Wednesday, February 14, 2024

'நமது பாலா’வாக..


மதுபாலா...
பெரும்பாலான ரசிகர் இதயத்தில் ‘நமது பாலா’வாக ஆட்சி செலுத்தியவர். மதுபாலா எனப் பெயரிட்டவர் பிரபல நடிகை தேவிகா ராணி.
எடுத்த எடுப்பிலேயே ராஜ் கபூருடன் ஜோடி. அப்புறம் திலிப், தேவ்.. எல்லா முன்னணி ஸ்டார்களுடனும்.
"ஆ..யியே............" என்று உதட்டை ஓரமாக வளைத்து அடுத்த "..மெஹருபா!"வை சுண்டியிழுப்பாரே , “Aayiye Mehrban..” (Howrah Bridge) பாடலில்? என்னவொரு ஸ்டைல்! நாயகன் அஷோக் குமாரை விட அதிகம் நயந்தனர் ரசிகர்கள்.
மதுபாலா... இன்று (Feb. 14) பிறந்த நாள்!
அழகு + ஒயில் = மதுபாலா என்பதுதான் அந்த equation. பாலிவுட்டின் மர்லின் மன்றோ என வர்ணிக்கப்பட்டவர். (இருவருமே வாழ்ந்த காலம் குறைவு. வசீகரித்த ரசிகர் கோடி)
"காதல் கொண்டாலே பயமென்ன?" என்று அஸால்டாகப் பாடி அந்த ராட்சச நடிகர் பிருத்விராஜை முகம் இறுக வைக்கிற நுட்பமென்ன? (‘Mughal - e - Azam’)
“Suniye Mister Chalbaaz..” என்று காதல் பொங்கப் பாடி குருதத்தை அலைய விடும் நோக்கு என்ன? ('Mr and Mrs 55')
“Acha ji main haari chalo..”என்று தேவ் ஆனந்தை வம்புக்கிழுக்கும் லாவகமென்ன? ('Kala Pani')
ஹாலிவுட் நட்சத்திரமாயிருப்பார், Frank Capra அளித்த வாய்ப்பை தந்தை மறுத்திராவிட்டால்.
அந்த 'சல்தி கா நாம் காடி'! அதுவரை நாம் சந்திக்காத காமெடி! பெண்கள் முகத்திலேயே முழிக்கக்கூடாது. அண்ணன் அஷோக் குமார் கட்டளை. தம்பி கிஷோர் ராத்திரி தனியாக வொர்க் ஷாப்பில். நைசா பேசி தன் ப்ரேக் டவுன் காரை ரிப்பேர் பண்ணவைத்துவிட்டு காசு தராமல் நழுவி விடுவார் மது. "பாஞ்ச் ரூபையா பாரஹ் அணா.." (5ரூ 12 அணா) என்று கிஷோரை தன் பின்னால் பாட, ஓட, வாட விடும்போது அவர் காட்டும் நளினமும் சிந்தும் அந்தச் சிரிப்பும்! அந்த கிஷோர் குமாரையே மணந்து கொண்டார் 1960 இல்.
நரை விழுமுன் திரை விழுந்தது. 36 வருடமே வாழ்ந்தார், 300 வருடங்களானாலும் மறையாத சித்திரத்தை எழுதிவிட்டு! எல்லார் மனதையும் எங்கோ ஓரிடத்தில் தொட்டு விட்டு!

>><<

No comments:

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!