Tuesday, May 12, 2015

அவள் - (கவிதைகள்)


128
வா பேசிக்கொண்டிருக்கலாம்
கொஞ்ச நேரம்..
ஒரு நாலு நாள்!
<>

129.
வெளியே பனி கொட்டுகிறது
வந்து விடு,
என் இதயத்துக்குள்.
<>

130
எத்தனை புரண்டாலும்
வந்து உன்னைப் பார்க்க முடியாமல்
திரும்பி செல்கின்றன
அலைகள்!
<>

131
கண்ணிலிருந்து அதிகம் வருகிறதா
உதட்டிலிருந்தா என்று
கண்டு பிடிக்க முடியவில்லை..
உன் சிரிப்பை!
<>

132
நீ மௌன விரதமிருந்தால்
எனக்கொன்றுமில்லை..
எல்லா சேதியையும்
கண்களே சொல்லிவிடுகின்றனவே?
<>

133
தினம் ஒரு புத்தக வெளியீட்டு விழா
நடக்கிறது மனதில்..
உன்னைப் பற்றிய என்
நினைவுகள்.

>><><><<

Saturday, May 9, 2015

தவிர்க்கிற வசதி...




அன்புடன் ஒரு நிமிடம் - 80.
பத்தரை… பதினொன்று… ஏறிக் கொண்டிருந்தது நேரம்.
கணேசனை இன்னும் காணோம்.
வாசு குறுக்கும் நெடுக்குமாக ஹாலில்…
ஜனனிக்கு பதைபதைப்பு அதிகரித்தது.
வீட்டு வேலைகளில் உதவி செய்கிறவன். ரெண்டு மணி நேரம்தான் இவருக்கு அவகாசம் இருக்கு கம்பெனிக்கு போவதற்கு. அதற்குள் அவன் வந்து இவரிடம் கேட்டு ஆபீஸ் அறையை முழுவதுமாக சரி செய்ய வேண்டும்.
காலம்கார்த்தால வந்து வேலையை ஆரம்பிச்சுருவேங்க, அப்படீன்னானே? ஏதாச்சும் சாப்பிட்டுட்டு வர்றேன்னு அம்பது ரூபாய் பணம் வேறே வாங்கிட்டு இப்படி..  எத்தனை எகிறியிருக்குமோ கோபம் அவருக்கு?
போன மாதம் நடந்த சம்பவம் ஞாபகத்துக்கு…
மேகநாதன் என்று டவுனில் பெரிய காண்ட்ராக்டர். அவரிடம் விட்டிருந்தார் ஒரு வேலையை. காலை ஒன்பது மணிக்கு வந்து வேலை தொடங்குகிறதாய் திட்டம். அவர் ஆட்களுடன் வந்து இறங்க அரை மணி தாமதம் ஆகிவிட்டது. அரை மணிதான். அதற்கே வாசு கன்னாபின்னாவென்று கத்த ஆரம்பித்துவிட்டார். ”என்ன நினைச்சிருக்கீங்க, எனக்கு வேறே வேலைஇல்லையா?” என்று ஆரம்பித்து… அவரை சமாதானப் படுத்துவதற்குள் வந்தவருக்கும் இவளுக்கும் போதும் போதுமென்றாகிவிட்டது.
ஆக, இப்போது வெடிக்கவிருக்கும் பூகம்பத்தை  நன்றாகவே ஊகிக்க முடிந்தது அவளுக்கு.
ரொம்ப நேரம் கழித்து … கணேசன் தலை தெரிந்தது.  வாசலோரமாக குனிந்து நின்று “மன்னிச்சுக்குங்க ஐயா, வந்து…” காரணங்களை சொல்ல ஆரம்பிக்கையில் வேர்த்தது…
”வா, வா, சீக்கிரம் வேலையை ஆரம்பி…” என்ற வாசுவின் குரலில் அவசரம் தெரிந்ததே தவிர ஆத்திரத்தின் சுவடே இல்லை.
அவன் வேலையைத் தொடங்க இவள் அவரிடம் கேட்டாள் தன் சந்தேகத்தை. “…அன்னிக்கு அரை மணிக்கு அந்த கத்தல் கத்தினீங்க அவரிடம்? இத்தனை நாழிக்கப்புறம் வந்த இவனிடம் ஒண்ணுமே காட்டிக்கலையே? ரெண்டுமே தவறுதானே? இதில இவன் அட்வான்ஸா பணம் வேறே வாங்கிக் கொண்டு…”
”வசதிக் குறைவானவர்கள் தவறு செய்வதற்கான சந்தர்ப்பங்கள் அதிகம். அவங்க நிலைமை அப்படி. எந்த நிமிடம் எங்கிருந்து என்ன பிரசினை முளைக்கும்னு அவங்களுக்கே தெரியாது. அதை உடனே சமாளிக்கவும் அவங்களால முடியாது, அந்த வசதியான காண்டிராக்டரை மாதிரி!  அவர் நினைச்சா ஆட்களையாவது முதலில் அனுப்பியிருக்க முடியும். எனக்கு போன் செய்து நிலைமையை விளக்கியிருக்க முடியும். அவரிடம் எனக்கு கோபம் வருவதைத் தவிர்க்க முடியாத அளவுக்கு அதைத் தவிர்ப்பதற்கான வாய்ப்புக்கள் அவருக்கு இருந்தது. இவனுக்கு அந்த வாய்ப்புக்கள் இல்லை. ஏற்கெனவே அதற்காக வருந்தி கூசிப்போய் வந்து நிற்கிறவனை திட்டி இன்னும் நோகடிக்க விரும்பலை.”

ஜனனி புன்னகைத்தாள்.
(’அமுதம்’ ஜூன் 2014 இதழில் வெளியானது)
(படம் - நன்றி: கூகிள்) 

Sunday, May 3, 2015

நல்லதா நாலு வார்த்தை... 46



’முழு மனதோடு செய்யுங்கள் 
உங்கள் வேலையை
வெற்றி அடைவீர்கள்,
போட்டி வெகு சொற்பம்.’
-Elbert Hubbard
(‘Do your work with your whole heart, and
you will succeed – there’s so little competition.’)
<>

'கனவைப் போல ஒன்றில்லை, எதிர் 
காலத்தை உருவாக்கிட.'
- Victor Hugo
(‘There is nothing like a dream to 
create the future.’)
<>

'உற்சாகமே விவேகத்தின் 
சர்வ நிச்சய அறிகுறி.’.
- Michel de Montaigne
(’The most certain sign of 
wisdom is cheerfulness.’)
<>

‘கற்றை நினைவுகள் அத்தனையும் ஈடாகாது
ஒற்றைச் சிறிய நம்பிக்கைக்கு.’
- Charles M Schulz
(‘A whole stack of memories 
never equal one little hope.’)

<>

ஏதும் அறியோம்
என்பதறிவதே 
உண்மையில் ஒரே 
விவேகம்.’
- Socrates
(‘The only true wisdom is in knowing
you know nothing.’)
<>

’எந்நற்செயல்களைக்
கட்டமைத்திடினும் அவை 
நமைக் கட்டமைப்பதில் 
முடிகின்றன.’
- Jim Rohn 
(‘Whatever good things we build
end up building us.’)
<>

'இசை பற்றி ஓர் இசைவான விஷயம்,
அது நம்மை அறையும்போது
நமக்கு வலிப்பதில்லை.'
- Bob Marley
('One good thing about music, when it
hits you, you feel no pain.')
<><><>