Sunday, October 26, 2014

அவரவருக்கு...

அன்புடன் ஒரு நிமிடம் - 67.

"நாலஞ்சு  வழிகளைக் கையாண்டு பார்த்துட்டேன் ", ஒவ்வொன்றாகச் சொன்னான் கிஷோர், "ஊஹூம்! அவளைத் திருத்தவே முடியலே மாமா".
"என்ன, திருத்தறதா?"
"ஆமா. சோர்ந்துட்டேன். சாயந்தரம் ஏழு மணியாயிட்டா போதும், உட்கார்ந்துடறா  பொட்டி முன்னால. யானை வந்து தும்பிக்கை வெச்சு நெம்பினாக் கூட அசைக்க முடியாது. மாத்தி மாத்தி பட்டனை அமுத்தி ... ரிமோட் உடைஞ்சது மட்டும் அரை டஜன்!" 
"ம்.. ம்.. "
"அன்னிக்கு பாருங்க  டாக்டர்கிட்டே செக் அப் பண்ணிட்டு ஏழரை மணிக்கு வர்றேன். ஒன்பதரை மணிக்குடாக்டர் என்ன சொன்னார்னு  கேட்கிறான்னா பார்த்துக்குங்க."
"அடடே! Surely, a mind-blowing topic !" பரவசமாகி விட்டார்  ராகவ். "ஆஹா இதைப் பத்தி ஒரு கலந்துரையாடலே நடத்தலாம் போல இருக்கே!" வாட்சைப் பார்த்தார்....."கூப்பிடறேன் ஒவ்வொருத்தரா நம்ம ஆட்களை!"  
"புலம்பறேன் நானு,  உங்களுக்கு  விளையாட்டா இருக்காக்கும்?"
அதற்குள் அவர் யாருக்கோ நம்பரை அழுத்தினார் 
ஸ்பீக்கர் போனில்  "ஹலோ?" என்றது  ரஞ்சித் குரல்.  
"ஒரு ருசிகரமான விவாதம்! இப்ப! இங்கே! வந்துடறியா?"
"ஐயோ மாமா, நானிப்ப ஒரு கெட் டுகெதர்ல  இருக்கேன். பிரண்ட்ஸ் கூட ஒரு புத்தகம் வெளியீடு சம்பந்தமா."
"அவ்வளவுதானா?"
"உங்களுக்கு என்ன, எல்லாருக்குமே அப்படித்தான் தோணும்!  ஆனா எனக்கு இதானே வாழ்க்கையிலே ஆகப் பிடிச்ச விஷயம்? இங்கேதானே அப்பப்ப என்னை நான் ரீசார்ஜ் பண்ணிக்கிறேன்? எப்படி விட்டிட்டு வரமுடியும்? நோ வே."
அடுத்த போன்  அரவிந்துக்கு.
"...தெரியுது,  நீ இப்ப உன் ரசிகர் மன்ற வேலைகள்லே இருக்கே. ஆனா இங்கே ஒரு முக்கியமான டாபிக் அலச வேண்டியிருக்கு."
"...வந்துருவேன். ஆனா விட்டிட்டு வந்தேன்னு வையுங்க. அங்கே  வந்து உம்முன்னு தான் இருப்பேன். பட்டும் படாம ... கவனம்  இல்லாம ... தேவையா? யோசிச்சுக்குங்க."
அடுத்து சரண்...
"எங்கேடா இருக்கே? மணி ஆறரை ஆச்சே. கிளம்பலியா ஆபீசை விட்டு?"
"கிளம்பியாச்சு அப்பவே. கிளப்ல இருக்கேன். ஷட்டில்காக் விளையாடிட்டு இருக்கேன்."
 "வீட்டுக்கு போகலியா? தேடமாட்டாளா கல்பனா?"
"ஆ, அதெப்படி? இதான் எனக்கு மோஸ்ட்  பேவரிட் டைம் அஃப் த  டே ! அதில் கை வைக்க விடுவேனாக்கும் ?"
"சரி இங்கே ஒரு டிபேட்.  நீ ... "என்றவரை இடை மறித்தான்  கிஷோர்.  "வீட்டுக்கே வராதவன் இங்கே எங்கே வரப்போறான்? விடுங்க மாமா!"
அடுத்து ராஜேஷை கூப்பிட்டபோது அவன் படு இண்டரஸ்டாக புதிதாய் வந்த அவன் ரொம்ப நாளாய் தேடிய ஏதோ ஓர்  கர்நாடக சங்கீத சி டி வாங்க ஓடிக்கொண்டு இருந்தான். "நமக்கு அது உயிராச்சே!"
"சே ஒருத்தனையும் பிடிக்க முடியலியே!" இவன் பக்கம் திரும்பினார். கிஷோர் வாசலுக்குத் தாவியிருந்தான்.
"புரியுது மாமா நீங்க புகட்ட வர்ற விஷயம். அவங்க அவங்களுக்கு ஏதோ  ஒரு விஷயம் இருக்கு அப்படியே ஆவலோடு மூழ்கிவிட! அன்றாட வாழ்க்கையை எதிர் கொள்ள அது அவங்களுக்குத் தேவையாவும் இருக்கு.  எனக்கும்தான்  இருக்கு. ஃ பிரண்ட்ஸோட  அரட்டை! அவளுக்கு டி .வி. ரெண்டு மணிநேரம்! நான்தான் பெரிது பண்ணிட்டேன். வர்றேன்!" 
(’அமுதம்’ பெப்ரவரி 2014 இதழில் வெளியானது)

(படம் - நன்றி : கூகிள்)

4 comments:

இராஜராஜேஸ்வரி said...

இதான் எனக்கு மோஸ்ட் பேவரிட் டைம் அஃப் த டே ! அதில் கை வைக்க விடுவேனாக்கும் ?"//

ஒவ்வொருவருக்கும் ஒரு ஃபேவரிட்..!

வெங்கட் நாகராஜ் said...

ஒவ்வொருவருக்கும் ஒரு பொழுது போக்கு.....

சரி தான்.

கோமதி அரசு said...

அன்றாட வேலைகளில் சலிப்பு இல்லாமல் இருக்க ஒவ்வொருவருக்கும் ஒரு பிடித்த்மான் பொழுது போக்கு வேணும் தான்.

அதை மாமா அழகாய் சொன்னார்.

ராமலக்ஷ்மி said...

அவரவருக்கு எத்தனை அவசியமானது அவரவர் விருப்பங்கள் என்பதை அழகாகச் சொல்லி விட்டீர்கள்.

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!