Saturday, July 27, 2019

அதற்கேற்ப... (நிமிடக்கதை)

அன்புடன் ஒரு நிமிடம்...130

வழக்கமான சத்தம்தான். ஆனாலும் இன்றைக்கென்னவோ சற்று அதிகமாக கஷ்டப் படுத்திற்று வாசுவை. அவரிருந்த கவலை சூழ்நிலையில்.
எழுந்து கிச்சனுக்கு வந்தார். பேசினில் பாத்திரங்களை அலசிக் கொண்டிருந்தாள் ஜனனி. 
ஒரு நிமிடம் கவனித்தார். குழாயில் தண்ணீர் வேகமாகப் பாய்ந்து கொண்டிருந்தது. அதற்கேற்ப பாத்திரங்களை படபடவென்று வேகமாகக் கழுவிக் கொண்டிருந்தாள். 
பார்க்கப் பார்க்க அவருக்கு எரிச்சல் எகிறிற்று. இதென்ன இவள். குழாயின் வேகத்தை  குறைப்பதை விட்டுவிட்டு...  இப்படி மாய்ந்து மாய்ந்து போராடிக் கொண்டிருக்கிறாள்!
அதற்குள் அவள் வேலையை முடித்துவிட்டாள். திரும்பியவள் வாசுவைப் பார்த்ததும், “என்ன, ஏதோ பிரச்சினை என்று தலையை உடைச்சிட்டு அறையிலே இருந்தீங்க, இங்கே எப்படி...”
“நீ கிளப்பிய சத்தத்தில எழுந்து வந்தேன்...இப்படி ஸ்பீடாகவா தண்ணியை திறந்து விடறது?”
”அதிருக்கட்டும், என்ன பிரசினை?”
“வேறென்ன, இந்த வருஷம் கம்பெனி பர்ஃபாமன்ஸ் ரொம்ப மந்தம். பாதி வேலை கூட முடியலே. இத்தனைக்கும் நானே ரெண்டு நாள் உட்கார்ந்து என் கீழே இருக்கிற நாலு அஸிஸ்டண்ட் மேனேஜருக்கும் ஒவ்வொருத்தரும் தங்கள் வேலைக்கான ஷெட்யூலை எப்படி நாளுக்கு நாள், ஏன் , மணிக்கு மணி தயாரிச்சு செயல்படறதுன்னு கத்துக் கொடுத்திருக்கேன். அவங்களும் அப்படித்தான் செய்யறதா சொல்றாங்க. ஆனா காலாண்டு முடிவில் பார்த்தா ரிசல்ட் ரொம்பக் கம்மியாயிருக்கு. கேட்டால் ஷெட்யூல் போட்டுத்தான் செயல்படறோம்னு சொல்றாங்க. நானும் அவங்களிடம் எத்தனையோ முறை அழைத்து சொல்லிப் பார்த்தாச்சு. நோ யூஸ்.  எனக்கு டென்ஷன் வருமா வராதா? இத்தனைக்கும் அவங்க யாருமே வேலை பார்க்கத் தயங்காதவங்கதான்.”
ஜனனி சிரித்தாள். ”முக்கியமான விஷயத்தை நீங்க செய்யலியே?”
”என்ன அது?”
”வேலை பார்க்க அவங்க தயங்கலே. சரி. ஆனா அவங்க வேலை பார்க்கிற ஸ்பீட்? அது முக்கியம் இல்லையா? அந்த ஷெட்யூலை அவங்க பக்கத்தில உட்கார்ந்து நீங்களும் சேர்ந்து போடுங்க. அதன் வேகத்தை அதிகரியுங்க. அந்த வேகத்துக்கேற்ப அவங்க இயங்கியாகணும். இயங்குவாங்க. அப்ப தன்னால  ரிசல்ட் முன்னேறும்.  இப்ப நான் ஏன் இந்த குழாயை ஸ்பீடா தண்ணி வர்ற மாதிரி திறந்து வெச்சிருக்கேன்? அப்பதான் என் கை வேகமா இயங்கும். நான் சீக்கிரம் இந்த வேலையை முடிப்பேன். முடிச்சிட்டு அடுத்த விஷயத்துக்குப் போகணும் நான். அது மாதிரிதான். நீங்க வேலையை அசைன் பண்றப்ப கூடவே அந்த வேலைக்கான ஸ்பீடையும்  அசைன் பன்ணிட்டா எல்லாம் சரியாயிடும்.”
மனதில் எழுந்த இரண்டு கேள்விகளுக்கும் ஒரே நேரத்தில் ஒரே விடை கிடைத்த திருப்தி அவர் முகத்தில்.  
><><
('அமுதம்' நவ.2015 இதழில் வெளியானது)

Friday, July 19, 2019

அவள் - கவிதைகள்


539
நகர்கிறாய் நீ.
நாளை இன்னும் ஸ்பெஷலாகிறது 
எனக்கு.

540
ஒரு நொடியில் படம் பிடிக்கிறாய்
உள்ளத்தோடு என் உருவத்தை.
ஆயிரம் நொடியில் நான் வெறும்
உன் புருவத்தை.

541
மின்னலாகத் தெறிக்கிறாய்
கவிதையின் கடைசி வார்த்தையில்!

542
நினைக்காத தருணங்களிலும்,
எப்படி நினைக்க மறந்தேன் என
நினைக்கிறேன் உன்னை!

543
இன்னொரு பூமி
எங்கும் கிடையாது,
இன்னொரு நீயைப் போலவே.

544
என்ன அவசரம்?
முந்திக்கொண்டு சிரிக்கும் கண்கள்!

545
எல்லாருக்கும் உன் புன்னகை, 
புன்னகை.
எனக்கு மட்டும் தெரியும் அதிலொரு 
மென்நகை.

546
பாதம் பதித்தாய் வீட்டில்,
பதம் பதித்தேன் ஏட்டில்.

547
சின்னதா ஒரு மனம்..
என்னமா ஒரு குணம்!

548
வீசும் திசையறியா
விண் தென்றல் நீ!

><><