Monday, October 13, 2014

மகன்கள்...




அன்புடன் ஒரு நிமிடம் - 66.

ஹாஸ்டலுக்கு சென்று மகனைப் பார்த்து வந்த கையோடு புறப்பட்டு ஊருக்கு வந்திருந்தார் கௌதம்.
"எப்படி இருக்கிறீங்கப்பா?" என்றபடி வேகமாக உள்ளே நுழைந்தவரை  உற்று நோக்கினார் சாத்வீகன்.
முகம் சிவந்திருந்தது. ஆத்திரம் இரு கண்ணிலும் கொப்பளித்தது.
"வா வா,  உட்கார்!"
"உட்கார நேரமில்லை. நேத்து யுவனைப் பார்த்தேன். இந்தப்பயல்... நான் உங்ககிட்டே கொஞ்சம்  பேசணும்பா..."
"இரு இரு. இப்பதான் உனக்கு போன்  பண்ண நினைச்சேன் நான். ரெண்டு மூணு விஷயம் மனசுக்குள்ளே வெச்சு மாய்ஞ்சுட்டிருக்கேன்... இதோ, மறக்கறதுக்குள்ளே  கேட்டிடறேன்." 
"என்னப்பா நீங்கநேரம் காலம் புரியாம? சரி சரி, சட்டுனு கேளுங்க!" என்றார் நிலை கொள்ளாமல்.
"ஆமா நீ உன் மனசில என்ன நினைச்சுட்டிருக்கே? மாசம் முப்பதாயிரம் போல மிச்சம் பிடிக்கலாம்பான்னு போன வருஷம் ஒரு நாள் சொன்னே. மாசா மாசம் அதை ஒரு சீட்டுப் போடுன்னு  ஆறு மாசமா நானும் உன்னை வற்புறுத்திட்டே இருக்கேன்இன்னிக்கு வரை செய்யலே. நாளைக்கு உன் பொண்ணு கல்யாணம்சொந்த வீடு அது இதுன்னு எத்தனை பொறுப்பு இருக்கு? கொஞ்சமாவது நான் சொல்றதை..."
"இல்லேப்பா  அது வந்து பண்ணணும்தான். அப்படி இப்படின்னு தள்ளிப் போச்சு..."
"சரி அதிருக்கட்டும்.  ஒரு  நாளைக்கு பத்து மணி நேரம் உட்கார்ந்து பார்க்கிற வேலை உன்னோடதுகண்டிப்பா எக்சர்சைஸ் தேவை, உன் வீட்டுக்கு பக்கத்திலேயே எனக்குத் தெரிஞ்ச ஆள் ஒரு ஜிம் தொடங்கி இருக்கான் போய்ப்பாருன்னு எத்தனை தடவை போன் பண்ணிட்டேன்! ஒரு நடை எட்டிப் பார்த்தியா?"
"அது நேரமில்லாம... இந்த வாரம் சேரணும் ..."
"இப்படியே எத்தனை வாரம் சொல்லுவே? சரி அதை விடு. சதா வீட்டிலேயே போரடிச்சு உட்கார்ந்திருக்கிறா யசோதா, அவளை அழைச்சிட்டு  திருப்பதி, புவனேஷ்வர்னு ஒரு ட்ரிப் இந்த வருஷமாவது போயிட்டு வான்னு கத்தறேன் ஒவ்வொரு வாட்டி  நீ வரும்போதும்! உன் காதில கொஞ்சமாவது ஏறுதா? ஊஹூம்!"
"போகணும்பாஅடுத்த வருஷம் கண்டிப்பா..."
"என்னமோ செய். உனக்காகத்தான் சொல்லுறேன். என்ன சொல்லியும் ஒரு பிரயோஜனமில்லே. பெத்த அப்பன்  சொல்றானேன்னு  கொஞ்சமாவது கேட்கிறியா?" அலுத்துக் கொண்டார் சாத்வீகன். "இருக்கட்டும்,  யுவனைப்  பத்தி என்னமோ சொல்ல வந்தியே... அதை இப்ப சொல்லு."
"அது ஒண்ணுமில்லேப்பா." இழுத்தார். வார்த்தைகள் வரவில்லை. ஏறக்குறைய அதே விஷயத்தைத் தானே அவரும் தன்  மகனைப்பற்றி அப்பாவிடம் குறைப் பட்டுக் கொள்ள  வந்திருந்தார் ? அவன் நல்லதுக்காக என்ன  எடுத்துச் சொன்னாலும் சொல்வதையொன்றும் கேட்பதில்லை என்று?  ஆனால்...
இத்தனை வயதான நாமே சிலசமயம் அப்படி நடந்து கொள்ளும்போது இள வயது மகன் அப்படி இருப்பதில் ஆச்சரியம் என்ன இருக்கிறது? பொறுமையாகத்தான் சரி செய்யணும் அவனை! அத்தோடு கொஞ்சம் தன்னையும்
"...நல்லா படிச்சிட்டிருக்கான்னு சொல்ல வந்தேன்பா,"என்றார்  அமைதியாக.
மனதுக்குள் சிரித்துக் கொண்டார் அவர் தந்தை!
(’அமுதம்’ பெப்ருவரி 2014 இதழில் வெளியானது)
><><><
(படம்- நன்றி: கூகிள்)

8 comments:

வெங்கட் நாகராஜ் said...

நல்ல பாடம்.... :)

வை.கோபாலகிருஷ்ணன் said...

நல்ல கதை. யாரும் யார் சொல்வதையும் இப்போதெல்லாம் கேட்பதே இல்லைதான். அமுதத்தில் வெளியான அமுதத்திற்கு பாராட்டுகள் + வாழ்த்துகள்.

கோமதி அரசு said...

சாத்வீகன் அவர்கள் செய்த தந்திரம் பலித்தது.

சாத்வீகன் அவர்கள் அறிவுரைகள் மிக அருமை.

இராஜராஜேஸ்வரி said...

அவன் நல்லதுக்காக என்ன எடுத்துச் சொன்னாலும் சொல்வதையொன்றும் கேட்பதில்லை

வீட்டுக்கு வீடு வாசப்படி....

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை
அருமை

ஸ்வர்ணரேக்கா said...

ARUMAI

ராமலக்ஷ்மி said...

அழகாக உணர்த்தி விட்டார் !

ADHI VENKAT said...

இன்றைய வலைச்சரத்தில் தங்களைப் பற்றிய பகிர்வு

http://blogintamil.blogspot.in/2015/01/blog-post_4.html

முடிந்த போது பார்த்து கருத்திடுங்களேன்.

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!