அன்புடன் ஒரு நிமிடம் - 59
வீட்டுக்குள் நுழைந்ததும் நுழையாததுமாகக் கேட்டார் ராகவ்.
"என்னடா நடந்திச்சு? உன் ஃ ப்ரண்ட் நாகராஜ் தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டு சோகமா வெளியே போகிறான்?"
கிஷோர் முகத்திலும் வருத்தமே. "என்கிட்டே நல்ல திட்டு வாங்கிட்டு போறான், அதான்!" சொன்னான் நடந்ததை.
"பின்னே என்ன மாமா, போன வாரம் என் குழந்தைக்கு பிறந்த நாள் ஃபங்க்ஷன் நடத்தினோம் இல்லையா? அதுக்கு எங்கப்பா அம்மாவை நான் ஏன் கூப்பிடலைன்னு என்கிட்டேயே வந்து கேட்கிறான். இப்படி ஆகிட்டேயேடான்னு என்னை குத்தம் சொல்றான்."
"அடடா, அப்படியா கேட்டான்? நீ கூப்பிட்டதுக்கு அவங்கதானே உங்கப்பாவுக்கு அன்னிக்கு ஒரு மீட்டிங்க்ல பேச வேண்டியிருக்கு,அம்மா,அப்பா ரெண்டு பேரையுமே அவங்க அழைச்சிருந்தாங்கன்னு சொல்லி, நீ நடத்துடா, அப்புறமா ஒரு நாள் நாங்க வந்துக்கறோம்னு உன்னை வற்புறுத்தினாங்க?..தெரியாதா அவனுக்கு?""
"ரெண்டு மாசம் அவன் இங்கே இல்லை. நேத்திக்கு வந்தவன் ரயிலில், என் கூட வேலை செய்யற ரகுராஜைப் பார்த்திருக்கான். அவர் சொன்னாராம், நான் அப்பா அம்மாவைக் கூப்பிடலைன்னு. இவன் அதை நம்பியிருக்கான். யார்கிட்டேயும் விசாரிக்காமல் நேரே என்கிட்டே வந்து ஏண்டா, அவங்க இல்லாம அவங்க பேரனோட பிறந்த நாள் விழாவை நடத்த எப்படி மனசு வந்ததுன்னு கேட்டான். எப்படி இருக்கும் எனக்கு?"
"த்சொ த்சொ," என்றவர்,"சரி சரி, உன்கிட்டேதானே வந்து கேட்டான், நீ விளக்கிவிட்டுப் போகவேண்டியதுதானே?"
'அப்படி கேக்கலாமா? இவன் என்னோட எத்தனை வருஷப் பழக்கம்? எத்தனை நெருங்கின நண்பன்? இன்னொருத்தர் சொன்னதை வெச்சு என்னை எப்படி எடை போடலாம்? அதை கன்ஃபர்ம் பண்ணாம எப்படி கேட்கலாம்? அதான் நல்ல விட்டேன் டோஸ்!"
அவனை நோகடித்திருந்த நியாயத்தின் ஒரு பக்கம் அவருக்கு விளங்கிற்று. இருந்தாலும்...
"அவன் பண்ணினது தப்புதான். நீ சொல்றது சரிதான்," என்றவர், "அடடா, போன மாசம் இதே தப்பை நானும் உன்கிட்டே பண்ணிட்டேனே?" என்றார்.
"நீங்களுமா? போனமாசம்...?" யோசிக்கலானான்.
"அதாண்டா, போன வருஷம் நீ படிச்ச என்ஜினீயரிங் காலேஜுக்கு ஒரு அட்மிஷன் விஷயமா போனேனே, நினைவிருக்கா? அப்ப அங்கே நீலகண்டன்னு உன் பழைய ஆசிரியர் , கிஷோரா, அவன் காலேஜிலேயே பெஸ்ட் ஸ்டுடென்டாக்கும்னு சொன்னாரே, அதை அப்படியே வந்து உன்கிட்டே சொல்லி கைகுலுக்கினேனே..."
'ஆமாமா..." இவர் எங்கே வருகிறார்?
"மிஞ்சிப்போனா நாலு வருஷம் உன்னைத் தெரியும் அவருக்கு. ஆனா எனக்கோ பிறந்ததிலேயிருந்து! அவர் சொன்னதை அப்படியே நம்பிடாம மேலும் நாலு வாத்தியார்கிட்டே கேட்டு நிச்சயம் செய்துக்காம... சரி, நான்தான் மடையன், நீயாவது? இப்ப உன் ஃப்ரண்ட் பத்தி இப்படிக் கேக்கிற நீ அப்ப என்கிட்டே, ஏன் மாமா, விசாரிச்சு கன்ஃபர்ம் செய்துக்காம வந்து கைகுலுக்கறீங்களேன்னு கேட்கலையே?"
"நீங்க சொல்றதைப் பார்த்தா.."
"உம, ஆரம்பி, உன் கச்சேரியை!" என்று தலை குனிந்தார் அவர். சிரித்தபடியே போனை எடுத்தான் நண்பனிடம் சாரி சொல்ல.
(’அமுதம்’ நவம்பர் 2013 இதழில் வெளியானது)
(படம்- நன்றி: கூகிள்)
6 comments:
கச்சேரி களைகட்டுகிறது..!
அருமை
மனத்தாபத்தை முளையிலேயே களையும் வித்தையைக் கற்றுக்கொடுத்த ராகவ் மாமாவுக்கும் அழகான கதை மூலம் வாழ்வியல் பாடத்தைக் கற்றுத்தந்த தங்களுக்கும் மனமார்ந்த பாராட்டுகள்.
அவரது தவறை சுட்டிக் காட்டிய விதம் மிக மிக அருமை.
உணர வைத்த விதம் வெகு ஜோர்...!
உணர வைக்கும் அறிவுரைகளே உயர்ந்து நிற்கும். அருமை!
Post a Comment
உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!