Thursday, May 12, 2022

ஆஸ்கார் நாலு அள்ளியவர்...




நாலைந்து படம் நன்றாக நடித்து அதில் ஒன்றுக்கு ஆஸ்கார் அவார்டும் வாங்கினாலும், எதிர்பார்க்கப்படும் எந்த படோபடோபமும் அந்த நடிகையிடம் இல்லை. இமேஜ் பில்டிங் சுத்தம். நிருபர்களைக் கண்டால் ஓட்டம் (ஒரு முறை விமான விசிறியில் மாட்டிக் கொள்ளப் பார்த்தாராம்) பிராட்வே நாடக மேடைக்கு திரும்பினால் சரியான வரவேற்பு இல்லை. திரும்ப ஹாலிவுட்டுக்கு போனால் கிடைத்த படங்கள் ஓடவில்லை. ‘பாக்ஸ் ஆஃபீஸ் பாய்சன்’ என்றனர் வழக்கம்போல.

மனம் தளரவில்லை. மறுபடியும் மேடைக்கு வந்தார். நடித்த ‘The Philadelphia Story’ சூப்பர் ஹிட். அதன் ரைட்ஸ் வாங்கி, ரைட்டான டைரக்டரை அமர்த்தி, கேரி க்ராண்டையும் ஜேம்ஸ் ஸ்டீவர்டையும் போட்டு தானே தயாரித்தார் படமாக. அதுவும் சூப்பர் ஹிட். நட்சத்திரமானார்.
Katharine Hepburn.. (1907 - 2003) பாலிவுட்டின் சாவித்திரி… இன்று பிறந்த நாள்!


12 முறை, ஆமாம், 12 முறை நாமினேஷன் பெற்று (ஒரு தடவை கூட விழாவுக்கு போகவில்லை) அதில் ‘நான்கு முறை’ ஆஸ்கார் அவார்ட் வாங்கிய ஒரே நடிகை. கின்னஸ் ரிகார்ட் அது.
ஸ்பென்சர் டிரேசியுடன் நல்ல ராசி. ஒன்பது படங்களில் ஜோடியாக. கடைசிப் படம் மிகப் பிரபலம். ‘Guess Who’s Coming to Dinner?’ மற்றொன்று ‘Adam’s Rib.’ கணவரை கொலை செய்ய முயன்றதாக அந்தப் பெண் மீது வழக்கு. போலீஸ் தரப்பில் வாதாடும் வக்கீல் பானர். ஆனால் அந்தப் பெண்ணுக்காக ஆஜராகிறார் பானரின் மனைவி அமெண்டா. இருவருக்கும் சரியான நடிப்பு போட்டி.
உறுதி கொண்ட பெண் காரக்டர்களை சித்தரிப்பதில் விற்பன்னரான காதரின், கேரி க்ராண்டுடன் நடித்த சிரியோ சிரி படத்தைப் பற்றி (‘Bringing up Baby’) வேறொரு நாளில் எழுதியிருந்தேன்.
எண்டர்டெய்ன்மெண்ட் வீக்லி 1999 இல் நடத்திய சிறந்த கிளாஸிக் நடிகை போட்டியில் மற்றொரு ஹெபர்னை (Audrey Hepburn) விளிம்பில் வென்றவர்.
‘எந்தக் கலை ஆனாலும் சரி அதில் உயரத்தில் இருப்பவர்கள் தாங்கள் மேலே இருப்பது தங்கள் திறமையினாலா அல்லது அதிர்ஷ்டத்தினாலா என்று ரகசியமாக வியந்து கொண்டிருப்பார்கள், அவர்களுக்கு நேரம் இருந்தால்,’ என்று நினைக்கும் இவர் சொல்வது, ‘கஷ்டப்படுவது எத்தனை சுவையானது என்பதைப் புரிந்து கொள்ளும் யோகம் எல்லாருக்கும் வாய்ப்பதில்லை.’
உற்சாகமூட்டும் இவர் வார்த்தைகள்: ‘சில சமயம் வாழ்க்கை கொடூரமான சோகமாக இருக்கலாம். எனக்கும் இருந்திருக்கிறது. ஆனால் உங்களுக்கு என்ன நேர்ந்தாலும் சற்றே நகைச்சுவையுடன் எதிர்கொள்ளுங்கள். இறுதியில் பார்த்தால் வாழ்வில் நீங்கள் சிரிக்க மறந்து விடக்கூடாது என்பதுதான் முக்கியம்.’
‘உங்களுக்குப் பிடித்த விஷயங்களை செய்யுங்கள், குறைந்தபட்சம் ஒரே ஒரு நபராவது திருப்தியுடன் இருப்பார்.’
சொன்னாரே ஒன்று தமாஷாக: ‘Life is hard. After all, it kills you.’

1 comment:

வெங்கட் நாகராஜ் said...

தகவல்கள் அனைத்தும் சிறப்பு. கடைசி வாக்கியம் மனத்தைத் தொட்டது.

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!