அன்புடன்
ஒரு நிமிடம் - 42
கொண்டு வைத்த காபி
ஆறிப்போனது. கண்ணில் கவலைக் கிரணங்கள் கொஞ்சமும் குறையவில்லை. அத்தனை
அதிகாலையிலேயே தேடி வந்திருந்த நிமலனின் சங்கடம் நல்லாவே விளங்கிற்று
சாத்வீகனுக்கு. அவரது நண்பனின் பேரன்.
“…பத்து வருஷம்
வெளிநாட்டில எல்லாரையும் பிரிஞ்சிருந்துட்டு திரும்பின எனக்கு இப்படி எங்க
குடும்பம் ஆளுக்கொரு பக்கம் முகத்தைத் திருப்பிட்டு,
ஒருத்தரை ஒருத்தர் பகையா நினைச்சுட்டு இருக்கிறதைப் பார்த்ததும் எப்படி இருக்கும்
சொல்லுங்க. ஒரே அலங்கோலம். அப்படியே தலையில கையை வெச்சிட்டு உட்கார்ந்திட்டேன்.
பெரியண்ணா என்னடான்னா யாருமே என் பேச்சை மதிக்கிறதில்லேன்னு விலகிப் போயிட்டார், திட்டறார். அக்கா கணவருக்கும் என்
தம்பிக்கும் ஒரு கல்யாண வீட்டில வெச்சு வாய்த்தகராறு முற்றி கைகலப்பில முடியப்போய்
விருந்தாளிகள் வந்து விலக்கி... அக்கா என்னன்னா தன் மகள் கல்யாணத்தில் தங்கை
அதிகம் பங்கெடுக்கலேன்னு எரிச்சலாகி விரோதம் வளர்த்து... மாமாவுக்கும் அம்மாவுக்கும் சுத்தமாப்
பிடிக்கிறதில்லே சித்தப்பாவுக்கு எல்லாரோடும் பகையாகி,. எங்க குடும்பத்துக்கும் இவங்களுக்கும்
எந்தத் தொடர்பும் இல்லேன்னு சொல்லிட்டு
இருக்காரு...”
இன்னும்
விலாவாரியாக அவன் பேசப்பேச, சரிதான், அவன் அயர்ச்சியின் விளிம்பில்
இருப்பதில் எந்த வியப்புமில்லை. என்று தோன்றிற்று.
“ஒரு காலத்தில் உங்க
குடும்பத்தை, குடும்ப ஒற்றுமைக்கு
உதாரணமா சொல்வாங்க...”
“அதெல்லாம் போச்சு
தாத்தா... நிறைய தகராறு நடந்துவிட்டது. ஆளுக்கொரு பக்கம் கறுவிட்டு திரியறாங்க.
இப்ப என் பிரசினை என்னன்னா இனி எப்படி இவங்களை ஒண்ணு சேர்க்கிறதுங்கிறதுதான்!”
வாசலில்
ஜனனி ஒவ்வொரு புள்ளியாக இட்டு கோலம் போட்டுக் கொண்டிருந்ததைப் பார்த்தபடியே தலை
குனிந்து பேசினான். அவனுக்கு சொல்ல
வேண்டியதை எப்படி சொல்வது என்ற யோசனை ஓடிற்று இவர் மனதில்.
“கொஞ்ச நேரம் இதைப்
பாரேன்.” நிமிர்ந்தான்.
“உனக்கான பதில் இதில்
இருக்கிறது.”
“என்ன சொல்றீங்க
தாத்தா?”
“அவ்வளவு பெரிய
கோலத்தை அவள் எப்படிப் போட்டு முடிக்கிறா பார்த்தியா? முதல்லே ஆங்காங்கே சில புள்ளிகளை
வைக்கிறா. அப்புறம் அதைக் கோடுகளால் சேர்க்கிறா. இப்படி ஒரு பகுதி கோலம்
உருவாகுது. அடுத்து அதன் நீட்சியா ஒரு திசையில் சில புள்ளிகள். அதை சேர்த்தல்.
அப்படி மற்ற திசைகளிலும். சேர்க்கச் சேர்க்க அடுத்த கட்டங்கள் உருவாகிப் படர்ந்து
அவ்வளவு பெரிய கோலம் மெல்ல உருவெடுக்குது.”
அவன்
விழித்தான்.
“நீ இப்ப போட
வேண்டியதும் இப்படி ஒரு கோலம்தான். முதல்ல சில புள்ளிகளை வை.”
“புள்ளிகள்?”
“ஆமா. அவங்களை
ஒருங்கிணைக்கக்கூடிய புள்ளிகள்.”
“அதென்ன மாதிரி?”
“இத பாரு, உன் தங்கை மகள் கணக்கில் வீக். உன்
சித்தப்பாவோட நண்பர் பிரபல கணக்கு டீச்சர். அவரிடம் சித்தப்பா வழியா இவனுக்கு
ட்யூஷன் ஏற்பாடு பண்ணினா அது ஒரு புள்ளி. உன் அத்தானுக்கு நண்பர் வட்டம் பெரிசு.
அதில சில பேருக்கு பெரியண்ணாவோட இன்ஷூரன்ஸ் கம்பெனியில் ஆளுக்கொரு பாலிசி
எடுத்துக் கொடுத்தால் அது ஒரு புள்ளி. அம்மாவோட அடுத்த காசி டூரை மாமா ஃபிரண்ட்
நடத்தற டிராவல் ஏஜென்சியில் புக் பண்ணினா அது ஒண்ணு. இன்னும் நீயே யோசிச்சா
தோணுகிற இப்படிப்பட்ட புள்ளிகள். அதை முதல்ல வை. அப்புறம் கோடுகளை இழு. அதாவது
இப்படி தொடர்பு ஏற்பட்டதும் அதனால ஒருத்தரைப் பத்தி ஒருத்தர் சொல்ற நல்ல
வார்த்தைகளை மட்டும் அந்த நபர்களிடம் சொல்கிறது தான் அது. அப்புறம் அடுத்த செட்
புள்ளிகள். கோடுகள்.... இப்படியே அந்தக் கோலத்தைப் போட்டு முடிச்சிடலாம் நீ.”
மனக் கண்ணில் சுபம் தெரிய, “தாங்க் யூ தாத்தா!” என்றான் அவன்.
('அமுதம்' மே 2013 இதழில் வெளியானது.)
<<>>
(படம்- நன்றி: கூகிள்)