Monday, September 25, 2017

அவள் - (கவிதைகள்)


421.
நாணமா புன்னகையா
எது தூக்கல் உன்
நாணப் புன்னகையில்?


422
அந்த நாளில் 
நின்று விடாதா உலகம்-
நாம் சந்தித்த...?

423
எழில் உட்காருகிறது
நடக்கிறது, சிரிக்கிறது,
சோம்பல் முறிக்கிறது,
கொஞ்சுகிறது உன்னோடு.

424.
வெறுமேதான் பார்க்கிறாய்
விடை தேடுகிறேன் அதற்கும்.

425
பார்ப்பது நீ எங்கோ.
தைப்பதுவோ இங்கே.

426.
வாசலில் நீ இடும் கோலத்தில்
வைத்திருப்பாய் இன்னும் ஒரு புள்ளி
எனக்காக.

427.
என் விதியுடன் கைகுலுக்கினாள்,
விடை பெற்றுக்கொண்டது விதி.

428
அழகின் தடம்
உன் மனத்திடம்.

429.
மனைக் கோலம் நீ இட்டது .
அத்தனை அழகாக உன் 
மனக்கோலம் நான் இட்டேனா?

430.
பார்க்கிறாய், அழகு.
பேசுகிறாய், அழகு.
சும்மா இருக்கிறாய், அழகு.

><><><

Thursday, September 14, 2017

கவலையின் காரணம்...


அன்புடன் ஒரு நிமிடம் - 118

நண்பர் வீட்டுக்குப் போய்விட்டு வீடு திரும்ப காரில் ஏறியதுமே மனைவியிடம் கேட்டார் வாசு. ”என்ன நீ இங்கே இப்படி சொல்றே அன்னிக்கு அங்கே அப்படி சொன்னே?”
ஜனனிக்கு புரிந்தது. ”என்ன சொன்னேன்?”
”இங்கே என் நண்பன் கதிரேசன் தன் பையன் மது காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டதைப் பத்தி வருத்தமா சொன்னப்ப, அது ஒண்ணும் தப்பாப் போயிடாது, அவங்க நல்லா அமோகமா இருப்பாங்க, நீங்க மனசைப் போட்டு அலட்டிக்காதீங்கன்னு சொல்றே.”
”ஆமா, சொன்னேன்.”
”ஆனா அன்னிக்கு உன் ஃப்ரண்ட் விமலா வீட்டுக்கு போயிருந்தப்ப அவள் மகள் ஸ்வேதா லவ் மேரேஜ் பண்ணிக் கொண்டதைப் பத்தி அவள் வருத்தமா சொன்னப்ப, ஆமாடீ, நானும் எதிர்பார்க்கவே இல்லே, இவள் இப்படி பண்ணிட்டாளேன்னு கூடவே சேர்ந்து ஒன்றரை மணி நேரத்துக்கு புலம்பினே...  ரெண்டு பேருமே பெற்றவங்க சொன்னதைக் கேட்கலே. அவங்களே போய் பதிவுத் திருமணம் பண்ணிக்கிட்டாங்க.  ஆனா நீ... இது ரொம்ப முரணா இருக்கே?  உன் ஃப்ரண்ட்னா ஒரு பார்வை, என் ஃப்ரண்ட்னா இன்னொன்றா...?” 
ஜனனி சிரித்தாள். ”ஆமா, ரெண்டு விதமாதான் சொன்னேன். ஏன்னு கொஞ்சம் யோசிச்சுத்தான் பாருங்களேன். அதைவிட்டு முரண் அது இதுன்னு ஏன்...”
யோசித்தார். ”சரி, நீயே சொல்லு.”
”ரெண்டு குடும்பமும் நமக்கு இருபது வருஷத்துக்கு நெருங்கின பழக்கம், இல்லையா?” 
”இருபத்தஞ்சு.”
”விமலா தன் மகளை ரொம்ப செல்லமா வளர்த்தாள். உங்களுக்கே தெரியும். சின்னதோ பெரியதோ அவ சம்பந்தமான எல்லா விஷயங்களையும் இவதான் முடிவெடுப்பாள். பெரும்பாலும் தானாக அந்தப் பெண் எதையும் செய்து பழகவில்லை. அதுக்கு முயற்சித்ததுமில்லை. அதனால்தான் பயந்தேன். முதல் முறையா ஒரு மிக முக்கியமான விஷயத்தில் அவள் தானாகவே எடுத்த முடிவு எத்தனை தூரம் சரியா அமையுமோன்னு... ஆக நான் கவலைப்பட்டதில காரணம் இருக்கு. அதனால் அவள் கவலையைப் பங்கிட்டுக் கொண்டேன்.  இங்கே உங்க ஃப்ரண்ட் கதிரேசன் தம்பதி அவங்க மகனை வளர்த்த விதம் எப்படீன்னா சின்ன வயசிலிருந்தே அவனை ரொம்ப சுதந்திரமா தன் விஷயங்களை தானே முடிவெடுத்து செய்யப் பழக்கி அதில தப்பு நேரும்போது சொல்லிக் கொடுத்து ..இப்படி இது வேறு விதம். இவனைப் பொறுத்தவரைக்கும்  அவன் தேர்ந்தெடுத்த துணை சரியாக அமைவதற்கு வாய்ப்பு அதிகம்னு நினைக்கிறேன். அதனால் ஒரு நம்பிக்கையோடு அப்படி ஆறுதல் சொன்னேன்.”
புன்னகைத்தார்.
><><
(`அமுதம்` ஜூலை 2015 இதழில் வெளியானது)