Sunday, December 25, 2016

நல்லதா நாலு வார்த்தை... 77



’அதிலிருந்து வெளிவரமுடியாத அளவுக்கு
அசாத்தியமான பிரசினை எதுவுமில்லை.'
-Charles M. Schulz
('No problem is so formidable that you can't walk away from it.')
<>

’ஏற்கெனவே எடுத்துவிட்ட
நிலைப்பாட்டை நிச்சயம் செய்யக்
கேட்கப்படுவதே ஆலோசனை.’
- William Osler
(’Advice is sought to confirm a position already taken.’)
<>

'எப்போதும் நினைவில் கொள்வேனென
எனக்குறுதி செய்:
நீ நம்புவதை விட நீ துணிவானவன்;
பார்க்கத் தோன்றுவதைவிட பலசாலி;
நினைப்பதைவிட சூட்டிகையானவன் நீ.' 
- A. A. Milne
('Promise me you'll always remember: You're braver than you
believe, and stronger than you seem, and smarter than you think.')
<>

'ஒரு நல்ல மனிதன் எப்படி
விளங்க வேண்டுமென்ற
விவாதத்தில் நேரத்தை
வீணாக்குவதை விடு.
விளங்கிடு அப்படி ஒருவனாக.'
- Marcus Aurelius
('Waste no more time arguing about
what a good man should be. Be one.')
<>

'நிலவுக்கு குறி வையுங்கள்
தவறினால் அடையலாம் ஒரு
தாரகையையேனும்.
- W. Clement Stone
('Aim for the moon. If you miss, you may hit a star.')
<>

'என் நண்பனுக்குள் காண்கிறேன்
இன்னொரு என்னை.'
- Isabelle Norton
('In my friend, I find a second self.')
<>

'சந்தர்ப்ப வசத்தினால்
எந்த மனிதனும்
விவேகமாக இருந்ததில்லை.'
- Lucius Annaeus Seneca
('No man was ever wise by chance.')
<>

’என்னே விளங்கிடும் வாழ்க்கை
எதையும் முயற்சிக்கிற
தைரியம் நமக்கில்லையெனில்?’
-Vincent Van Gogh
(”What would life be if we had no courage to attempt anything?’)
<>

’ஏமாற்றப்படுவதில்லை நாமொருபோதும்
ஏமாற்றிக் கொள்கிறோம் நம்மை நாமே.’
-Goethe
('We are never deceived; we deceive ourselves.')
<>

'மற்றவர் முன் மாறுவேடமிட்டுப்
பழகிப் பழகி இறுதியில் நமக்கே
மாறுவேடமிட்டவராக ஆகிவிடுகிறோம்.'
- la Rochefoucault
('We are so accustomed to disguise ourselves to
others that in the end we become disguised to ourselves.')

><><><

Monday, December 19, 2016

மனக்குறை...(நிமிடக்கதை)

அன்புடன் ஒரு நிமிடம் - 111

புலம்ப ஆரம்பித்த காமாட்சி புலம்பிக் கொண்டேயிருந்தார்.

சொல்லித்தான் அழைத்து வந்திருந்தார் சாத்வீகனை அவர் நண்பர் விசு. காமாட்சியின் தம்பி. எப்பப் பார்த்தாலும் குறைப்பட்டுக்கொண்டே இருக்கிறாள் என்று.

பார்த்து நாளாச்சு உங்க அக்காவை... என்று ஆர்வமாக வந்த சாத்வீகன் அவளது சலிப்புகளை நிஜமான அக்கறையுடன் கேட்டார்.

“...இந்த சின்னவன் சேகர் இருக்கானே, பக்கத்தில பங்களூரிலதான் இருக்கான்னு பேரு. மாசம் ஒரு தடவைகூட வந்து பார்க்கிறதில்ல அம்மாவை. எப்பவாவது வந்து எட்டிப்பார்த்துட்டு ஓடிடறான். எனக்குத் தேடுமேன்னு கொஞ்சமாச்சும்...”
அப்போது மொபைல் ஒலிக்க, எடுத்த சாத்வீகன், கேட்டுவிட்டு, “இன்னுமா வேலை கிடைக்கலே? போய் ஆறு வருஷம் ஆச்சே... எப்படித்தான் உங்க அப்பா சமாளிக்கிறாரோ... நீ ஒன்றில் அமர்ந்தால்தானே குடும்பம் தலையெடுக்கும்? சே, கவலையிலேயே அம்மா நோயில் படுத்துடுவாளே...” கொஞ்சம் பேசிவிட்டு வைத்தார்’

காமாட்சி தொடர்ந்தார். ”பெரியவன் கூட இருக்கான்னு பேரு. கொஞ்சமாவது பெண்டாட்டியை அதட்டி வைக்கிறானா? அவ என்னை மதிக்கிறதேயில்லை. வேணும்கிறதை பண்ணி வெச்சுட்டு ஒற்றை வார்த்தை பேசாமல் ஓடிடறா ஆபீசுக்கு...

மறுபடியும் ஒரு கால் இவருக்கு வர,  எடுத்து கேட்டவர் சொன்னார், ”சரி, நான் ஊருக்கு வந்ததும் உன் தங்கையிடம் சொல்லிப் பார்க்கிறேன். அம்மா பேச்சைக் கேட்கிறான்னு டைவர்ஸ் வரை போறது நல்லாவா இருக்கு?  குழந்தையை எத்தனை பாதிக்கும்?”

காமாட்சி தன் கதையை... “என் மகள் இருக்காளே கலா, அவள் பின்னே இங்கே வந்தா எப்பவும் கடன் பாட்டுத்தான் பாடுவா. மாப்பிள்ளைக்கு பிரசினைன்னு மாசம்தோறும் பத்து இருபதுன்னு வாங்கிட்டு போயிடறா. என்னதான் கொஞ்சம் வசதி இருக்குன்னாலும் நானும் எத்தனை தரம்தான் எடுத்து வீசறது?”
மறுபடி போன். பேசினார். ”...இல்லேப்பா முருகேசா, என்னதான் தேவையில்லாம போலிஸ் கேசில் மாட்டிக்கிட்டாலும் அவன் உன் சொந்தத் தம்பி. நீதான் நல்ல வக்கீலா பார்த்து தொகையை கொடுத்து அவனை மீட்கணும்.  பணமா முக்கியம் வாழ்க்கையில? பாசமில்ல பெரிசு...”
“ஆருங்க அது?” காமாட்சி.

சொன்னார். தன்னிடம் பேசியவர்களைப் பற்றி. ”சரி, நீங்க மேலே சொல்லுங்க.”

”வேறே என்னத்தை? அவ்வளவுதான்! ஒரு இதுக்குத்தான் சும்மா கொட்டினேன். மத்தபடி பசங்க என் மேலே அன்பாத்தான் இருக்காங்க. ஏதோ இறைவன் அனுக்ரகத்தில இத்தனையாவது... முருகா எல்லாம் உன் அருள்.”

வெளியே வரும்போது நண்பர்சொன்னார், ”இன்னிக்குத்தான் அக்கா மனதிருப்தியோட நாலு வார்த்தை உணர்ந்து பேசுது. ஆமா அந்த நேரத்தில பார்த்து உங்களுக்கு என்ன அத்தனை கால்...” 

சாத்வீகன் சொல்லவில்லை, எல்லாம் ஃபேக் கால், அவரே சொல்லி எற்பாடு செய்தது என்று.

(’அமுதம்’ மே 2015 இதழில் வெளியானது)

Tuesday, December 13, 2016

அவள் - (கவிதைகள்)


351.
எத்திசையும் பறந்திட
எனக்குள் நீ
ஓர் ஆகாசமாய்...

352.
ரோஜாவும் மல்லிகையும் எனில்
எனக்குக் குழப்பம்
முதலிடம் வழங்குவதில்.
ரோஜா, மல்லிகை, நீ - எனில்
குழப்பமில்லை.

353.
வீசாத காற்று
பேசாத நீ.

354.
உன் கண் எழுதும் சித்திரங்களைக்
காற்றில் படிக்க முயலுகிறேன்.

355.
ஆயிரம் ஜன்னல்களைச்
சாத்த வேண்டியிருக்கிறது
அரை நிமிடம் உன்னை 
நினைக்காமலிருக்க.

356.
தொலைவில் நீ செல்ல செல்ல
உன் பிம்பம் மனதில்
பெரிதாகிறது.

357.
நான் 
உன் இனிய பக்கம்.
நீ 
என் இனிய புத்தகம்..

358.
நினைவுகளின் எல்லையில் 
நீ நிற்பதால்
எல்லையற்றுப் போனது 
நினைவு.

359.
திடுக்கிட்டு எழுகிறேன்,
மனதில் நீ அசையும் ஓசை.

360.
வெகு தூரத்தில் நாம்
பக்கத்தில் நம் இதயங்கள்.

><><

Sunday, December 4, 2016

நல்லதா நாலு வார்த்தை... 76


’ஏற்றுக் கொள்ளலில் மட்டுமே
வீற்றிருக்கமுடியும் 
மகிழ்ச்சி.’
- George Orwell
('Happiness can exist only in acceptance.')
<>

'ஒவ்வொரு மனிதரின்
நினைவுப் பெட்டகமும்
அவரின் பிரத்தியேக
இலக்கியம்.
- Aldous Huxley
('Every man's memory is his private literature.')
<>

'விஷயங்கள் நம்பிக்கைகளாக
ஆரம்பிக்கின்றன,
பழக்கங்களாக முடிகின்றன.'
- Lillian Hellman
('Things start out as hopes and end up as habits.')
<>

'ஆனால் வளர்ந்து வயது முதிரும் காலமோ
கற்றுக் கொடுத்து விடுகிறது
அனைத்தையுமே.'
- Aeschylus
('But time growing old teaches all things.')
<>

'எத்தனை வியப்பான விஷயம்!
உலகை முன்னேற்றுவது
என்று இறங்கிவிட்டால்
ஒரு கணம்கூடக்
காத்திருக்க வேண்டியதில்லை யாரும்!'
- Anne Frank
('How wonderful it is that nobody need wait a
single moment before starting to improve the world.')
<>

'விவேகிகளின் துரதிர்ஷ்டம்
முட்டாளின் வளமையைவிட
மேலானது.'
- Epicurus
('The misfortune of the wise is better than
the prosperity of the fool.')
<>

'அடுத்தவருக்கு நீ செய்யும் 
ஆகப் பெரிய நன்மை
அவருடன் உன் செல்வத்தைப்
பகிர்ந்து கொள்வதல்ல;
அவரது செல்வத்தை 
அவருக்குத் தெரியப்படுத்துவதே.'
- Benjamin Disraeli
('The greatest good you can do for another is not
just to share your riches but to reveal to him his own.'
<>

'கவனமாக இருக்கவேண்டும் நீங்கள்,
ரொம்பக் கவனமாக இருப்பதைப் பற்றி.'
<>
- Beryl Pfizer
('You have to be careful about being too careful.')
<>

எதிர்ப்பு அருகிய பாதை
தோற்பவனின் பாதை.'
- H G Wells
('The path of least resistance is the path of the loser.)
<>

'நேர்மையான விமரிசனம் என்பது
எடுத்துக்கொள்ள சிரமமானது,
குறிப்பாக உறவினரிடமிருந்து,
நண்பரிடமிருந்து, தெரிந்தவரிடமிருந்து,
அல்லது தெரியாதவரிடமிருந்து.'
- Franklin P Jones
('Honest criticism is hard to take, particularly from
a relative, a friend, an acquaintance or a stranger.')

><><><