வயதின் சுருக்கங்களுக்குப் பின்னே
வாழ்வின் பெருக்கங்கள்
வாழ்ந்ததற்கு அடையாளமாய்..
தெருவில் எறியப்படுகின்ற
தேய்ந்த எந்திரங்கள்.
படித்து முடித்துவிட்ட
பாடப் புத்தகங்கள்.
கவனித்துக் கொள்ள மட்டுமே நாங்கள்
கவனிக்கப்பட அல்ல.
வீசப்படும் வார்த்தைகளுக்கு வலிக்காமல்
தழுவி எடுத்துக்கொள்ளப்
பழகிவிட்டோம்.
விடைகள் கிடைக்காத உள்ளத்தை
உடையாமல் கொண்டு செல்ல
நடையின் வேகம் குறைந்தோம்.
முதிர்ந்ததும் உதிர்ந்துவிடும்
மந்திரம் தெரியவில்லை.
முடியாதவற்றிலிருந்து ஒதுங்கும்
முடியாதவற்றிலிருந்து ஒதுங்கும்
இங்கிதமும் அறியவில்லை.
சுமந்து எம்மை மறு நாளில்
கொண்டு சேர்க்க முடியாமல்
தள்ளாடும் நாட்கள்...
நிஜ விழுதுகளில் ஊஞ்சலாடியதொரு
காலம்...இன்று
நினைவுகளையே விழுதாய் ஊன்றி
நிற்கிறோம் நாங்கள்.
மனவலியின் அழுத்தத்தில்
உடல்வலி மறக்கிறோம்.
உடல் வலியின் உக்கிரத்தில்
மனமிருப்பதையே மறக்கிறோம்...
(அவள் விகடன் 27-08-2010 இதழில் பிரசுரம்)