Wednesday, June 21, 2023

அப்பாவி முகம்.. அழுத்தமான நடிப்பு..


காலியாக நிற்கும் ஜெயன்ட் சைஸ் விளம்பரப் பலகையை பார்த்தவுடன் அதில் நம் பேர் பெருசா ஒளிர்ந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பார்க்கத் தோன்றுமா உங்களுக்கு? அப்படிக் கற்பனை செய்கிறாள் கிளாடிஸ். அரை இஞ்ச் அதிக இடுப்பால் மாடல் வேலை இழந்து நியூ யார்க்கில் வந்து இறங்கியிருந்த அவளுடன் பழகிய பீட்டர் (டாகுமெண்டரி எடுப்பவன்) கொஞ்சம் முந்திதான் அவளிடம் சொல்லி இருந்தான், ‘மனம் இருந்தால் மார்க்கம் உண்டு மட்டுமல்ல, மார்க்கம் ஒன்று தெரிந்தால் அதைப் பிடித்துக்கொண்டு கூட மேலே வந்து விடலாம்!’ என்று.

வாழ்க்கையில் பெரிய ஆளாக நினைத்தவளுக்கு இந்த மான்ஹாட்டன் போர்டு ஒரு மார்க்கமாக தெரிந்தது. கையிலிருந்த கொஞ்சமே காசைக் கொண்டு மூணு மாசத்துக்கு அதை வாடகைக்குப் பிடித்து தன் பெயரை படத்துடன் பெருசா அதில் ஒளிர விடுகிறாள். பார்த்துப் பார்த்து மகிழ்கிறாள். பைத்தியம்பாங்க உன்னை என்று அவளைக் காதலிக்கும் பீட்டர் சொன்னது எடுபடவில்லை.
முக்கியமான விளம்பர இடம் போயிடுச்சே என்று ஓடிவரும் சோப்பு கம்பெனி இவான் அவளிடம் கேட்டுப் பார்க்கிறான். 500 டாலர் அதிகம் கொடுத்தாலும் தர மறுக்கவே ஆறு இடங்களை கொடுக்கிறான் அதற்கு பதிலாக. இப்போது ஆறு இடங்களிலும் அவள் பெயர் சூப்பர் ஹையாக. ('8 கேட்டிருக்கலாமோ?') சிற்றி முழுவதும் அவள் பெயர் பாப்புலராகி விடுகிறது. கடைக்குப் போனால் ஆட்டோகிராப் வாங்குகிற அளவுக்கு. டி.வி.யில் தோன்றும் அளவுக்கு.
அவளையே தங்கள் சோப்புக்கு மாடலாக உபயோகிக்கலாம் என்று கம்பெனிக்கு தோன்ற அவள் தேடிய பெரிய கேரியர் கிடைத்து விடுகிறது. ஆனால் அதற்கு விலையாக இவான் அவளிடம் நெருங்க, கையை தட்டிவிட்டு விலகுகிறாள். வீட்டுக்கு வந்தால் பீட்டரின் குட் பை கடிதம். ஏங்கிய பணமும் புகழும் இப்போது வந்தாலும் மனதில் வெறுமை. அப்பவே பீட்டர் சொன்னானே, ஏன் நீ கூட்டத்தோடு கூட்டமாக சந்தோஷமாக இருப்பதை விட்டுவிட்டு தனியாக செல்ல நினைக்கிறேன்னு? யோசிக்கிறாள். கட் பண்ணினால், ஜூவில் படம் எடுத்துக் கொண்டிருக்கும் பீட்டர், பிளேன் சத்தம் கேட்டு மேலே பார்க்க, ‘கிளாடிஸைக் கூப்பிடு பீட்டர்!’ என்று விமானத்தில் பெரிய எழுத்துக்களில்! ஒன்று சேர்கிறார்கள். காரில் செல்லும்போது எதிர்ப்படும் காலி விளம்பரப்பலகை இப்போது அவளைக் கவரவில்லை.
1954, ஆமாம், 54 இல் வந்த ‘It should Happen to You’ படத்தின் அமர்க்களமான கதை அது. கிளாடிஸாக நடித்தவர் Judy Holliday. இன்று பிறந்த நாள்!
Rotten Tomatoes ரேட்டிங் 100% கிடைத்த படம் அது. பீட்டராக வந்தவர் பிரபல Jack Lemmon. முதல் படம் அவருக்கு. 'My Fair Lady' டைரக்டர் George Cukor இயக்கியது..
‘எங்களை எல்லாம் தூக்கிச் சாப்பிட்டு விட்டார் படத்தில்,’ அப்படின்னு கேத்ரின் ஹெபர்ன் இவரைப் பற்றிச் சொல்லியது உதவ, கொலம்பியாக்காரர்கள் ‘Born Yesterday’ படத்தில் இவரைப்போட, ஆஸ்கார் வாங்கி விட்டுத் தான் ஓய்ந்தார் ஜூடி.
‘Every day’s a Holliday with Judy Holliday...’ என்று ஆரம்பமாகும் இவர் பட ட்ரெய்லர் ஒன்று.
Quote? "திரும்ப திரும்ப அசட்டு அழகியாக வந்து ஆடியன்ஸ் கவனத்தை ஈர்க்க வேண்டுமானால் நீங்கள் ரொம்ப புத்திசாலியாக இருக்க வேண்டும்!"
'காதலிப்பவர்கள் ஏமாற்ற உரிமை எடுத்துக் கொள்கிறார்கள். நண்பர்கள் அப்படி செய்வதில்லை.'
>><<>><<

No comments:

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!