அன்புடன் ஒரு நிமிடம் - 33
உருப்படியான விஷயம்...
எந்த விஷயத்துக்காக மாமா அத்தனை அலட்டி, தன்னையும் விரட்டி
உடனடியாக போய் அறிவுரை சொல்லத் தொடங்கினரோ அந்த விஷயத்தை அவரே இப்படி கைகழுவுவார்
என்று கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை கிஷோர். சே, சொதப்பிட்டாரே!
சாயங்காலம் கிஷோர் வந்து, “மாமா, நம்ம மகேஷ்
அவங்கப்பாவை முதியோர் இல்லத்தில கொண்டு போய் சேர்க்க எல்லா ஏற்பாடு பண்ணிட்டான்!” என்று சொன்னதும்
அவர் பதைபதைத்ததைப் பார்க்க வேண்டுமே?
கையிலிருந்த கண்ணாடித் டம்ளரை நழுவ விட்டு... 'ஓ, மை!' என்றொரு அலறல் இட்டு... “சேர்த்திட்டானா?”
“இன்னும்
இல்லை. நாளைக்கு...”
“கிளம்பு, கிளம்பு, உடனே அவனைப்
பார்த்து எடுத்து சொல்லி அப்படி செய்துடாம தடுக்கணும்!”
“யெஸ், நானும் அவனைப்
பார்த்துப் பேசி அவன் மனசை மாத்தணும்னுதான் உங்களிடம் விஷயத்தை சொல்லி உங்களையும்
அழைச்சிட்டுப் போக வந்தேனாக்கும்!”
அதற்குள் அவர் காரை ஸ்டார்ட்
பண்ணியிருந்தார்.
போன இடத்திலும், “வாங்க, உட்காருங்க, பிரேமா, ஸ்னாக்ஸ்
எடுத்திட்டு வா! எத்தனை நாளாச்சு உங்களைப் பார்த்து!” என்றவனை மேற்கொண்டு
ஒரு வார்த்தை பேச விடவில்லை.
“அப்பா
விஷயமா நீ ஏதோ முடிவெடுத்திருக்கேன்னு கேள்விப்பட்டேன் அதான் ஓடிவந்தேன். நான்
சொல்லப் போறதைக் கொஞ்சம்கவனி...”
கிடு கிடுவென்று ஆரம்பித்தார்.
அதற்குள் பிரேமா பிளேட் நிறைய காரா
பூந்தி கொண்டு வந்து வைத்தாள்.
அவர் ஒவ்வொரு பாயிண்டாக அழுத்தமாக சொல்ல
ஆரம்பிக்க கிஷோரும் கூடவே தன்னுடையவற்றை எடுத்து இயம்பலானான். மகேஷ் இவர்கள்
சொன்னதை கேட்டு மௌனமாக தலையசைத்துக் கொண்டிருந்தான்.
நாலைந்து நிமிஷம் போயிருக்கும். மாமா
பேச்சை குறைத்துவிட்டு,
கிட்டத்தட்ட நிறுத்திவிட்டு சுவாரசியமாக காரா பூந்தியை சாப்பிட்டுக்
கொண்டிருந்தார். அவர் ரசித்து மென்று தின்பதைப் பார்த்து இவனுக்கு பற்றிக் கொண்டு
வந்தது. காட்டிய ஜாடையையோ விட்ட முறைப்பையோ அவர் கண்டுகொண்டதாக தெரியவில்லை.
அதோடு ரசித்து ரசித்து சாப்பிட்ட விதம்
இருக்கிறதே... பல்லைக் கடித்துக் கொண்டு கிஷோர் தனக்குத் தோன்றிய அறிவுரைகளைத்
தொடர்ந்தான்,
நச்,
நச்சென்று அடுக்க ஆரம்பித்தவர் சைலண்டாக ரிட்ரீட் ஆகிவிட்ட எரிச்சலை
விழுங்கிவிட்டு! (‘வீட்டுக்கு
வரட்டும்,
பேசிக்கிறேன்!’)
அவர் பேச்சை நிறுத்தியதை விட அந்த காரா
பூந்தியை சுவையாக மென்று தின்றதை அவனால் சற்றேனும் ஜீரணிக்க முடியவில்லை.
இவன் சொன்னதையெல்லாம் கேட்டுவிட்டு
மகேஷ்,
“சரி, நான் நீங்க சொல்றதை
யோசிச்சிட்டு என் முடிவை எடுக்கிறேன்.”
என்று முடித்தபோது,
மாமா தன் கவனத்தை காபியிலிருந்து அப்போதுதான் எடுத்திருந்தார்.
“ஏன்
அப்படி சொதப்பிட்டீங்க மாமா?
காரா பூந்தியைக் கண்டதே இல்லையாக்கும்?
சே!”
படபடவென்று பொரிந்து தள்ளினான்,
வீட்டுக்கு வந்ததும் வராததுமாய்.
பொறுமையாக அவன் திட்டை வாங்கிக்
கொண்டார். “அதிருக்கட்டும், உன்னை ஒண்ணு
கேட்கணும். நாளைக்கு காலையில் நீ உன் ஆபீசுக்கு போகும்போது உனக்கென அங்கே ரெண்டு
வேலைகள் காத்திருக்குன்னு வெச்சுக்க. ஒண்ணு நீ எத்தனை சிரமப் பட்டாலும் பலன்
எதுவும் நேராத ரகம். மற்றொன்று உருப்படியா நடக்கிற ஒரு வேலை. நீ எதை
தேர்ந்தெடுப்பே?”
“ரெண்டாவதைத்தான்.
சரி அதற்கும் இதற்கும்...?”
“சம்பந்தம்
இருக்கு. நானும் அதைத்தான் இங்கே செய்தேன். மகேஷ்கிட்ட கொஞ்சம் பேசின உடனேயே நீ
கவனிச்சியோ என்னவோ நான் கவனிச்சேன் அவன் காதுக்குள்ளே ஒரு அட்சரம் கூட நுழையலை.
ஒப்புக்கு தலையை மட்டும் ஆட்டிக் கொண்டிருந்தான்....”
“நானும்
கவனிச்சேன். ஆனா எதிர்த்து எதுவுமே சொல்லலியே அவன்?”
“எதிர்த்து
ஏதாவது கேட்டால்,
அட, நம்மை மடக்க
முயன்றால் கூட அவன் கொஞ்சமாவது யோசிக்கிறான்னு அர்த்தம். அதான் நான் நிறுத்திட்டேன்.”
கிஷோர் யோசித்தான்.
“என்ன
யோசிக்கிறே?”
“மிச்சம்
வைத்து விட்ட காரா பூந்தியைத்தான்!”
(‘அமுதம்’ பெப்ருவரி 2013 இதழில்
வெளியானது)
<<>>