Thursday, February 8, 2018

வேண்டும் ஒரு பரிசு... (நிமிடக்கதை)

வலையை சுருக்கமாக சொன்னார் கணேசன்.
“பத்து வருஷம் அவர் கீழே வேலை பார்த்தேன். அப்ப இந்த ஊர்லேயே பெரிய தையல் கடை அவரோடதுதான். அவருதான் என் குரு. தொழிலை, ஒவ்வொரு நுணுக்கத்தையும் கத்துக்கிட்டது அவர்ட்டதான். இப்ப நான் கடை தொடங்கப் போறேன். அவரில்லாம அதன் திறப்பு விழாவை நினைச்சுக் கூட பார்க்க முடியாது.”
“அவர் வரமறுக்கிறாரா?” கேட்டார் வாசு.
“ஐயோ சந்தோஷமா வருவார்.  என் முன்னேற்றத்தில அக்கறை உள்ளவராச்சே. என்னன்னா அவர் இப்ப நல்ல வசதியா இல்லை. கடையை எல்லாம் விட்டு வருஷமாச்சு. ரெண்டு பழைய தையல் மெஷின் கிடக்குது வீட்டில அடையாளமா, அவ்வளவுதான்! வெளியூர்லேருந்து பிள்ளைகள் அனுப்பற பணத்தை வெச்சுத்தான் வீடு நடக்குது. திறந்துவைக்க வரும்போது கண்டிப்பா ஏதாவது பெரிசா பரிசு கொடுக்க நினைப்பார். வேண்டாம்னு என்ன சொன்னாலும் கேட்கமாட்டார். ஆனா அவரால...கஷ்டப்படுவார்.  தெரிஞ்சும் அவருக்கு எப்படி கஷ்டத்தைக் கொடுக்கறது?”
”அப்ப விழா இல்லாம ஆரம்பிச்சுடு. அப்புறம் பக்குவமா சொல்லிக்கலாம் அவ்ர்ட்ட.”
“செய்யலாம் ஆனா வீட்டில, நண்பர்கள் எல்லாரும் விரும்பறாங்க. முதமுதல்ல தனியா பெரிய அளவில் நான்...”
கொஞ்ச நேரம் யோசித்தார் வாசு. ”ஒரு ஐடியா தோணுது. ஒரு வேளை சுமுகமா எல்லாம் நடக்க அது உதவலாம்..” சொன்னார்.

டுத்த அரையாவது மணியில் கணேசன் தன் பழைய முதலாளியின் வீட்டில் நுழைந்தார்.
நார்க் கட்டிலில் படுத்திருந்த சதாசிவம் எழுந்தார். “வாய்யா வா! என்ன விசேஷம்?”
சொன்னார் விஷயத்தை.
“அப்படியா.. கேட்க சந்தோஷமா இருக்கு.”
“அடுத்த மாசம் ரெண்டாம் தேதி. நீங்க வந்து திறந்து வைக்கறீங்க”
“கண்டிப்பா...” 
”அது மட்டுமல்ல. ஒரு மறக்க முடியாத பரிசும் நீங்க தர்றீங்க.”
”அதுக்கென்ன தந்துட்டா போச்சு.’’ அவர் கடைக்கண் ஓரம் ஒரு கவலை ரேகை ஓடியது.
”அதோ..” கையைக் காட்டினார் கணேசன். ”அந்த தையல் மெஷின்! அந்தக் காலத்தில் நீங்க உட்கார்ந்து வேலை செய்த  மெஷின். அது எனக்கு வேணும். உங்க ஞாபகமா எப்பவும் என் கண் எதிரே வெச்சிருக்க!  அதைவிட வேறு எனக்கு என்ன பரிசு இருக்கமுடியும்?”
இவர் மனதில் சந்தோஷமும் கூடவே ஒரு திருப்தியும்..

திறப்பு விழா அமர்க்களமாக நடந்தேறியது. வாசுவிடம் தன் பிரத்தியேக நன்றியை சொல்ல மறக்கவில்லை கணேசன்.

(’அமுதம்’ ஆகஸ்ட் 2015 இதழில் வெளியானது - அன்புடன் ஒரு நிமிடம் - 121)

><><