Monday, December 8, 2025

அன்பும் சிரிப்பும்...


‘Carpe diem.’ (‘இந்த நாளைக் கைப்பற்றிக் கொள்!’)
அந்தப் பிரபல வாசகம் இவருடையதுதான். கி. மு. காலத்து மாபெரும் ரோமாபுரியின் முன்னணி புலவர்களில் ஒருவர்.
Horace…. இன்று பிறந்தநாள்!
புலவர்களால் கொண்டாடப்பட்ட புலவர். செய்யுளுக்கு இவர் வகுத்த வடிவமும் விதிகளும் பின் வந்தவர்களால் பின்பற்றப்பட்டது.
அப்பாவே ஆயாவாக தன்னை பார்த்துக் கொண்டதில் தன் இளமை வளம் பெற்றது என்கிறார்.
சீசர் கொலை செய்யப்பட, யு டூ புகழ் புரூட்டஸின் ராணுவத்தில் ஆஃபீஸரானார். அடுத்த Philippi யுத்தத்தின் தோல்வியில் எல்லாம் இழந்து ஊரை விட்டுப் போக வேண்டியதாயிற்று. கருவூலத்தில் ஒரு வேலையை தேடிக்கொண்டு மனதில் கருவாகிய பாடல்களை எழுத ஆரம்பித்தது அப்போதுதான்.
அந்தப் போரில் ஜெயித்த அகஸ்டஸ் அளிக்க முன்வந்த அவரது உதவியாளர் பதவியை உதறிவிட்டார் நாசூக்காக. மணம் செய்து கொள்ளாமல் தானுண்டு தன் கவியுண்டு அதன் புகழ் உண்டு பழக நண்பர் உண்டு என்றானார்.
உதிர்த்த முத்துக்கள் ஏராளம். சில இதோ:
‘வளமான சமயங்களில் சோம்பிக் கிடக்கும் திறமைகளை வசமாக வெளிக்கொணர்வது நமக்கு நேரும் கஷ்ட காலம் தான்.’
‘நாளையை நம்பாதே. வாழ்வை முழுமையாக வாழ்ந்துவிடு. இருப்பதை வைத்து எத்தனை முடியுமோ அத்தனை செய்.’
‘தற்போதைய நிலையில் உற்சாகமாக இருக்கும் ஓர் மனம் எதிர்காலத்தின் கேள்விகளுக்கு செவி சாய்க்காமல், கசப்பான நிகழ்வுகளையும் சாந்தப் புன்னகையால் சமாளிக்கும்.’
‘மிகப் பெரிய ஆசீர்வாதம் என்பது திருப்தியான மனம்தான்.’
‘அன்பும் சிரிப்பும் இன்றி ஆனந்தம் இல்லை, அவற்றினிடையே வாழ்.’
‘மனதை ஆட்சி செய் அல்லது மனம் ஆட்சி செய்யும் உன்னை.’
‘புத்தகங்களிலிருந்து மட்டுமே பெறும் அறிவு விவேகம் ஆகாது.’
‘எல்லாக் கோணங்களிலிருந்தும் எதுவும் அழகாயிராது’
‘பாத்திரம் சுத்தமில்லையெனில் விடும் அனைத்தும் புளிக்கும்.’
‘நல்லதொரு பயம் ஓர் அறிவுரையை விட சக்தி வாய்ந்தது.’
‘சிலவேளைகளில் முட்டாள்கள் சொல்வதும் சரியாக இருப்பது வாழ்க்கையில் அறியவேண்டிய மிகப்பெரிய பாடம்.’
‘ஒரு விஷயத்தை தொடங்கிவிட்டால் பாதி முடித்த மாதிரி. தெரிந்து கொள். தொடங்கு.’
‘ஒரு மனிதன் தனக்கு எத்தனை மறுக்கிறானோ அத்தனை அவன் கடவுளிடமிருந்து பெறுகிறான்.’
‘வாசகனை பிடித்துக் கொண்டு விடுங்கள், மேற்கொண்டு இழுத்துச் செல்லாத மந்தமான தொடக்கத்தினால் அவன் நகர்ந்து விடாமல்.’
Last but not least..
'முக்கியமான திட்டங்களுடன் சற்றே முட்டாள் தனத்தையும் கலந்து கொள்ளுங்கள். தேவையான நேரம் அசடாக இருப்பதும் அழகுதான்.’

Sunday, December 7, 2025

எல்லாருக்கும் பிடித்த எல்.ஆர். ...


யாரைப் பாட வைக்கலாம் இந்தப் பாடலுக்கு என்று யோசிக்கும் நேரத்தை ஜீரோவாக்கித் தந்தார், 60,70களில் அனேக பாடல்களுக்கு!
உருவானவுடனே தோன்றி விடும் இசையமைப்பாளருக்கு இது இவருக்கான பாட்டு என்று. அப்படி ஏராளம் பாடல்களை சுவீகாரம் எடுத்துக் கொண்டார் ஒரு பாடகி.
எல்லாருக்கும் பிடித்த அந்தக் குரல் எல்.ஆர். ஈஸ்வரியுடையது.
இன்று பிறந்த நாள்!
ஒரு ஹம்மிங்கிலேயே ஜம்மென்று மனசுக்குள் உட்கார்ந்துவிடுவார். 'பட்டத்து ராணி'யாக ஓங்கி ஒலிக்கும் குரல் அவருடையது. 'சிவந்த மண்'ணில் கேட்டுச் சிவந்த நம் காதுகள்!
“தட்டுத்தடுமாறி நெஞ்சம்…” (சாரதா) பாடல். ‘ஆஹா..’ என்று சீர்காழி அழகாக ஹம் செய்துகொண்டு போவார். ஆனால் ‘அஹஹ்ஹா அஹஹ்ஹ…’ என்று அட்டகாசமாக தொடரும் இவரின் குரல் பாடலை அப்படியே கபளீகரம் செய்து கொள்ளும்.
“வந்தாலென்ன…” என்று ஆரம்பித்து தொடர்ந்து ‘ஓஹோஹஹ ஹோஹோ..’ என்று ஓர் எடுப்பு. அப்புறம் 'ஓஹோ'விலேயே மெல்ல இறங்கி 'ஓஹோ'விலேயே சிணுங்கி... எப்போதும் கேட்டாலும் சிலிர்க்கும் பாடல் அது. ‘நீ’ படத்தில் நீங்கள் கேட்டது.
ஒரு குரல் என்பது என்ன? அதன் தன்மை என்பது என்ன? ஒரு குழைவு என்பதென்ன? சுலபமிமில்லாத திரையுலகில் அது தானும் வந்து காதுகளைக் குளிர வைத்த தென்ன? என்பதெல்லாம் சொல்லும் “நீ என்பதென்ன? நான் என்பதென்ன?..”
அவ்வப்போதுதான் நாயகிக்குப் பாடுவார். ஆனால் அந்த பாடல்கள் தனி சோபையுடன்… “வெண்ணிலா முகம்… குங்குமம் பெறும்…” “சந்திப்போமா... இன்று சந்திப்போமா…” “காதோடு தான் நான் பாடுவேன்..” “நாம் ஒருவரை ஒருவர் சந்திப்போமென..”
ஒரு லட்சம் ரிகார்ட் விற்று ரிகார்ட் படைத்த 'எலந்தப் பயத்'தை மறக்க முடியுமா? என்ன ஒரு வீச்சு! முதலில் தனிப்பாடல் தந்து அறிமுகம் செய்துவைத்தவரும் அதே கே வி மகாதேவன் தான். ஆம், "அவரேதான் இவரு... இவரேதான் அவரு..." ('நல்ல இடத்து சம்பந்தம்')
அம்மாவுடன் கோரஸ் பாட முதன் முதலில் ரிகார்டிங் ஸ்டூடியோ நுழைந்தவரின் அடுத்தடுத்த பாடல்களைக் கேட்டு கோரஸாக 'எல்லாரும்' ஆஹா சொல்ல ‘எல்.ஆரு'ம் தமிழ் பின்னணிப் பாடல் உலகின் தவிர்க்க முடியாத தாரகை ஆனார்.
அந்த ரிக்கார்ட் இருக்கா என்ற கேள்விக்குப் பின்னரே கல்யாண வீட்டு ஸ்பீக்கர் கட்டப்படும். பின்னே? ‘வாராய் என் தோழி..’ இல்லாமலா?
ஹம்மிங் அரசி என்றதும் உடனே நினைவுக்கு வருவது “கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா?” மற்றொரு மாணிக்கமும் உண்டு. ‘ஆரிராரி ராரி ஆரீராரோ…’ என்ற இவர் ஹம்மிங் தான் அந்தப் பாட்டுக்கே ஆதாரம்: ஆம், ‘பணம் படைத்தவனி'ல் “மாணிக்கத் தொட்டில் இங்கிருக்க…” எந்த ஹம்மிங்குமே ‘கம்மி'ங் தான் அதற்கு!
“ஜிஞ்சின்னாக்கடி … ஜிஞ்சின்னாக்கடி..” பாடலை அவர் 'குமரிப்பெண்ணி'ல் ஆர்ப்பாட்டமாகப் பாடும்போதும் சரி அந்தப் பாடலை நினைவு படுத்தி "முத்துக் குளிக்க வாரீகளா..."வில் கனிவாகப் பாடும்போதும் சரி ஒருபோல் ரசிப்போம்.
ஒரே படத்தில் ('அஞ்சல் பெட்டி 520') காபரேயும் பாடி (“ஆதி மனிதன்…”) கதா நாயகிக்கும் (“பத்துப் பதினாறு..”) பாடுவார் என்றால் அதேபோல காமெடி நடிகைக்கும் பாடி (“அல்லிப் பந்தல் கால்களெடுத்து…”) கதாநாயகிக்கும் பாடி கலக்குவார் (“நீ என்பதென்ன..”) ‘வெண்ணிற ஆடை’யில்.
“புத்தி சிகாமணி பெற்ற பிள்ளை..”.(எத்தனை குழைவு!) பாடியவர்தான் “மலரென்ற முகமின்று சிரிக்கட்டும்..” (எத்தனை விரைவு!) பாடினார். என்றால் நம்ப முடிகிறதா?
இங்கே நமக்கொரு ஆஷா பாஸ்லே கிடைத்திருப்பதை கொண்டாடாமல் இருக்க முடியாது, இங்கே “நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்…” என்று இவர் பாடுவதையும் அங்கே ரீமேக் ‘ராம் அவுர் ஷ்யாமி’ல் வரும் ‘Balam Tere Pyar ki…” பாடலில் ஆஷா பாடுவதையும் கேட்கும்போது.
இவரின் ஒய்யார வரிசையில் ஒரே ஒரு பாடலை மட்டுமேதான் கேட்க வேண்டும் என்றால் எதைச் சொல்வீர்கள் என்று கேட்டால் நாம் திணறிப் போகாமல் இருப்பதற்கும் ஒரு பாட்டுப் பாடி இருக்கிறார் விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் ‘கலைக்கோவில்’ படத்தில்:
“வர வேண்டும்.. ஒரு பொழுது..
வராமலிருந்தால்.. சுவை தெரியாது.”
இடையிசையில் தொடங்கும் ட்ரம்பெட்டும் சரணத்தில் தொடரும் இவரும் எங்கே பிரிகிறார்கள் எங்கே இணைகிறார்கள் என்றே தெரியாது. சொல்லத் திகட்டாத இனிமையில் நீந்திச் செல்லும் செல்லக் குரல்…

ரோம் உனக்காக...


‘டிராமாவுக்கு ஷேக்ஸ்பியர் மாதிரி சிற்பக்கலைக்கு இவர்,’ என்றார் ஓர் அறிஞர்.
‘மைக்கேலாஞ்சாலோவின் வாரிசு’ என்றார் ஓர் சரித்திராசிரியர்.
‘ரோம் உனக்காக படைக்கப்பட்டது; நீ ரோமுக்காக படைக்கப் பட்டவன்,’ என்றாராம் போப்.
17 ஆம் நூற்றாண்டின் மாபெரும் சிற்பி.. Lorenzo Bernini.
இன்று பிறந்தநாள்!
சொற்ப வயதிலேயே சிற்பம் செய்தவர்.... ஆம்,, 8 வயதில்.. அப்பாவுக்குத் தப்பாமல் பிறந்தவர், ஆம் அவரும் பிரபல சிற்பி.
கலைகளைப் பொறுத்தவரை ரோம் நகரின் பொற்காலம் அது. நகரின் தலையாய சிற்பியாக நெடுங்காலம் இவர்…
பேசுகிறாற்போன்ற ஆக் ஷன் சிற்பங்கள் இவர் ஸ்பெஷாலிடி..வடிவை வடித்ததோடு அல்லாமல் சதைகளின் செறிவையும் தன் சிற்பங்களில் செதுக்கினார்.
சிறந்த சிற்பி ஆவதற்கு 3 விஷயங்களைச் சொல்கிறார்: சிறுவயதிலேயே அழகை ரசிக்க பழகிட வேண்டும். அயராத உழைப்பு வேண்டும். ஏற்ற அறிவுரைகளைக் கேட்டுக்கொள்ள வேண்டும்.
‘நம்முடைய திறமை கடவுள் கொடுத்தது. மற்றவருக்கு அதைக் கற்றுக் கொடுப்பதுதான் கடவுளுக்கு அதைத் திருப்பி செய்வது.’

Thursday, November 27, 2025

ஆஸ்கார் பெற்ற..


சிறந்த பட ஆஸ்கார் பெற்ற ‘The Hurt Locker’ படத்திற்காக ஆஸ்கார் பெற்ற முதல் பெண் டைரக்டர்.
Kathryn Bigelow.... இன்று பிறந்தநாள்!
பிரமாதமாக வரைவார். ஆரம்பத்தில் பயின்றது பெயிண்டிங். அப்புறம் ஒவ்வொரு ஃபிரேமும் எப்படிச் செதுக்குவது என்று சொல்லியா தர வேண்டும்?
தான் எடுத்த அந்தக் குறும்படத்தை கொலம்பியா யுனிவர்சிட்டிக்கு அனுப்பி வைத்தார் . பார்த்த புரபசரை கவர்ந்தது. Film school இல் படிக்க ஸ்காலர்ஷிப் கிடைத்தது அங்கே.
1989 -இல் இவரை மணந்தவர் பிரபல டைரக்டர் James Cameron. விவாகரத்துக்குப் பிற்பாடு அவர் படத்தினுடனேயே ஆஸ்காருக்கு போட்டியிடும் அனுபவம் நேர்ந்தது. அவருடையது ‘Avatar.’ கிடைத்தது இவருக்கு.
பாராசூட் அணிந்து விமானத்தில் பயணித்தோ, 54*C வெயிலில் காய்ந்தோ.. காட்சிகள் நன்கு அமைய எந்த எல்லைக்கும் செல்பவர்.

சொல்வது… 'ஒரு படத்தை இயக்கியவர் யார் என்பது முக்கியமல்ல, படம் உங்களைப் பாதித்ததா இல்லையா என்பதே முக்கியம்.' 

எழுத்தாளரும் கூட...


யார் இந்த மோனோ போன்ற லிஸா?
Fanny Kemble! ...1800களில் ஷேக்ஸ்பியர் நாடகங்களின் ஜூலியட்! ஓர் எழுத்தாளரும் கூட.
இன்று பிறந்தநாள்!
'இந்த உலகில் என்னவெல்லாம் செய்துமுடிக்க முடியுமோ அதையெல்லாம் செய்ய விரும்புகிறேன்.'
...என்று சொன்னவர் சொன்னவை:
‘குழந்தைகள் கண்களாலும் காதுகளால் ஆனவர்கள். அவர்களுடைய மைக்ரோஸ்கோப் பார்வையில் எத்தனை சிறிய விஷயமும் தப்பமுடியாது.’
‘உண்மையைத் தேடிச் செல்லாதவர்கள் அடிக்கடி அதை கண்டு கொள்கிறார்கள். தேடிச் செல்கிறவர்கள் அடிக்கடி அதை தவற விடுகிறார்கள்.’
‘அது எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இருந்தால் திருமணபந்தம் தான் வாழ்வதற்கு மிகச் சந்தோஷமான ஆதாரம்.’

Sunday, November 23, 2025

அங்கே அவர்...


இங்கே N T ராமராவ் என்றால் அங்கே அவர். ராமனும் கிருஷ்ணனுமாக. 50-களின் மிதாலஜி படங்களில் ஜொலித்தார்.
வாள் சண்டைப் படங்களிலும் கெலித்தார். வரிசையாக வந்த படங்கள் வசூலைக் குவித்தன. ஐம்பதுகளில் வந்த அலிபாபா, அலாவுதீன் படங்களுக்கு நாயகன் இவர்தான்.
Mahipal... இன்று பிறந்த நாள்!
நட்சத்திரமாக்கிய பெருமையில் ஹோமி வாடியாவுக்கும் ஷொராப் மோடிக்கும் சமபங்கு உண்டு.
ஆரம்ப காலத்தில் தான் பாட்டு எழுதிக் கொடுத்த வி.சாந்தாராம் படத்திலேயே (‘Navrang’) பின்னாளில் கதாநாயகனாக நடித்தார் ‘Adha Hai Chandrama..’ என்று பாடியபடி. (பாடிய மகேந்திர கபூருக்கு முதல் படம்)
லதா மங்கேஷ்கர் பாடிய முதல் இந்திப் படம் ‘Aap Ki Sewa Mein’ அதில் அவர் பாடிய “Pa Lagoon Kar Jori…” பாடலை மஹிபால்தான் எழுதியிருக்கிறார்.
லட்சுமிகாந்த் பியாரிலால் இசையமைத்து வெளியான முதல் படம் இவருடைய ‘Parasmani.’ நினைவிருக்கிறதா L P யின் LP ரிகார்டுகளை எகிற வைத்த அந்த பிரபலபாடல்? ‘Woh Jab Yaad Aaye..’ நாயகியாக கீதாஞ்சலி..
1942 இல் நாயகனாக அறிமுகமானவர் 30 வருடங்களுக்கு மேல் ஒரு தனி இடத்தை தக்கவைத்துக் கொண்டார். 1975 இன் மாபெரும் வெற்றிப் படமான 'ஜெய் சந்தோஷி மா' வில் நாரதராகவும் 1979 இல் பிரபல ராஜஸ்ரீ புரடக் ஷனின் ' கோபாலகிருஷ்ணா'வில் விஷ்ணுவாகவும்..

ஒரே ஒரு பாடல்...


அந்தப் படத்தில் அவர் ஒரே ஒரு பாடல்தான் எழுதினார்.. ஆனால் அந்தப் பாடல் இருக்கையில் அமுதமும் தேனும் அவசியமில்லை என்று தோன்றும். ஆம், அதே பாடல்தான்! "அமுதும் தேனும் எதற்கு?" (தை பிறந்தால் வழி பிறக்கும்)
சுரதா... அழியாத பாடலை தந்தவருக்கு இன்று பிறந்தநாள்! அவரை 'உவமைக் கவிஞர்' என்பர் அன்பர்.
பாரதிதாசன் மேலிருந்த பற்றினால் அவர் இயற்பெயரை ஒட்டி சுப்புரத்தின தாசன்... சுருக்கமாக சுரதா.
சில படங்களுக்கு வசனம் எழுதியதில் ஒன்று 'ஜெனோவா.' முக்கியமானது எம்.கே. தியாகராஜ பாகவதர் நடித்த 'அமரகவி'
காதில் வந்து தென்றல் போல் ஒலிக்கும் "கண்ணில் வந்து மின்னல் போல்..." பாடலும் இவருடையதுதான். (நாடோடி மன்னன்) கடைசியாக வெளிவந்த பாடல் "நெருங்கி நெருங்கி ..." ('நேற்று இன்று நாளை')
"ஆடி அடங்கும் வாழ்க்கையடா... ஆறடி நிலமே சொந்தமடா..." என்ற பாடலை விட வேறொன்று வேண்டுமா இவரது இசைத்தமிழ் சொல்ல?
"வகுப்பார் அதுபோல் வாழ்வதில்லை
வந்தவர் யாருமே நிலைத்ததில்லை
தொகுப்பார் சிலரதை சுவைத்ததில்லை
தொடங்குவார் சிலரதை முடிப்பதில்லை!"
என்று முடியும் அந்த பாடல்!

Saturday, November 22, 2025

கலை என்பது...


‘எப்படி நீ இருக்கிறாயோ அதற்காக வெறுக்கப்படுவது,
எப்படி நீ இல்லையோ அதற்காக விரும்பப்படுவதைவிட
எவ்வளவோ மேல்.’
… சொன்னவர் Andre Gide.
பிரஞ்சு எழுத்தாளர். 1947 இன் இலக்கிய நோபலைப் பெற்றவர்.
இன்று பிறந்த நாள்!
சுவை, இன்னும் சொன்னவை...
‘உண்மையைத் தேடுபவர்களை நம்பு. உண்மையைக் கண்டு பிடித்து விட்டேன் என்று சொல்பவர்களை சந்தேகி.’
‘கரையிலிருந்து கண்ணை எடுக்கும் தைரியமுள்ளவனால்தான் புதுப்புது கடல்களைக் கண்டு பிடிக்க முடியும்.’
‘கலை என்பது கலைஞனுக்கும் கடவுளுக்குமான கூட்டு உருவாக்கம். கலைஞன் எத்தனை குறைவாக செய்கிறானோ அத்தனைக்கு நல்லது.’
‘சந்தோஷத்தைக் கதையாகச் சொல்ல என்ன இருக்கிறது? எது அந்த சந்தோஷத்தை உண்டாக்கியது, எது அதை அழித்தது என்பதைத்தான் சொல்ல முடியும்.’
‘நம்மைச் சிரமப் படுத்தி நம் முயற்சியை அதிகம் கோரிய காரியம்தான் நமக்கு மிக முக்கியமான விஷயங்களை கற்றுத் தர முடியும்.’
‘சந்தோஷம் என்பது அபூர்வமானது, மிகச் சிரமமானது, மிகவும் அழகானது என்பதை அறியுங்கள். இந்த முக்கியமான கண்டுபிடிப்பை நீங்கள் நடத்தியதும் சந்தோஷத்தை ஒரு தார்மீகக் கடமையாக தழுவிக் கொள்ள வேண்டும்.’
‘எல்லாம் முன்பே சொல்லப்பட்டு விட்டது; ஆனால் யாருமே கேட்கவில்லை என்பதால் மறுபடி மறுபடி முன்னுக்குப் போய் தொடங்க வேண்டியிருக்கிறது.’
‘மனிதர்களிடையே நாம் வாழ்வது வரை மனிதத்துவம் பேணுவோம்.’
‘ஆகவே’ என்பது கவிஞர்கள் மறக்க வேண்டிய வார்த்தை.’
'உங்களுக்குள் உயிர்த்திருக்கும்
அந்த ஒன்றுக்கு உண்மையாய் இருங்கள்.'

சமந்தாவின் குரலாக...


தியோடர் ஒரு எதிர்கால பிரஜை. தன் தனிமையை போக்க ஒரு ஏ. ஐ. (Artificial Intelligence) பொருத்திய ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை வாங்குகிறான். பழகப் பழக சொக்கும் குரலில் பேசும் சமந்தாவை, அதுதான் அந்த ஓ.எஸ்ஸின் பெயர், நேசிக்கவே தொடங்கி விடுகிறான். ‘Her’ படத்தில் சமந்தாவின் குரலாக படம் முழுவதும் பேசி அசத்தியவர்…
Scarlet Johansson... இன்று பிறந்தநாள்!
கிறங்க வைக்கும் அழகுடன் உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக ஹாலிவுட்டில் வலம் வரும் ஸ்டார்லெட், ஸ்கார்லெட்.
ஹாலிவுட்டின் highest grossing படங்களில் ஒன்றாகிய 'Avengers - Endgame' இல் நடித்தவர்.
ஏழு வயதில் நடிக்க வந்த இவர் ஒரு அட்டகாசமான பாடகி. டிஸ்னியின் 'ஜங்கிள் புக்'கின் “Trust in me..” -இலிருந்து “Set it free..” வரை நிறைய ஹிட்ஸ்! தன் ஃபேவரிட் Frank Sinatra மாதிரி பாடவேண்டும் என்று ஆசை...
பிரபல நடிகையான பின்னும் பிராட்வே நாடகம் ஒன்றில் நடித்தார் ஆசை ஆசையாக. தன் இமேஜ் காணாமல் போய்விடுகிற அளவுக்கு பாத்திரத்தில் ஆழ்ந்து நடித்ததாக பாராட்டு கூடை கூடையாக!
கடந்த காலத்தின் எதிரிகளை வஞ்சம் தீர்க்கும் ‘Black Widow’-வின் நடாஷாவை மறந்திருக்க மாட்டீர்கள்.
பிரபல Christopher Nolan இயக்கிய ‘The Prestige’ படத்தில் இரு பெரும் மேஜிக் நிபுணர்களின் சினேகத்தினூடே அவதியுறுபவராக, சிறிய பாத்திரம்தானெனினும் மனதில் பதிந்த மேஜிக் நடிப்பு!
>><<>><<

Friday, November 21, 2025

ஆழ்கடலுக்கு அடியில்...


ஆழ்கடலுக்கு அடியில ஃபிளாட்டா ஒரு நிலம் இருக்கணும்னுதானே நினைக்கிறீங்க? அப்படித் தான் முன்னால நினைச்சிட்டிருந்தாங்க. அப்போ அந்த பொண்ணு வந்து சொல்லிச்சு, அங்கே மலைகளும் பள்ளத்தாக்குகளும் நிறைஞ்சிருக்குன்னு.
நெம்பக் கஷ்டப்பட்டாங்க நம்பறதுக்கு. அப்புறம் பார்த்தா 40000 மைலுக்கு குன்றுகள் நீண்டு கிடக்குது. பூமி சுற்றளவே சுமாரா 25000 தான்.
இது நடந்தது 1957-லே. 20 வருஷம் கழிச்சு அடுத்த தகவலை முன்வெச்சார். கண்டங்கள் ஒண்ணை விட்டு ஒண்ணு நகருவதை... பரிகசிச்சாங்க, ஆனாலும் அப்புறம் ஒத்துக்கிட்டாங்க.
அந்தப் பொண்ணு Marie Tharp… இன்று பிறந்தநாள்!
கூகிள் ஒரு டூடில் வெளியிட்டிருக்காங்க அவங்களுக்காக 2022 -இல்.
அவரைப் பத்தி நிறைய புத்தகங்கள் வந்திருக்கு குழந்தைங்க படிக்கிறதுக்கு. படிக்கக் கொடுங்க. ஒரு இன்ஸ்பிரேஷனாக இருக்கும்...

Wednesday, November 19, 2025

வாழ்க்கையின் குறிக்கோள்...


'பெருமளவில் தோற்கத் தயாராயிருப்பவர்களே
பெருமளவில் வெற்றி பெற முடியும்.'
சொன்னவர் Robert Kennedy … இன்று பிறந்தநாள்.
சுட்டுக் கொல்லப்பட்ட அமெரிக்க ஜனாதிபதி John F Kennedy யின் சகோதரர்... ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக இவர் வென்று வருகையில் சுடப்பட்டு இறந்தார். ஜனங்களின் பிரியமானவர்...
சொன்னவை அருமை...
‘விட்டுப்போவதே இல்லை எனில் நீ தோற்றுப் போவதே இல்லை.’
‘ஒரு இலட்சியத்துக்காக நீ எழுந்து நிற்கும் ஒவ்வொரு தடவையும் ஒரு சின்ன நம்பிக்கை அலையை எழுப்புகிறாய்.’
‘ஆகச் சிறந்த பங்களிப்பை செய்யும்போதுதான் நீங்கள் ஆகப் பெரும் மகிழ்ச்சியை அடைகிறீர்கள்.’
‘வாழ்க்கையின் குறிக்கோள் என்னவெனில் விஷயங்கள் முன்னேற ஏதேனும் ஒரு விதத்தில் பங்களிப்பது தான்.’
‘எல்லாம் எப்படி நடக்கின்றன என்று பார்த்து ஏன் அப்படி என்று கேட்பார்கள் சிலர், நானோ நடந்திடாத விஷயங்களை கனவு கண்டு ஏன் அது நடக்கவில்லை என்று கேட்கிறேன்.’
‘கண்ணியம்தான் ஒரு மனிதனின் இயற்கையான சுபாவம்.’
‘விமரிசனம் இல்லாத வாழ்க்கை வாழத் தகுந்ததல்ல.’
‘உங்கள் வாழ்க்கை எப்படி அமைய வேண்டும் என்று விரும்பினாலும் அப்படி அது அமைய முடியும்.’

இரண்டு கையாலும் ...


200 நாட்கள்! (1881) மிகக் குறுகிய காலமே அந்தப் பதவியில் இருந்தார்.. சுட்டுக் கொல்லப்பட்ட நான்கு அமெரிக்க ஜனாதிபதிகளில் ஒருவர். தனக்குப் பதவி தரவில்லை என்ற ஆத்திரம் கொலையாளிக்கு. 'கடவுளே! என்ன இது!'தான் இவரது கடைசி வாக்கியம்.
James A Garfield.. இன்று பிறந்தநாள்!
குண்டு பாய்ந்த இடத்தைக் கண்டுபிடிக்க முயன்றபோது உதவிக்கு வந்தார் டெலிபோன் புகழ் அலெக்ஸாண்டர் கிரஹாம்பெல், தான் கண்டுபிடித்திருந்த மெடல் டிடெக்டரைக் கொண்டு. அது பலன் தரவில்லை.
இரண்டு கையாலும் எழுதுவார். இரண்டு மொழிகளில் ஒரே நேரத்தில் கூட அவரால் முடியும்!
'முதலில் நான் என்னை ஒரு மனிதனாக்க வேண்டும்,
அதில் வெற்றி பெற்றால் மற்ற
அனைத்திலும் நான் வெற்றியடைவேன்.'
இந்த மணி வாசகத்துக்குச் சொந்தக்காரர்...
இன்னும் சொன்னவை… ‘கடின வேலை செய்யும் ஆற்றல் ஓர் திறமை. அல்லது திறமைக்கு ஒரு சாத்தியமான மாற்று!’
‘எத்தனையோ தொல்லைகள் நேர்ந்து இருக்கின்றன எனக்கு. ஆனால் மிக மோசமான தொல்லை என்பது ஏற்படவேயில்லை.’
‘ஐடியாக்கள்தாம் உலகை ஆள்கின்றன.’
'விஷயங்கள் தானாக மலராது, யாராவது வந்து அதை மலர்த்தும் வரை.'
'நீங்கள் உட்கார்ந்திருக்கும் இடத்துக்கு நீங்கள் மிகப் பெரியவராக இல்லாவிடில் நீங்கள் அதற்கு மிகச் சிறியவர்.'
'உண்மை உங்களை விடுவிக்கும் ஆனால் அதற்குள் அது உங்களை ஒரு வழி பண்ணிவிடும்.'

மிக அழகிய ...


‘படம் ஃபெயில்யர் என்பது ஜலதோஷம் மாதிரி. ஆஸ்பிரின் எடுத்துக்கொண்டு ஆறு நாட்கள் படுக்கையில் இருந்தும் நீங்கள் சரியாகலாம் அல்லது ஆறு நாட்கள் அதை அலட்சியப்படுத்தி நடமாடியும் சரியாகலாம்.’
சொன்னவர் திரையுலக வரலாற்றிலேயே மிக அழகிய பெண் என்ற பேரை ஹாலிவுட்டில் வாங்கிய Gene Tierney... இன்று பிறந்த நாள்!
நாயகி படம் தொடங்கும் முன் கொலை செய்யப்பட்டு விடுகிறாள். விளம்பரக் கம்பெனி நடத்தும் லாரா. டிடெக்டிவ் மார்க் வந்து துப்பறிந்தால், அவள் பழகிய எல்லாருமே அவளைக் காதலித்து இருக்கிறார்கள். அப்புறம் ஏன் யார் அவளை கொல்ல வேண்டும்? ஏன் துப்பறிய வந்த இவருக்கே அவள் மீது ஒரு காதல் பிறக்கிறது. அவளைக் கனவு கண்டபடியே அவள் அறையில் இவர் தூங்கிவிட சத்தம் கேட்டு விழித்து பார்த்தால் அங்கே லாரா! அப்படியானால் கொலைகாரன் கொன்றது யாரை?
சுவாரசியமாகச் செல்லும் ‘Laura.’வில் இவர்தான் லாரா. 1944 இல் வந்த Film noir Classic!
ஒரு சிறிய கதாபாத்திரத்தில் தன் முதல் நாடகத்தில் தண்ணீர் சுமந்து நடந்தபோது, நான் பார்த்ததிலேயே மிக அழகான தண்ணீர் சுமக்கும் பெண் என்று ஓர் விமரிசகர் எழுதினார்.
‘Close My Heart’, ‘The Razor’s Edge’ இப்படி நிறைய ஹிட் படங்களில் நடித்து 50களைக் கலக்கியவர். ‘Leave Her to Heaven’ படத்துக்கு ஆஸ்கார் நாமினேஷன்.
பிற்காலத்தில் மன நோயால் பாதிக்கப்பட்டவர் மீண்டு வந்து, மீண்டும் ஓர் அத்தியாயத்தை திரையில் எழுதினார்.
சொன்ன இன்னுமிரண்டு...
‘உன்னால் முடியாது என்று சொல்வதைப் போல ஒரு பெண்ணின் காதல் மீதான உறுதியை அதிகரிக்கச் செய்வது எதுவும் கிடையாது.’
‘ஒருவரை ஒருவர் காதலிப்பவர்கள் திடீரென்று நிறுத்தி விடுவதை குழந்தைகளால் புரிந்து கொள்ள முடிவதில்லை.’