அன்புடன் ஒரு நிமிடம் - 79
வாசலில் தலையாடிற்று. எட்டிப் பார்த்தார் சாத்வீகன்.
அன்பரசன்.
சரி, யாரைப் பற்றியோ குறைப்பட்டுக் கொள்ள வந்திருக்கிறார் வழக்கம் போல. அரை மணி நேரம் காதைக் கொடுத்துவிட வேண்டியதுதான் என்று நினைத்தால்…
அவர் ஆரம்பித்தது தன் சொந்த மகனைப் பற்றி.
புலம்பித் தள்ளிவிட்டார். “ஆளே மாறிட்டாங்க. பெண்டாட்டி பேச்சுக்கு ஆடறான். ஒவ்வொரு அடியும் அவளைக் கேட்டுத்தான் எடுத்து வைக்கிறான். மனசுக்கு கஷ்டமா இருக்கு.”
“மனோஜா? கல்யாணம் முடிஞ்சு நாலு வருஷம் இருக்குமா?
“ஆமா. முதலில் அவளுக்கு ட்ரான்ஸ்ஃபர் கிடைக்கலே. ஒரு வருஷம் இவனும் மதுரைக்கு மாற்றல் வாங்கிப் போனான். இப்ப ரெண்டு பேரும் ஊருக்கு வந்தாச்சு. ஆனா ஒரு வருஷத்தில ஆளே அடியோட மாறிட்டான்! சே, எப்படியெல்லாம் வளர்த்த பையன்!”
”தெரியும் தெரியும்.” தலையை பலமாகவே ஆட்டினார்.
“அவனுக்காகவே சாயந்திரம் சீக்கிரம் வீட்டுக்கு வருவேன். கோவில் சினிமா எல்லா இடத்துக்கும் நானே அழைச்சிட்டுப் போவேன்.
”பாடத்தில மட்டும் இல்லை, எல்லா விஷயமும் சொல்லிக் கொடுப்பேன். எங்கே எப்படி நடந்துக்கணும், யார்கிட்ட எப்படிப் பேசணும் எல்லாம் சொல்லிக் கொடுப்பேன்.
”பிளஸ் டூவில் மார்க் குறைஞ்சப்ப மேற்கொண்டு என்ன படிச்சு எப்படி மேலே வர்றதுன்னு மண்டையை உடைச்சு பிளான் போட்டுக் கொடுத்தேன்.
”எந்த வேலைக்கு எப்படி தயார் பண்ணணும்னு சொல்லித் தருவேன். கூடவே உட்கார்ந்து நோட்ஸ் எடுத்துக் கொடுப்பேன்.
”நல்ல பாட வரும் அவனுக்கு. கர்னாடிக் மியூசிக் கத்துக்கவான்னு கேட்டான். வேண்டாம் மெல்லிசை பழகுன்னு சொல்லி அவனை கத்துக்க வெச்சு ஒரு மெல்லிசைப் பாடகன் ஆக்கினது யாரு?
”அவன் வேலை பார்க்கிற கம்பெனியில் சூப்பர்வைசர் போஸ்ட் காலியானபோது தயங்கின அவனை அப்ளை செய்ய வைத்து உற்சாகப் படுத்தி இண்டர்வியூவில் கலந்துக்க வெச்சு… எத்தனை சிரமப்பட்டிருப்பேன்! இல்லேன்னா கிடைச்சிருக்குமா?
”இருபது வயசு வரைக்கும் நீச்சல் தெரியாம இருந்தவனை அது எத்தனை முக்கியம்னு சொல்லி கத்துக்க வெச்சதும் மர்ம நாவலைப் புரட்டிட்டிருந்தவனை இலக்கியப் புத்தகங்கள் பக்கம் திருப்பினதும்…”
எல்லாவற்றையும் கேட்டவர் சொன்னார்
”அப்படிப் பார்த்தால் எல்லாமே சரியாத்தானே நடந்திருக்கு? நீங்க தானே அவனுக்கு எல்லாவற்றையும் சொல்லிக் கொடுத்து செய்யும்படி பழக்கிவிட்டீர்கள்? அதைத்தானே அவன் இப்போதும் செய்கிறான்? இப்போது, அவன்கூடவே எப்போதும் இருந்து சொல்லிக் கொடுக்க இன்னொரு முக்கியமான நபர் வந்திருக்கிறார். அவ்வளவுதான். இதில் என்ன இருக்கிறது ஆச்சரியப்பட? வளர்ந்த பிறகும் சுயமாக தீர்மானிக்க, எது நல்லது என்று பார்த்து செயல்பட அவனுக்கு போதுமான சந்தர்ப்பங்களும் அனுபவங்களும் அப்போது கிடைக்காதது காரணமாக இருக்கலாம்.
”இன்னொரு விதத்தில் பார்த்தால் இதனால் பெரிய பாதிப்பு எதும் ஏற்பட்டு விடப் போவதில்லை. முன்பு உங்கள் ஆலோசனைகளும் வழி நடத்துதலும் கொண்டு, இப்ப நீங்களே சொன்ன மாதிரி, விளைந்தவை அனைத்தும் முன்னேற்றங்களே! அதேபோலவே இப்பவும் நடக்கலாம் இல்லையா? பொறுத்திருந்து பார்த்து அவர்கள் கேட்கும்போது ஆலோசனை சொல்வதோடு நிறுத்திக் கொள்லலாமே?”
(’அமுதம்’ ஜூன் 2014 இதழில் வெளியானது.)
><><><