Wednesday, January 15, 2014

கண்டு கொள்ளாத அறிவு...


அன்புடன் ஒரு நிமிடம் - 52

"பாலைக் காய்ச்சி ஒரு வாரம் ஆச்சு, இன்னும் வந்து பார்க்கலை நீ!"   திட்டித் தீர்த்துவிட்டான் நண்பன். இதோ இன்றைக்கே என்று புறப்பட்டுவிட்டான் வினோத், மூன்றே மாதத்தில் புது வீட்டைக் கட்டி முடித்துவிட்ட தியாகு தம்பதியை மனதுக்குள் வியந்துகொண்டு.
கிளம்பும்போதே யமுனாவுடன் யுத்தம்.   இன்றைக்கும்!
ரெண்டு நாளைக்கு ஒரு தகராறு முளைத்துக் கொண்டே இருக்கும். 'இதை அங்கே வைக்காதீங்க!'... 'அதை என் ஏன் எனக்கு சொல்லலே?'... நாலு தடவை கேட்டும் வாங்கி வராத டிரஸ்....
என்ன நமக்கு மட்டும் இப்படி....?
சிந்தனையோடே பைக்கை ஓட்டிச் சென்றான். 
"இப்பதான் உன் வாட்சில் பத்து  மணி ஆச்சா?" கேட்டான் தியாகு பன்னிரண்டு மணிக்கு.
காத்திருந்த நண்பனைக் கண்டதும் மனதிலிருந்த ஆத்திரத்தை கொட்டினான்.
"என்ன பண்றதுடா, வழக்கம் போல வீட்டில தகராறு...." நடந்ததை எல்லாம் சொல்லி முடித்தான், "எப்பவும் இப்படித்தான் நடக்கிறது. பழகிப் போச்சு. என்ன ஆச்சரியமாப் பார்க்கிறே? நீயெல்லாம் எப்படித்தான் சமாளிக்கிறியோ?"
"சரி சரி, வீட்டை சுத்திப் பார்த்து சொல்லு எப்படி வந்திருக்குன்னு..." இழுத்துப் போனான்.
சும்மா சொல்லக் கூடாது. பார்க்கப் பார்க்க ஒவ்வொரு அம்சமும்  அருமை அருமை என்று கூவிற்று வீடு.
பின்பக்கம் வந்தபோது அந்த சிறிய தண்ணீர்த் தொட்டி. சற்றே பழைய பாணியில்  கொஞ்சமும் அந்த இடத்துக்குப் பொருத்தமில்லாமல்...
'இது எண்டா இங்கே? அழகாய் அமைச்சிருக்கிற சின்ன கார்டன் ஸ்பேசில் இடைஞ்சலாய்...?"
"இதுவா? ஏதோ  மீன் வளர்க்கப் போகிறாளாம் அவள். கஷ்டம், நல்லாயிருக்காதுன்னு சொன்னேன். கேட்கலே. ஒகே சொல்லிகிட்டேன் எனக்கு."
"உனக்கா?"
"ஆமா. என்னைப் பொறுத்த வரை இது நான் கண்டு கொள்ளாத அவளின் அறியாத்தனம்."
அதெப்படி கண்டு கொள்ளாமல் இருக்க முடியும்? இவனுக்குக் கோபமே வராதா? சுத்த சோப்ளாங்கி. மனதில் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை இவனால். 
"மேற்கொண்டு பேசினால் பெரிசா சண்டை வரும்னு  கண்டுக்காம விட்டிட்டியாக்கும்?"
"அதெப்படி, பேசணும்னு  நினைக்கவே இல்லியே?"
புரியவில்லை இவனுக்கு. அந்த அளவுக்கு பயப்படறானா? அந்த அளவுக்கு அடிக்கடி சண்டைகள் வருமாயிருக்கும். "ஏம்பா உங்களுக்குள்ளே தினம் ரெண்டு சண்டை வருமா?"
சிரித்தான். "மாசம் ஒண்ணு வந்தாலே அபூர்வம்."
"அதெப்படி அதெப்படி? நம்ப முடியலியே? என்னடா  அந்த டெக்னிக்? ஒற்றுமை ரகசியம்?"
ஒன்றும் பேசாமல் "வா, வந்து முன்கட்டைப் பாரு," என்று அழைத்துப் போனான்.
வீட்டின் இடது பக்க வெளியில் வந்தபோது...
அந்த ஊஞ்சலைப் பார்த்தான். அதை அவனால் கொஞ்சமும் சகிக்க முடியவில்லை. ஏறி ஆடுவதற்கு தோதாக ஏரியா கொஞ்சமும் இல்லாமல்...  பலகையும் ரொம்பவே ஒல்லியாக... இதுவும் அவள் விருப்பம் போல. இவன் வாயையே திறந்திருக்க மாட்டான்.
அந்த நிமிடம் செல் ஒலித்தது. ஆபீசில் இருந்து அவசர அழைப்பு. "டேய்  என் ஹெல்மெட்டை உள்ளே மேஜை மேல வெச்சேன், எடு.  இதோ ஆபீசில் என்னன்னு கேட்டிட்டு வந்திடறேன்!"
வாசலுக்கு வந்து பைக்கை உதைத்தான்.
ஹெல்மெட்டை நீட்டிய தியாகுவிடம் சும்மாவேனும் கேட்டான். "ஆமா, அதென்னடா அந்த ஊஞ்சல், மகா  கேவலமாய்?" பதிலைக் கேட்க ஆர்வமில்லாத குரலில்.
இவன் கியரைப் போட அவன் சொன்னான்  
"அதுவா? அது அவள் கண்டு கொள்ளாத என்னோட அறியாத்தனம்!"
சட்டென்று  பைக் விரைய, பட்டென்று பிடிபட்டது அந்த ஒற்றுமை ரகசியம்! 

('அமுதம்' செப்டம்பர் 2013 இதழில் வெளியானது.)
<<>>
(படம் - நன்றி: கூகிள்)

17 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

இருவரின் கண்டு கொள்ளாத அறியாத்தனம் மிகவும் அருமை... வினோத் தம்பதிகளும் "புரிந்து" கொண்டால் சரி... அருமையான கதைக்கு வாழ்த்துக்கள்...

திண்டுக்கல் தனபாலன் said...

தங்களுக்கும், குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், தித்திக்கும் இனிய தைப் பொங்கல், உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

வை.கோபாலகிருஷ்ணன் said...

அருமை. பாராட்டுக்கள்.

//('அமுதம்' செப்டம்பர் 2013 இதழில் வெளியானது.)//

வாழ்த்துகள்.

ADHI VENKAT said...

சட்டென்று எங்களுக்கும் புலப்பட்டது ஒற்றுமையின் ரகசியம்....

பாராட்டுகள்... வாழ்த்துகள்..

இன்று எனது பக்கத்தில்

http://kovai2delhi.blogspot.in/2014/01/blog-post_16.html

ரிஷபன் said...

ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்கும் போது அங்கே வாழ்க்கை இனிமையாகி விடுகிறது.. யோசித்துப் பார்த்தால் அற்ப விஷயங்களில் முரண்படும் போதுதான் பிரிவும் வலியும் வருகின்றன.. அருமையான கருத்துடன் கதை.

கவியாழி said...

வாழ்த்துக்கள நண்பரே

”தளிர் சுரேஷ்” said...

விட்டுக்கொடுப்பதில் தான் இருக்கிறது ஒற்றுமை! என்பதை அழகாக சொன்ன கதை! அருமை! வாழ்த்துக்கள்!

தி.தமிழ் இளங்கோ said...

உங்கள் சிறுகதையைப் படிப்பதற்கு சற்றுமுன்னர்தான் எனது கட்டுரை ஒன்றிற்காக கூகிளில் தேடியபோது படித்த பொன்மொழி இது. நினைவுக்கு வந்தது.

A GOOD MARRIAGE WOUD BE BETWEEN A BLIND WIFE AND A DEAF HUSBAND - MICHEL DE MONTAIGNE

Yaathoramani.blogspot.com said...


"அதுவா? அது அவள் கண்டு கொள்ளாத என்னோட அறியாத்தனம்!"
சட்டென்று பைக் விரைய, பட்டென்று பிடிபட்டது அந்த ஒற்றுமை ரகசியம்!

சுருக்கமாக ஆயினும் மிக அருமையாக

பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

இராஜராஜேஸ்வரி said...

சட்டென்று பைக் விரைய, பட்டென்று பிடிபட்டது அந்த ஒற்றுமை ரகசியம்!

கண்டுகொள்ளாமல் விடப்படும் அறியாத்தனம் ரசிக்கவைத்தது ..

எங்களையே கண்ணாடியியில் பார்த்துக்கொள்வது போல..!

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை

கோமதி அரசு said...

"அதுவா? அது அவள் கண்டு கொள்ளாத என்னோட அறியாத்தனம்!"
சட்டென்று பைக் விரைய, பட்டென்று பிடிபட்டது அந்த ஒற்றுமை ரகசியம்! //
அருமை.
விட்டுக் கொடுத்தலில் இருக்கிறது ஒற்றுமையின் ரகசியம்.

கீதமஞ்சரி said...

கண்டுகொள்ளாத அறியாத்தனங்களால் வாழ்க்கை ருசிக்கிறது. ஒற்றுமை பலப்படுகிறது. அருமையான கரு. பாராட்டுகள் ஜனா சார்.

ராமலக்ஷ்மி said...

அறியாத்தனங்களைக் கண்டு கொள்ளாது விடும் அன்பின் வலிமையை அழகாகப் புரிய வைத்திருக்கிறீர்கள்.

வெங்கட் நாகராஜ் said...

விட்டுக் கொடுத்தலில் இருக்கும் வாழ்க்கை ரகசியம்.....

நல்ல பகிர்வு.

கீதமஞ்சரி said...

வணக்கம். இன்றைய வலைச்சரத்தில் தங்கள் தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நன்றி.
http://blogintamil.blogspot.com.au/2014/01/blog-post_23.html

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

மிக அருமை..புரிதலும் விட்டுகொடுத்தலும்..நல்லதொரு சிறுகதை

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!