Monday, December 31, 2012

இனிய 2013!




சென்றோடிற்றே பன்னிரெண்டு

செண்டோடிங்கே நின்றோமின்று

ரெண்டாயிரத்துப் பதின்மூன்று

கண்டானந்தம் பெறவென்று...


தொடங்கிடும் பதின்மூன்று

தந்திடட்டும் வரமொன்று

திசையெங்கும் அன்பென்று!



திக்கிறது பதின்மூன்று

உன்னதப் படுத்துவோம் அதை

உத்வேகத்துடன் முன்நின்று!



The gaiety and happiness
a new Day brings...

the joyful excitements
a new Week unveils...

the spectacular ideas 
a new Month lays out...

the myriad opportunities 
a new Year unfolds...

May you have more,
more of them in 2013!

Wednesday, December 26, 2012

தண்ணென்று ஒரு காதல்...



மையல் கொண்டவன் மனதில் தான் 

மையம் கொண்டிருந்ததறிந்துண்-

மையில் மகிழ்ந்து போன மயில்

தண்ணென்றிருக்கும் நீரையள்ளி

தன் நெஞ்சறிய அவன் மீதிறைத்து 

என்னென்னவோ என்றெழுந்த 

எண்ணங்களைப் பகிர்ந்தாள். 

<<>>

(ஓவியம்: ஓவிய மேதை மாதவன்)
நன்றி: வெங்கட் நாகராஜ் (அவர் தன் blog இல்
இந்தப் படத்தை கொடுத்து அதற்கான
கவிதைகளை வரவேற்றிருக்கிறார்.
http://www.venkatnagaraj.blogspot.com/2012/12/blog-post_24.html)   

Saturday, December 22, 2012

முயற்சிக்க ஒரு பயிற்சி


அன்புடன் ஒரு நிமிடம் - 23


முயற்சிக்க ஒரு பயிற்சி

ரைமணி நேரத்துக்கு மேலாயிற்று அவர் உள்ளே நுழைந்து. கிஷோர் அவரைக் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை. அத்தனை ஆழ்ந்திருந்தான் தான் செய்து கொண்டிருந்த வேலையில்.

என்ன நினைத்தாரோ ராகவ், தன் இருப்பை காட்டிக் கொள்ளாமலேயே அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார். ஆச்சரியம் எல்லை தாண்டிப் போய்க்கொண்டிருந்தது. என்ன ஒரு ஈர்ப்பு!

கிஷோர் டி.வி. பார்த்துக் கொண்டிருக்கவில்லை, ஃபேஸ்புக்கில் மூழ்கியிருக்கவில்லை. துணிகளை அயன் செய்துகொண்டிருந்தான், அவ்வளவுதான். ஆனால் அந்தக் காரியத்தில்தான்  என்ன ஒரு ஈடுபாடு!

உலர்த்திய ஆடைகளை ஹேங்கரோடு எடுத்து வந்து சோபாவில் ஒரு குழந்தையைப் போலக் கிடத்தியிருந்தான். ஒவ்வொரு சட்டை அல்லது பேண்டை எடுக்கும்போதும் அதை நெஞ்சோடு சேர்த்து வைத்து நீவி விட்டு பின் மெதுவாக ஹேங்கரிலிருந்து விடுவித்து, மேஜையில் பிங்க் செவ்வகமாக விரித்திருந்த விரிப்பில் படர்த்தினான்.

அந்த வரிசை! முதலில் காலர், பின் தோள் புறம், கைகள்அதுவே ஒவ்வொரு உடைக்கும் சரியான ஒரு வரிசையில், வேறெப்படி செய்தாலும் சரிவராது என்கிற மாதிரி கச்சிதமாக...

பக்கத்தில் அழகிய பௌலில் தண்ணீர் வைத்திருந்தான். வெல்வெட் போன்ற ஒரு சிறு துணி. அதை அவன் அதில் அமிழ்த்தி எடுத்த விதமே ஒரு தூரிகையை கலரில் முக்கியது போல மிருதுவாக...இதமாக தண்ணீரைத் தெளித்தது ஏதோ கல்யாண வரவேற்பில் பன்னீர் தெளித்த மாதிரி..., இஸ்திரிப் பெட்டியை முன்னோக்கித் தோய்த்தது பெருங்கடலில் கப்பல் செல்லுவது போல...

ஒவ்வொரு விஷயத்தையும் எப்படி அழகாக, லயித்து லயித்து செய்கிறான்! ஒவ்வொரு அசைவும் எத்தனை நளினமாக! எழும் ஒவ்வொரு சப்தமும் எத்தனை லயத்தோடு! வைத்த கண்ணை எடுக்கவில்லை அவர்.

கடைசி டீஷர்ட் வரை முடித்தபின்தான் மெல்லத்திரும்பினான். அட மாமா, எப்ப வந்தீங்க?”

இப்பதான் ஒரு முப்பது நிமிஷம்

ஆமா எங்கே வந்தீங்க?”

உன் மேட்டர்தான். அன்னிக்கு ஒரு சந்தேகம் சொல்லி வழி ஏதும் இருக்கான்னு கேட்டியே, அது பத்தித்தான் ஒண்ணும் ஐடியா தேறலேன்னு சொல்லிட்டு போக வந்தேன். என்றவர் ஆனா,” என்று சொல்லி நிறுத்தினார். இஸ்திரி போடறதை இத்தனை இஷ்டத்தோட இழைத்து  இழைத்து செய்கிற இளைஞனை நான் இதுவரை பார்த்ததில்லை.”

இந்த ஒரு விஷயம் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அயன் பாக்ஸைக் கையில எடுத்தேன்னா போதும் அப்படியே தன்னை மறந்துடுவேன்.

இப்ப ஒரு விஷயம் சொல்லட்டுமா? அன்றாடம் நீ எத்தனையோ வேலைகளை செய்ய வேண்டியிருக்கும். கஷ்டமான செய்யப் பிடிக்காத வேலைகள் தான் பெரும்பாலும் அதில் இருக்கும். ஆனா செய்தாகணும். இல்லையா? அப்படி ஒண்ணை எடுத்துக்க. ஒரு நிமிஷம் அதை உனக்கு ரொம்பவும் பிடித்த வேலையாக கற்பனை செய்துக்க. அதாவது அந்த விஷயம் இதோ இந்த அயனிங் மாதிரி உனக்கு மிகவும் பிடித்த வேலையாக இருந்தால் அதை எப்படி செய்வாயோ அந்த மாதிரி நினைத்துப் பார்த்து அப்படி ஒரு முறை செய்து பார். அப்படி செய்தால் கொஞ்ச தடவைகளில் எந்த வேலையுமே அதனோடு சுலபமாக ஒன்ற முடிகிறதாக மாறிவிடும்! ஏன், நாளடைவில் சுலபமாக செய்யக் கூடியதாகக் கூட ஆகிவிடும். ட்ரை இட்! அப்புறம் தாங்க்ஸ்! நீ கேட்ட விஷயத்துக்கு உன்னிடமிருந்துதான் எனக்கும் ஜஸ்ட் நௌ ஒரு விடை கிடைச்சது!

எரிச்சலும் விருப்பக் குறைவுமா இருக்கு, எப்படி என் முன்னாலுள்ள எல்லா வேலைகளையும் கடமைகளையும் முடிக்கிறது?’ என்பதுதான் அவன் கொஞ்ச நாள் முன்பு அவரிடம் கேட்டது.
 <<<>>>
('அமுதம்' அக்டோபர் 2012 இதழில் எழுதியது)


Monday, December 17, 2012

மார்கழி




மாதங்களில் நானென்று

மாதவன் சொன்ன

மார்கழி பிறந்ததின்று..

காலை அதிகாலையில்

களித்தெழுந்த மனம்

கனிந்து அவன்பால் உருக

நாடும் வீடும் சுற்றம்

நாம் உள்ளும் எல்லாரும்

நலமே பெற இறைஞ்சிற்று


வாசலிலே வண்ணக் கோலம்

வார்த்தையெலாம் ராம நாமம்

குளிர் பனியில் கத கதப்பு

கூடவே வரும் சுறு சுறுப்பு

வலம் வரும்போது மனதில்

இடம் பெறும் இதமொன்று

இறைவன் பதமே சதமென்று.

<<>> 

Friday, December 14, 2012

உள்ளீடு




தோசை வார்ப்பது லேசாயில்லை. 

எப்படி எப்படியெல்லாமோ

வார்த்துப் பார்க்கிறோம்

முழு திருப்தியான வடிவம்

வருவதேயில்லை

ஓரத்தில் சற்று வீங்கி

அல்லது கரிந்து

நடுவில் குழி விழுந்து

அல்லது உப்பலாகி 

ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு மாதிரி

ஆனால் எல்லா வடிவத்திலும்

இருந்து விடுகிறது ஒரு தோசை

வாழ்க்கையை மாதிரி.

<<>>






Friday, December 7, 2012

அவர் பங்கு...


அன்புடன் ஒரு நிமிடம் - 22

அவர் பங்கு...

முகத்தில் அசுவாரசியம் தெரிய உள்ளே நுழைந்த அந்த இளைஞனைப் பார்த்தான் அபிஜித். தாத்தா இருக்காரா? என்னைப் பார்க்கணும்னு சொன்னாரு. 

அழைத்துப் போனான். இவனை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே.. ஓ, அப்பாவோட ஃபிரண்ட் நீலகண்டனோட மகன் சம்பத் இல்லே இவன்? தாத்தா எதற்காக இவனை தேடியிருப்பார்?

ஆவல் பிடரியைப் பிடித்துத் தள்ள அறைக்கு வெளியே தயங்கினான்.

அடடே, வா வா! உற்சாகமாக வரவேற்றார் சாத்வீகன். பார்த்து எத்தனை நாளாச்சு! நல்ல வளர்ந்துட்டே. இந்த பிங்க் கலர் ஷர்ட் உனக்கு நல்ல மாட்சிங்கா இருக்கு.

அவரது பிரியமான வரவேற்பில் இவன் முகத்திலிருந்த எரிச்சல் கொஞ்சம் அகன்ற மாதிரி இருந்தது. ஏதோ கேட்கணுமே என்று, “லாப் டாப்பில் என்ன பார்த்துட்டிருக்கீங்க தாத்தா?” என்றான் சம்பத்.

நீதானே என் பொன் வசந்தம் ஆடியோ ரிலீஸ் ஃபங்ஷனைத்தான்... அற்புதமான மெலடிகளை என்ன அழகா மெருகு ஏற்றி பொருத்தமான வாத்தியங்களில குழைச்சுக் கொடுத்திருக்காரு இளைய ராஜா!

ஓர் ஆர்வம் எழுந்து  அவனும் அதைக் கவனிக்க இவர் தொடர்ந்து அந்தப் பாடல்களின் இசைக்கோர்வைகளின் விசேஷங்களை பற்றி அவனுடன் கொஞ்ச நேரம் பேசினார்.

அப்புறம் நான் என் ஏன் உன்னை வர சொன்னேன்னா.. என்று ஆரம்பித்தார்.

ஒண்ணுமில்லே என் ஸ்டுடண்ட் ஒருத்தர் மகன், பேரு வருண், உன் வயசு தான் இருக்கும்.  அவனுக்கு ஒரு ஐடியா கொடுத்தேன். ஆனா அந்தப் பையனுக்கு அது வொர்க் ஆகுமான்னு சந்தேகம். உன்னை மாதிரி சாப்ட்வேர் துறையில தான் வேலை அவனுக்கு. அதான் உன்கிட்டே அதைப் பத்தி கொஞ்சம் கேட்டுப் பார்த்துட்டு அவனிடம் மறுபடி பேசலாமேன்னு... ஒரு அரை மணி நேரம் ஆகும் பரவாயில்லையா உனக்கு? ஏதும் அர்ஜண்ட் வேலை?”

பரவாயில்லே, சொல்லுங்க.

அவர் சொல்ல ஆரம்பித்தார். ஒரு ஆன் லைன் படிப்பைப் பற்றி... இப்போது டெஸ்டிங் எஞ்சினீயராக இருக்கும் அந்தப் பையன் வருண் தான் வாங்கற சம்பளத்தில ஒரு குறிப்பிட்ட தொகையை சேமித்து அந்த கோர்சில் சேர்ந்து படிப்பதன் மூலம் ஐந்து வருடங்களில் தன் கரீயரில் எத்தனை உயரத்துக்குப் போக முடியும் என்று விலாவாரியாக விவரித்தார்.

சம்பத் சில குறுக்குக் கேள்விகள் கேட்டான். கொஞ்சம் யோசித்தான். அவனுக்கு அது நல்ல ஒரு வழி என்றே பட்டது. அப்படியே சொன்னான்.

அப்பாடா! என்றார் அவர். இனி தைரியமா அவனிடம் இதைப் பத்திப் பேசலாம்! தாங்க்ஸ்ப்பா! என்றவர் மறக்காமல் கேட்டார், “உன்னை ரொம்ப போரடிச்சிட்டேனோ?”

அதெல்லாம் ஒண்ணுமில்லே தாத்தா! இண்டரஸ்டிங்காதான் இருந்திச்சு. ஆமா, அந்த இன்ஸ்டிட்யூஷனோட வெப்சைட் அட்ரஸ் என்ன சொன்னீங்க?”

ஒரு நிமிஷம்,” என்று தேடி எடுத்துக் கொடுத்தார். அதான் ஆல்ரைட்னு  சொல்லிட்டியே? இன்னும் ஏதாவது சந்தேகமா? பார்க்கணுமா?”

நோ தாத்தா, அதெல்லாம் ஒண்ணும் சந்தேகம் இல்லை. இன் ஃபேக்ட் எனக்கே அதில சேரலாம் போல இருக்கு,” என்றபடி அகன்றான்.

பார்த்துக் கொண்டிருந்த அபிஜித்துக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. என்ன தாத்தா, போன வாரம் கூட நான் ஒரு ஆன்லைன் கோர்ஸ் பத்தி உங்ககிட்டே பேசினப்ப, ஆன்லைன் படிப்புக்களைப் பத்தி எல்லாம் எனக்கு ஒண்ணுமே தெரியாதுன்னீங்க. இப்ப இவன்கிட்ட பிட்டுப்பிட்டு வைக்கறீங்க?”

எனக்கென்னடா தெரியும் இந்தப் படிப்புக்களைப் பத்தி? இப்ப வந்திட்டுப் போனானே சம்பத், அவனோட அப்பா சொன்னது இந்த ஐடியா!

ஓ அப்படீன்னா இது உங்களோட ஐடியா இல்லியா?”

என்னோடதும் சேர்த்தி தான். இதை அவன் காதில் நுழைச்சது தான் என்னோட ஐடியா!

இவனுக்கு புரிந்தது.

<<<>>>>
('அமுதம்' அக்டோபர் 2012 இதழில் வெளியானது)

Sunday, December 2, 2012

அன்பின் இழைகள்



நொடியின் துகள்களுக்குள்
நட்பைப் புகுத்திடுவோம்.

அன்பின் இழைகளைக் கோர்த்தொரு
ஆடை அணிந்திடுவோம்.

நாவின் அசைவுகளினூடே
நல்லெண்ணம் மென்றிடுவோம்.  

நம்பிக்கையின் சுவடுகளை
நடையில் பதித்திடுவோம்.

உன்னதத்தின் கொம்பினால்
உச்சி வகிடெடுப்போம்.

பார்வையின் வண்ணமதை
பரிவென்று வைத்திடுவோம்.

மனமெனும் ஆடியில்
மகிழ்வைப் பிரதிபலிப்போம்!

<<<>>>