Sunday, March 31, 2013

முதற் புள்ளி...



அன்புடன் ஒரு நிமிடம் - 29

முதற் புள்ளி

ன்னைத்தான் தேடிட்டிருந்தேன்,” என்று கிஷோர் வந்ததுமே வரவேற்ற மாமா வினாடிகளை வீணடிக்காமல் கேட்டார் மனதில் நின்றதை.
உனக்கும் வெங்கட்டுக்கும் என்ன பிரசினை? கொஞ்ச நாளா அவன் வீட்டுப் பக்கமே போறதில்லையாமே? போனில் கூட வர்றதில்லை போல?”

அப்படீன்னு அவன் சொன்னானா?”

நோ,நோ. லதிகா, அவன் மனைவிதான் சொன்னாள்.

ப்ச்! கிடக்கிறான் விடுங்க மாமா! ஃபிரண்டு ஃபிரண்டுன்னு எவ்வளவுதான் விட்டுக் கொடுக்கிறது?” படிக்க எடுத்த பேப்பரை திரும்ப டீப்பாய்க்கே விசிறியடித்ததில் அவன் உள் காயம் பளிச்சிட்டது.

எல்லா ஃபிரண்டையும் மாதிரியா அவன்? ஷெர்லாக் ஹோம்ஸும் வாட்ஸனுமாக மாதிரி இல்லே வளைய வந்தீங்க?”

சரி, எதுக்கும் ஒரு லிமிட் இருக்கில்லையா?”

அதென்ன, ஐநூற்றி முப்பத்தி ஏழா?”

என்ன கேக்கறீங்க?”

அதான் நீ வெச்சிருக்கிற லிமிட்? அந்த நம்பரைத்தான் என்னன்னு கேட்டேன்.

சிரித்தான்.அப்படியெல்லாம் இல்லை, பொறுத்துக்க முடியாத லெவலுக்குப் போகும்போது வேறே என்ன பண்றது?”

அப்படீங்கறே?, சரி, ஏன் இப்படி நடந்துக்கறேன்னு கேட்கலாம் இல்லியா?”

உதாசீனப் படுத்தறவங்க கிட்டே என்ன கேக்க முடியும்? தன்மானம்னு ஒண்ணு இருக்கில்லே? கழிஞ்ச நாலஞ்சு தடவை அவன் வீட்டுக்குப் போயிருந்தப்ப சரியா முகம் கொடுத்து பேசலை. இங்கே வீட்டு ரிப்பேர் வேலை நடந்துட்டிருக்கு, கண்டுக்கவே இல்லை. முன்னேயெல்லாம் எத்தனை ஒத்தாசையா இருப்பான்? அவன் பையனுக்கு எல்.கே.ஜி. அட்மிஷன் முயற்சி பண்ணினதைப் பத்தி மூச்சு விடலே, கிடைச்ச பிறகுதான் சொன்னான். முன்னேயென்றால் எப்படியாவது ஒரு நல்ல ஸ்கூல்ல வாங்கணும்டான்னு என்கிட்ட தான் ஓடி வருவான். ஒண்ணொன்னா சொல்லிட்டிருக்கவில்லை, சுருக்கமா சொன்னா அவன் இப்ப கொஞ்ச நாளா என்கிட்ட சரியா பழகறது இல்லை. அதான் என்னை டிரிகர் செய்தது. அதான் நானும் ஒதுங்கிக் கொண்டேன்.

அப்படியானால் சரிதான்! மோவாயைத் தடவிக் கொண்டு ஆமோதித்தார். அப்புறம் வெகு நேரம் அதைப்பற்றி வாயே திறக்கவில்லை.

டி.வி யில் சிவாஜி நடித்த பலே பாண்டியா ஓடிக்கொண்டிருந்தது. தொடர்ந்து நகைச்சுவைக் காட்சிகள்...

கடகடவென்று சிரித்து ரசித்தான் கிஷோர்.

சற்று நேரத்தில் அவன் கிளம்ப எழுந்தபோது...

என்ன மாமா ஏதோ யோசனை மாதிரி தெரியுது?”

ஏன் கிஷோர், வெங்கட்டின் சில செயல்கள் உன்னை டிரிகர் செய்தது மாதிரி உன்னோட ஏதேனும் செயல்கள் அவனை தூண்டியிருந்து அதன் விளைவாக அவன் சற்று விட்டேற்றியாய் நடந்து கொண்டிருக்கலாமோன்னு ஒரு கணம் யோசனை ஓடிற்று! என்றவர், “நோ. நோ. இருக்காது, அப்படி ஏதும் இருந்தால் அதைப்பற்றி நீ முதலில் யோசிக்காமலா இருந்திருப்பாய்?” என்றார். 

அவர் எதிர்பார்த்தது வீண் போகவில்லை. அவன் யோசிக்க ஆரம்பித்தான்...
<<>>
('அமுதம்' டிசம்பர் 2012 இதழில் வெளியானது)

(படம்- நன்றி: கூகிள்)

Tuesday, March 26, 2013

நல்லதா நாலு வார்த்தை...



ல்லாம் இழந்தோம்
எனும்போதும் நினை
எதிர்காலம் மிச்சமிருப்பதை! 

_
ராபர்ட் கோடர்ட்.

('Just remember, when you think all is lost, 
the future remains.' – Robert Goddard)

*
ட்டிச் சென்றடைய 
ஓர் இலக்கு 
என்பதே வாழ்க்கையில்
கண்டடையத் தகுந்த 
பேரதிர்ஷ்டம்!

--
ராபர்ட் லூயிஸ் ஸ்டீவென்சன்

(An aim in life is the only fortune worth finding.
-- R. L. Stevenson)

*
னிதன் மட்டுமே 
அழுகிறான் சிரிக்கிறான்
ஏனெனில் 
எல்லாம் எப்படி இருக்கின்றன 
என்பதற்கும்
எல்லாம் எப்படி இருக்கவேண்டும் 
என்பதற்குமான 
வித்தியாசத்தால் பாதிக்கப்படும்
ஏக உயிரினம் அவனே.

--
வில்லியம் ஹெஸ்லிட்

(‘Man is the only animal that laughs and weeps for he is
the only animal that is struck by the difference between
what things are and what they ought to be.’ --William Hazlitt)

*
பாதை உன்னை 
அழைத்துச் செல்லவேண்டாம் 
பாதையற்ற இடத்தில் 
காலை முன் வைத்து 
நடந்து சென்று 
தடத்தை நீ விட்டுச்செல்.

-- எமெர்சன்.

(‘Do not go where the path may lead; go instead where
 there is no path and leave a trial.' -Emerson)

*
னவைப்போல் 
ஒன்றில்லை 
கட்டமைத்திட 
வருங்காலத்தை.

--
விக்டர் ஹியூகோ.

(‘There is nothing like a dream to create the future.’
- Victor Hugo.)

*
டையும் 
அறுவடையை வைத்து
அளவிடாதே 
அன்றைய நாளை!
விதைக்கும்
விதையை வைத்து!

--
ராபர்ட் லூயிஸ் ஸ்டீவென்சன் 

(‘Don’t judge each day by the harvest you reap but by the
seeds that you plant.’ – R. L. Stevenson)

*
னைத்தையும் 
அன்புக்கு 
அளி; 
உன்னிதய 
உத்தரவுக்குப் 
உடன்படு.'

--
எமர்சன்

(‘Give all to love; Obey thy heart.’ –Emerson)

<<<>>>

(படம்: நன்றி: கூகிள்)

Tuesday, March 19, 2013

அவனுக்கு அவனை ஒரு அறிமுகம்...


அன்புடன் ஒரு நிமிடம் - 28

அவனுக்கு அவனை ஒரு அறிமுகம்...

வாசு அலுவலகத்தில் தன் அறையில் மணித்துளிகளை எண்ணி செலவிட்டுக் கொண்டிருந்தார். எட்டிப் பார்த்த ரமேஷ், “மே ஐ?” என்றபடி உள்ளே வந்தான்.

அடுத்த இரு தினம் லீவு வேண்டியிருப்பதை சுருக்கமாகத் தெரிவித்தான். மைத்துனனின் திடீர் எங்கேஜ்மெண்ட்.

கொஞ்சமும் அதை எதிர்பார்க்கவில்லை வாசு என்பதை அவர் முகம் சொல்லிற்று. இன்னும் இரண்டே தினங்களில் அவர்கள் அந்த முக்கியமான சாஃப்ட்வேர் டிசைனை முடித்து கிளையண்டுக்குக் கொடுக்க வேண்டும். ஏற்கெனவே அந்த அவகாசம் பத்தாது என்று டீம் மூணு முணுத்துக் கொண்டிருக்கிறது. கீ பொசிஷனில் இருப்பவன் லீவ் கேட்கிறான்...
 
அதிர்ந்ததைக் காட்டிக் கொள்ளாமல் அவர் கேட்டார், “நாளைக்கா? இப்ப நாம இருக்கிற இந்த கிரக்ஸ் அஃப் த சிச்சுவேஷனில் எப்படி உன்னால் இதைக் கேட்க முடியுது ரமேஷ்?”

தட்ஸ் ஆல்வேஸ் தேர் சார். அதைப் பார்த்தா முடியுமா? வீட்டிலும் இப்படி ரொம்ப முக்கியமான விசேஷங்கள் சில சமயம் திடீர்னு வரத்தானே செய்யும்?”

இருந்தாலும் சில விஷயங்கள் நாமதான் நின்று செய்யணும்னு இல்லாதப்ப, கம்பெனி நிலைமைக்கு முக்கியத்துவம் கொடுக்கணும் இல்லையா?...”

இல்லே சார், ஒரே மைத்துனன் எனக்கு அவன். நான் பிராமிஸ் பண்ணிட்டேன் அவனிடம்..

அவர் தொடர்ந்து பல்வேறு விதமாக அவனிடம் வாதாடி தோல்வியுற்றார். ஆல்ரைட், இஃப் யு இன்ஸிஸ்ட், நான் முடியாதுன்னு சொல்லலே.

சாரி சார்…” என்றபடி எழுந்தான். அப்போதுதான் கவனித்தவன் கேட்டான், “கையிலே என்ன சார் கட்டு?”

அதுவா? நேத்து மாம்பழம் வெட்டும்போது கத்தி பட்டுவிட்டது. லேசான கீறல்தான். ஆனா பாரு அரை மணி நேரமா போராடறேன், ஒரு சின்ன லெட்டர், அதைக்கூட கம்போஸ் பண்ண முடியலே..

அப்படியா நான் அடிச்சுத் தர்றேன், நகர்த்துங்க டேப்லெட்டை இப்படி!

நகர்த்தினார். சொல்லுங்க. என்ன மெய்ல்?”

அடுத்த பிக் ஆஃபர் தான். பெரிய கிளையண்டாக்கும். ரிக்வஸ்ட் லெட்டர் இது,” என்றவர் விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தார். ...மேற்படி முன் வரிசை கம்பெனிகளுக்கெல்லாம் எங்கள் நிறுவனம் சிக்கலானதும் சவால் விடுவதுமான டாஸ்க் ஒவ்வொன்றுக்கும் கம்பீரமான சொல்யூஷன்களை உரிய காலத்தில் கொடுத்துள்ளதை அவர்களின் மேற் குறித்த கடித வரிகளிலிருந்தும் தொடர்ந்த ஒப்பந்தங்களிலிருந்தும் நீங்களே அறிந்து கொள்ளலாம். 
"எங்கள் டீம் பற்றி நான் சொல்ல வேண்டும். எங்களின் டெவலப்பர்களும் சரி டெஸ்டிங் டீமும் சரி காலம் என்ற ஒரு பரிமாணம் இருப்பதையே மறந்து காரியத்தில் ஈடுபடுகிறவர்கள். தங்களின் எல்லா பின்னணிகளையும் துறந்து விடுகிறவர்கள். கிளையண்ட் நீட் என்று வந்து விட்டால் அதை முடித்துவிட்டுத்தான் மறுவேலை என்று இறங்கி நிற்பவர்கள். அவர்களின் அர்ப்பணிப்பு என்ற மூச்சில்தான் எங்கள் கம்பெனி இயங்கி சாதனைகளை அடுக்கி வருகிறது.... ஆகவே உங்கள் பணி எத்தனை பெரியதாக, வித்தியாசமானதாக இருந்தாலும் அது எங்கள் டீம் திறமைக்கு அப்பாற்பட்டதல்ல என்ற உறுதியில் இந்த ஆர்டரை நான் கோருகிறேன்....

அவர் சொல்லி முடித்தார். இவன் டைப் செய்து முடித்துவிட்டு எழுந்தான்.

நல்ல வேளை ரமேஷ், சமயத்தில் உதவினாய். இந்த மெயிலை உடனே அனுப்பியாகணும். ஆல்ரைட். கன்வீ மை விஷெஸ் டு யுர் கசின்.

ஓகே. அதையும் என் வாழ்த்துடன் சேர்த்து மெயில் பண்ணிடறேன் அவனுக்கு!

மெயிலா? என்ன சொல்றே?”

எங்கேஜ்மெண்டுக்கு நான் போகலேன்னு சொல்றேன், என்றான் அவன்.


('அமுதம்' டிசம்பர் 2012 இதழில் வெளியானது)
<<<>>>
(படம், நன்றி: கூகிள்)


Thursday, March 14, 2013

வெற்று மனம்...




பிணக் குவியல்களின் மத்தியில்
நான் வாழ்கிறேன்

அதோ அங்கே பாத் ரூமில் ஒரு
கரப்பான் பூச்சி செத்துக் கிடக்கிறது

என் கட்டிலைச்சுற்றி சில மூட்டைப் பூச்சிகளின்
உதிரம் வடியும் சடலங்கள்

அடித்துப்போட்ட கொசுக்கள் பத்துப் பதினாறு
அவ்வப்போது என் மேஜையில்

எறும்புகளின் வெற்றுடல்களோ
எண்ணிக்கையில் அடங்குவதாயில்லை.

எதுவுமே என்னைச் சலனப் படுத்தவில்லை.

என்றாலும் முந்தாநாள்
தெருவில் யாரோ அன்று
இறந்திருந்த வீட்டைத் தாண்டும்போது
ஏனோ சற்று ஒதுங்கிப் போகிறேன்...

<<<>>>

Monday, March 11, 2013

அந்தக் கணங்கள்...


அன்புடன் ஒரு நிமிடம் - 27


நாலைந்து ஆடியோ பெட்டிகளுக்கு நடுவில் தலை புதைந்து கிடந்த கிஷோர் அதிகப்படியாக ஏதோ அரவம் கேட்க தலை நிமிர்ந்து பார்க்கையில், ராகவ் அவனைக் கடந்து கிச்சனுக்குப் போய் விட்டிருந்தார். உள்ளே அவரும் யாழினியும் பேசிக் கொள்வதுகூட கேட்டது. ஓஹோ, இவன் ஏதோ பிசியாய் இருக்கிறான் என்று அவளிடம் பேச ஆரம்பித்து விட்டார் போல.

யாழினி சமையல் செய்து கொண்டிருந்தாள். அவியல் செய்யப் போறேன் சித்தப்பா. எங்க ஊர் டிஷ் ஆக்கும் அது!

ஓஹோ?” என்றவர், ‘ஆமா இந்த அவியல் எப்படி செய்யறதாக்கும்? சொல்லு, நானும் சேர்ந்துக்கறேனே... என்று அவளருகில் உட்கார்ந்துவிட்டார்.

யாழினி சிரித்தாள். நீங்களா சித்தப்பா?”

நானே தான்! ஆமா அடுப்பைப் பத்த வை முதல்லே!

ஐயோ முதலில் டிஷ்களுக்கான காய் எல்லாம் வெட்டி வெச்சிட்டு அப்புறம் தான் அடுப்பைப் பத்த வைக்கணும். அப்பதான் காஸ் மிச்சப் படுத்தலாம்.

அவ்வளவுதானே? அவியலுக்கு இதிலே என்ன காய் வெட்டணும்? கத்தரிக்காயா, மாங்காயா, வெள்ளரிக்காயா, வாழைக்காயா?”

எல்லாத்தையும்தான் சித்தப்பா!

எல்லாத்தையுமா?” மலைத்தார், “இதிலே இவ்வளவு சமாச்சாரம் இருக்கா?”

எட்டிப் பார்த்தான் கிஷோர். தானும் களத்தில் குதிக்கலாமா? உள்ளிருந்து ஒரு உந்துதல்... என்ன மாமா மாட்டிக் கிட்டீங்களா?”

"அதெல்லாமில்லை, எனக்குப் பிடிக்குமே இதெல்லாம்!" கையில் முருங்கைக்காய்.

சமாளிக்காதீங்க, இப்படிக் கொடுங்க! சட்டென்று அதைக் கையில் வாங்கிக் கொண்டான்.

பேண்ட்ஸ், பேண்ட்ஸ்... என்று அவள் அலற அலற அப்படியே தரையில் உட்கார்ந்து விட்டான். இத்தனை வருஷமா இந்தப் பக்கம் எட்டிப் பார்த்ததே இல்லை இவரு, இப்ப வந்துட்டாராக்கும்! நொடித்தாள்.

ஆளுக்கொன்றாக வெட்ட ஆரம்பிக்க...

முருங்கைக் காயை சரசரவென்று வெட்டி, “இதோ ரெடி,” என்று அவன் நீட்ட...

யாழினிக்கு சிரிப்பு தாங்க முடியவில்லை. ஐய, இப்படியா தோலோட வெட்டறது?”

அந்தக் கணம் ராகவின் அலைபேசி அழைக்க, எடுத்தவர், “..இப்ப வர முடியாதே, முக்கியமான வேலையில் இருக்கிறேனே?” என்றார்.

என்ன மாமா?”

ஃபிரண்ட் வீட்டில... பெண் பார்க்க வர்றாங்களாம், ஒரு நடை நான் வரமுடியுமான்னு...

அதுக்கென்ன போய்வாங்க மாமா,’’ நகர தயங்கிய கால்களை நகர்த்தி அனுப்பி வைத்தான், “நான் பார்த்துக்கறேன் இங்கே! இறங்கிட்டேன் இல்லே கோதாவில்?”

யாழ், அந்த வெண்டைக்காயை எடு!

எதுக்குங்க?”

வெண்டைக்காய் சாம்பார் வெக்கணுமில்ல? வெட்டத்தான்..

ஐயோ, அது மாட்ச் ஆகாது!

புடவை மாதிரி இதிலேயுமா?”

விழித்ததைப் பார்த்து அவளுக்கு சிரிப்பு. வெங்காய சாம்பார் வைக்கலாம்,”

கண்ணீரும் கம்பலையுமாக அவன் வெங்காயத்தை வெட்ட "உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சம்... என்று அவள் பாட...

அரிசியை அவன் களைந்தபோது அளவு ரொம்பவே குறைய, “என்னங்க இது பாதி அரிசியைக் காணோம்?”

அதுவா? தண்ணீரில் களைஞ்சதில...

களைஞ்சிட்டீங்களாக்கும்? அதுவும் சரிதான்! என்றாள், “களையறதுன்னா காணாம போக்கிடறதுன்னு அர்த்தம் எங்க ஊரில...

நடுவே கியாஸ் தீர்ந்து போக அவன் விரைந்தோடி அடுத்த சிலிண்டரை மாற்றியது, பதமாக வெந்த பின்னும் வேகலை, வேகலை என்று அவன் பதறியது என்று கேலியும் கூத்துமாக... கிண்டலும் சீட்டியுமாக... பத்து மணியிலிருந்த முள் எப்படி ஒன்றுக்குத் தாவிற்று என்று தெரியவில்லை.

டுத்த வாரத்தில் ஒரு நாள். மாமாவுடன் அவர் வீட்டில் பேசிக் கொண்டிருந்தான் கிஷோர்.

ஒவ்வொருத்தர் வாழ்விலும் ஆகப் பெரிய சந்தோஷ கணங்கள் என்று ஒரு நேரம் இருக்கும், ஆனால் அது ஆளுக்கு ஆள் எப்படி வித்தியாசப்பட்டிருக்கும் என்று சொல்லிக் கொண்டிருந்தார் ராகவ்.

அப்போது யாழினியின் போன் வர,  இதோ அவளையும் கேட்போம்,” என்று கேட்க, தயங்காமல் உடனே பதில் வந்தது. அன்னிக்கு எனக்கு சமையல் ஒத்தாசைன்னு வந்தாரே அந்த மூணு மணி நேரம்தான்!

இவன் நெகிழ்ந்து போனது அதிகமா மகிழ்ந்து போனது அதிகமா என்று தெரியவில்லை.

ரியாக நாலு வாரம் பொறுத்து, ஒரு நாள் ராகவ் யாழினிக்கு போன் செய்து, “ஆமா, கிஷோர் எப்ப பார்த்தாலும் ஆபீஸ் வேலை, இல்லேன்னா பிரண்ட்ஸ்னு மூழ்கிடறான், குடும்பம்னு ஒண்ணு இருக்கிறதே தெரியலேன்னு போன மாசம் புகார் வாசித்தாயே, அவனைப் பார்த்து பேசணுமே?” என்றார் ஒன்றுமே அறியாதவர் போல.

ஐயோ அவர் அப்படி இல்லே மாமா, இப்பல்லாம் அவருடைய நேரம் அதிகம் செலவாகிறது என்னோடுதான்,” என்றவள் ஒரு நிமிடம் நிறுத்தி, “தாங்க்ஸ் மாமா,” என்றாள். 
<<<>>>
('அமுதம்' டிசம்பர் 2012 இதழில் வெளியானது)