Monday, September 19, 2011

வாய்ப்பு


வினாடிகள் பொன்னானவை
அதை புரிந்து கொண்ட
வினாடியை அவனால் மறக்கவியலாது.
கண் முன் நிகழ்ந்தது அது.
லாரி மீது மோதி
எகிறித் தெறித்த பைக்கிலிருந்து
இடம் பெயர்ந்து முகம் பேர்ந்து
அந்த வாலிபன்...
ஓடிச்  சென்று தூக்கி
ஆட்டோவில் ஏற்றி...
உதவிடலாமா...?

தயங்கி நின்ற இரு வினாடிகளில்
தட்டிச் சென்றார் அந்த வாய்ப்பை
ஒரு வயோதிகர்.



Tuesday, September 13, 2011

மோதிரக் கை


''என்ன டைரக்டர் சார், உங்க குருநாதர் டைரக்டர் மாசிலாமணி இப்படி கமென்ட் அடிச்சிருக்கார் உங்க லேட்டஸ்ட் படத்தை?'' ஓடி வந்தான் அசிஸ்டன்ட் டைரக்டர் பழநி.
''என்ன, என்ன சொல்லியிருக்கார் என் மூணாவது படத்தை?'' ஆவல் பொங்கிற்று டைரக்டர் சுகந்தனுக்கு.
''காட்சிகளை  இன்னும் விறுவிறுப்பாய் இப்படி இப்படி அமைத்திருக்க வேண்டும்னு எழுதி ஒரு குட்டு வெச்சிருக்கார் பாருங்க.''
''அப்படியா, சபாஷ்!'' துள்ளிக் குதித்தார் சுகந்தன்.
இவனுக்கு ஒன்றும் புரியவில்லை. ''என்னங்க இது, உங்க முதல் படத்துக்கு கமென்ட் சொல்றப்போ பளிச்சென்று நல்லாயிருக்குன்னு ஒரே வார்த்தையில் சொன்னார். ஆனா நீங்களோ அவ்வளவுதான் சொன்னாரான்னு குறைப்பட்டுக்கிட்டீங்க.''
''எஸ்!''
''ரெண்டாவது படத்துக்கும் அதையே தான் சொன்னார். அப்பவும் நீங்க மூஞ்சியைத் தூக்கி வெச்சிட்டு அவ்வளவுதான் சொன்னாரான்னு கேட்டீங்க.''
''ஞாபகமிருக்கு.''
''இப்ப இந்தப் படத்தை இன்னும் நல்லா எடுத்திருக்கலாம்னு கமென்ட் கொடுத்திருக்கார். இதுக்குப் போய் துள்ளிக் குதிக்கிறீங்களே?''
''ஆமா, ரொம்ப சந்தோஷப்படறேன்.  உடனே போன் போட்டு அவருக்கு சொல்லணும்,'' என்றார் முகம் மலர.
இன்னமும் விளங்காமல் விழித்துக் கொண்டிருந்த பழநிக்கு விளக்கினார், ''மடையா, என் குருநாதர் சொல்லுவார், எந்த நல்ல படமுமே நூறு பெர்சன்ட் சரியா வராது. அதிலும் இம்ப்ரூவ் பண்ண வழியிருக்கும்பாரு. ஸோ அப்படி என் படத்தை  அவர் சொன்னால் நல்லா வந்திருக்குன்னு தானே அர்த்தம்? எந்த சஜெஷனும் கொடுக்கலேன்னா வெத்துப் படம்னு அர்த்தம்.  அதான் எனக்கு இப்ப சந்தோஷமாயிருக்கு, புரியுதா?"