்கார்ந்து பேசிட்டிருக்கும்போது அப்ப எப்படியெல்லாம் சேர்ந்து சுத்துவோம், ஒருத்தரை ஒருத்தர் எப்படியெல்லாம் கலாய்ப்போம் அப்படீன்னு ஜாலியா பேசிட்டிருக்கும்போது, அன்னிக்கு எப்படியெல்லாம் அசட்டுத்தனமா சண்டை போட்டுக்குவோம்னு சொல்லி சிரிப்பீங்க இல்லையா, அப்ப இந்த ரிகார்டிங் உதவும்னு தோணிச்சு, அதான் கையிலெடுத்தேன். ம்,ம், நீங்க ப்ரொசீட் பண்ணுங்க.”
அப்புறம் எங்கே ப்ரொசீட் பண்றது? சகோதரர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
”சரி விடுடா அதை. வேறே பேசுவோம்!” என்றான் கிஷோர்.
மனோஜும் சிரித்தபடியே நந்தினி எடுத்து வந்த காபியை அவனுக்கு நீட்டினான்.
இவர் டேப் ரிகார்டரை ஆஃப் செய்தார் ஏமாற்றமின்றி.  
(’அமுதம்’ ஜூலை 2014 இதழில் வெளியானது.)
><><><
(படம் - நன்றி: கூகிள்)