Monday, February 19, 2024

கண்களே டெலஸ்கோப்...


நம்பளைத் தான் எல்லாம் சுத்திக்கிட்டு இருக்குதுன்னு நாமல்லாம் நினைச்சிட்டிருக்கும்போது, நாமதான் சுத்திட்டு இருக்கிறோம்னு நமக்குச் சொன்ன ஆளுக்கு இன்னிக்கு பிறந்தநாள்!
Nicolaus Copernicus... (1473 - 1543)
ஆம், பூமிதான் தன்னைத்தானேயும் சூரியனையும் சுற்றுவதை சுட்டிக் காட்டினார். அந்த Heliocentric theory யை எழுதி முடிக்க அவர் செலவிட்டது கிட்டத்தட்ட அரை வாழ்நாள்! கொடுத்து விட்டு மறைந்து விட்டார். ஆமாம் அது புத்தகமாக வெளியான வருடம் தான் அவரது கடைசி வருடம். அதற்கு முன்பிருந்த அரிஸ்டாட்டில், தொலமி (Ptolemy) இருவரின் கருத்துக்களும் தடம் புரண்டன.
அப்பப்பா! என்று ஆச்சரியப்பட வைத்தவரை 'வானியலின் அப்பா' என்றதில் ஆச்சரியம் இல்லைதான். முன்னரே சிலர் அதைக் கோடி காட்டியதுண்டு என்பார்கள்.
இவர் சொன்னதில் சில சந்தேகங்களும் கிளம்பாமல் இல்லை. சூரிய மண்டலத்துக்கு மட்டுமல்ல, பிரநாம தான் சுத்திட்டு பஞ்சத்துக்கே மையம் சூரியன் என்று அவர் குறிப்பட்டது ஒன்று.
கலிலியோ, நியூட்டன், கெப்லர் எல்லாம் கண்டிப்பாக இவரைக் கொண்டாடி இருப்பாங்க மனசிலே, அவங்க தொடர்ந்து நடந்து செல்ல பாதை போட்டவர் ஆச்சே!
சந்திரனில் கிடக்கும் பென்சிலைப் பார்க்கிற அளவுக்கு இப்ப நம்ம கிட்ட டெலஸ்கோப் இருக்கு. ஆனால் அவரிடமிருந்த டெலஸ்கோப் அவருடைய இரண்டு கண்கள்தான். ஆமா, நாம் வெறுமே பார்த்த ஆகாயத்தை அவர் வேறு மாதிரி பார்த்தார்.
போலந்தில் வானியலும் ஜோதிடமும் கணிதமும் படித்துவிட்டு இத்தாலிக்கு வந்தார். அங்கே பிரபலமாயிருந்தார் நோவேரா. அவர்தான் வருடா வருடம் வானிலையையும் நாட்டின் நிலையையும் கணித்துச் சொல்ல வேண்டும். அவரிடம் நிறையக் கற்றுக் கொண்டவர், அதிவிரைவில் பிரபலம் ஆனார். சீசரின் ஜூலியன் காலண்டரை வடிவமைக்க இவரிடம் ஆலோசிக்கிற அளவுக்கு.
சமீபத்தில ஒரு தனிமத்துக்கு இவரு பேரை இட்டாங்க. 'Copernicium'.
சொன்னாரு பாருங்க நச்னு ஒண்ணு:
'நமக்கு என்ன தெரியும் என்பது நமக்குத் தெரிந்திருப்பதும், நமக்கு என்ன தெரியாது என்பது நமக்குத் தெரிந்திருப்பதும் தான் உண்மையான அறிவு.'

Sunday, February 18, 2024

16 வயதினிலே...


16 வயதினிலே மனதில் சினிமா ஆர்வத்துடன் ஷூட்டிங் பார்க்க அந்த ஸ்டுடியோவுக்கு நுழைந்தாள் அந்தப் பெண். நடித்துக் கொண்டிருந்த ராஜ்கபூர் கண்ணில் பட்டார். தான் எடுத்துக் கொண்டிருந்த Barsaat படத்துக்கு ரெண்டாவது ஹீரோயினைத் தேடிக் கொண்டிருந்த அவர், ஸ்கிரீன் டெஸ்டுக்கு அழைத்தார். டெஸ்ட் முடித்துவிட்டு சஸ்பென்ஸோடு அமர்ந்திருந்தவள் அங்கே எல்லோருக்கும் ஸ்வீட் வழங்கப்படுவதைப் பார்த்து என்னவென்று விசாரித்தால் நீ பாஸாயிட்டே என்றார்கள். இப்படியாக "ஜீயா பேகரார் ஹை ..." என்ற அந்த சூபர் ஹிட் பாடலைப் பாடிக்கொண்டே நுழைந்தார் படவுலகில். நிம்மி என்று பேர் சூட்டியதும் ராஜ் கபூரே. தன் முந்திய படத்தின் (‘Aag’) நாயகியின் பெயரை.
Nimmi… (1933 - 2020) இன்று பிறந்த நாள்!
நிம்மி! கம்மியின்றி அழகை ஆண்டவன் அள்ளிக் கொடுத்த நிம்மி! இந்தித் திரையுலகின் முதல் அழகுப் பதுமை எனச் சொல்லலாம் இவரை. அப்பாவி கிராமப் பெண் வேடத்துக்கு அபாரமாக பொருந்தும் முகம். Incidentally, ‘குமுதம்' படத்தின் ரீமேக் 'Phooja Ki Phool’ -இல் சௌகார் வேடத்தில் இவரே.
லதா மங்கேஷ்கர் தமிழில் முதல் முதலாக பாடிய பாட்டு நினைவிருக்கிறதா? "நீ எந்தன் கண்ணாளன்.. கரை நோக்கி போகிறாய்..." (அந்த "தையாரே தையர..”) படத்தில் அந்தக் காட்சியில் நிம்மி, என்னவொரு முகபாவம்! படம் 'Uran khatola'. (தமிழில் 'வானரதம்' திலீப் குமார்.) லிங்க் கீழே.
கொஞ்ச காலம் கொஞ்ச படங்கள் என்றாலும் திலீப், தேவ், ராஜ் என்று பிரபல நடிகர்களுடன்.. கே.ஏ.அப்பாஸ், சேதன் ஆனந்த், விஜய் பட் என்று பிரபல டைரக்டர்களுடன்.
இந்தியாவின் முதல் கலர் படத்தில் (‘Aan’) நடிக்க அது ‘The Savage Princess’ என்று அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் ரிலீசானது. மறுத்ததினால் இழந்த படம் ‘Woh Kaun Thi?’(தமிழ் ‘யார் நீ?’)
மது பாலாவுக்கு ஒரு ‘Mughal-e-Azam’, பீனா ராய்க்கு ஒரு ‘Taj Mahal’ என்றால் ஒரு நிம்மிக்கு ஒரு ‘Love and God’. என்ன, எடுத்து முடிக்க இருபத்தி மூணு வருஷம் ஆகிவிட்டது. தன் குட்பை படமாக பிரியமாக அவர் தேர்ந்தெடுத்த படம்! நாயகனாக நடித்த குருதத் இறந்துவிட சஞ்சீவ் குமார் நடித்தார். டைரக்டர் K. Asif மறைந்துவிட மறுபடி கிடப்பில். அவர் மனைவியின் அரும் முயற்சியில் படம் ரிலீஸானதோ, நிம்மி அந்த லைலா மஜ்னு கதையில் லைலாவாக ஜொலித்தாரோ...

>><<

ஒரு புது உலகத்திற்கு...


சின்னப்பெண் லூயிஸுக்கு சுற்றியுள்ள உலகைக் கண்டால் பயம். வானம் கறுப்பா இருக்கே? மரத்துக்குள் என்ன ஒளிந்திருக்குமோ? அந்த வீடு பாழடைந்து போயிருக்கே? ...தனிமை அவளை வாட்டுகிறது. லைப்ரரிக்கு செல்லுகிறாள். அங்கேயுள்ள புத்தகங்கள் அவளை ஒரு புது உலகத்திற்கு அழைத்துச் செல்கிறது. விதவிதமான விஷயங்களைப் படிக்கிறாள். கற்பனை ராஜ்ஜியத்தில் கோலோச்சுகிறாள். இப்பொழுது அவள் ஒரு புது உலகத்தை பார்க்கிறாள். புத்தகங்கள் அவள் பயத்தை அகற்றி விட்டன. காணும் உலகை நேசிக்கிறாள்..
இது பிரபல அமெரிக்க நாவலாசிரியர் Toni Morrison தன் மகனுடன் சேர்ந்து எழுதிய சிறுவர் சித்திரக் கதை. (‘Please Louise')
Toni Morrison… இன்று பிறந்த நாள்!
நோபல், புலிட்ஸர் இரண்டு பரிசும் பெற்றவர் என்றால் இவரைப் பற்றி வேறு சொல்ல வேண்டுமா என்ன?
புலிட்சர் பரிசு பெற்ற 'Beloved'... அந்த இருபத்தைந்து வருடங்களில் எழுதப்பட்ட புதினங்களில் மிகச் சிறந்தது என்று கொண்டாடப்பட்ட புத்தகம் அது. பிற்பாடு திரையிலும் ஒளிர்ந்தபோது பிரபல Oprah Winfrey அதில் நடித்தார்.
மாபெரும் புத்தக பதிப்பகமான Random House இல் எடிட்டராக இருந்ததும் பிரின்ஸ்டன் யுனிவர்சிட்டியில் ஆசிரியராக இருந்ததும் இங்கே ஞாபகப்படுத்தலாம். 2012 இல் அதிபர் பரக் ஒபாமாவிடம் Presidential Medal of Freedom ஐ பெற்றுக்கொண்டார்.
பொதுவாக விமர்சகர்களால் கொண்டாடப்படும் நாவல்கள் விற்பனையில் சறுக்குவது உண்டு, இவருடையது விற்பனையும் படைத்தது.
வாடகை தர முடியாததால் வாழ்ந்திருந்த வீடு தீ வைக்கப்பட்டபோது இவர் வயது இரண்டு. வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ள குடும்பம் தனக்குக் கற்றுக் கொடுத்தது என்று சொல்லும் இவர் சின்ன வயதில் விரும்பிப் படித்தது லியோ டால்ஸ்டாயும் ஜேன் ஆஸ்டினும்.
பிரபல வாசகம் மூன்று இதோ..
‘நீங்கள் படிக்க விரும்பும் ஒரு புத்தகத்தை இதுவரை யாரும் எழுதியிராவிட்டால், அதை நீங்கள் எழுதவேண்டும்.’
‘உங்களால் கற்பனை செய்ய முடியாத ஒன்றை உங்களால் அடைய முடியாது.’
‘அறிவின் சக்தியிலும் அழகின் வீரியத்திலும் நம்பிக்கை உடையவள் நான். ஆகவே என்னுடைய பார்வையில் உங்கள் வாழ்க்கை ஏற்கனவே கலாபூர்வமானது. அதை நீங்கள் கலை ஆக்குவதற்காகக் காத்திருக்கிறது.’
இவர் நாவலில் வரும் வசனம் இரண்டு:
‘காதலிப்பவரை விட காதல் ஒருநாளும் பெரிதல்ல.’
‘நேசிக்கும் எந்த ஒன்றையும் ஒருநாளும் இழக்க மாட்டோம்.’

Saturday, February 17, 2024

அத்தனை உயரத்துக்கு...


‘சமீபத்தில் என்னை கேட்டார்கள், தன்னுடைய ஒரு தவறினால் கம்பெனிக்கு 6 லட்சம் டாலர் நஷ்டம் ஏற்படுத்திய ஊழியரை வேலையை விட்டு அனுப்புவேனா என்று. மாட்டேன் என்றேன் . 6 லட்சம் டாலர் கொடுத்து அவனுக்கு பயிற்சி அளித்து இருக்கிறேன். அந்த அனுபவத்தை இன்னொரு கம்பெனி பெற்றுக்கொள்ள ஏன் விட வேண்டும்?’
சொன்னவர் Thomas J Watson.... இன்று (Feb. 17) பிறந்த நாள்.
ஐ.பி.எம்மை அத்தனை உயரத்துக்கு எடுத்துச் சென்றவர். 1950 களில் உலகின் தலை சிறந்த விற்பனையாளர் என்று பாராட்டுப் பெற்றவர். ‘சிந்தி!’ என்பதே அவர் எங்கும் அடிக்கடி சிந்திய பொன் வார்த்தை.
இன்னும் சொன்னவை:
‘வெற்றி வேண்டுமா? உங்கள் தோல்விகளை இரட்டிப்பாக்குங்கள்!’
‘நம்முடைய நேரத்தையும் அறிவையும் மிகச் சரிவர உபயோகிக்கும் திறமைதான் விவேகம் என்பது.’
‘மனிதர்கள் சிந்திக்க விரும்புவார்களானால் உலகின் அத்தனை பிரச்சினைகளையும் எளிதில் சரிப்படுத்தி விடலாம். சங்கடம் என்னவெனில் சிந்திக்காமல் இருப்பதற்கான எல்லா சாதனங்களையும் நாடி ஓடுகிறான் மனிதன். ஏனெனில் சிந்திப்பது என்பது அத்தனை கடுமையான வேலை.’
‘மிகச் சிறந்ததை அடைந்து காட்ட வேண்டுமா? இன்றைக்கே உங்களால் அந்த இடத்துக்குப் போக முடியும்: இந்தக் கணத்திலிருந்து மிகச்சிறந்ததற்கு குறைவான எந்த வேலையையும் செய்யாதீர்கள்.’
‘வெற்றி அடைந்து விட்டதாக ஒரு பிசினஸ் அல்லது ஒரு மனிதன் முடிவு கட்டும் போதெல்லாம் முன்னேற்றம் நின்றுவிடுகிறது.’
‘மற்றவர்களை வழி நடத்துவதற்கான ஒருவனின் திறமையை அவன் தன்னை எப்படி வழி நடத்துகிறான் என்பதைக் கொண்டு நிரூபிக்க முடியும்.’
‘வெற்றியடைய வேண்டுமானால் உங்கள் இதயத்தை உங்கள் வியாபாரத்திலும் உங்கள் வியாபாரத்தை உங்கள் இதயத்திலும் கொள்ள வேண்டும்.’
‘மிகப் பெரிய மனிதர்கள் மற்றவர்களிடம் இணக்கம் உள்ளவர்களாக, மற்றவர்களை மதிப்பவர்களாக, தாராள குணம் உள்ளவர்களாக இருக்கிறார்கள். சிலரிடம் சில சமயம் மட்டுமல்ல, எவரிடமும் எப்போதும்.’
‘மனிதனின் மிகப்பெரிய சாதனைகள் எல்லாம் உத்திகளையும் உற்சாகத்தையும் கொண்டு விளைவிக்கப்பட்டவையே.’

>><<

Friday, February 16, 2024

மிகப் பிரபல கேள்வி பதில்...


ஐ எஸ் ஜோஹர் என்றதுமே நினைவுக்கு வருவது Filmfare-இல் வந்த அவரது மிகப் பிரபல கேள்வி பதில் (Question Box) பகுதிதான். பாபுராவ் படேல் கேள்வி பதிலுக்குப் பிறகு பாப்புலரான கே.ப. இவருடையதுதான். 'நச்' பதில் மன்னர். இவருக்குப் பின் Filmfare இல் அதை தொடர்ந்தவர் ஷத்ருகன் சின்ஹா!
I. S. Johar. காமெடி நடிகர், இயக்குநர், திரைக்கதாசிரியர், தயாரிப்பாளர்..
இன்று (16 Feb.) பிறந்த நாள்...
'Johny Mera Naam'-இல் வந்து கலக்குவார். தன்னைப் போலவே இருக்கும் தம்பி பண்ணும் குறும்புகளுக்கெல்லாம் தான் பதில் சொல்ல வேண்டியிருக்கேன்னு சலூனுக்குப் போய் மீசையை எடுக்கச் சொல்லுவார்.
'Shagird'-இல் ஜோரான ரோல் ஜோஹருக்கு. காதலிக்கும் ஸாய்ராவை கரெக்ட் பண்ணுவது எப்படின்னு ஜாய் முகர்ஜியிடம் ட்யூஷன் எடுத்துக் கொள்ளும் "Bade Miya Diwane..” பாடலை யார் மறக்க முடியும்? ஸாய்ரா இவரைத் தொட்டதும் இவர் பாடிக் கொண்டிருக்கும் பாடல் ஸ்லோ மோஷனாவது காமெடி!
"Jhoom Barabar Jhoom Sharabi.." என்ற தனிப் பாடலை வாங்கி இவர் தன் '5 Rifles' படத்தில் பயன்படுத்த, பாட்டு சூபர் ஹிட்!
M.A., L.L.B படித்துவிட்டு நடிக்க வந்தவர். ஆங்கிலப் புலமை அதிகம். ஹாலிவுட் படங்களிலும் வந்தார். 'Lawrence of Arabia', 'Death on the Nile'...
மெஹ்மூதுடன் சேர்ந்து காமெடியில் கலக்க ஆரம்பித்தது 'Johar Mehmood in Goa'-வில்.
'Kuch Kuch Hota Hai' தந்த பிரபல இயக்குநர் கரண் ஜோஹர், இவரின் தம்பி மகன்.

>><<

கடைசித் துண்டு....

‘Bringing up Baby'.... டைரக்டர் Howard Hawks -இன் காமெடி கிளாஸிக்... ரிலீஸான நாள் இன்று.
Feb 16, 1938.
Cary Grant -ம் Katharine Hepburn -ம் கலக்கிய ‘வயிறு குலு சிரிப்’ படம்...
தான் பூட்டிக்கொண்டிருக்கும் டினோஸர் எலும்புக்கூட்டைப் பூர்த்தியாக்கத் தேவைப்படும் ஒரே ஒரு எலும்புத் துண்டுக்காக அலைந்து கொண்டிருக்கும் புதைபடிவ ஆய்வாளர் டேவிட் (கேரி க்ராண்ட்). தங்கள் மியூசியத்திற்கு ஃபண்ட் வாங்க அவன் எலிசபெத் என்ற பணக்காரியின் வக்கீலை இம்ப்ரஸ் செய்ய வேண்டும்.
அவரை சந்திக்கப்போன இடத்தில் குறுக்கிட்டுத் தொந்தரவு செய்த சூஸனோடு (கேதரின்) சண்டைகள்.
மனசில் காதல் இருந்தால் அதை இப்படி சண்டை போட்டு வெளிப்படுத்துவார்கள் என்று ஒரு சைக்கியாட்ரிஸ்ட் அவளுக்கு சொல்ல, அவள் அதை காதல் என்று எடுத்துக் கொண்டு விடுகிறாள். தன் அத்தைக்காக அனுப்பி வைக்கப்பட்ட சிறுத்தைக் குட்டி ‘பேபி’யைப் பார்த்துக்க அவன் ஹெல்பைக் கேட்கிறாள்.
வந்தவனை நைசாக அழைத்துக்கொண்டு தன் அத்தையின் பண்ணை வீட்டுக்குப் போகிறாள். அவன் தன்னை விட்டுப் போய் விடாமல் இருக்க, அவன் குளிக்கும்போது டிரஸ்ஸை எடுத்து லாண்டரிக்கு அனுப்பி வைக்கிற அளவுக்கு போய்விடுகிறாள். ஊரிலிருந்து அத்தை, அட அவள்தான் அந்த எலிசபெத் என்ற பணக்காரி! வந்து பார்க்கும்போது இவன் அவளின் கவுனுடன்! என்ன ஒரு இம்பிரஷன்!
தேடியலைந்த
கடைசித் துண்டு டினோசர் எலும்பு கிடைக்கிறது அவனுக்கு. ஆனால் அத்தை வளர்க்கிற நாய் அதை லவட்டிக் கொண்டு போய் எங்கோ புதைத்து விடுகிறது. சிரத்தையுடன் அதை தாஜா பண்ணி, ஒளித்து வைத்த இடம் தேடுவதற்குள் சிறுத்தையுடன் அது எங்கோ ஓடிவிடுகிறது.
காணாமல் போன பேபியைத் தேடி அலையும் ஜோடி... ஊரில் முகாமிட்டிருக்கும் சர்க்கஸ் கம்பெனியின் சிறுத்தை குட்டியை பேபி என்று நினைத்து கூட்டைத் திறந்து விட்டுவிட, ரெண்டு பேரும் ஜெயிலில்.
ஆக அந்த ஒரு நாள் அமர்க்களத்தில் டேவிட்டுக்கு அவள்மேல் காதல் வந்துவிடுகிறது…
தொடர் ஆக் ஷன் காமெடியாக இப்படித் துள்ளிக் குதித்துச் செல்லும் படம். கேரி க்ராண்ட் கிட்டத்தட்ட டி ஆர் ராமச்சந்திரன் மாதிரி அசடு வழிய, கேதரின் பின்னே கேட்கவே வேண்டாம், சாவித்திரி மாதிரி சளைக்காமல் அசர வைப்பார்...

>><<

Wednesday, February 14, 2024

'நமது பாலா’வாக..


மதுபாலா...
பெரும்பாலான ரசிகர் இதயத்தில் ‘நமது பாலா’வாக ஆட்சி செலுத்தியவர். மதுபாலா எனப் பெயரிட்டவர் பிரபல நடிகை தேவிகா ராணி.
எடுத்த எடுப்பிலேயே ராஜ் கபூருடன் ஜோடி. அப்புறம் திலிப், தேவ்.. எல்லா முன்னணி ஸ்டார்களுடனும்.
"ஆ..யியே............" என்று உதட்டை ஓரமாக வளைத்து அடுத்த "..மெஹருபா!"வை சுண்டியிழுப்பாரே , “Aayiye Mehrban..” (Howrah Bridge) பாடலில்? என்னவொரு ஸ்டைல்! நாயகன் அஷோக் குமாரை விட அதிகம் நயந்தனர் ரசிகர்கள்.
மதுபாலா... இன்று (Feb. 14) பிறந்த நாள்!
அழகு + ஒயில் = மதுபாலா என்பதுதான் அந்த equation. பாலிவுட்டின் மர்லின் மன்றோ என வர்ணிக்கப்பட்டவர். (இருவருமே வாழ்ந்த காலம் குறைவு. வசீகரித்த ரசிகர் கோடி)
"காதல் கொண்டாலே பயமென்ன?" என்று அஸால்டாகப் பாடி அந்த ராட்சச நடிகர் பிருத்விராஜை முகம் இறுக வைக்கிற நுட்பமென்ன? (‘Mughal - e - Azam’)
“Suniye Mister Chalbaaz..” என்று காதல் பொங்கப் பாடி குருதத்தை அலைய விடும் நோக்கு என்ன? ('Mr and Mrs 55')
“Acha ji main haari chalo..”என்று தேவ் ஆனந்தை வம்புக்கிழுக்கும் லாவகமென்ன? ('Kala Pani')
ஹாலிவுட் நட்சத்திரமாயிருப்பார், Frank Capra அளித்த வாய்ப்பை தந்தை மறுத்திராவிட்டால்.
அந்த 'சல்தி கா நாம் காடி'! அதுவரை நாம் சந்திக்காத காமெடி! பெண்கள் முகத்திலேயே முழிக்கக்கூடாது. அண்ணன் அஷோக் குமார் கட்டளை. தம்பி கிஷோர் ராத்திரி தனியாக வொர்க் ஷாப்பில். நைசா பேசி தன் ப்ரேக் டவுன் காரை ரிப்பேர் பண்ணவைத்துவிட்டு காசு தராமல் நழுவி விடுவார் மது. "பாஞ்ச் ரூபையா பாரஹ் அணா.." (5ரூ 12 அணா) என்று கிஷோரை தன் பின்னால் பாட, ஓட, வாட விடும்போது அவர் காட்டும் நளினமும் சிந்தும் அந்தச் சிரிப்பும்! அந்த கிஷோர் குமாரையே மணந்து கொண்டார் 1960 இல்.
நரை விழுமுன் திரை விழுந்தது. 36 வருடமே வாழ்ந்தார், 300 வருடங்களானாலும் மறையாத சித்திரத்தை எழுதிவிட்டு! எல்லார் மனதையும் எங்கோ ஓரிடத்தில் தொட்டு விட்டு!

>><<

Monday, February 12, 2024

நடித்ததோடு இயக்கிய...

லேட்டஸ்ட் ‘Charlie’s Angels’ இல் Bosley ஆக வந்த Elizabeth Banks -ஐ நினைவிருக்கலாம். அவர் அந்தப் படத்தின் டைரக்டரும்கூட.
Feb 10. பிறந்த நாள்!
American Conservatory Theatre இல் படித்து பட்டம் வாங்கிய இவர் நடிப்புச் சிறகை முதலில் விரித்தது 1998 -இல் வந்த ‘Surrender Dorothy’ யில் தான் என்றாலும் பேர் வாங்கித் தந்த படம் ஸ்பைடர் மேன் தான். (2002) அப்புறம் ஸ்பீல்பெர்கின் ‘Catch Me If You Can' இல் சிறு வேடம்.
Audrey Hepburn -உடன் ஒப்பிடும் நடிப்பு பிரபலமானதற்கு உதவிற்று. 2012 -இல் மட்டும் ஆறு படங்கள்!

நடித்ததோடு இயக்கிய முதல் படம் 'Pitch Perfect 2.'

>><<

உப்பு தந்தவனை...




சப்புக் கொட்டி ருசித்து சாப்பிடுவோம், அதற்கு காரணமான உப்பு தந்தவனைப் பற்றியோ கண்டுபிடிச்சவனைப் பற்றியோ எப்பவாவது யோசிக்கிறோமா? இப்போ இதை லேப்டாப்பிலேயோ மொபைலிலேயோ படிக்கிறோம். அதை சாத்தியதையாக்க சிப்புகளுக்குள் கப்சிப்பாக அமர்ந்துகொண்டு வேலை செய்யற பில்லியன்கணக்கான டிரான்ஸிஸ்டர்களைப் பற்றியோ அதைக் கண்டுபிடிச்சவர்களைப் பற்றியோ கொஞ்சம்ம் யோசிக்கலாமா?
மூளை சிந்தித்து முடிவெடுக்க எப்படி பல கோடிக்கணக்கான நியூரான்கள் ஒவ்வொண்ணும் பல நூறு பின்னல்கள் போட்டு வேலை செய்யுதோ அதே மாதிரி கம்ப்யூட்டர் தன் முடிவுகளை அள்ளித்தர ஆதாரமானது இந்தச் சில கோடிக் கணக்கான டிரான்சிஸ்டர்கள். தங்களுக்குள் ஒரு தர்க்கக் கதவை அமைத்துக் கொண்டு அதைத் திறக்கவோ மூடவோ செய்து, ஃபைனரியைக் கொண்டு ஃபைன் மெமரி இட்டு, நம்ம சிந்தனையை இமிடேட் செய்யறதனால, நாம் அனுபவிக்கிற எண்ணிலா சௌகரியங்களை எண்ணி பார்த்தால்...!
ஆனால் இப்படி ஒண்ணைக் கண்டு பிடிக்கணும்னு அவங்களும் - அந்த மூணு பேரும் - நினைக்கலே. அவங்க மண்டையை உடைச்சிட்டிருந்ததெல்லாம் பெல் கம்பெனிக்காக ஒரு ஆம்ப்ளிஃபையருக்கான வழியைத் தேடித்தான். கிடைத்ததோ டிரான்சிஸ்டர்! அது சுவிட்ச் ஆகவும் போனஸ் வேலை செய்தது.
அவ்வளவுதான். கம்ப்யூட்டருக்குள் எலெக்ட்ரானிக்ஸ் ஆவி புகுந்தது! இப்ப அது ஆடாத ஆட்டமில்லை.
வில்லியம் ஷாக்லீ, ஜான் பர்டீன் ரெண்டு பேருடன் இணைந்து டிரான்சிஸ்டரை கண்டுபிடித்து பௌதீக நோபலை (1956) வாங்கியவர்...
Walter Brattain… Feb 10. பிறந்தநாள்.

>><<

தாகூரும் நேருவும் பாராட்டிய...


12 வயதில் இவர் எழுதிய 'Maher Muneer' என்ற நாடகத்துக்கு அளப்பரிய பாராட்டு கிடைத்தது...
16 வயதில் லண்டனிலும் கேம்பிரிட்ஜிலும் மேற்படிப்பு தொடர்ந்தார்.
தந்தை நிஜாம் காலேஜ் பிரின்சிபால். தாய் கவிதாயினி.
கோவிந்தராஜுலு நாயுடு என்ற டாக்டரை லண்டனில் காதலித்து மணந்து கொண்டார்.
தாகூரும் நேருவும் பாராட்டிய கவிதைகளை எழுதியவர். Nightingale of India என்று அழைக்கப்பட்டவர்...
'In the Bazaars of Hyderabad' என்பது இவரின் ஒரு புகழ் பெற்ற கவிதை. மற்றொரு பிரபல கவிதைத்தொகுதி ‘The Golden Threshold.’
கோபால கிருஷ்ண கோகலேயைச் சந்தித்தது வாழ்வில் திருப்பு முனை. சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தது அப்போதுதான்.
உப்பு சத்தியாக்கிரகத்திலும் ஒத்துழையாமை இயக்கத்திலும் பங்கு வகித்து.... ஒன்றரை வருடத்துக்கு மேல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்திய தேசிய காங்கிரசின் தலைமையை ஏற்ற முதல் பெண்மணி.
கிழக்கு ஆப்பிரிக்காவிலும் தென்னாப்பிரிக்காவிலும் பயணித்து இந்தியர் நலனுக்காக பாடுபட்டார்.
இந்தியா சுதந்திரம் அடைந்ததும் தற்போதைய உத்திரபிரதேசத்தின் கவர்னராக பணியாற்றியவர்.
இவரது வாழ்க்கை திரைப்படமாக உருவாகிறது.
சரோஜினி நாயுடு... (1879 - 1949) இன்று பிறந்த நாள்!
-------

சிப்களுக்குள் கப்சிப்பாக...

மூளை சிந்தித்து முடிவெடுக்க எப்படி பல கோடிக்கணக்கான நியூரான்கள் பல நூறு பின்னல்களில் வேலை செய்யுதோ, அதே மாதிரி கம்ப்யூட்டர் தன் முடிவுகளை அள்ளித்தர ஆதாரமானது அதன் சிப்களுக்குள் கப்சிப்பாக அமர்ந்துகொண்டு வேலை செய்யற சில கோடிக் கணக்கான டிரான்சிஸ்டர்கள்.
தங்களுக்குள் ஒரு தர்க்கக் கதவை அமைத்துக் கொண்டு அதைத் திறக்கவோ மூடவோ செய்து, ஃபைனரியைக் கொண்டு ஃபைன் மெமரி இட்டு, நம்ம சிந்தனையை இமிடேட் செய்யறதனால, நாம் அனுபவிக்கிற எண்ணிலா சௌகரியங்களை எண்ணிப் பாருங்க!
ஆனால் இப்படி ஒண்ணைக் கண்டு பிடிக்கணும்னு அவங்களும் - அந்த மூணு பேரும் - நினைக்கலே. அவங்க மண்டையை உடைச்சிட்டிருந்ததெல்லாம் பெல் லேபரட்டரீஸ்க்காக ஒரு ஆம்ப்ளிஃபையருக்கான வழியைத் தேடித்தான். அதாவது வேகுவம் ட்யூபுக்கு ஒரு சின்ன சைஸில் அதிகத் திறனுடைய மாற்று.
கிடைத்ததோ டிரான்சிஸ்டர்! அது ஒரு ஸ்விட்ச் ஆகவும் போனஸ் வேலை செய்தது. கம்ப்யூட்டருக்குள் எலெக்ட்ரானிக்ஸ் ஆவி புகுந்தது! இப்ப அது ஆடாத ஆட்டமில்லை.
வால்டர் ப்ரட்டைன், ஜான் பர்டீன் ரெண்டு பேருடன் இணைந்து டிரான்சிஸ்டரை கண்டுபிடித்து பௌதீக நோபலை (1956) வாங்கியவர்...
William Shockley … இன்று பிறந்தநாள்.
‘ஏகப்பட்ட தவறுகள் செய்தும் தோற்றுப் போன அனுமானங்களாலும் உருவானதுதான் டிரான்சிஸ்டர்,’ என்றார் சுமார் 90 பேட்டர்ன்கள் வாங்கியிருக்கும் இவர்.
சிலிகான் சிப்களைத் தயாரிக்க ஆரம்பித்தார். கலிஃபோர்னியாவின் அந்த இடம்தான் பின்னாளில் சிலிகான் வேலி என்றானது.

நேய இதயம்...

இவரைப்போல் ரசிகர்களின் வெறுப்பையும் விருப்பையும் சம்பாதித்தவர் கிடையாது.ஏனெனில் இவரின் திரை வரலாறு இடைவேளை வரை வில்லனாக.. அப்புறம் நல்லவராக. சில சமயம் கதாநாயகனைவிட!

பிரான்... குணசித்திர நடிப்பில் எவரும் கிட்ட வரான். பிறந்த நாள் இன்று!


புகைப்படக் கலை பயில்வதற்காக சிம்லா உயரம் சென்றவர் அங்கே கிடைத்த வாய்ப்பில் நடிகராகி எவரெஸ்ட் ஏறினார். 1960 களில் அனேகமாக யார் ஹீரோ என்றாலும் இவர் தான் வில்லன் என்றிருந்தது. இவரையும் தேவ் ஆனந்தையும் பிரபலமாக்கிய படம் ஒன்றே: 'Ziddi.'(1948)
ஷம்மி கபூரோ ஜாய் முகர்ஜியோ, தேவ் ஆனந்தோ திலீப் குமாரோ யார் ஹீரோவானாலும் வில்லன் இவர்தான் என்றிருந்தது 60 களில்! ஒற்றை பிரபல வில்லனாக கோலோச்சிய காலம்!
ராஜ்குமார் மறுத்துவிட, பிரமாதமா வசனம் பேச வேண்டிய தன் ஹீரோ ரோலுக்காக பிரகாஷ் மெஹ்ரா, தேவ் ஆனந்தையும் தர்மேந்திராவையும் அணுகிக் கொண்டிருந்தபோது, இவரைப் போடுங்க என்று பிரான் சொன்னதால் நமக்குக் கிடைத்தவர் அமிதாப்! படம் ‘Zanjeer’
இவருள்ளிருந்த காமெடி நடிப்புத் திறமையை வெளிக் கொண்டுவந்த படம் 'Victoria No 203.' அசோக் குமாருடன் அடிக்கும் லூட்டி!
'ஹீரோ'க்களுக்கு உதவக்கூடிய 'வில்லனை'ப் பார்த்திருக்கிறீர்களா? 'மேரா நாம் ஜோக்கர்' எடுத்து நொடித்துப்போன ராஜ் கபூர் 'பாபி' எடுக்க நினைத்தபோது, பணம் எல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம் என்று சொல்லிவிட்டு, அற்புதமாக நடித்துக் கொடுத்தாராம். அமிதாப் ஒரு முறை கஷ்டத்தில் இருந்தபோது அவருக்காக,தன் தள்ளாத வயதில் இரண்டு படங்கள் நடித்துக்.. ('Mrityudata', 'Tere Mere Sapne')
என்ன ஓர் நேய இதயம்! குலாம் மொஹம்மதுவுக்கு ('Pakeeja') பெஸ்ட் மியூசிக் டைரக்டர் அவார்ட் தரவில்லையென்று தனக்கான ஃபில்ம் ஃபேர் அவார்டை வாங்க மறுத்தார்.
2003 இல் பத்ம பூஷன்..2013 இல் பால்கே விருது.
மறுபடி பிறந்தால் பிரானாகவே பிறக்க வேண்டும் என்பாராம், அந்தளவு மகிழ்ச்சியாக வாழ்ந்த திருப்தியுடன்.