Sunday, February 16, 2014

கிடைக்க வேண்டியது....

 
அன்புடன் ஒரு நிமிடம் - 54
 கிஷோருக்கு வருத்தமான வருத்தம். அந்த அவன் மிக மிக எதிர்பார்த்த பிரமோஷன் கிடைக்கவில்லைநழுவிப் போய்விட்டது.
எத்தனை நிச்சயமாக இருந்தான்? எல்லா வகையிலும் அதற்கான தகுதியை வளர்த்துக் கொண்டு  வந்தவனுக்கு, எல்லா பிராஜெக்டுகளிலும் வெற்றியை அள்ளிக் கொண்டு வந்தவனுக்கு ஏமாற்றத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
ஒரு வாரமாயிற்று அவன் சரியாகச் சாப்பிட்டு. ஒழுங்காகத் தூங்கி. யாரோடும் சகஜமாகப் பேசி.

யாழினியோடு கூட.  

ராகவ் ஒரு முறை போன்  செய்த போதும் சரியாகப் பேசாமல் அவர் யாழினியிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டியதாயிற்று காரணத்தை.
இந்த சூழ்நிலையில் கார் வேறு மக்கர் செய்ய ஆரம்பித்திருந்தது. என்னவோ ரிப்பேர். ராகவ்  கொஞ்சம் விஷயம் தெரிந்தவர். அவ்வப்போது அதில் நேரும் சங்கடங்களை ஆராய்ந்து என்ன பண்ணணும்  என்று ஐடியாக்கள் தருபவர் என்பதால் அவரிடம் போக நேர்ந்தது.

போனால்...

"அப்படியே விட்டிட்டுப் போ. அப்புறமா பார்க்கிறேன். இப்ப மூட் இல்லை," என்றார். முகத்தைத் தொங்கப் போட்டபடி வாட்டமாக இருந்தார். தன்னைவிட மோசமாக இருப்பார் என்று எதிர்பார்க்கவில்லை.
"என்ன ஆச்சு மாமா?" கேட்காமல் இருக்க முடியவில்லை.

"ஒண்ணுமில்லேடா!" சிரித்தார் தீனமாக. "ரெண்டு மூணு நாளாக ஒரே யோசனை. என்னை நினைச்சு எனக்கே வெட்கமா இருக்குடா!"

"எதனால் மாமா அப்படி?"

'போன வாரம் ஒரு தகவல் கட்டுரை படிச்சேன். இந்த உலகத்தில் கிடைக்கிற மொத்த செல்வங்களின் அளவு பற்றி விலாவாரியாக எழுதியிருந்தாங்க. அதை அப்படியே பகிர்ந்து அளித்தால் சராசரியா ஒரு மனிதனுக்கு என்ன அளவு கிடைக்கும்னு கணக்குப் போட்டுப் பார்த்தேன். அந்த அளவோட எனக்கு,  ஒரு மனுஷனான எனக்குக் கிடைச்சிருக்கிற சவுகரியங்களை ஒப்பிட்டுப் பார்த்தேன். பார்த்ததிலேயிருந்து ஒரு அயர்ச்சிசராசரிக்கும் ஐம்பது மடங்கு எனக்கு கிடைச்சிருக்கு. என்னைக் கொஞ்சம் நெளிய வெச்சிட்டது அது. அப்படி பெறுவதற்கு எனக்கு அடிப்படையில என்ன  தகுதி இருக்கு? I felt ashamed. Very much!"

புள்ளி விவரங்களை அடுக்கி அவர் பேசிக்கொண்டே போக...அவருக்கு என்ன பதில் சொல்ல என்று இவனுக்குத் தெரியவில்லை.
"என்ன மாமா இது இதுக்குப் போய் ஆராய்ச்சி பண்ணிட்டு? அப்படிப் பகிர்ந்தளித்தால் நமக்குக் கிடைக்க வேண்டிய அளவுக்கு ரொம்ப அதிகமாவே அள்ளி வழங்கியிருக்கிற ஆண்டவனுக்கு மகிழ்ச்சியோடு ஆனந்தத்தோடு நன்றி சொல்றதை விட்டிட்டு...?"
அவரை அமைதிப் படுத்துவது லேசான காரியமாக இருக்கவில்லை.

ஆனால் அரை மணி நேரத்துக்குப் பின் வீடு திரும்பிய கிஷோரிடம் பழைய கலகலப்பு திரும்பியிருந்ததைப் பார்த்து யாழினிக்கு ஆச்சரியம் தாங்கவில்லை.
(’அமுதம்’ அக்டோபர் 2013 இதழில் வெளியானது.)
<<<>>>
(படம்- நன்றி: கூகிள்)

8 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

தானே உணர்ந்த இருகோடுகள் ஐடியா...!

குட்டன்ஜி said...

மன நிறைவு என்பது எளிதில் வருவதில்லையே!

கவியாழி said...

எப்படியோ சந்தோசமாக இருந்தால் சரி

ADHI VENKAT said...

கிடைக்க வேண்டிய நேரத்தில் எல்லாம் கிடைக்கும்..

இராஜராஜேஸ்வரி said...

கிடைக்க வேண்டிய உற்சாகம்
கிடைத்துவிட்டதே..!

ராமலக்ஷ்மி said...

நல்ல கதை.

இராய செல்லப்பா said...

இல்லாததை எண்ணி வருந்துவதைவிட, இருப்பதை எண்ணி மகிழ்வது எவ்வளவு உயர்வான சிந்தனை!

வெங்கட் நாகராஜ் said...

நல்ல கதை.....

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!