Monday, October 15, 2012

முன்னதாக ஒரு முற்றுப்புள்ளி...



அன்புடன் ஒரு நிமிடம் - 18. 

முன்னதாக ஒரு முற்றுப்புள்ளி...

ப்பவாவது ஒரு வேளை அப்படி வாய்க்கும். ரம்மியமாய் இசை ஒலிக்க தேநீரை உறிஞ்சியபடி கணவனும் மனைவியும் இனிமையாக உரையாடுவது. அப்படிப்பட்ட ஒரு உரையாடல் துளி பிசகி வீண் விவாதமாக வெடித்தால் வெளிப்படும் வேதனை இருக்கிறதே, அப்பப்பா!

அவர்கள் போய்விட்டு வந்த ஒரு கல்யாண வைபோகத்தைப் பற்றித்தான் யமுனாவும் வினோதும் நாலு வினாடிக்கு இரு முறை சிரிப்பைச் சிந்தியபடி இனிமையில் ஆழ்ந்த உரையாடலில் இருந்தனர்...   

கிருதாவைத் தாண்டி கன்னத்துக்கும் சேர்த்து டை அடித்துவிட்டு வந்த அவன் பெரியப்பா ஏன் எல்லோரும் தன் காதோரம் பார்வையைப் பதிக்கிறார்கள் என்று தெரியாமல் விழித்தது, ஆட்டோவில் ஏறும்போது மனைவியும் ஏறிவிட்டாளா என்று கவனிக்காமல் ஒரு கிலோமீட்டர் போல வந்துவிட்டு திரும்ப சென்று அழைத்து வந்த மாமாவின் நண்பர் வழிந்தது.... என்று கொஞ்ச நேரம் இவர்கள் கல்யாண காமெடி கலாட்டாக்களில் சஞ்சரித்தது மின்சாரமின்றி ஏ.சி.யை உருவாக்கிக் கொண்டிருக்கையில்தான் கரடி நுழைந்தது அவன் செல் வழியாக.

மேலதிகாரி. எடுக்காதிருக்கவும் முடியாது. என்ன செய்யப் போகிறான்? உதட்டில் புன்னகை நெளிய பார்த்தாள் யமுனா. அவனா அசர்கிறவன்?

என்ன கேட்டாரோ? அவன் தெளிவாக பேசினான்.
ஓ அது? சார் இப்பதான் அதைப்பத்தி நானே உங்களுக்கு போன் பண்ண நினைச்சேன். ஒரு நிமிஷம்! அதுக்குள்ளே நீங்களே...

சரிதான், ஆபீசுக்குள் நுழைந்துவிட்டானா? இனி அவ்வளவுதான்! மறையத்தொடங்கியது அவள் புன்னகை.

ஆமா சார், அதைப் பத்தி உங்ககிட்டே கொஞ்சம் விலாவாரியா சில விஷயங்கள் சொல்லணும் சார், நேரில வந்து நான் பேசறேன் சார். உங்க டயமை வேஸ்ட் பண்ணாம சாயங்காலம்போல வந்தேன்னா அரைமணி நேரம் போதும் சார்!...ஆமா சார். அரையே அரை மணி. நாட் எ மினிட் மோர் சார்... தாங்க்ஸ் சார்!

அட! என்ன அழகாக பேசி இப்போது இங்கே நிகழும் இந்த உற்சாக நொடிகள் அறுந்து விடாமல் பார்த்துக் கொண்டான்!

கண் சிமிட்டியபடியே தன்னவளோடு தன் பேச்சைத் தொடர்ந்தான். ...அப்புறம் அந்த ஃபெவிகால் பார்ட்டி, அதான் அந்த சில்க் ஷர்ட் சித்தப்பா எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் நகர விடாமல் பேசிக்கொண்டு...
மறுபடியும் அவர்கள் தங்கள் பொன் வேளைக்குள் நுழைந்தார்கள்.

ஆனால் யாரோ ஒரு ஆங்கிலக் கவிஞர் சொன்னது மாதிரி நாம் ஆல் இஸ் வெல்னு ஆனந்தமா இருக்கிறபோது தானே அசம்பாவிதமா ஏதோ ஒண்ணு கதவைத் தட்டும்?
தட்டியது.

ஆனா டியர், என்ன இருந்தாலும் வெல்கம் ட்ரீட் தரேன் வாங்கன்னு நம்மை அழைச்சிட்டு லாஸ்ட் மினிட்ல கான்சல் பண்ணினாரே உங்க மாமா அவருக்கு இத்தனை வயசுக்கு மேல இப்படி ஒரு எண்ணம் வந்திருக்க வேண்டாம்என்ன நினைக்கிறே நீ?” என்று அவன் அவள் மாமா தன் நாற்பத்தி ஆறாம் வயதில் மறுமணம் செய்து கொள்ளவிருப்பதை பற்றி அலச ஆரம்பித்த பொது அவளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

போச்சு அஞ்சாறு மாசத்தில ஒரு நாளா வாய்த்த ஆனந்தப் பேச்சு என்று அவள் மனம் அடித்துக் கொள்ள நாவோ அவசரமாய் கொட்டத் தயாரானது ஆவேச வார்த்தைகளை. 

ஆனால் அந்த கணக் கூறில் அவளுக்கு நினைவு வந்தது அவன் சற்று முன்னால் கையாண்ட உத்தியின் மறு பக்கம். அடித்தது ஒரு ஃப்ளாஷ் மூளையில்!

சொன்னாள். “ஓ அதைப் பத்தி ஒரு விஷயம் உங்ககிட்டே சொல்லணும்னு ரெண்டு நாளா  நினைச்சிருந்தேன், சே, இப்ப பார்த்து மறந்து போச்சே... நினைவு வந்ததும் சொல்றேன், அதைக் கேட்டிட்டு அப்புறம் சொல்லுங்களேன் அவரைப்பத்தி!

வியப்புடன் ஒரு வினாடி விழித்தவன் அடுத்த ஜோக்குக்கு திரும்ப, வேளை பொன்னாகவே மீண்டும் தொடர்ந்தது. வேண்டிய வேளையில் வேண்டாத பேச்சு எழுந்து வீண் பிரசினையில் முடிவதைத் தவிர்க்க, இதைப்பத்தி சொல்ல ஒரு விஷயம் இருக்கு, மறந்து போச்சு, கொஞ்சம் பொறு, ஞாபகப் படுத்திக்கிறேன்னு சொல்லி அப்போதைக்கு ஒரு ஃபுல்ஸ்டாப் வெச்சிட்டா போதும், தம்பதிகளிடையே பிணக்கு வராதே என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டாள் யமுனா.

('அமுதம்' செப்டம்பர் 2012 இதழில் எழுதியது)
<<<>>>

11 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

இனிய தருணங்களை எப்போதும் கணவன்+மனைவி இருவரும் இழக்கவேகூடாது என்று கூறும் அருமையான கதை.

அமுதத்தில் வெளியான அமுதம் என்பதும் கூடுதல் சிறப்பு தான். பாராட்டுக்கள்.

VGK

Yaathoramani.blogspot.com said...

இது நல்ல யோசனையாய் இருக்கே
கடைபிடிக்கக் கூடியதாகவும் இருக்கே
பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி
தொடர வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

tha/ma 1

வெங்கட் நாகராஜ் said...

சிறப்பான வழிதான்....

தொடரட்டும் பகிர்வுகள்.

cheena (சீனா) said...

அன்பின் ஜனா - முடிவு அருமை. விவாதத்தினை ஒத்தி வைக்க அருமையான ஆலோசனை. கடைப்பிடித்தால் பாதி விவாத்ங்கள் மறைந்து விடும். முயலலாமே ! அமுதம் இதழில் பிரசுரமானதற்குப் பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

திண்டுக்கல் தனபாலன் said...

தக்க சமயத்தில் சமயோசித புத்தி...

அமுதத்தில் வெளியானதற்கு வாழ்த்துக்கள்...

நன்றி...

TM 3

ADHI VENKAT said...

அழகான உத்தி. பயன்படுத்தினால் பிரச்சனைகள் வராது தான்....

பாராட்டுகள் சார்.

Rekha raghavan said...

நல்ல யோசனை. இது தம்பதிகளிடையே மேலும் அன்யோன்யத்தை வளர்க்கும்.

இராஜராஜேஸ்வரி said...

இனிய தருணங்களாக சம்யோசிதமாக அருமையான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்

தக்குடு said...

இப்ப இருக்கும் நிலைமைக்கு எல்லாருக்கும் வேண்டிய ஒரு பதிவு தான் :))

மனோ சாமிநாதன் said...

அருமையான கருத்தைச் சொல்லும் சிற‌ப்பான பதிவு!!

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!