Wednesday, May 18, 2022

எப்போதும் காதில்..


எப்போதும் காதில்..

கே.பி.ஜனார்த்தனன்

ஐபாட் ஸ்பீக்கரை காதில் செருகியபடியே சமையலைக் கவனித்துக்கொண்டிருந்த மனைவி பத்மாவைப் பார்க்கப் பார்க்க பாஸ்கருக்கு எரிச்சலாக வந்தது.
அவளைக் காதலித்து மணந்தவன் அவன். பெரிய சங்கீத வித்வானான தந்தையைப் பகைத்துக்கொண்டு பதிவுத் திருமணம் செய்து கொண்டவனுக்கு அவளிடம் பிடிக்காத ஒரே விஷயம் இது ஒன்றுதான்.
லேசாய் சொன்னால் கேட்பதாயில்லை. அன்றைக்கு சண்டை பெரிதாகி விட்டது. "அப்படி என்ன எப்பவும் பாட்டு வேண்டிக் கிடக்கு?"
அவள் சொன்னாள்: "உங்க அப்பாவோட சண்டைபோட்டுட்டு அவர் மேலே உள்ள கோபத்தில் அவர் சம்பந்தப்பட்ட எந்த பொருளைக் கண்டாலும் வெறுக்கிறீங்க. ஆனா நானோ ஆர்வத்தோடு அவர்கிட்ட சங்கீதம் படிக்க வந்து அங்கே உங்களை சந்திச்சு காதலிச்சு கல்யாணம் செஞ்சுக்கிட்டேன். அவரோட உயர்ந்த இசையைக் கேட்காம என்னால இருக்க முடியலே. அதான் உங்களுக்கு கேட்காத விதத்தில் மாமாவோட பாட்டைக் கேட்டு ரசிக்கிறேன். தப்பாங்க?" பாஸ்கருக்குக் கோபம் வரவில்லை.

('குமுதம்' 27 8 2008 இதழில் வெளியானது.)

Thursday, May 12, 2022

ஆஸ்கார் நாலு அள்ளியவர்...




நாலைந்து படம் நன்றாக நடித்து அதில் ஒன்றுக்கு ஆஸ்கார் அவார்டும் வாங்கினாலும், எதிர்பார்க்கப்படும் எந்த படோபடோபமும் அந்த நடிகையிடம் இல்லை. இமேஜ் பில்டிங் சுத்தம். நிருபர்களைக் கண்டால் ஓட்டம் (ஒரு முறை விமான விசிறியில் மாட்டிக் கொள்ளப் பார்த்தாராம்) பிராட்வே நாடக மேடைக்கு திரும்பினால் சரியான வரவேற்பு இல்லை. திரும்ப ஹாலிவுட்டுக்கு போனால் கிடைத்த படங்கள் ஓடவில்லை. ‘பாக்ஸ் ஆஃபீஸ் பாய்சன்’ என்றனர் வழக்கம்போல.

மனம் தளரவில்லை. மறுபடியும் மேடைக்கு வந்தார். நடித்த ‘The Philadelphia Story’ சூப்பர் ஹிட். அதன் ரைட்ஸ் வாங்கி, ரைட்டான டைரக்டரை அமர்த்தி, கேரி க்ராண்டையும் ஜேம்ஸ் ஸ்டீவர்டையும் போட்டு தானே தயாரித்தார் படமாக. அதுவும் சூப்பர் ஹிட். நட்சத்திரமானார்.
Katharine Hepburn.. (1907 - 2003) பாலிவுட்டின் சாவித்திரி… இன்று பிறந்த நாள்!


12 முறை, ஆமாம், 12 முறை நாமினேஷன் பெற்று (ஒரு தடவை கூட விழாவுக்கு போகவில்லை) அதில் ‘நான்கு முறை’ ஆஸ்கார் அவார்ட் வாங்கிய ஒரே நடிகை. கின்னஸ் ரிகார்ட் அது.
ஸ்பென்சர் டிரேசியுடன் நல்ல ராசி. ஒன்பது படங்களில் ஜோடியாக. கடைசிப் படம் மிகப் பிரபலம். ‘Guess Who’s Coming to Dinner?’ மற்றொன்று ‘Adam’s Rib.’ கணவரை கொலை செய்ய முயன்றதாக அந்தப் பெண் மீது வழக்கு. போலீஸ் தரப்பில் வாதாடும் வக்கீல் பானர். ஆனால் அந்தப் பெண்ணுக்காக ஆஜராகிறார் பானரின் மனைவி அமெண்டா. இருவருக்கும் சரியான நடிப்பு போட்டி.
உறுதி கொண்ட பெண் காரக்டர்களை சித்தரிப்பதில் விற்பன்னரான காதரின், கேரி க்ராண்டுடன் நடித்த சிரியோ சிரி படத்தைப் பற்றி (‘Bringing up Baby’) வேறொரு நாளில் எழுதியிருந்தேன்.
எண்டர்டெய்ன்மெண்ட் வீக்லி 1999 இல் நடத்திய சிறந்த கிளாஸிக் நடிகை போட்டியில் மற்றொரு ஹெபர்னை (Audrey Hepburn) விளிம்பில் வென்றவர்.
‘எந்தக் கலை ஆனாலும் சரி அதில் உயரத்தில் இருப்பவர்கள் தாங்கள் மேலே இருப்பது தங்கள் திறமையினாலா அல்லது அதிர்ஷ்டத்தினாலா என்று ரகசியமாக வியந்து கொண்டிருப்பார்கள், அவர்களுக்கு நேரம் இருந்தால்,’ என்று நினைக்கும் இவர் சொல்வது, ‘கஷ்டப்படுவது எத்தனை சுவையானது என்பதைப் புரிந்து கொள்ளும் யோகம் எல்லாருக்கும் வாய்ப்பதில்லை.’
உற்சாகமூட்டும் இவர் வார்த்தைகள்: ‘சில சமயம் வாழ்க்கை கொடூரமான சோகமாக இருக்கலாம். எனக்கும் இருந்திருக்கிறது. ஆனால் உங்களுக்கு என்ன நேர்ந்தாலும் சற்றே நகைச்சுவையுடன் எதிர்கொள்ளுங்கள். இறுதியில் பார்த்தால் வாழ்வில் நீங்கள் சிரிக்க மறந்து விடக்கூடாது என்பதுதான் முக்கியம்.’
‘உங்களுக்குப் பிடித்த விஷயங்களை செய்யுங்கள், குறைந்தபட்சம் ஒரே ஒரு நபராவது திருப்தியுடன் இருப்பார்.’
சொன்னாரே ஒன்று தமாஷாக: ‘Life is hard. After all, it kills you.’

Saturday, May 7, 2022

கெலிக்க முடியாத எலிகள்...



ஹேம்லின் நகரத்தில் கெலிக்க முடியாத எலித்தொல்லை. எதுவும் பலிக்கவில்லை. என்னிடம் விடுங்கள் என்று வந்தார் அந்த பைப் வாசிப்பவர். 40000 ரூபாய் பேசுகிறார்கள். அவன் பைப் வாசித்ததும் அத்தனை எலிகளும் கேட்டுக் கிறங்கி அவன் பின்னால் பைப் லைனாக அணிவகுத்தன. அப்படியே அழைத்து சென்று ஆற்றில் நடந்து எலிகளை மூழ்க வைத்தான். எலிகள்தான் எலிமினேட் ஆயாச்சே? 2000 தான் தருவேன் என்கிறார்கள். அவன் மறுபடியும் பைப்பை வாசிக்கிறான். கேட்டு மயங்கிய அந்த ஊர் குழந்தைகள் அவனைத் தொடர அழைத்துச் செல்கிறான் காட்டுக்கு...

‘The Pied Piper of Hamelin’ பிரபலமான அந்தக் கவிதையை எழுதியவர் ...

Robert Browning.. இன்று பிறந்த நாள்.

நோய்வாய்ப்பட்ட அவருடைய பப்ளிஷர் நண்பர் மகன், நேரம் போகாமல் படம் வரைவதற்கு ஒரு கதை கேட்டபோது இவர் கவிதையாக சொன்னதுதான் இந்தக் கதை.



அப்பா வைத்திருந்த 7000 புத்தக லைப்ரரி ஆர்வத்தை கிளப்ப, சின்ன வயதிலேயே தீர்மானித்துவிட்டார் கவிஞராக வேண்டும் என்று.

கவிதாயினி Elizabeth Barrette மீதான காதல் ஒரு காவியக் கதை.

ஆழமான வரிகளை வரைந்தவர். சில இதோ...

‘எட்டுவதற்கு மேலாக இருக்க வேண்டும் மனிதன் அடைவது; சொர்க்கம் என்று ஒன்று இருப்பது வேறு எதற்காக?’

'பளிங்கு என்று இளமை நினைத்ததை, பனித்துளி என்று கண்டுபிடிக்கிறது முதுமை!'

‘என் சூரியன் மறைவது, மீண்டெழுவதற்கே.’

‘எளிய அழகு மட்டுமே உங்களுக்கு கிடைத்தது வேறு எதுவும் கிடைக்கவில்லை என்றால் 

கடவுள்  உருவாக்கிய மிகச்சிறந்தது உங்களுக்கு கிடைத்திருக்கிறது  என்று அர்த்தம்!’

‘அன்பு, அச்சம், எதிர்பார்ப்பு, நம்பிக்கை:

இவற்றால் ஆனதே  மனிதம். இவையே அதன் அடையாளம், லயம், தன்மை.’

‘எவ்வளவு வருத்தமாக, எவ்வளவு மோசமாக எவ்வளவு கிறுக்குத் தனமாக இருந்தது! ஆனால் எப்படி அது இனிமையாக இருந்தது?’

>><<


Wednesday, May 4, 2022

கல்வியின் பெருமையை சொன்னவர்...




அமெரிக்க கல்வியின் தந்தை என்று அவர் அழைக்கப்படுகிறார். ‘கல்வி என்பது அனைவருக்கும் இலவசமாக வழங்கப்பட வேண்டிய ஒன்று, தகுதி வாய்ந்த ஆசிரியர்களைக் கொண்டு,’ என்று ஆயிரத்தி எண்ணூறுகளில் பேசியவர். "வறுமையை ஒழிக்கவும் குற்றங்களைக் குறைக்கவும் அதுவே உதவும்."

Horace Mann… (1796 - 1859) இன்று பிறந்த நாள்!
இளமையில் வறுமையில் உழன்றவர் பயின்றது பெரும்பாலும் நூலகங்களில்..
ஸ்கூல் சிஸ்டம் ஆரம்பித்து வைத்தவர்களில் முக்கியமானவர். ஒரு கிளாஸில் எல்லா மாணவர்களும் என்பதில் தொடங்கியது வயதுக்குத் தகுந்தபடி தனித்தனி கிளாஸ் என்று வளர்ந்தது.
இந்த ஹோம் வொர்க்! கண்டுபிடிச்சது யாருன்னு குமுறுவாங்க சில பசங்க. அது இவரு இல்லீங்க. ஆனா அதை ஒரு முக்கியமான விஷயமா கொண்டு வந்ததில் இவர் பங்கு இருக்கு...
ஊர்ஸெஸ்டர் என்ற ஊரில் அமெரிக்காவின் முதல் மனநல மருத்துவமனை ஏற்பட்டதன் பின்னால் இவரது உழைப்பு மிக.
மாணவர்களுக்கு அவர் சொன்னது: ‘மனிதகுலத்துக்கு ஏதேனும் வெற்றி தராமல் மரணம் அடைய வெட்கப்படுங்கள்!’
இன்னும் சொன்னவை: ‘புத்தகங்கள் இல்லாத வீடு ஜன்னல்கள் இல்லாத அறையை போன்றது.’
'காணவில்லை! நேற்று சூரியோதயத்துக்கும் அஸ்தமனத்துக்கும் இடையில் இரண்டு பொன் மணி நேரம். அறுபது வைர இழைகளால் ஆனது. கண்டுபிடிப்பவர்களுக்கு எந்த பரிசும் கிடையாது. அவை காணாமல் போனது போனதுதான்.'
‘மற்றவர்களுக்கு நாம் செய்யும் ஆகப் பெரிய சேவை, அவர்கள் தங்களுக்குத் தாங்களே உதவிக் கொள்ளச் செய்வதுதான்.’
‘வாழும்போது செய்யும் தர்மம் சாகும்போதும் செய்யும் தர்மத்தை விட வித்தியாசமானது. இது தாராள மனதுடன் பரோபகார சிந்தையில் எழுவது. மற்றது பயத்தில் அல்லது கௌரவத்தில் எழுவது.’
‘மாணவனிடம் கற்றுக் கொள்ளும் ஆர்வத்தை உருவாக்காமல் ஓர் ஆசிரியர் கற்றுக் கொடுக்க முயற்சிப்பது குளிர்ந்த இரும்பில் சுத்தியலால் அடிப்பது போல.’
‘பழக்கம் என்பது ஒரு கயிறு. தினம் ஒரு இழையாக பின்னுகிறோம், கடைசியில் அதை அறுக்க முடியாத அளவுக்கு.’

‘நன்றாக எண்ணுவது நன்று. நன்றாகச் செயல் படுவது தெய்வீகமானது.’

‘கல்லாத வரையில் ஒரு மனிதன் தன் முழு உயரத்தை அடைவதில்லை.’

மற்றவர்களுக்கு எதுவுமே செய்யாமல் இருப்பது நம்மையே இழப்பதாகும். பரிவுடனும் தாராளமாகவும் இல்லாவிடில் வாழ்வின் சிறந்த பகுதியை இழக்கிறோம். தன்னை விட்டு வெளியே செல்கிற இதயம் இன்னும் பெரிதாகி இன்பத்தால் நிரம்புகிறது. அக வாழ்க்கையின் மிகப்பெரும் ரகசியம் இதுதான். மற்றவர்களுக்கு ஏதேனும் செய்வதன் மூலம் நமக்கு நாம் பெரும் நல்லது செய்கிறோம்.'